அநீதிகளை உரக்கப் பேச வேண்டிய ஊடகங்கள் ஊமைகளாகி விட்டனவா? 

ஆங்கிலத்தில் Fourth Estate என்றும் தமிழில் நான்காம் தூண் என்றும் கூறப்படும் ஊடகம் உண்மையில்
அநீதிகளை உரக்கப் பேச வேண்டிய ஊடகங்கள் ஊமைகளாகி விட்டனவா? 

ஆங்கிலத்தில் Fourth Estate என்றும் தமிழில் நான்காம் தூண் என்றும் கூறப்படும் ஊடகம் உண்மையில் செய்ய வேண்டியது சமூகத்தின் மற்ற தூண்களை விமரிசிப்பதுதான். சமூகக் குற்றங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய ஊடகம் அதை செய்வதை விடுத்து சுய வெளிச்சம் தேடுவதிலும், ஊடக வெளிச்சம் தேடுவோர்க்கும் புகலிடமாகவும் மாறிவிட்டது காலக் கொடுமை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

மீடியாவினால் இவ்வுலகைப் புரட்டிப் போட முடியும் என்பதெல்லாம் எங்கோ எப்போதோ நிகழ்ந்த வரலாற்றுப் புனைவுகளா? கத்தியை விட பேனா சக்தி வாய்ந்தது என்பதெல்லாம் மாறி கணிணி மயமான உலகில் தொழில்நுட்ப கலாச்சாரத்தில் தொலைந்து போனவற்றில் அவையும் ஒன்றாகிவிட்டதா? வேல்முனை போன்ற கருத்தாக்கங்களால் அரசியலின் ஆணிவேர் வரை ஊடுருவ ஊடகத்தால் மட்டும் முடியும் என்பது கடந்த கால உண்மைகளா? 

விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. ஊடகங்களில் வெளிவரும் விமரிசனங்கள் முன் முடிவுகளாலும் தவறான கண்ணோட்டத்திலும் இருக்கக் கூடாது என்பதில் அவை கவனம் செலுத்த வேண்டும். போலவே ஊடகமும்கூட குறிப்பாக அச்சு ஊடகம், விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. ஜனநாயக ஆட்சி முறையில் ஆரோக்கியமான விமரிசனம் ஊடகத்தின் செயல்பாடுகளை வளர்த்தெடுக்கும். ஆனால் இது மட்டும் போதாது. ஒடுக்குமுறையால் ஏற்படும் சகிப்புத்தன்மையை எதிர்க்கவல்லது ஊடகம் மட்டுமே. சூரியனின் கீழுள்ள அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் சக்தி ஊடகத்திற்கு உண்டு. உண்மையை எவ்வளவு முயன்றாலும் ஒளித்து வைக்க முடியாது. அது ஒரு நேர்மையானவனின் கண்களில் புலப்படும் வரை காத்திருக்கும்.

குற்றம் செய்தவர்கள், லஞ்ச ஊழல்களால் நாட்டையும் சக மனிதர்களையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கிடைக்க வேண்டிய இயற்கையையும் சிதைத்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க ஊடகத்தால் மட்டுமே முடியும். காற்று புக முடியாத இடங்களுக்கு எல்லாம் பத்திரிகையாளர்கள் சென்று செய்திகளை சேகரித்த வரலாறு நமக்குண்டு. போர் மேகம் சூழ்ந்திருக்கும் நிலையிலும் எங்கோ ஒரு மூலையில் தனது மைக்குடன் ஒரு ஊடகவியலாளர் உலகுக்குச் சொல்ல தமது உயிரை பணயம் வைத்து பணி புரிந்துள்ளனர். 

ஆனால் இன்றைய தேதியில் அநீதிகளை உரக்க பேச வேண்டிய தினசரிகள் ஊமைகளாகி விட்டன அல்லது மிகக் குறைவாகவும் தெளிவற்ற அணுகுமுறையைக் கையாளுகின்றன. சில நாளிதழ்களைப் புரட்டினால் அது செய்தித்தாளா அல்லது செய்தித்தாள் வடிவில் வெளிவரும் வாரப் பத்திரிகைகளா என்று குழப்பம் ஏற்பட்டுவிடும். இவற்றுடன் இணைப்புகளாக பத்திரிகைகளையும் கிழமைகளுக்கு ஏற்றவாறு இலவசமாகவே தருகின்றனர் என்பது வேறு விஷயம். உள்ளடக்கத்தில் கூட இன்றைய பத்திரிகை ஊடகம் அதிக பக்கங்களைத் தருவது குற்றச் செய்திகளுக்கு, அரசியல் புரணிகளுக்கு மற்றும் பொழுது போக்கு அம்சம் மற்றும் சினிமா செய்திகளுக்கும் தான்.

கேலிச் சித்திரம் என்பது ஒவ்வொரு தினசரியிலும் விமரிசனத்தை நகைச்சுவையாக அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லக்கூடிய இடம். ஆனால் கேலிச் சித்திரமே நகைப்புக்குரிய நிலையில்தான் இருப்பது பரிதாபம். வார இதழ்கள், மாதப் பத்திரிகைகள் என எதிலும் செறிவான கட்டுரைகளையோ சமூகம் சார்ந்த சிந்தனைகளையோ ஆழமாகவும் காத்திரமாகவும் காண முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்து கொண்டிருந்தாலும் எதுவொன்றும் கவனத்தை கவரவில்லை. கண்ணை கவரும் விஷயங்களிலும், நாவூறும் சமையல் கலைகளிலும் சிக்கிவிட்ட எழுத்துக்களை யார் விடுவிப்பார்? 

சிற்றிதழ்களில் வெளிவரும் முக்கியமான படைப்புக்களையும், சமூகம் சார்ந்த அக்கறையான கட்டுரைகளையும், சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விழிப்புணர்வு தரத்தக்க எழுத்துக்களையும் படிப்போரின் எண்ணிக்கை குறைவு என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. அது முற்றிலும் தவறு. மக்கள் நாட்டு நடப்புக்களை அக்கம் பக்க செய்திகளைத் தெரிந்து கொள்ள பெரிதும் நம்புவது ஊடகங்களைத்தான். குறுகிய வாசக வட்டம் பெற்ற சிறு பத்திரிகைகள் இன்னும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. விற்பனை லாபம் போன்றவற்றில் ஈடுபாடில்லாத அவை மக்களிடையே தாக்கம் ஏற்படுத்த தவறவிடுகின்றன. 

தினந்தோறும் மக்களிடம் சென்று சேரும் பெரிய பத்திரிகைகளில் மாற்று சிந்தனைக்கு சிறிதளவு இடம் கூட இல்லாமல் இருப்பது சோகம்தான். சமூகத்தை முன்னகர்த்தும் வேலையைச் செய்ய வேண்டிய ஊடகங்கள் காலத்தில் தேங்கிவிட்டது துயரின் உச்சம். மிகை நாடும் கலை சினிமாதான். ஊடகம் அல்ல. ஊடகங்களின் ஒரே குரல் சத்யமேவே ஜெயதே என்பதாக மட்டுமே இருக்க வேண்டும். மாறாக லாப நோக்கங்களும், செய்தியை திரித்துக் கூறும் அவலங்கள் நிகழ்ந்தேறக் கூடாது. எது உண்மை எது பொய். எது செய்தி? எது செய்தியாக்கப்பட்டது? இதற்கெல்லாம் விடை ஊடகத்தை வியாபாரமாக்கிவிட்டவர்கள் தான் பதில் கூற முடியும்.

வார பத்திரிகைகளுக்கு போட்டியாக இயங்கும் செய்தித்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. பக்கங்கள் அதிகமாகும் போது விளம்பரங்களும் அதிகமாகும். மேலும் விளம்பரங்கள் குவியக் குவிய, அதற்கேற்ப சிறப்புப் பக்கங்களை அச்சிட வேண்டியிருக்கும். அல்லது இணைப்புப் பக்கங்களைத் தர வேண்டியிருக்கும். இப்படி அதிகரிக்கப்பட்ட பக்கங்களில் கூடுதல் இடத்தை சமாளிக்க தேவை எழும். அங்குதான் ஃபில்லர்கள் என்று அழைக்கப்படும் பக்க நிரப்பிகள் உருவாகுகின்றன. அது பயனற்ற தகவல்களுக்கு இடமளித்து முக்கியமான செய்திகளை இருட்டடிப்புச் செய்துவிடும். கடைசியில் எந்த நோக்கத்திற்காக அந்தப் நாளிதழை வாசகர்கள் வாங்கினார்களோ அதிலிருந்து முற்றிலும் எதிர் திசையில் அவை இயங்கிக் கொண்டிருக்கும். செய்தியே ஆக முடியாத சில செய்திகளை வெளியிடும் களமாக இத்தகைய ஊடகங்கள் உருமாறிவிட்டன. பத்திரிகை தர்மம் என்ற சொல்லாடல் தேய்வழக்காகிவிட்டதா?

செய்திகளை எப்படி அளிப்பது என்று சொல்வதற்குப் பதிலாக பக்கங்களை எப்படி நிரப்புவது என்று மூளையை குழம்பிக் கொள்கின்றன. அரசியல் செய்திகளுக்கு இடையே செய்தித்தாள்கள் சில முக்கியமான பக்கங்களை பத்தி எழுத்தாளர்களுக்கு (Column Writers) பங்கிட்டு தருகின்றன.  நல்ல கட்டுரைகளை வெளியிடுவதை விட அவர்கள் பிரபலங்களாக அவர்கள் இருப்பதே முக்கியம். சாரமற்று நீர்த்துப் போய்க் கொண்டிருக்கும் தன் முனைப்புக் கட்டுரைகளும், புரணி வகைச் செய்திகளையும் வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.  புலனாய்வுப் பத்திரிகைகளின் சார்பு நிலைப்பாடுகள் ஊடக அரசியலன்றி வேறென்ன?

செய்தித்தாள்களில் சுடச் சுட செய்திகளை தருவதற்கு முன்னால் மாற்று ஊடகமான சமூக வலைத்தளங்கள் மற்றும் மின் பத்திரிகைகளில் அவை வெளிவந்து செய்திகளை உடனுக்கு உடன் வெளியிட்டுவிடுகின்றன. இந்நிலையில் பத்திரிகைகள் மேலும் வேகத்துடன் மட்டுமல்லாமல் விவேகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிறது. செய்திகளுடன் சிந்தனைகளையும் கோர்த்து, கட்டுரைகளாக வெளியிடும் பத்திரிகைகள் இன்றும் உள்ளன. அவற்றுள் ஒன்று பாரம்பரிய பத்திரிகையான தினமணி. சமீபத்தில் அதற்கும் சோதனை வந்தது அதன் வாசகர்கள் அறிவார்கள். தினமணியும் விமரிசனத்துக்கு உட்பட்டதுதான் போலவே லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் ஒரு பத்திரிகையில் எழுத்தாளர்கள் சொல்லும் அத்தனை கருத்துக்களுக்கும் முழுப் பொறுப்பை அப்பத்திரிகை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது என்பதும் உண்மைதானே? கருத்து சுதந்திரம் என்பது இருட்டடிக்கப்பட்ட சூழல் எங்கும் நிலவுவதால் ஊடகங்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. பயங்கரவாதங்களை எதிர்த்து நிற்க வல்ல ஊடகங்களே தீவிர தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலை அவலமின்றி வேறென்ன?

பத்திரிகைகள் இப்படியென்றால் தொலைக்காட்சியைப் பற்றி விளக்கவே வேண்டாம். நேரலை விவாதங்கள், பதிவு செய்யப்பட்ட குழு விவாதங்கள் என பலவகையான டாக் ஷோ நிகழ்ச்சிகளை அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பி வருகிறார்கள். பார்வையாளர்களும் கண் இமைக்காமல் அவற்றைப் பார்க்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் இரவில்தான் ஒளிப்பரப்பாகும். காரணம் இரவு வேளை என்பது பெரும்பாலனோர் வேலைகளிலிருந்து விடுபட்டு இளைப்பாறும் நேரம். இந்த நேரத்தில் கருத்து மோதல்களை ஓடவிட்டு பார்வையாளர்களை மூளைக் கொதிப்புக்கு உள்ளாக்கும் வேலையைத் தான் வெற்றிகரமாக செய்துவருகின்றன காட்சி ஊடகங்கள். இன்னொரு புறம் ஆட்டம் பாட்டம் நடனம் போட்டிகள் என பொருளற்ற விளம்பரத்துக்காக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பொழுதுபோக்குச் சாயமேற்றி ஒளிபரப்பிவருகிறார்கள். உண்மையில் எந்தவொரு ஊடகத்திலாவது மக்களின் அறிவுசார் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக செயலாற்றுகிறதா என்றால் அது கேள்விக்கும் கேலிக்கும் உரியதே.

நேர்காணல்கள் என்பவை பெரும்பாலும் திரைப் பிரபலங்களிடம் மட்டும்தான். அதுவும் உப்பு பெறாத விஷயங்களை உலகமகா முக்கியத்துவத்துடன் கேட்கப்படும். அல்லது நாலைந்து அரசியல் பிரபலங்களை ஒருங்கிணைத்து ஒரே திரையில் அவர்கள் அனைவரின் கருத்து மோதல்களையும் நேரலையாக ஒளிபரப்பு செய்வார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் பேசுவதும், எதிர்தரப்பினரின் கருத்தை கவனிக்காமல் தாம் சொல்வதையே மீண்டும் மீண்டும் உரக்கப் பேசுவதுமாக நிகழ்ச்சியை ரண களமாக்கிவிடுவார்கள். லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்ற பிரஞ்ஞையே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இருப்பதில்லை. இன்னும் சில நிகழ்ச்சிகள் கவண் மற்றும் அருவி திரைப்படங்களில் விமரிசனம் செய்திருப்பது போல டிஆர்பி ரேட்டிங்கிற்காக மட்டுமே இயங்கி வருகின்றன. பரபரப்புக்காகவும் அந்த நொடி செய்திகளையும் கவனப்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு என்ன இருக்கிறது?

மாற்று ஊடகம் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவை கூட செய்திகளைத் தருவதுடன் நில்லாமல், தாம் சார்ந்த கருத்துக்களை பரப்புவதற்கான சாதனமாகவே ஊடகத்தைப் பயன்படுத்துக் கொள்கின்றன. நடுநிலை என்பதே அல்லாமல் சார்பெடுத்து அதை சரியென்று சொல்வதற்கே பல ஊடக செயல்பாடு இருந்துவருவது கண்கூடு. 

செய்தித்தாள், வார பத்திரிகை போன்ற அச்சில் வெளிவரும் பிரதிகள் என்னளவில் மிகவும் முக்கியமானவை. அவை ஆவணங்கள் போல என்றும் நிலைத்திருக்கக் கூடியவை. இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்தவற்றை தூறெடுத்துப் பார்க்க வேண்டுமெனில் நூலகங்களில் கிடைக்கும் சேமிப்புப் பகுதியிலிருந்து அவற்றை மீட்டெடுத்து தேவையானதைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது இப்போது இ-பேப்பர்கள் கிடைக்கும் நிலையில் காலத்தின் பக்கங்களை செய்திகளால் செதுக்குவதில் ஊடகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது எனலாம். மீடியா மக்களின் வாழ்வியலுடன் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்று கலந்துவிட்டது. அன்றைய செய்தித்தாளுடன் தேநீர்க் கடை பெஞ்சில் அமர்ந்து அரசியல் விஷயங்களை காரசாரமாக விவாதிப்பவர்கள் இன்னும் உள்ளனர். அந்த தேநீர் கடை இருக்கை இடமாறி டிஜிட்டலாகி சமூக வலைத்தளங்களில் இடம்பெயரலாம். ஆனால் செய்திகளை எந்தவடிவத்திலும் படிப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். வீட்டிலும் சூடான காபியுடன் செய்தித் தாளை படித்து அந்த நாளைத் தொடங்குவது என்பது அலாதியான அனுபவம் அல்லவா? 

ஒரு கண்ணாடியைப் போல உண்மையை பிரதிபலிக்கும் ஊடகங்கள் தான் இன்றைய நமது உடனடித் தேவை. மாற்று பத்திரிகைகள், மக்கள் தொலைக்காட்சி (உண்மையான மக்கள் தொலைக்காட்சி), என ஊடகம் சக்திவாய்ந்த தளமாக மீண்டும் உருப்பெற வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே தவறு செய்பவர்கள் அச்சப்படுவார்கள். அச்ச உணர்வுகள் மட்டுமே குற்ற நிகழ்வுகளை ஓரளவுக்கேனும் தடுக்கவல்லவை. குற்றங்கள் குறைந்த சமூகம் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்லும். மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். இக்கனவு மெய்ப்பட அனைத்து ஊடகங்களும் விழிப்புணர்வு பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com