பல்லாண்டுகளுக்குப் பின் இந்தியா மீள ஆசைப்படும் தேசபக்தி மிக்க மண்டை ஓடு?!

மனித நாகரீகத்தில் மிக மோசமான பண்பாட்டு அம்சம் ஒன்றுண்டு. இதை காட்டுமிராண்டி பண்பாடு எனலாம். ஜெயித்தவர்கள் தோற்றவர்களைக் கொன்று அவர்களது மண்டை ஓடுகளைச் சேகரித்து தங்களது வெற்றிக்கான அணிவகுப்பில் வைத்து
பல்லாண்டுகளுக்குப் பின் இந்தியா மீள ஆசைப்படும் தேசபக்தி மிக்க மண்டை ஓடு?!

சிப்பாய் கலகம் ஞாபகமிருக்கிறதா?

1857 ஆம் ஆண்டு மீரட்டில் துவங்கி இந்தியா முழுவதுமே பரபரவெனப் பரவிய ஒரு சுதந்திரப் போராட்ட விதை! சிப்பாய் கலகத்தைப் பற்றி நாம் ஆரம்பப் பள்ளி வகுப்புகளிலேயே நிறையப் படித்து விட்டோமே, இப்போதென்ன அதற்கு என்கிறீர்களா? விஷயமிருக்கிறது.

சிப்பாய் கலகம் நடந்து முடிந்து தற்போது 160 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. ஆனாலும் நம்மால் சிப்பாய் கலகத்தை மறக்க முடிந்ததில்லை. ஏனெனில் 1798 முதல் 1805 வரை பிரிட்டானிய ஆளுநராக இருந்த வெல்லஸ்லி கொண்டு வந்த துணைப்படைத் திட்டத்தின் அடிப்படையில் இந்துஸ்தானத்தைச் சேர்ந்த இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் கிழக்கிந்திய கம்பெனியாரின் படைகளுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சகோதர ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்ட இந்து, முஸ்லிம் வீரர்களைக் கண்டு மனம் புழுங்கிய கும்பினி அதிகாரிகள் அவர்களது ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் பன்றிக் கொழுப்பும், பசுக்கொழுப்பும் தடவப்பட்ட உறைகளுடன் கூடிய தோட்டாக்களை அவர்களுக்கு வழங்கினர். அந்தத் தோட்டாக்களை துப்பாக்கியில் லோட் செய்து வெடிக்க வைக்க வேண்டுமென்றால் வீரர்கள் அவற்றைப் பல்லால் கடித்து இழுத்து உறையைக் கிழிக்க வேண்டியதாக இருந்தது. இந்துக்களுக்கு பசு புனிதம், இஸ்லாமியர்களுக்கு பன்றி அசூயை தரத்தக்கது. ஆக இரு தரப்பு வீரர்களுக்குமே அந்த ஏற்பாட்டின் மீது மிகுந்த வெறுப்பு இருந்தது.

நாளடைவில் அந்த வெறுப்பு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று ஒரு கட்டத்தில் மங்கல் பாண்டே’ எனும் இந்து வீரர் ஒருவரது தலைமையில் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. மீரட்டில் தொடங்கிய இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்க்காகான் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரிட்டிஷ் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி "இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. சிலர் தென்னகத்தில் 1806 ஆ ஆண்டு வாக்கில் வேலூரில் வெடித்த சிப்பாய்க் கலகமே இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி முழக்கம் என்கிறார்கள். திப்புவின் வாரிசுகளை அதிகாரத்தில் அமர்த்தும் பொருட்டு அவரது விசுவாசிகளின் தூண்டலின் பேரில் வேலூரில் புரட்சி வெடித்தது. புரட்சிக்கு தூண்டுகோலாக அமைந்தது மீரட்டில் நடந்தது மாதிரியான இந்து, முஸ்லிம் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தோலாலான ஒரு தொப்பி. இந்தத் தொப்பிகளில் இந்துக்களுக்கு பசுக்கொழுப்பு தடவப்பட்ட தொப்பியும், முஸ்லிம்களுக்கு பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தொப்பியும் வழங்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் புரட்சியைத் தூண்டினர்.

கட்டாயத் தலைப்பாகை கொள்கையைக் கொண்டு வந்தவரான ஆங்கிலேயே அதிகாரி கர்னல் மிக்ராஸ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்ட இந்தியப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேலூர் கோட்டையில் பரங்கிக் கொடி இறக்கப்பட்டு திப்பு சுல்தானின் கொடி ஏற்றப்பட்டது. ஆனால் இந்தக் கிளர்ச்சி உரிய கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வழிநடத்தப்படாத காரணத்தால் மிகுந்த துயரத்தில் முடிந்தது. மறுநாளே தென்னகத்தின் வேறு பல பகுதிகளில் இருந்த ஆங்கிலப் படைகள் ஒன்று திரட்டப்பட்டு வேலூருக்கு அனுப்பப்பட்டு வேலூர் புரட்சி மிக மூர்க்கமாக ஒடுக்கப்பட்டது. மூர்க்கமாக என்றால் புரட்சியில் ஈடுபட்டவர்களோடு சேர்ந்து அப்பாவிப் பொதுமக்கள் பலரும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுவரையிலான செய்திகளை நாம் இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் வாசித்திருப்போம். மீரட் சிப்பாய் கலகம் குறித்து நாம் அறியாத பிற செய்திகளும் உள்ளன. சிப்பாய் கலகத்தில் பங்கேற்றுக் கைதான இந்திய வீரர்களைப் பிடித்துச் சென்ற பிரிட்டிஷார் பிறகு அவர்களை என்ன செய்தார்கள்? என்று யாருக்காவது தெரியுமா?

மனித நாகரீகத்தில் மிக மோசமான பண்பாட்டு அம்சம் ஒன்றுண்டு. இதை காட்டுமிராண்டி பண்பாடு எனலாம். ஜெயித்தவர்கள் தோற்றவர்களைக் கொன்று அவர்களது மண்டை ஓடுகளைச் சேகரித்து தங்களது வெற்றிக்கான அணிவகுப்பில் வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் சிப்பாய் கலகத்தில் தீரத்துடன் பங்கேற்ற நமது இந்திய வீரர்களின் தலைகளும் வெட்டப்பட்டு வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டு லண்டன் கொண்டு செல்லப்பட்டன. அங்கே ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. காலங்கள் வெகு வேகமாக உருண்டோடியதில் இன்றைய பாகிஸ்தானின் சியால்கோட் அருகே நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் ஸ்காட்டிஷ் குடும்பமொன்றை சுட்டு வீழ்த்திய ஆலம் பேக் என்பவரது தலையும் லண்டன் பயணித்து மண்டை ஓடான பின் அங்கே ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 

ஒரு கட்டத்தில் தெற்காசிய நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருந்த கிம் வாக்னர் என்பவரிடம் அந்த மண்டை ஓடு வந்து சேரவே, அவர் மூலமாகத் தற்போது பரவலாக ஊடகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மண்டை ஓடு வெகு விரைவில் இந்தியா வரவிருக்கிறதாம். பல்லாண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மண்டையோடு இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது தனது தாய்நாட்டுக்குத் திரும்பினால் மட்டுமே அதன் தியாகத்துக்கு ஒரு பொருள் இருக்கக் கூடும் என வாக்னர் கருதினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் சிப்பாய் கலக வீரர் ஆலம் பேகின் மண்டையோடு இத்தனை காலத்துக்குப் பின் இனியாவது இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டு அதற்கான முறையான இறுதிச் சடங்குகளுடன் இந்திய மண்ணில் புதைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்னரின் கனவு நிறைவேறுமா என்று பொருத்திருந்து காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com