எங்கள் குல தெய்வம் ‘திம்மராய பெருமாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 7!

அவ்வளவு நாட்கள் கடந்து வழிபட வந்த நாங்கள், கூடையில் சுமந்து வந்த எங்கள் குல தெய்வத்தை, அவர் கூடை சுமந்து வந்து உணர்த்தியதை, எங்கள் தாகம் தீர்த்ததை,  எங்கள் கண்ணிலேயே கண்டோம். 
எங்கள் குல தெய்வம் ‘திம்மராய பெருமாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 7!

எங்கள் குல தெய்வம் திம்மராய பெருமாள். எங்கள் எள்ளுத்தாத்தா சுப்பராய ஆச்சாரியார், அவர்களின் தாத்தா காலத்தில்  இப்போதைய ஆந்திராவில் உள்ள சேக்கிலூர் என்னும் ஊரில் இருந்து கால் நடையாய் காடு மேடு பல சுமந்து வந்து, இன்று நிலக்கோட்டைக்கு அருகே உள்ள வெள்ளைத்தாதன் பட்டியில் நிலை பெற்று இருப்பவர் தான் எங்கள் குல தெய்வம் திம்மராய பெருமாள்.

நூற்று மூன்று வயது வாழ்ந்த எங்கள் பாட்டி திருமலை அம்மாள் அவ்வளவும் செவிவழிக் கதைகளாக சொன்னது ஏராளம். நாங்கள் சேக்கிலூர் என்னும் ஊரில் இருந்து வந்ததனால் எங்கள் குலம் சேக்கிலூர் வாள்ளு (சேக்கிலூர் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள்) எனத் தெலுங்கில் அழைக்கப்படுகிறது. 

அன்றைய சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நாடு, நகரம் எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டு மக்கள் அஞ்சி உயிர் பிழைக்க பல்லாயிரம் மைல்கள்... தங்களால் இயன்றதைச் சுமந்து கொண்டு தமிழகம் வந்தார்கள். அப்பொழுது ஒரு கூடையில் ஒரு சிறு கல்லாக (தெலுங்கில் “குண்டு ராய” என்பார்கள்) திம்மராய பெருமாளைச் சுமந்து வந்தார்கள். வரும் வழி எல்லாம் அவ்வளவு கஷ்டம், அவ்வளவு சோதனைகள். ஆனால் எல்லாவற்றிலும் திம்மராய பெருமாள் காத்து நின்று காப்பாற்றினார். இன்றும் "குண்டுராய பெருமாள்" ஆக நின்று எங்களை எல்லாம் காக்கிறார். 

எங்கள் மூதாதையர் அப்படியே பஞ்சம் பிழைக்க பொள்ளாச்சி அருகே உள்ள தேவணம்பாளையம் வந்து சேர்ந்தார்கள். வசதி, வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், நிலக்கோட்டை செல்ல இயலாமல், எங்கள் குல தெய்வத்தை எங்கள் வீட்டிலேயே வழிபட்டு வந்தோம். 

எங்கள் வாழ்வில் எங்கள் குல தெய்வத்தின் அருளை கண்டதும் உணர்ந்ததும் சொல்ல இயலா உணர்வுகள். இன்றும் எங்கள் குலத்தில் ஒரு தலைக்கட்டில் பிறக்கும் முதல் குழந்தைக்கு திம்மராயன் என்று பெயரிடுவது குல வழக்கம். ஆரண்யங்களில் கஷ்டப்பட்டு வந்து வழி சேர்ந்ததனால் திருமணம் முடிந்த பிறகு முதல் நாள் சடங்கில் தேனும் சேனைக்கிழங்கும் தான் பிரதான படையல் குல தெய்வத்திற்கு. 

எங்கள் பெரியப்பா, அப்பா காலத்தில் வசதி வாய்ப்புகள் பெற்ற பிறகு நாங்கள் முதல்முறையாக எங்கள் குல தெய்வத்தைச் சென்று வழி பட்டோம். அன்று நாங்கள் உணர்ந்த திம்மராய பெருமாளின் அருள் இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இது நிகழ்ந்தது 1984ல். அது மிக வறட்சியானதொரு கோடை காலம். கோவிலைச் சுற்றி இருந்த காட்டுக்கிணற்றில் அதல பாதாளத்தில் இருந்தது தண்ணீர். குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லை. எங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு வழிபட வந்து நிற்கும் நமக்கு,  திருப்தியாகத் தண்ணீர் எடுத்து ஊற்றி நம் குல தெய்வத்திற்கு ஒரு அபிஷேகம் செய்யக்கூட இயலவில்லை என்று மிக வருந்தி நின்றோம். 

அப்பொழுது எங்கிருந்தோ மிக வயதான ஒரு பெரியவர், ஒரு சிறு கூடையை சுமந்து கொண்டு, கையிலும் காலிலும் காயம் பட்டு நிறையக் கட்டுகள் கட்டி, நெற்றி நிறைய விபூதியுடன் அங்கு வந்தார். எங்களைப் பார்த்து, தான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் தான் என்றும் தினமும் இந்த கோவிலுக்கு பூ சாத்துவதாகவும் சொல்லி விட்டு, எங்களுக்கு அவரே உதவுவதாகச் சொன்னார். கண் இமைக்கும் நேரத்தில் படிகள் இல்லாத அந்த கிணற்றில் கரடு  முரடான பாறைகளில் பல நூறு அடிகள் ஏறி இறங்கி தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். அவ்வளவு வயதில் அவ்வளவு காயங்களுடன் அவர் செய்த செயல் எவராலும் நம்ப இயலாது. நீர் எடுத்துக் கொடுத்து விட்டு, தான் சரியாக பூஜைக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார். 

ஆனால் அவர் வரவே இல்லை. நாங்கள் பூஜை முடித்து, அருகே பக்கத்து கிராமத்தில் சென்று விசாரித்த பொழுது, இந்த மிகச்சிறிய ஊரில் (அன்றைய கால கட்டத்தில்), அதுவும் இந்த அத்துவானக்காட்டில், அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்றும், எப்பொழுதாவது யாராவது வரும் பொழுது திறக்கும் இந்த கோவிலில் யார் தினமும் பூப்போடுகிறார்கள் என்று கேட்ட பொழுது நாங்கள் மெய்  சிலிர்த்து நின்றோம். அவ்வளவு நாட்கள் கடந்து வழிபட வந்த நாங்கள், கூடையில் சுமந்து வந்த எங்கள் குல தெய்வத்தை, அவர் கூடை சுமந்து வந்து உணர்த்தியதை, எங்கள் தாகம் தீர்த்ததை,  எங்கள் கண்ணிலேயே கண்டோம். 

இன்றும் படியில் நிறையாத அரிசியை,  சிறு கூடையில் எடுத்து, மடியில் குலப் பெண்கள் சுமந்து மனம் உருகி வழிபட்டு, வலம் வந்து, தரையில் பரப்பி, பிறகு பூஜை முடிந்து, படி எடுத்து நிரப்ப, படி நிரம்பி வழிவது உள்ளம் உருகச் செய்யும். கண்ணீர் பெருகச் செய்யும். பூஜை முடியும் வரை இந்நிகழ்வினைக் காண மனம் ஒரு வித பயத்துடனும் பக்தியுடனும் இருப்பது ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம். 

காற்றின் ஈரமும் தரையின்  ஈரமும் அரிசி மணிகளை சற்றே பெருக்கச்செய்யும் இது அறிவியல். ஆனால் நம் குல தெய்வத்துக்கு நம் மீது கருணை எனும் ஈரம் இருந்தால் அரிசி மணிகள் இன்னும் பெருகும். இது நாங்கள் கொள்ளும் நம்பிக்கை.

எங்கள் குல தெய்வம் குறித்து தினமணியுடன் பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நன்றி.

இப்படிக்கு 

ரமேஷ் கோபாலகிருஷ்ணன்.
Phoenix, AZ USA
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com