ஒரு மனிதனை நடைபிணமாக்கிவிடும் அந்த 6 விஷயங்கள் என்ன?

பொதுவாக நாம் சாணக்கியர் என்றதும் அரசியல் விற்பன்னர் என்றுதானே நினைப்போம்.
ஒரு மனிதனை நடைபிணமாக்கிவிடும் அந்த 6 விஷயங்கள் என்ன?

பொதுவாக நாம் சாணக்கியர் என்றதும் அரசியல் விற்பன்னர் என்றுதானே நினைப்போம். ஆனால் அவர் அதையும் தாண்டி சில வாழ்வியல் விஷயங்களையும் கூறியுள்ளார். முக்கியமாக ஒருவர் வாழும் போதே இறந்தவராக கருதப்பட பின்வரும் ஆறு விஷயங்களைக் சாணக்கிய நீதியில் அத்தியாயம் 4, 8-ம் ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். 

குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா 
புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்

ஒரு மனிதனை நடைபிணமாக்கி விடக் கூறிய ஆறு விஷயங்களைப் பட்டியல் இடுகிறார் சாணக்கியர்.  அவை, எந்த வசதியும் இல்லாத ஒரு ஒதுக்கப்பட்ட ஊரில் வாழ நேர்வது, தீயோரிடம் வேலை செய்யும் துர்பாக்கிய நிலையை அடைவது, உண்ணத் தகுதி இல்லாத உணவினை உட்கொள்வது, அதீத கோபம் கொள்ளும் குணமுடைய  பெண்ணை மணம் புரிவது, முட்டாளை பிள்ளையாகப் பெறுவது மற்றும் விதவையான மகளுடன் வாழ்நாள் முழுவதும் கழிப்பது. இந்த ஆறு விஷயங்களும் ஒருவருக்கு நேருமாயின், வாழும் ஒவ்வொரு கணமும் அவருக்குள் துயரின் நெருப்பு தகித்துக் கொண்டே இருக்கும் என்கிறார் சாணக்கியர்.

அவரே இன்னொரு ஸ்லோகத்தில் (அத்தியாயம் 7, ஸ்லோகம் 4) ஒரு மனிதன் எதில் ஒருவன் திருப்திக் கொள்ளலாம் என்றும் எதில் திருப்தி அடையவே கூடாது என்றும் கூறுகிறார்.

ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே : |
த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ ||

ஒருவன் தன் வாழ்க்கையில் ஒருபோதும்  திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்கள் உண்டு  என்கிறார் சாணக்கியர். அவை கற்றல், சுய முன்னேற்றம் அடைதல் மற்றும் தானம் செய்தல் ஆகும். கற்பதற்கு ஏது எல்லை. ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்று நமது அறிவை விரிவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நம்முடைய சுய முன்னேற்றத்துக்கான ஒரே வழி. தவிர இந்த உலகில் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன் என்று ஒருவரும் கூற இயலாது. அவன் அப்படிச் சொல்கின்ற நொடியிலே கூட புதிய விஷயம் ஒன்று எங்கேனும் உருவாகிக் கொண்டிருக்கும். இந்தப் பிரபஞ்சம் எல்லையில்லாதது போலவே தேடலுக்கும் ஞானத்துக்கும் எல்லையென்பது கிடையாது.

கற்றலின் மூலம் உருவாகும் சுய முன்னேற்றம் முதிர்ச்சியாக மலர்ந்து, ஒரு கட்டத்தில் சுய அலசலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். ஒருவன் இன்னொரு மனிதனுக்கு தன்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து அளிப்பது நல்ல குணம். அளவுக்கு அதிகமாக எதையும் சேகரித்து வைக்காமல் தானம் செய்துவிடுவது ஒரு மனிதனின் கடமை. அது எந்தவிதமான தானமாகவும் இருக்கலாம், அன்ன தானம், வஸ்திர தானம், கல்வி தானம் என்று எத்தனையோ வகைகளில் தானம் உள்ளது. தானம் வழங்கும்போது ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அள்ளி அள்ளிக்  கொடுத்திருக்கிறோம் என்ற கர்வத்துடன் ஒரு பொருளை மற்றவருக்கு தானம் செய்யக் கூடாது. கர்ணனைப் போல வலது கை தானம் செய்தால் இடது கை கூட அறியக் கூடாது. கொடுத்த அக்கணமே அது மற்றவர்களின் பொருளாகிவிடுகிறது. நன்றி உட்பட எதையும் எதிர்பார்க்காமல், பிரதிபலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் செய்யப்படும் தானமே ஆகச் சிறந்தது. அதைத்தான் சாணக்கியர் பொருள்பட ரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டார்.

திருப்தியடையக் கூடாத விஷயங்களை சொன்னவர் திருப்திபட்டே ஆக வேண்டியதைப் பற்றிச் சொல்லாமல் விடுவாரா? ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருப்தியடைய வேண்டிய விஷயங்கள் யாதெனில் தனக்கு அமையப்பெற்ற மனைவி, கிடைத்த உணவு, சம்பாத்தித்த பணம் இவை மூன்றிலும் குற்றம் குறை கூறிக் கொண்டிருக்காமல் உள்ளவாறே ஏற்றுக் கொண்டு திருப்தியடைந்து விட வேண்டும். மாறாக தன்னால் மிக குறைவாகவே சம்பாதிக்க முடிகிறது, மனைவி ஆசைப்பட்ட விதத்தில் அமையவில்லை, அல்லது விருப்பப்பட்ட உணவு வகைகள் சாப்பிடக் கிடைக்கவில்லை என்று நொந்து கொண்டே இருந்தால் அதற்கு முடிவே இருக்காது. மாற்ற முடிந்த விஷயங்களை மாற்ற முயற்சித்தும், ஏற்க முடிந்தவற்றை உள்ளவாறே ஏற்றும் வாழ்வதுதான் புத்திசாலித்தனம். தவிர, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதையும் உணர்ந்து வாழ்ந்தால் துன்பம் என்றுமே நெருங்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com