நீங்கள் சம்பளம் வாங்கியதும் செய்யும் முதல் செலவு என்ன? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இனி உங்கள் சம்பளத்தில் முதல் செலவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். 
நீங்கள் சம்பளம் வாங்கியதும் செய்யும் முதல் செலவு என்ன? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நம்மில் பலர் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலைக்கேற்ற வருமானத்தை வாங்குபவர்கள். சுருங்கச் சொன்னால் மாதச் சம்பளக்காரர்கள். முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை பரபரப்பாக நம்மிடம் உள்ள பணம் கொடுக்கல் வாங்கலில்(!) கரைந்து கொண்டிருக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்கள் அதுபோலத்தான் ஒரு பிரமோஷன் கிடைத்து வரவு அதிகரித்தாலும், இதோ நானிருக்கிறேன் என்பதுபோன்று ஒரு பெரிய செலவு காத்துக் கொண்டிருக்கும்.

ஒரு சீட்டு முடிந்ததே என்று சந்தோஷமாக எடுக்கப் பார்த்தால் அந்த தொகைக்குச் சற்றும் குறைவில்லாமல் இன்னொரு செலவு நமக்காவே கைகட்டி நிற்கும். இதுதானப்பா வாழ்க்கை, இது ஒரு மாபெரும் ஆட்டம். பரமபதம் போல, ஏறுமுகம் இறங்குமுகமாகத் தான் இப்படித்தான் வாழ வேண்டியுள்ளது என்று சலித்தும் கொள்வோம்.

சம்பளப் பணத்தை மொத்தமாக இஎம்ஐ கட்டியோ, வீட்டு லோனுக்கோ கொடுத்துவிட்டு மாதம் முழுக்க மங்களம் பாடிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போரும் நம்மில் பலர் உள்ளனர். இப்படி ஒவ்வொரு மாதமும் நித்ய கண்டம் பூரண ஆயுசுதான். இதில் சேமிப்பு என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆகாயத்தில் அபார்ட்மெண்ட் கட்டுவதுபோலத்தான். வெறும் கனவு. ஆனால் சேமிப்பு என்பது மனது வைத்தால் சாத்தியமே என்பதை நாம் உணர்வதில்லை. அதற்கு சிறு மெனக்கிடல் வேண்டும். நிறைய திட்டமிடல்கள் தேவை. வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வைக்கும் பழக்கம் அதி முக்கியம்.

வேலைக்குச் சென்று திரும்பவே நேரம் போதாமையாக உள்ளது, இதில் மேற்சொன்னவற்றுக்கு எல்லாம் ஏது நேரம் என்று நினைக்காதீர்கள். நிதானமாக யோசித்துப் பாருங்கள் பத்து ரூபாயில் இரண்டு ரூபாய் சேமிப்பாக இருந்தால் அது ஒரே மாதத்தில் 12 ரூபாயாகும் இல்லையா? சிறு துளி பெரு வெள்ளம் என்பது சத்தியமான உண்மை. 

இந்த நான்கெழுத்து மந்திரம் உதவும் - பட்ஜெட்

பணம் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும் சிலருக்கு விரய செலவுகள் மறு பக்கம் வருவதற்கான காரணம் என்ன? எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் எதிர்ப்பார்க்கத் தெரிந்திருந்தால் அவை நிச்சயம் உங்களை அச்சுறுத்தாது. உதாரணமாக தினமும் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் நாம் பயணம் செய்கிறோம் என்றால் நிச்சயம் பெட்ரோல் போடுவோம் அது தெரிந்த செலவு. திடீரென்று வண்டி பஞ்சராகும், வீலில் பிரச்னை ஏற்படும், அல்லது சிறு விபத்தில் சிக்கி வண்டியை முழு சர்வீஸ் விடக் கூட நேரும்.

வண்டியில் சென்று பழகியவர்களுக்கு பேருந்து பயணம் பிடிக்காது. அதனால் ஆட்டோ அல்லது காரில் செல்ல முடிவெடுப்பார்கள். வாகனம் சரி செய்ய ஆகும் செலவுடன் போக்குவரத்துச் செலவும் சேர்ந்து கொள்ள, அது ஒரு பெரிய தொகையாக தொக்கி நிற்கும். இத்தகைய செலவுகளை எதிர்நோக்கும் தெம்பினை நாம் முன்னதாகவே திட்டமிட்டிருந்தால் பிரச்னை இல்லை. இல்லையெனில் நொந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.

முக்கிய செலவுகள் Vs வெட்டிச் செலவுகள்

அடுத்து நம்மால் எதை கட்டிப் போட முடிந்தாலும் நாவைக் கட்டிப் போட முடியாது. சட்டென்று செலவு செய்வது உணவுக் கடைகளிலும் இனிப்புக் கடைகளிலும்தான். சம்பாதிப்தே சாப்பிடுவதற்குத்தானே என்று கட்சி கட்டுவோருக்கு சொல்ல ஒரே வார்த்தைதான். அது உண்மை. ஆனால் தேவையற்றதை உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதை ருசிக்கென்று சாப்பிடும் பாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்தாலே பர்ஸ் அதிக பதம் இல்லாமல் தப்பித்துவிடும். இந்த மாதம் உணவுக்கென, மளிகை சாமான்கள் உட்பட, இவ்வளவு தான் செலவு செய்வேன் என்று வரையறுத்துக் கொண்டால் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்யக் கூடாது. அதுதான் மன உறுதி. இதைக் கடைப்பிடித்தால் நோய்களுக்கு நோ எண்ட்ரி சொல்லி, மருத்துவத்துக்கு ஆகும் செலவுகளையும் தவிர்த்துவிடலாம். 

அடுத்து வேலைக்காரன் படத்தில் வருவது போல் சூப்பர் மார்கெட்டுக்குச் செல்லும்போது தேவையானதை வாங்கிய பிறகு சில தேவையற்றப் பொருட்களையும் சேர்த்து வாங்கிவிடும் பழக்கம். அது பலருக்கு உண்டு. ஷாப்பிங் என்ற அந்நிய வார்த்தை நம்மிடம் புழுக்கத்திற்கு வந்த நாள் முதல் வெட்டிச் செலவு என்ற வார்த்தையும் உடன் சேர்ந்துவிட்டது. வீட்டுக்குத் தேவையான பொருள் மட்டுமே வாங்கினால் போதும். அதுவும் அந்தப் பொருளின் முழுமையான பயன்பாட்டுக்குப் பிறகே அதை மீண்டும் வாங்க வேண்டும். சிலர் ஒன்று இருக்கும் போதே பத்து வாங்கிக் குவிப்பார்கள். பண விரயம் மட்டுமல்லாமல் இடமும் அடைத்துக் கொண்டு வீடே பொருள்களின் குடவுன் போலக் காட்சியளிக்கும். வெளிநாடுகளில் தற்போது மினிமலிஸம் என்ற வாழ்வியல் முறை பரவலாகிக் கொண்டு வருவது. அது வெறொன்றுமில்லை எளிமையாக வாழ்வதுதான். அதைக் கடைப்பிடித்தால் தண்ட செலவுகள் தவிர்க்கப்பட்டுவிடும். பணம் கையில் மாதக் கடைசியில் மட்டுமல்லாமல் என்றென்றும் தங்கும்.

அத்தியாவசிய செலவுகள் என்னென்ன?

சம்பளம் வாங்கியதும் முதல் செலவாக இனிப்பை சிறிதளவு வாங்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அது சுப செலவாகும். சம்பளப் பணம் கிடைத்ததும் கடனைத் திருப்பித் தருவார்கள் சிலர். அது நல்ல பழக்கம்தான் ஆனால் அதற்கு முன் சில நேர்மறை செலவுகளைச் செய்த பின் இது போன்ற செலவுகளைச் செய்வது பணத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு வழிமுறையாகும். எந்த எந்த செலவு அவசரம், எது சற்றுப் பொறுமையாக செய்யலாம், எதில் கவனம் செலுத்தினால் சிறிது சேமிக்கலாம் என்று யோசித்து நிதானமாக செலவு செய்ய வேண்டும். இப்போது அதற்கென பல வழிகாட்டிகள் உள்ளன. புத்தகங்களிலிருந்து, வங்கிகள் வரை பல வழிமுறைகள் வந்துவிட்டன. மனம் இருந்தால் போதும். வழி தானாகப் பிறக்கும் என்பது கண்கூடான உண்மை.

கடன் வாங்குவதும் கொடுப்பதும்

முதலில் நம்முடைய எண்ணங்கள் உயர்ந்திருக்க வேண்டும். எனக்கெல்லாம் எங்கே நடக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தால், புலம்பலிலேயே வாழ்க்கை கழிந்துவிடும். எனவே நமக்கு உதவக் கூடியவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதிக்கப் போவதில்லை. தனி ஒருவனாக எல்லாவற்றையும் நாம் தான் சமாளிக்க வேண்டும்.

கடன் வாங்குவதைத் தவிர்த்தாலே மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. போலவே நம்முடைய வரவுக்கு மீறி மற்றவர்களுக்குக் கடன் தரும் பழக்கமும் வேண்டாம். வாராக் கடன் ஏற்பட்டுவிட்டால் நம்மால் அதைத் தாங்க முடியாது.

நம்முடைய ஒவ்வொரு கனவையும் நனைவாக்க நாம் தான் பாடுபட வேண்டும். இந்தப் போராட்டத்தை அதிக சிக்கலாக்கிக் கொள்வதும், லகுவாக்கிக் கொள்வதும் நம்முடைய கையில்தான் உள்ளது. அதற்காக கஞ்சத்தனமாக வாழச் சொல்லவில்லை. சிக்கனம் எக்கணமும் இருந்தால் வாழ்நாள் முழுவதும் பொற்கணங்கள்தான் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வோம்.

இனி உங்கள் சம்பளத்தில் முதல் செலவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com