புத்தகங்கள் உங்களிடம் பேசுமா? நிச்சயம் பேசும்! 41-வது சென்னை புத்தகக் கண்காட்சி!

ஜோஸே ஸரமாகோ, நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர், இவரது அறியப்படாத
புத்தகங்கள் உங்களிடம் பேசுமா? நிச்சயம் பேசும்! 41-வது சென்னை புத்தகக் கண்காட்சி!

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி வரும் திருவிழா புத்தகக் கண்காட்சி. இந்த முறையும் புத்தக விரும்பிகளை மகிழ்விக்க வந்துவிட்டது சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் இந்தப் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இப்புத்தக கண்காட்சியை நேற்று (10.01.2018) துவக்கி வைத்தார். ஜனவரி 10-ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்தப் புத்தக கண்காட்சிக்காக மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 340 பதிப்பாளர்கள் கலந்து கொள்ளகிறார்கள். கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் வாங்கப்படும் என்கிறார்கள்.

தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டிமீடியா அரங்குகள் 22, பொது அரங்கு 24 என 708 அரங்குகளுடன் கண்காட்சி தொடங்குகிறது. தமிழ் 236, ஆங்கிலம் 102, மல்டிமீடியா 14, பொதுவானவர்கள் 24 என 376 பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர். வாசகர்கள் தங்களுடைய ஆதர்ச எழுத்தாளர்களை இங்கு சந்திக்க முடியும். அதற்கென தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவுக்கட்டண ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்க்காக 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் விநியோகப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் புதிய சலுகையாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 12 வயதிற்குட்பட்ட பள்ளி குழந்தைகள் 5 லட்சம் பேருக்கு புத்தக கண்காட்சிக்கு இலவச நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் பெற்றோருக்கும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி தினமும் மதியம் 2.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடைபெறும். 

அனைத்து புத்தகங்களும் 10 சதவிகித கழிவு விலையில் விற்பனை செய்யப்படும். கண்காட்சிக்கு வருபவர்களின் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அரங்குகளுக்கு இடையே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வசதிக்காக 15 இடங்களில் ஸ்வைப் மெஷின் வசதி செய்யப்பட்டுள்ளது. வைஃபை வசதி, செல்போன் சார்ஜர் வசதி, வாசகர்கள் உணவருந்த தேவையான உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களை வரவேற்க ரைட்டர் பாஸ் என தனியாக வழங்கப்படுகிறது.

புத்தகங்களைப் பற்றி பிரபலங்களில் கருத்துரைகள் :

ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன் - எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன்

வாசிப்பு சமூக மாற்றத்திற்க்கான அடிப்படை - கவிஞர். சல்மா

ஒரு மனிதனுடன் பழகிய அனுபவத்தை தருவது புத்தகங்கள் - தங்கர் பச்சான்

இந்தப் புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகம் வாங்கலாம் என்று யோசித்தால் இதில் பரிந்துரைகள் எல்லாம் சரியாக வராது. நாமே ஒவ்வொரு அரங்கிலும் நின்று அந்தந்த புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து, ப்ளர்ப் எனச் சொல்லப்படும் பின்னட்டை வாசகங்களைப் படித்து முடிவு செய்ய வேண்டும். கூட்டம் அதிகம் வரும் நாட்களைத் தவிர்த்து ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு நிதானமாக புத்தகக் கண்காட்சியை ரசிக்க வேண்டும். கண்ணில் பட்ட சில புத்தக மதிர்ப்புரைகளும் பரிந்துரைகளும்:

என் தந்தை பாலய்யா - ஒய்.பி. சத்தியநாராயணா (தமிழில்: ஜெனி டாலி அந்தோணி)

மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக - பொருளாதார - கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்டதிட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள், பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சி ‘என் தந்தை பாலய்யா’. தீண்டத்தகாத ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சமூகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்கும் சாதிய முறைகளுக்கும் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் ஏளனப்படுத்தலுக்கும் அவமதிப்புக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் தனது நிதர்சனமாக அதை உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் இந்தப் புத்தகம் வெளிக்கொணர்கிறது.

உலக கிளாசிக் வரிசையில் புதிய ஏழு நாவல்கள்

உடைந்த குடை - தாக் ஸுல்ஸ்தாத் (தமிழில்: ஜி. குப்புசாமி)
சாதுவான பாரம்பரியம் - ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: முடவன் குட்டி முகம்மது அலி)
நிலத்தின் விளிம்புக்கு - டேவிட் கிராஸ்மன் (தமிழில்: அசதா)
முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன் (ஃபிரெஞ்சிலிருந்து தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி)
மீனும் பண் பாடும் - ஹால்டார் லேக்ஸ்நஸ் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எத்திராஜ் அகிலன்)
குந்தரின் கூதிர்காலம் - ஹுவான் மனுயேல் மார்க்கோஸ் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எல். ஜே. வயலட்)
வீழ்ந்தவர்கள் - லியா மில்ஸ் (தமிழில்: பெர்னார்ட் சந்திரா)

அறியப்படாத தீவுகளின் கதை - ஜோஸே ஸரமாகோ

ஜோஸே ஸரமாகோ, நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர், இவரது அறியப்படாத தீவின் கதை மிகச்சிறிய நாவல், 55 பக்கங்களே உள்ளது, கவிஞர் ஆனந்த் மொழியாக்கத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஸரமாகோவின் எழுத்துலகம் தனித்துவமானது, முற்றுப்புள்ளியில்லாத நீண்டவாக்கியங்கள், உரையாடல்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஊடுபாவும் முறை, வியப்பூட்டும் சம்பவங்கள், மாய நிகழ்வுகள், கவித்துவமான விவரணைகள் என்று வாசகனை எழுத்தாளனுக்கு நிகராக வேலை செய்ய வைப்பவர் ஸரமாகோ,

வெறுமனே கதையை வாசித்துவிட்டு சிலாகித்துப் போகின்றவர்களால் அவரை வாசிக்க முடியாது, மார்க்வெஸைப் போல கதை சொல்லும் முறையில் ஸரமாகோவின் பாணி முற்றிலும் புதியது,

ஸரமாகோவின் நாவலில் உரையாடல்கள் விவரணைக்குள்ளாகவே ஊடுகலந்திருக்கின்றன, ஆகவே சொல்லும் குரலை வாசகனே கண்டறிய வேண்டியிருக்கிறது, ஒரு வகையில் வாசகன் தானே ஒரு கதை சொல்லியாக உருமாறியே கதையைக் கண்டடைய வேண்டியுள்ளது

யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்து கொண்டிருக்கிறது?

எல்லாம்.

என நகுலன் கவிதையொன்றிருக்கிறது, இக்கவிதை சுட்டிக்காட்டும் யாரும் இல்லாத பிரதேசம் என்பது சொல்லில் உருவான வெளி, சொல் வழியாகவே ஒரு அனுபவம் நமக்கு கிட்டிவிடுகிறது, அதைத்தான் ஸரமாகோவின் நாவலும் உணர்த்துகிறது,

- எஸ்.ராமகிருஷ்ணன்

பூனாச்சி - பெருமாள் முருகன்

வெள்ளாட்டுப் பாலும் உப்புக் கண்டமும்.

ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். பெருமாள்முருகனின் புதிய நாவலான 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' படித்து முடித்தபோது.

ஒரு கிழவன், கிழவி, பூனாச்சி என்கிற வெள்ளாடு ஆகிய பிரதான கதாப்பாத்திரங்கள் வழியே, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாக செயல்படுபவர்களின் அரசியலை அதிகார மமதையை அழகாக ஆழமாகப் பேசிச் செல்கிறார் பெருமாள்முருகன்.

பூனாச்சி என்கிற வெள்ளாட்டுக்குப் பெண்பால் குறிப்போடு கதை நகர்ந்தாலும் - அடையாளக் குழப்பங்களை மிக எளிமையாகக் கையாண்டு - எந்த வகையிலும் தன்மேல் படிந்துவிடாதபடி ஆசிரியர் தற்காத்துக் கொள்ளுவதிலிருந்தே நம்மால் நாம் வாழும் சமூகத்தின் கேடுகாலத்தை உணர முடிகிறது. 

படைப்பாளிகள் சுதந்திரமற்று ஒர் இருண்ட காலத்தில் வாழ்வதை இந்நாவல் எனக்கு அதிர்ச்சியோடு புரிய வைக்கிறது. எளிய மக்களின் சுதந்திர வாழ்வு என்பது சாத்தியம்தானா?

மேற்சொன்ன புத்தகங்கள் காலச்சுவடு அரங்கில் உள்ளது.

சிறப்பு தகவல்கள்

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடத்தப்பட உள்ளன.

சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள தமிழ்ப் புத்தகங்களின் பட்டியல்

  • 2017    காந்தள் நாட்கள் - இன்குலாப் (கவிதைகள்)
  • 2016    ஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்)
  • 2015    இலக்கியச் சுவடுகள் - ஆ. மாதவன் (புதினம்)
  • 2014    அஞ்ஞாடி - பூமணி (புதினம்)
  • 2013    கொற்கை - ஜோ டி குரூஸ் (புதினம்)
  • 2012    தோல் - டி. செல்வராஜ் (புதினம்)
  • 2011    காவல் கோட்டம் -  சு. வெங்கடேசன் (புதினம்)
  • 2010    சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் (சிறுகதைகள்)
  • 2009    கையொப்பம் - புவியரசு (கவிதை)
  • 2008    மின்சாரப்பூ-மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்
  • 2007    இலையுதிர்காலம் - நீல பத்மநாபன் (புதினம்)
  • 2006    ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா (கவிதை)
  • 2005    கல்மரம் - ஜி. திலகவதி (புதினம்)
  • 2004    வணக்கம் வள்ளுவ - ஈரோடு தமிழன்பன் (கவிதை)
  • 2003    கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து (புதினம்)
  • 2002    ஒரு கிராமத்து நதி - சிற்பி (கவிதை)
  • 2001    சுதந்திர தாகம் - சி. சு. செல்லப்பா (புதினம்)
  • 2000    விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்-தி.க.சி. 
  • 1999    ஆலாபனை - அப்துல் ரகுமான் (கவிதை)
  • 1998    விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி (புதினம்)
  • 1997    சாய்வு நாற்காலி தோப்பில் - முகமது மீரான் (நாவல்)
  • 1996    அப்பாவின் சினேகிதர்-அசோகமித்திரன்
  • 1995    வானம் வசப்படும் - பிரபஞ்சன் (புதினம்)
  • 1994    புதிய தரிசனங்கள் - பொன்னீலன் (புதினம்)
  • 1993    காதுகள் -  எம். வி. வெங்கட்ராம் (புதினம்)
  • 1992    குற்றாலக்குறிஞ்சி - கோவி. மணிசேகரன் (புதினம்)
  • 1991    கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன் (புதினம்)
  • 1990    வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம் (புதினம்)
  • 1989    சிந்தாநதி - லா. ச. ராமாமிர்தம் (சுயசரிதை)
  • 1988    வாழும் வள்ளுவம்-வா.செ.குழந்தைசாமி
  • 1987   முதலில் இரவு வரும் - ஆதவன் (சிறுகதைகள்)
  • 1986    இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்-க.நா.சுப்பிரமணியம்
  • 1985    கம்பன்:புதிய பார்வை-அ.ச.ஞானசம்பந்தன்  
  • 1984    ஒரு கவிரியைப் போல - லட்சுமி  (புதினம்)
  • 1983    பாரதி: காலமும் கருத்தும்-தொ.மு.சி.ரகுநாதன்  
  • 1982    மணிக்கொடி காலம் -பி. எஸ். இராமையா  
  • 1981    புதிய உரைநடை -மா. இராமலிங்கம் (விமர்சனம்)
  • 1980    சேரமான் காதலி -   கண்ணதாசன் (புதினம்)
  • 1979    சக்தி வைத்தியம் -    தி. ஜானகிராமன் (சிறுகதைகள்)
1978-புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-வல்லிகண்ணன் 
  • 1977    குருதிப்புனல் -   இந்திரா பார்த்தசாரதி (புதினம்)
  • 1975    தற்காலத் தமிழ் இலக்கியம்-இரா.தண்டாயுதம்  
  • 1974    திருக்குறள் நீதி இலக்கியம்- க.த.திருநாவுக்கரசு  
  • 1973    வேருக்கு நீர்  -  ராஜம் கிருஷ்ணன் (புதினம்)
  • 1972    சில நேரங்களில் சில மனிதர்கள்-ஜெயகாந்தன்
  • 1971    சமுதாய வீதி  -  நா. பார்த்தசாரதி (புதினம்)
  • 1970    அன்பளிப்பு -   கு. அழகிரிசாமி (சிறுகதைகள்)
  • 1968    வெள்ளைப்பறவை -   அ. சீனிவாச ராகவன் (கவிதை)
  • 1967    வீரர் உலகம் - கி. வா. ஜெகநாதன் 
  • 1966    வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம.பொ.சிவஞானம்  
  • 1965    ஸ்ரீ ராமானுஜர்  -  பி.ஸ்ரீ. ஆச்சார்யா (சரிதை நூல்)
  • 1963    வேங்கையின் மைந்தன் - அகிலன் (புதினம்)
  • 1962    அக்கரைச் சீமையிலே -   மீ. ப. சோமு (பயண நூல்)
  • 1961    அகல் விளக்கு -   மு. வரதராசன் (புதினம்)
  • 1958    சக்கரவர்த்தித் திருமகன்- சி.ராஜகோபாலாச்சாரியார்  
  • 1956    அலை ஓசை  -  கல்கி (புதினம்)
  • 1955    தமிழ் இன்பம்  -  ரா. பி. சேதுப்பிள்ளை (கட்டுரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com