விடுமுறை கிடைக்குமென்பதற்காக சக மாணவனைக் கொலை செய்யும் கலாச்சாரம்! யார் கற்றுத் தந்த யுக்தி இது?!

பல நேரங்களில் வீட்டில் அமைதியற்ற சூழலில், அசாதரணமான முறையில் வளர்க்கப் படும் குழந்தைகளும், மாணவர்களும் தான் இம்மாதிரியான சாடிஸக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  
விடுமுறை கிடைக்குமென்பதற்காக சக மாணவனைக் கொலை செய்யும் கலாச்சாரம்! யார் கற்றுத் தந்த யுக்தி இது?!
  • பள்ளியில் ஒருநாள் விடுமுறை அறிவிப்பார்கள் என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 7 ஆம் வகுப்பு மாணவி...
  • டெல்லி குருகிராம் பள்ளியில் திட்டமிட்டு தேர்வைத் தள்ளி வைப்பதற்காக, ஈவு இரக்கமின்றி, இரண்டாம் வகுப்பு மாணவனொருவனை கழிப்பறையில் வைத்து கழுத்தறுத்துக் கொன்ற 11 ஆம் வகுப்பு மாணவன்...

இந்த இரண்டு செய்திகளுமே ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. கொலைக்கான காரணங்கள் பைசாவுக்குப் பிரயோஜனமற்றவை. ஆனால், அதற்காக கொலை செய்யவும் தயங்காத சிறுவர்களும், மாணவர்களும் வாழும் சமூகத்தைத் தான் இன்று நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் தாங்கொணாத வருத்தமே மிஞ்சுகிறது. அனைத்துப் பள்ளிகளிலுமே 100% வருகைப் பதிவு என்றொரு விஷயத்தை ஊக்குவிக்கிறார்கள். ஆண்டு முழுவதும் அரசு விடுமுறைகள் மற்றும் பள்ளியே மனமுவந்து விடக்கூடிய,  பொது விடுமுறை நாட்களைத் தவிர மாணவர்கள் தினந்தோறும் தவறாமல் பள்ளிக்கு வருகை தந்தால் அது 100% வருகைப் பதிவு என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஆரோக்யமான விஷயம் தான். 

ஆனால், இந்த விஷயத்தில் ஒரு சில பெற்றோர்களின் கடுமையான அணுகுமுறைகளை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன், தங்களது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத சூழலிலோ, குழந்தைகள் சோர்வாக உணரும் தருணத்திலோ, அல்லது வீட்டில் உறவினர் அனைவரும் கூடி நிகழக்கூடிய சுபகாரியக் கொண்டாட்டங்களின் போதோ, சில சமயங்களில் ஊர் கூடி கொண்டாடும் திருவிழாக்காலங்களிலோ கூட அவர்களை விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிப்பதே இல்லை. இம்மாதிரியான நிர்பந்தங்கள், சம்மந்தப்பட்ட அந்தக் குழந்தைகள் மனதில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனச் சில பெற்றோர்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை. 100% வருகைப்பதிவு மட்டுமே அவர்களது ஒரே இலக்காகி... தங்களது குழந்தைகளை ஆடுகளை மந்தைகளில் அடைப்பதைப் போல பள்ளிகளில் மட்டுமே பெரும்பான்மையான நேரங்களில் பிணைத்துக் கட்டி வைக்க விரும்புகிறார்கள். காரணம், 100% வருகைப்பதிவின் மீதான ஆசையைத் தாண்டி, வீட்டைக் காட்டிலும் பள்ளி பாதுகாப்பானது என்ற அடிப்படை உணர்வும் தான்.

ஆனால், மேலே சுட்டப்பட்டுள்ள இரு நிகழ்வுகளிலும் பள்ளிகள் பாதுகாப்பானவையாக தோற்றம் தரவில்லை.

நாம் நம்புகிறோம்... பள்ளிகளில் சர்வைலன்ஸ் கேமிராக்கள் வைத்து விட்டால் போதும் கண்காணிப்பு அச்சத்தில் மாணவர்கள் எந்த விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என; ஆனால், குற்றச்செயல்கள் தடுக்கப்படுவதைக் காட்டிலும் பெரும்பாலான நேரங்களில் கண்காணிப்பை மீறி எப்படியெல்லாம் குற்றம் புரியலாம் என்று தான் மனித மனம் யோசிக்கத் தலைப்படுகிறது. மாணவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள். அவர்களைப் புரிந்து கொண்டு கரிசனத்தோடு அணுகக் கூடிய ஆன்மாக்கள் பெற்றோர்களாக அவர்களுக்கு வாய்ப்பார்கள் எனில் மேற்கண்ட குற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனால், நாம் அந்த ரீதியில் சிந்திப்பதற்குப் பதிலாக குற்றத்துக்குத் தண்டனை மட்டுமே தீர்வுக்கான ஒரே வழி என்று பல்லாண்டுகளாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.

தண்டிக்கத் தண்டிக்க குற்றங்கள் பெருகிக் கொண்டே தான் செல்கின்றன. அதற்காகத் தண்டிப்பதே தவறு, தண்டனை கூடாது என்பதல்ல அர்த்தம். மாணவப் பருவத்திலிருக்கும் நமது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? அவர்களது நிஜமான தேவைகள் என்ன? என்பதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும். ‘இம்’மென்றால் குழந்தைகள் கேட்பதையெல்லாம், கேட்ட கணத்தில் வாங்கித் தந்து விடுவது மட்டுமே அன்பின் அடையாளமில்லை. உண்மையில் தமது குழந்தைகள் விரும்புவது எதை? என்ற தெளிவு பல பெற்றோருக்கு இருப்பதில்லை. கல்வியானாலும் சரி, பொழுது போக்கானாலும் சரி பல குடும்பங்களில், குழந்தைகளிடத்தில் வலியத் திணிக்கப்படுபவையாக இருக்கின்றனவே தவிர அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்ட நட்பான அணுகுமுறையுடன் கூடிய பெற்றோர்கள் அரிதாகி வருகிறார்கள்.

ஒன்று ஆடம்பரத்துக்குப் பழக்குவது, அல்லது விட்டது தொல்லை என்ற பெயரில் கேட்டதை எல்லாம் வாங்கித் தருவது, டி.வி அல்லது ஸ்மார்ட் ஃபோன்களில் தொலைந்து போக அனுமதிப்பது. இவை இரண்டும் தான் பெற்றோர்கள் தரப்பின் மிகப்பெரும் தவறுகள் என்பேன். குழந்தைகள் வளரும் போது ஒவ்வொரு நொடியும் அவர்களுடனே பயணிக்கும் பெற்றோர் இருக்கும் வீடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் குழந்தைகளுக்கு வருவது இல்லை. 

ஓரிருநாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதற்காகக் கொலை செய்ததாகத்தான் மேலே சொல்லப்பட்ட இரு வழக்கிலும் குற்றச்சாட்டு பதிவாகி இருக்கிறது.

அப்படியெனில் கொலை செய்த அந்த மாணவர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு எங்கிருந்து வந்தது விடுமுறைக்காக கொலை செய்வதற்கான தைரியம்?!

அவர்களை அத்தனை வன்முறையாகச் சிந்திக்க வைத்தது எது?

அது தான் தடுக்கி விழுந்தால் ஸ்மார்ட் ஃபோன், ஐ ஃபோன், லேப் டாப் என்றாகி விட்டதே இந்தக் காலத்தில்... அவர்களுக்குத் தேவையானதை அவர்களே இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏதோ ஒரு தேடுபொறியின் உதவி கொண்டு, தானே கற்றுக் கொள்கிறார்கள். சில சமயம் நல்லவைகளையும் பல சமயங்களில் கெட்டவைகளையும்!

கூகுள் அல்லது யூ டியூப் தளத்திற்குச் சென்று;

தடயமில்லாமல் சக மனிதனைக் கொலை செய்வது எப்படி? என்று கேள்வி எழுப்பினால் அதற்கும் அது சளைக்காமல் வெரைட்டியான பதில்களைத் தரத்தான் செய்கிறது.

அதைப் பொறுமையாக வாசித்துப் பார்த்தோ அல்லது வீடியோவாகப் பார்த்தோ கற்றுக் கொண்டு கொலையை நிகழ்த்திக் காட்டுபவர்களை நாம் என்ன செய்யவிருக்கிறோம்?

வழக்கு, காவல்துறை, நீதிமன்றங்கள், தீர்ப்பு, சிறைத்தண்டனை என்பதையெல்லாம் தாண்டி மக்களான நாம், எங்கோ, யாருக்கோ நிகழ்ந்தது தானே, நமக்கென்ன என்று கருதாமலும், இவற்றைத் தனித் தனிச் சம்பவங்களாகப் பாவிக்காமல் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கான பாதுகாப்பைச் சீர்குலைக்கும் அம்சமாகக் கருதத் தலைப்பட வேண்டாமா?

இணையத்தால் உணர முடியாது, தன்னிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்புவது 5 வயதுச் சிறுவனா? 30 வயது வாலிபனா? 60 வயது முதியவரா? என்பதையெல்லாம்... அதுமட்டுமல்ல, இப்படி வக்கிரமாகக் கேள்வி கேட்டு பதில் பெற முயற்சிப்பவர்களின் மனநிலையைப் பற்றியெல்லாம் கூட இணையத்திற்கு அளவிடத் தெரியாது. ஆனால், தன்னைத் தேடி வந்து கேள்வி எழுப்புபவர்களுக்கு, அவர்கள் எந்த விதமான கேள்விகளைக் கேட்டாலும் கண்ணிமைக்கும் நொடியில் பதில்களை பல்வேறு பரிமாணங்களில் அள்ளி வழங்க மட்டும் நன்றாகத் தெரியும். ஏனெனில், அதன் வடிவமைப்பாளர்கள் அதன் செயல்பாடுகளை அப்படித்தான் கட்டமைத்திருக்கிறார்கள்.

மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் சகலமும் இணைய மயமாகி விட்ட இந்தியாவில் நமக்கெல்லாம் தொட்டதற்கெல்லாம் இன்று இணையம் தான் வழிகாட்டி!

என்று எளிதாகப் பழியைத் தூக்கி இணையத்தின் மீது போட்டு விடலாம் தான். ஆனால் இணையத்தில் எதையெல்லாம் குறிப்பிட்ட வயது வரை மாணவர்கள் பார்க்கலாம், படிக்கலாம் என்பதற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் விட்டது யாருடைய தவறு. பேரண்டல் கண்ட்ரோல் தான் இருக்கிறதே என்பீர்கள். ஆனால் அது மட்டும் போதாது என்பதை வலுயுறுத்துவதாகவே அமைகின்றன குழந்தைகள் மற்றும் மாணவர்கள் சமூகத்தில் நடந்தேறும் ஒவ்வொரு துர் சம்பவங்களும்.

இனி, இணையப் பயன்பாட்டுக்கும் சென்சார் வேண்டும். பெற்றோர்கள் எந்த வேலையில் இருப்பவர்களாக இருந்தாலும் தங்களது குழந்தைகளுடன் கழிக்கும் தருணங்களை அதிகப்படுத்த வேண்டும். பெற்றோரால் நாம் கண்காணிக்கப் படுகிறோம் என்பது தெரிந்தாலே பல குழந்தைகளை இம்மாதிரியான சாடிஸ யோசனைகள் அணுகாது.

அது மட்டுமல்ல, குழந்தைகளிடம் சில சமயங்களில் கண்டிப்பான அணுகுமுறை தவறில்லை. ஆனால், அந்த கண்டிப்பான அணுகுமுறையின் எல்லை அவர்களைக் குற்றச் செயலில் ஈடுபடத் தூண்டுவதாக அமைந்து விடக்கூடாது. அதையும் பெற்றோர் மனதில் இருத்த வேண்டும். பல நேரங்களில் வீட்டில் அமைதியற்ற சூழலில், அசாதரணமான முறையில் வளர்க்கப் படும் குழந்தைகளும், மாணவர்களும் தான் இம்மாதிரியான சாடிஸக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  

உதாரணத்திற்கு கடந்த மாதம் கேரளாவில் பெற்ற தாயின் நடத்தை மீது சந்தேகமும், வெறுப்பும் கொண்ட கல்லூரி பருவத்து மகன் , தாயை எரித்துக் கொன்று விட்டு எதுவும் நடக்காததைப் போல பாவித்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே டி.வி பார்த்ததாக ஒரு செய்தி, சில மாதங்களுக்கு முன்பு அதே கேரளாவைச் சார்ந்த மற்றொரு மாணவன் தனது தாய் மற்றும் சகோதரியை மிக வன்முறையான ஆன்லைன் விளையாட்டு முறையில், முதலில் மீன் உணவில் விஷம் வைத்து பின் கொன்று கொடூரமாகக் கொலை செய்த செய்தியையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவையெல்லாமும் அந்தந்த மாணவர்களின் மன அமைதியின்மையைத் தானே காட்டுகிறது. 

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தண்டனை மட்டுமே முழுதாக அவர்களை திருத்தி விடாது. அதையும் தாண்டி ஏதோ ஒன்று நமது இளைய சமுதாயத்திற்கு தேவைப்படுகிறது. அது பெற்றோரிடமிருந்தான கரிசனையாகவும் இருக்கலாம், ஆசிரியப் பெருமக்களிடமிருந்தான தோழமை உணர்வாகவும் இருக்கலாம். எது எப்படியாயினும் மேற்குறிப்பிட்ட மாதிரியான குற்றங்கள் வளராமல் தடுக்கப் பட வேண்டும், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கான ஆவன செய்ய வேண்டிய கடமை எல்லாப் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. ஏனெனில், குழந்தைகள் தங்கள் வாழ்வின் ஆரம்ப வருடங்களில் பெரும்பான்மையான நேரங்களைக் கழிப்பது உங்களுடன் மட்டுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com