ஏன் நம்முடைய திருமண நிகழ்வுகள் கொண்டாட்டத்தை இழந்து கொண்டிருக்கிறது?

திருமணம் என்பது உறவுகள் கூடும் இடமாகவும் கொண்டாடத்தின் உச்சகட்டமாகவும்
ஏன் நம்முடைய திருமண நிகழ்வுகள் கொண்டாட்டத்தை இழந்து கொண்டிருக்கிறது?

சமீபத்தில் என் உறவினர் வீட்டுத் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். அது என்னுடைய நினைவலைகளை மீட்டெடுக்க வைத்துவிட்டது. 

காலையில் மண்படபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனராம். அதற்கு முந்தைய நாளில் சங்கீத் (எங்கள் குடும்பத்தில் சமீபத்தில் வந்து சேர்ந்துள்ள நிகழ்ச்சி இது) நடந்தது என்று தெரிந்து கொண்டேன். மாலையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த அத்திருமண வரவேற்புக்கு மகள் மற்றும் தந்தையுடன் சென்றிருந்தேன். நீண்ட நாட்கள் சந்தித்திராத அத்தைகள், சித்திகள், பெரியப்பா, மாமா, கசின்ஸ் என அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தோம்.

வேலை, குடும்பம், குழந்தைகள் போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்த இசைக் கச்சேரியையும் அதற்கு மணமக்களின் தோழர் தோழியர் போட்ட ஆட்டம் பாட்டத்தையும் ரசித்துவிட்டு நேரம் ஆகிவிட்டதே என்ற அவசர உணர்வோடு வீடு திரும்பினேன். நான்கு மணி நேரம் அங்கிருந்திருப்பேன். ஆனால் எதுவும் மனத்தில் ஒட்டாதது போலிருந்தது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு ஒரே சாட்சி அனைவருடன் எடுத்துக் கொண்ட செஃல்பி தான். அதை திரும்பத் திரும்ப பார்த்தபோது அத்தைகளின் சிரிப்பில் ஒளிந்திருப்பது காலம் பரிசளித்த துயரம், சித்திகளின் வயோதிகம், தம்பிகளின் வேலை அவசரம், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் அதிவேக விடைபெறும் கைகுலுக்கல்கள்...இன்னும் இன்னும்...

நிதானமாக யோசித்துப் பார்த்தால் முன்பு குடும்பங்களுக்குள் இருந்த நெருக்கமும் பரஸ்பர ஆழ்ந்த நேசமும் இப்போது இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரையில் யாரையும் குறையும் சொல்ல முடியாது. காரணமும் நாமும் அவர்களில் ஒருவர்தானே? மாறிவரும் காலமும் அவரவர் குடும்பம் என்ற அளவில் சுருங்கிவிட்ட மனமும் கிட்டத்தட்ட எல்லா சிதறு பட்ட குடும்பங்களின் சரித்திரமாகி வருகிறது. எனக்கு இரண்டு பெரியப்பா, இரண்டு சித்தப்பா, ஐந்து அத்தைகள், என்னுடைய தந்தை அவரது பெற்றோர்களுக்கு எட்டாவது மகன்). வேலை சார்ந்து என் பெற்றோர் சென்னைக்கு புலம் பெயர்ந்துவிட்டாலும் திருநெல்வேலியில் உள்ள சொந்த பந்தங்களைத் தேடி அடிக்கடி சென்றுவிடுவோம். அதற்கேற்ற வகையில் திருமணம், காது குத்து, பூப்பெய்தும் விழா, குலதெய்வ வழிபாடு, என்று ஏதாவது சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். நாங்களும் சென்னைக்கும் நெல்லைக்கும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வருடந்தோறும் பயணம் செய்து கொண்டிருப்போம்.

அப்போதெல்லாம் என்னுடைய அக்காமார்களுக்கு திருமணம் என்றால் எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். முதல் விஷயம் புது உடை, விருந்து, இனிப்புக்கள், இரண்டாவது எல்லாரையும் ஒரே எடத்தில் சந்தித்து அளவளாவ முடியும். விளையாட்டு, பாட்டு, சினிமா, அரட்டை, ஆட்டம் என அந்தந்த வயதுக்கு ஏற்றபடி எங்களுடைய கொண்டாட்டங்கள் மாறிக் கொண்டிருக்கும். எண்பதுகளின் இறுதியில் என்னுடைய ஒரு அத்தை மகள் (மதினி முறை) திருமணம் தாத்தாவின் பெரிய வீட்டிலேயே நடந்தது. பாம்பே மாப்பிள்ளை என்று வீட்டில் பேசிக் கொண்டார்கள். மாப்பிள்ளை அழைப்பிற்கு யானையை வரவழைத்து தடபுடல் செய்துவிட்டார்கள். ஊரில் பாதி பேர் எங்கள் வீட்டில்தான் இருந்தனர். என்னுடைய அப்பாவிடம் மாப்பிள்ளை எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க அண்ணாச்சி என்று கூறினார். சென்னைவாசியான எனக்கு அந்த வயதில் அந்தச் சொல் புதிதாக இருந்தது. என்னுடைய அண்ணன் ஒருவன் ஒரு சிறிய வாண்டை அழைத்து மாப்பிள்ளை காதில் சொல்லச் சொல்லி ஒரு வசனத்தை கற்றுக் கொடுத்தான். அவனும் மாப்பிள்ளை அருகில் சென்று, காதில் சொல்வதற்கு பதில் சத்தமாகவே சொல்லிவிட்டான். அண்ணாச்சி அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி என்பதுதான் அந்த வசனம். பேங்க் மாப்பிள்ளை அவர். என் மதினியை விழித்து அவர் பார்க்க, அவரோ குனிந்த தலை நிமிராமல் இருந்தார். அண்ணனின் கண் அசைவின்படி அதே கேள்வியை மீண்டும் கேட்கத் தொடங்கிய அந்த வாண்டை யாரோ அடக்கி யாரோ இழுத்துச் சென்றபின் அனைவரும் சிரித்தபடி மேற்கொண்டு சாங்கியங்களைச் செய்தனர். மிகவும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமாக அந்நிகழ்வு என் நினைவின் அடுக்குகளில் பதிந்த முதல் நினைவாய் இன்றும் இனிக்கிறது. 

அக்காக்களின் திருமணம், அண்ணனின் திருமணம், அத்தை பிள்ளைகளின் திருமணம் என ஒன்றின் பின் ஒன்றாக எங்கள் தாத்தாவின் வாரிசுகளின் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் திருமணம் நடந்தது. எங்கள் குடும்ப நிகழ்விற்குச் செல்லவேண்டும் என்றால் ஒரு ரயில் பெட்டி முழுக்க ரிசர்வ் செய்ய வேண்டும் என்று அப்பா வேடிக்கையாகச் சொல்வார்கள். ஆலம் விழுது போல் குடும்பம் செழிக்க வேண்டும் என்று வாழ்த்துவது இதைத் தான் என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஊருக்குச் சென்று திரும்பி வரும் போதெல்லாம் ஒவ்வொருவரின் பிரியத்தையும், அன்பையும் அவர்கள் எனக்குத் தரும் அறிவுரைகளையும் சுமந்தே திரும்பி வருவேன். அமைதியாகவும் நடுநிலையாகவும் இருப்பது எப்படி என்று என்னுடைய பெரியப்பாவைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இடியே விழுந்தாலும் சரி மனத்தை தளர விடக் கூடாது என்று என் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். நேர்மையும் உண்மையும் என்னுடைய சித்தியின் உயர் பண்பு. அதை அவரிடம் நான் கற்றுக் கொள்ளாமலேயே பெற்றுக் கொண்டேன். இப்படி சொந்தங்கள் சூழ, ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு மறக்க முடியாத ஒரு பேரனுபவமாக இருந்தது. 

சில சமயம் குடும்ப நிகழ்வுகளில் உறவினர்களுக்கு இடையே சிச்சிறு சண்டைகளும், மனவருத்தங்களும் ஏற்படும். அப்போதும் சிறுவர்களான எங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஆனால் அவை புகை போல வந்த இடம் தெரியாது காணாமலாகிவிடும். அதன்பின் மயினி என்ன நீங்க இதுக்கு போய் கோவிச்சுக்கிடலாமா...என்ற சொல்லாடல்களுடன் முடிந்துவிடும். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது போல் இல்லாமல் குறைந்தது மூன்று நாட்கள் நடைபெறும். மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், தாலி கட்டும் வைபவம், மறுவீடு என்று கட்டுக்கள் எனச் சொல்லப்படும் பல சாங்கியங்களை உள்ளடக்கியிருக்கும்.

அன்றைய ஊரும் மண்ணும் உறவுகளும் திருமணங்களும் நல்லிதயங்களின் வாழ்த்துக்களும் இன்றைய எங்கள் வாழ்க்கையை வளப்படுத்தியிருக்கிறது. என்னுடைய திருமணம் நடந்த பின் இந்த என் சொந்தங்களிலிருந்து விடுபட்டு வேறொரு குடும்பம் வேறொரு வாழ்க்கை என நான் துண்டாடப்பட்டுவிட்டதைப் போலாகிவிட்டது. அந்தக் குடும்பமும் இதன் இன்னொரு தொடர்ச்சியாகவே இருந்தது. வெவ்வேறு மனிதர்கள் ஆனால் திருமணமும் அதையொட்டிய உறவினர் கூடும் நிகழ்வுகள் எல்லாமும் எங்கும் ஒன்றேதான். விடிய விடிய கதைகள் பேசுவோம். அந்த்தாக்‌ஷரி பாடுவோம், மருதாணி வைத்து யாருக்கு அதிகம் சிவக்கிறது என்று பார்த்து மகிழ்வோம்  இப்படி உறவுகளின் நினைவுகள் ஈரமாக, இனிப்பாக இன்றும் மனத்துக்குள் கசிந்து கொண்டிருக்க காரணம் அந்தக் கணங்களில் இருந்த ஆனந்தமும், கொண்டாட்டமும், ஆழமான அன்பும்தான். ஆனால் தற்போதோ திருமணங்கள் பார்டிகளாக மாறி வருகின்றன. அனைவரும் கூடி மகிழும் திருவிழாவாக இல்லாமல், பகட்டு நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. சொந்தங்கள் செய்த ஒவ்வொரு வேலைகளை ஈவெண்ட் மேனேர்ஜர்கள்தான் செய்து முடிக்கிறார்கள். இதில் மணமக்கள் வீட்டினருக்கு அழுத்தம் குறையும் என்பதெல்லாம்  உண்மைதான். ஆனால் உறவினர்களுக்கு இடையே நெருக்கமும் குறைந்து விடுவதும் உண்மைதானே. டேய் மாப்ளே பந்தியை கவனி என்ற வார்த்தை தேய்வழக்காகி விட்டது அல்லவா? தீம் வெட்டிங், டெஸ்டினேஷன் வெட்டிங் என ப்ளானர்களில் சிக்கிவிட்டது. வாழ்வின் முக்கியமான ஒரு கொண்டாட்டம் சட்டகத்துக்குள் அடைபட்டுவிட்ட, நம் திருமண நிகழ்வுகளை யார் மீட்டெடுப்பது?

என்னுடைய பெற்றோர் பக்க குடும்ப நிகழ்வுகளுக்கான பத்திரிகை அவ்வப்போது எனக்கு முன்பு தபாலிலும், அதன் பின் கூரியரில் அதன் பின் மின்னஞ்சலில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் முறையாக வந்து சேர்ந்துவிடும். நானும் சில திருமணங்களுக்கு செல்வதுண்டு. அதன்பின் குழந்தைகள், என்னுடைய வேலை, எனக்கே உரிய சொந்த பொறுப்புக்கள் என வாழ்க்கையின் திசை மாறத் தொடங்க திருமணங்களுக்கு செல்வது குறைந்து கொண்டிருந்தது. நண்பர்கள், தோழிகள், அண்டை வீட்டினர், எதிர் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள், ரயில் சிநேகிதிகள், பஸ் தோழிகள், அலுவலகத் தோழமைகள் என என்று இன்றும் திருமண அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அழைப்புக்களில் எல்லாம் வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் மகிழ்ச்சிதான் என்ற தொனி இருப்பதை நாம் காண முடியும். கையைப் பிடித்து அழுத்தி, நிச்சயம் வந்துடு, நீ வரலைன்னா என் கழுத்துல தாலி ஏறாது என்று செண்டிமெண்டலாக பேசும் தோழிகள் இப்போது யாருக்கும் அமைவதில்லை.

அதுவும் சமீப காலங்களில் திருமணங்கள் பலவும் காதல் திருமணங்கள் (வரவேற்கத்தக்கதே) ஆனால் இவை ஒரு குழப்பமான முறைமைகளைக் கொண்டுள்ளது. எந்த முறையில் திருமணத்தை நடத்தினாலும் அதில் அடிநாதமாக இருக்க வேண்டிய கொண்டாட்டம் தான் இத்தகைய அநேக திருமணங்களில் பார்க்க முடிவதில்லை. ராகுல் கல்யாணத்துல செமயா என்ஜாய் பண்ணோம் என்று நண்பர்களின் திருமணத்துக்குச் சென்றுவந்த இளைஞர்கள் கூறுவது எந்த என் ஜாய்மெண்ட் என்றால் அது பேச்சுலர் பார்ட்டிதான். ஒரு ரோபோவைப் போல மணமக்கள் மேடையில் நின்றிருக்க அவர்களுக்கு கேட் வாக் செய்து கைகுலுக்கி பரிசுப் பொருள் கொடுத்து போட்டோ விடியோவிற்குச் சிரித்து விருந்து உண்டுவிட்டு கிளம்பிச் செல்லும் கூட்டத்தினராகிவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது. மணமக்களின் பெற்றோர்களைப் பொருத்தவரையில் அவர்கள் தங்கள் மகன் மகளின் விருப்பத்திற்கு ஒப்புக் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் அடி மனத்தில் ஒரு வருத்தம் இருக்கவே செய்யும். தாங்கள் நிச்சயத்திருந்தால் என்ற கேள்வி தொக்கி நிற்பதுடன், வரும் உறவினர்கள் லவ் மேரேஜா என்று கேட்கும் ஒரு கேள்வியில் சிறிதளவிலாவது காயம் படுவார்கள். 

திருமணம் என்பது உறவுகள் கூடும் இடமாகவும் கொண்டாடத்தின் உச்சகட்டமாகவும் இருப்பது மாறி, ஒரு நாள் கூத்துக்கு எதற்கு இவ்வளவு செலவு என்பதாக ஒரு சாராரும், ஒரு நாள் என்றாலும் சரி மூன்று தினஙக்ள் என்றாலும் சரி, நான் யார் என்னுடைய பணபலம் அந்தஸ்து என்னவென்று காண்பிக்க வேண்டாமா என்று களத்தில் இறங்கும் இன்னொரு சாராரும், கடமையை முடிக்கணும் என்று பார்த்து பார்த்து பணம் சேர்த்து திருமணத்தை செய்து முடிக்க நினைக்கும் ஒருசிலராக இருந்தாலும் சரி, திருமணம் இன்றளவும் அதிக பணம் செலவாகும் ஆடம்பர நிகழ்வாக நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் உண்மையில் அதிலிருக்க வேண்டிய சந்தோஷங்களும் உற்சாகமான கைப்பற்றுதல்களும் ஒருவரிடம் மற்றவர் பெறுவதும் தருவதுமான அன்பின் நெருக்கங்களும் இல்லாமல் போனது சோகம்தான். குடும்ப விசேஷங்கள் எல்லாம் வெறும் சம்பிரதாயங்களாகிவிட்ட காலகட்டம் இது. நம்முடைய குடும்பத்திக்குள் வந்திருக்கும் புதிய உறவுகளைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய குழந்தைகளுக்கு யாரையேனும் அறிமுகப்படுத்தினால் அவர்களும் ஒரு ஹாய் பை சொல்லி விடைபெற்றுக் கொள்கின்றனர். 

நம்மிடம்தான் கைபேசி உள்ளது எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். அதைவிட வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளது எப்போது வேண்டுமானாலும் அதைத் திறந்து உறவினர்களின் முகங்களையும் இன்று அவர் என்ன மனநிலையில் உள்ளார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் மயமாகிவிட்ட உறவுப் பரிபாலனைகளில் பெரும்பாலும் ப்ளாஸ்டிக் புன்னகையைத் தான் பரிசளிக்க முடிகிறது. இது ஸ்மைலிக்களாலும் சங்கேத குறிகளாலும் மாறிவிட்ட மின்னுலகம். யாருக்கும் இங்கும் எதற்கும் நேரமில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரவர் திருமணத்திற்கு போகக் கூட நேரம் இல்லாமல் ஸ்கைப்பிலும், விடியோ சாட்டிங்கிலும் திருமணங்கள் முடிந்துவிடும். கான்ப்ரன்ஸ் விடியோ கால்களில் பெற்றோர்களும் உறவினர்களும் பேசிக் கொள்ளலாம்.

இதோ இப்போது குறுஞ்செய்தியில் ஒரு திருமணச் செய்தி வந்துள்ளது. நான் அன்பான வாழ்த்துக்களை பதிவு செய்துவிட்டு இந்தக் கட்டுரையைத் திருத்தம் செய்கிறேன். எவ்வளவு திருத்தினாலும் ஏதேனும் ஒரு ஒற்றுப் பிழை இருந்தே வருகின்றது. வேறென்ன என்னாலும் செய்ய முடியும்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com