நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கல்பனா குமாரி!

நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ள மாணவி கல்பனா, தினமும் 13 மணி நேரம் நீட் தேர்வுக்காக தான் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்துள்ளார்
நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கல்பனா குமாரி!

மே 6-ல் நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

இந்தநிலையில் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் சிபிஎஸ்இ வெளியிடப்பட்டது.  நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 691 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.சி பிரிவுக்கு 119, ஓபிசி, எஸ்சி.எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது.  நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பிகார் மாநிலம் சியோகர் நகரத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ள மாணவி கல்பனா, தினமும் 13 மணி நேரம் நீட் தேர்வுக்காக தான் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

17 வயது கல்பனா சியோகரில் இருக்கும் YKJM கல்லூரியில் 12 ஆம் வகுப்பை முடித்த பின் டெல்லிக்குச் சென்று அங்கு மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதற்குப் பிரத்யேக பயிற்சி பெற்றுள்ளார். 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வுக்காக தான் மிகவும் சிரமப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டதாகக் கூறும் மாணவி கல்பனா, ‘நான் தேர்வை நல்லமுறையில் எழுதியுள்ளதாக நினைத்து சந்தோசப் பட்டேனே தவிர நீட் தேர்வில் முதலிடம் பெறுவேன் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை, இது எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

மாணவி கல்பனாவின் தந்தை ராகேஷ் மிஸ்ரா ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், தாயார் மம்தா குமாரி அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com