போதைகள் பலவிதம்... இதில் உங்கள் போதை எந்த விதமானது? கண்டுபிடிங்க பார்க்கலாம்!

எதுவொன்று சாதாரண பழக்கமாகத் துவங்கி மீண்டும், மீண்டும் செய்யத் தூண்டி மீள முடியாத தொடர் செயலாகவும், அவஸ்தையாகவும் மாறுகிறதோ அதையே நாம் போதை என்கிறோம்.
போதைகள் பலவிதம்... இதில் உங்கள் போதை எந்த விதமானது? கண்டுபிடிங்க பார்க்கலாம்!

வாழ்க்கையில் பலவிதமான போதைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் நம்மால் உடனடியாகப் பட்டியலிட்டு விட முடியாது. ஏனெனில் எவையெல்லாம் போதை எனக் கண்டுபிடிக்கவே நமக்கு சில ஆண்டுகள் தேவைப்படலாம். எதுவொன்று சாதாரண பழக்கமாகத் துவங்கி மீண்டும், மீண்டும் செய்யத் தூண்டி மீள முடியாத தொடர் செயலாகவும், அவஸ்தையாகவும் மாறுகிறதோ அதையே நாம் போதை என்கிறோம். அப்படிப்பட்ட போதைகளில் சுமார் 20 போதைகளைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

கண்டதும் காதல் போதை...

சிலருக்கு சிலரைக் கண்டதுமே காதல் உணர்வு வந்து விடும். ஆனால், அந்த உணர்வுக்கான ஆயுள் தான் வெகு குறைவாக இருக்கும். இவர்களது போதையே அந்த உணர்வை அடிக்கடி பெற விளைவது தான். இதற்குப் பெயர் தான் கண்டதும் காதல் போதை. இந்தக் காதல் வெற்றி பெற்றாலும் சரி தோற்றாலும் சரி அதற்கான ஆயுள் மட்டும் எப்போதும் குறைவே.

வெயில் போதை (டேனரெக்ஸியா)...

நம்மில் பெரும்பாலானோர் வெள்ளைக்காரர்களைப் பார்த்து, அவர்களைப் போல நமது தோலின் நிறம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களில் பலர் இந்தியர்களைப் போல பிரெளன் நிற சருமம் தங்களுக்கு இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு தினமும் கடற்கரை வெயிலில் படுத்துப் புரண்டு தங்களது மேனி நிறத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த செய்தியாகவே இருக்கலாம். இப்படி சன் பாத் எடுப்பது தினமும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் என்பது போல இயல்பாக இருந்தால் அது நார்மல் மனநிலை. அதே நாள் முழுவதும் சூரியன் உதித்து மறைவது வரை எல்லா நேரமும் சன் பாத் எடுத்துக் கொள்ளும் ஆவல் யாரையாவது ஆட்டிப் படைத்தால் அவர்களுக்கு டேனரெக்ஸியா இருக்கிறது என்று அர்த்தம். இதை தமிழில் சூரிய போதை அல்லது வெயில் போதை என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான். 

இண்டர்நெட் போதை...

இப்போது அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்துகிறோம். இதில் service provider காரர்கள் தரும் விதம் விதமான இணைய சலுகைகள் காரணமாக இப்போது இண்டர்நெட் என்பது யாருக்கும் அரிதான விஷயமல்ல என்றாகி விட்டது. எல்லோருக்கும் சோறு கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக நீங்கள் நாட்டின் எந்த மூலையிலிருந்தாலும் சரி... மலைக்குன்றின் சிறு குகைக்குள் வாழ நேர்ந்தாலும் உங்களுக்கு இலவச இண்டர்நெட் நிச்சயம் கிடைக்கக் கூடும். விளைவு தினமும் குளித்துச் சாப்பிடுகிறோமோ இல்லையோ காலை கண்விழிப்பது முதல் இரவில் கண் அயர்வது வரை விடாமல் இண்டர்நெட்டில் புழங்கிக் கொண்டே இருக்கும் போதை பலருக்கு அதிகரித்திருக்கிறது. சிலர் வெளியில் ஒரு வாழ்க்கை, இண்டர்நெட்டில் இன்னொரு வாழ்க்கை என்று இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை இண்டர்நெட்டில் இருந்து பிரிக்க நினைத்தால் உயிரை வேண்டுமானால் தியாகம் செய்வார்களாயிருக்கும் ஆனால் இண்டர்நெட்டை விடமாட்டார்கள். இத்தகைய போதைக்குப் பெயர் தான் இண்டர்நெட் போதை.

மேக்அப் போதை...

இந்தப் போதை எல்லாப் பெண்களுக்கும் உண்டு என்று உடனே கருத்துச் சொல்லி யாருக்கும் முந்திரிகொட்டைகள் ஆகி விடவேண்டாம். இந்தப் போதை இப்போது ஆண்களுக்கும் தான் அதிகமிருக்கிறதாம். இம்மாதிரியான போதை இருப்பவர்கள் அடிக்கடி மேகப் செய்து கொள்வது என்ற நிலையிலிருந்து முன்னேறி சதா சர்வ காலமும் மேக் அப் பற்றிய நினைவிலேயே வாழ்வார்கள். உதாரணத்துக்கு சொல்வதென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்திருப்பீர்களே? அதில் ரைஸா என்றொரு மாடலும் கலந்து கொண்டிருந்தார். அவரை பிக் பாஸ் வீட்டில் பார்க்க நேரும் போதெல்லாம் கையில் மேக் அப் மிரரும் கையுமாகவே இருப்பார். எல்லா நேரங்களிலும் லிப்ஸ்டிக், ஃபேஸ் பேக், ஃபேஸ் க்ரீம், அட முகத்தில் அப்பிக் கொள்ள எதுவுமில்லையென்றால் சும்மா கண்ணாடியில் முகத்தை ஆராய்ந்து கொண்டிருப்பது மாதிரியான போதைக்குப் பெயர் மேக் அப் போதை. இந்த போதை பெரும்பாலும் நடிகைகள் மற்றும் மாடல்களுக்குத் தான் அதிகமிருக்கும் என்றும் சொல்ல முடியாது... ஸ்கூட்டர் முகப்பு மிரர், கார் கண்ணாடி, முதல் நமது தோற்றத்தை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடி போன்ற எதைக் கண்டாலும் சுற்றுப்புற பிரக்ஞை இன்றி உடனே அவற்றை முகக்கண்ணாடிகளைப் போல பாவித்துக் கொண்டு தலை சீவிக் கொள்ளவோ, லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளவோ தொடங்கினோமெனில் நமக்கும் மேக் அப் போதை இருக்கிறது என்று அர்த்தம்.

ஃபிட்னஸ் போதை...

ஃபிட்னஸ் இருக்க நினைப்பது ஆரோக்யமானது தானே... அதை எப்படி போதையில் சேர்க்கலாம் என்று தோன்றும். நிஜம் தான், தினமும் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை ஃபிட்னஸுக்கு ஒதுக்கினால் அது ஆரோக்யம். அதுவே தினமும் வேலை நேரம் போக மற்ற எல்லா நேரமும் ஜிம்மே கதி என்று கிடந்தாலோ அல்லது வாக்கிங், ஜாகிங், ஜூம்பா டான்ஸ், ஏரோபிக்ஸ் என்று பித்துப் பிடித்து திரிந்தாலோ அதன் பெயர் ஃபிட்னஸ் போதை. இந்த போதையை நம்மால் எளிதில் அடையாளம் காண இயலும். இப்படி சதா சர்வ காலமும் ஃபிட்னஸ் போதை நீடித்தால் அப்படிப்பட்டவர்களுக்கு குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் செலவளிக்க நேரமே இருப்பதில்லை. அதனால் அவர்கள் எளிதில் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

தூக்க போதை...

மனிதனின் அனுமதிக்கப்பட்ட தூக்க நேரம் 8 மணி முதல் 10 மணி நேரம் தான். அதையும் தாண்டி அதிக நேரம் சிலர் தூங்கலாம். அவர்களுக்கு நோய் அல்லது உடலில் அசெளகர்யங்கள் இருந்தால் அம்மாதிரியான நேரங்களில் மருந்துகளின் வீரியத்தில் 10 மணி நேரங்களுக்கும் மேலாக தூங்குவது இயல்பு. பிறந்த குழந்தைகள் எனில் அவர்களின் தூக்க நேரமும் பெரியவர்களிடமிருந்து நிச்சயம் மாறுபடும். அவையெல்லாம் இயல்பான தூக்க விகிதங்கள். ஆனால் எவ்வித உடல் அசெளகர்யங்களும் இன்றி ஒருவருக்கு தூக்கத்தின் மீது பெரு விருப்பம் இருந்து தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் தூங்க விரும்புகிறார்கள் எனில் அவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் அதை தூக்கமென்று கருத முடியாது. அது தூக்க போதை என்பார்கள்.

சத்தானதை மட்டுமே உண்ணும் போதை (ஆர்தோரெக்ஸியா நெர்வோஸா)

இப்போது பலருக்கும் ஆர்கானிக் உணவுகளை மட்டுமே உண்ணும் போதை இருக்கிறது. அப்படி வாழ்வது நல்லது தானே? என்று பலருக்குத் தோன்றும். நல்லது தான். நல்லதை உண்டு, நல்லதையே பிறருக்கும் உண்ணத் தந்து வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளது. ஆனால் அந்த நல்ல தனத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை கடந்து சதா சர்வ காலமும் நான் சத்தான உணவை மட்டுமே உண்பேன், அப்படியான உணவு கிடைக்காத நேரத்தில் பட்டிணி கிடந்து நோவேனே தவிர பிற உணவுகளை உண்ணவே மாட்டேன் என்று விரதமிருப்பதன் பெயர் ஆர்தோரெக்ஸியா நெர்வோஸா எனும் குறைபாடு என்கிறது உளவியல். அதாவது நமக்கு வெகு ப்ரியமான உணவு என்றாலும் கூட பிற சுவையான உணவுகளை உண்ணாமல் தள்ளி வைப்பது இதில் அடங்கும்.

டாட்டூ போதை...

இப்போது பலருக்கும் உடலில் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் டாட்டூ (பச்சை குத்திக் கொள்வது) போட்டுக் கொள்வது ஒரு வகை போதையாகப் பரிணமித்துள்ளது. அது ஃபேஷன் தானே? அதை எப்படி போதை என்று சொல்ல முடியும்? என்கிறீர்களா? ஆம்... நீங்கள் ஃபேஷனுக்காக எப்போதோ ஒரு முறை டாட்டூ வரைந்து கொள்கிறீர்கள் என்றால் அது ஃபேஷன். ஆனால் அதே வேலையாக எந்தெந்த காலத்தில் எந்தெந்த டாட்டூ ட்ரெண்டிங் என்று பார்த்து அதை மாற்றி மாற்றி உடல் பாகங்களில் வரைந்து கொள்வதைப் பழக்கமாக வைத்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு டாட்டூ போதை இருக்கிறதென்று அர்த்தம். 

பிகோரெக்ஸியா (தோற்றத்தைப் பற்றிய போதை)...

சிலர் நிறம் குறைவானவர்களாக இருப்பார்கள், சிலர் வெளுத்துப் போய் எப்போது பார்த்தாலும் சோர்வான தோற்றத்துடன் இருப்பார்கள். சிலர் அதீத உயரத்துடன் இருப்பார்கள், சிலர் குள்ளமாக இருப்பார்கள், குண்டாக இருப்பார்கள், வற்றலும், தொத்தலுமாக இருப்பார்கள் எல்லாமே தோற்ற அளவில் தான். அவர்களின் மன உறுதியிலோ, வேலைத்திறனிலோ எந்த விதமான குறைபாடும் இருக்காது. ஆனால் அவர்களோ மனதளவில் தங்களது தோற்றத்தைப் பற்றி மட்டும் சதா சர்வ காலமும் குறைபாட்டுடனே இருப்பார்கள், ஐயோ நாம் இன்னும் கொஞ்சம் உயரமாகப் பிறந்திருக்கக் கூடாதா? இன்னும் சற்று வெளுப்பாகப் பிறந்திருக்கக் கூடாதா? ஏன் நெட்டைப் பனைமரமாக வளர்ந்து நிற்கிறோம்? கொஞ்சம் நடுத்தர உயரத்துடன் இருந்திருக்கக் கூடாதா? என்றும் சிலர் சதா கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கவலையானது சாதாரணமானதாக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அந்தக் கவலைகள் நம்மை கூனிக் குறுகச் செய்யும் அளவுக்கு இருந்தால் அதன் பெயர் பிகோரெக்ஸியா என்கிறது உளவியல். அதாவது தோற்றத்தைப் பற்றிய போதை.  

த்ரில் போதை...

சிலருக்கு வாழ்க்கையை த்ரில்லாக அனுபவிக்கும் ஆசை அதிகமாக இருக்கும். வாழ்க்கை முழுவதையுமே இப்படியான அட்வெஞ்சர் ஆசைகளின் மேலே தான் கட்டமைத்திருப்பார்கள். இப்படியானவர்களுடன் சேர்ந்து மனமொத்து வாழ்வதென்பது அவர்களின் வாழ்க்கைத்துணைகளுக்கு கடினமான காரியம். ஆனால் அட்வெஞ்சர் பித்துப் பிடித்து அலைபவர்களுக்கு குடும்பம், குழந்தைகள்,  மற்றும் வாழ்வின் மீதான ஏனைய கமிட்மெண்டுகள் குறித்தெல்லாம் பெரிதாக அக்கறை இருக்காது. பெரிதாக குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இன்றி எப்போது பார்த்தாலும் பயணங்கள், அட்வெஞ்சரி விளையாட்டுக்கள் என்று அலைவார்கள். இவர்களுக்கு மிகப்பிடித்த விளையாட்டுகளாக ஸ்கீயீங், பாராகிளைடிங், ட்ரெக்கிங், டைடல் சர்ஃபிங், போன்றவை இருக்கும். இந்த விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை பிரச்னை இல்லை. ஆனால், அந்த ஆர்வம் உயிரைப் பணயம் வைத்து ஆடும் அளவுக்கு தீவிரமானதாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் த்ரில் போதை இருக்கிறதென அர்த்தம்.

சூதாட்ட போதை...

மகாபாரத யுதிஷ்ட்ரர் முதல் இன்றைக்கு நெட்டில் சீட்டு விளையாடும் நவ யுக இளைஞர், இளைஞிகள் வரை அத்தனை பேருக்கும் இருக்கிறது சூதாட்ட போதை. வாழ்வே நிகழ்தகவாக இருக்கும் சூழலில் மொத்த வாழ்க்கையையும் பணயம் வைத்தாடும் இந்த சூதாட்ட போதை பலரது வாழ்வை நிர்மூலமாக்கி இருக்கிறது. சீட்டு விளையாடுவது மட்டுமே சூதாட்ட போதை அல்ல, கிரிக்கெட் பெட்டிங், குதிரைப் பந்தயம், புறாப் பந்தயம், சேவல் சண்டை, எல்லாமும் சூதாட்ட போதையில் சேர்ந்தது தான்.

ட்ரங்கோரெக்ஸியா (எடை குறைப்புக்கு உணவுக்குப் பதில் மது எனும் போதை)...

மது அருந்தினால் எடை குறையுமா? எடை குறைகிறதோ இல்லையோ பசி மந்தித்துப் போகும் என்பது உண்மை. அப்படி நினைத்துத் தான் மேலை நாடுகளில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும் உணவு நேரத்தில் சாப்பாட்டை குறைத்து விட்டு அதை ஈடு செய்யும் விதத்தில் மது அருந்துகிறார்களாம். இப்படியான மனநிலையை அடைவதை உளவியலில் ட்ரங்கோரெக்ஸியா என்கிறார்கள். அதாவது உடல் எடையைக் குறைக்க உணவுக்குப் பதில் மது அருந்துவது.

ஷாப்பிங் போதை...

இதைப் பற்றி பெரிதாக விளக்கம் அளிக்கத் தேவை இராதென்று நினைக்கிறேன். குறிப்பிட்ட அளவுக்கு இந்த போதை நம் எல்லோருக்குள்ளும் உண்டு. வாங்க வேண்டியது ஒரே ஒரு பொருளாக இருக்கும். உதாரணத்துக்கு 100 ரூபாயில் தேங்காய் துருவி வாங்கலாம் என சூப்பர் மார்க்கெட் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வருகையில் 1000 ரூபாய்க்கும் மேலாக செலவளித்து மேலும் சில பொருட்களை அள்ளிக்கொண்டு வருவோம். இங்கே நமது அப்போதைய தேவை தேங்காய் துருவி மட்டுமே, ஆனால், தேவையை மீறி நாம் வேறு சில பொருட்களையும் வாங்கிக் குவித்திருப்போம். அதற்குப் பெயர் தான் ஷாப்பிங் போதை. இதை எல்லாவிதமான ஷாப்பிங்கிலும் நாம் பின்பற்றுவோம். ஃப்ரிஜ் வாங்கலாம் என்று ஹோம் அப்ளையன்சஸ் கடைக்குள் நுழைந்து விட்டு ஃப்ரிஜ் மட்டும் வாங்காமல் அதனோடு சேர்த்து இண்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோ வேவ் ஓவன், ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் என்று சில உதிரிப் பொருட்களையும் அள்ளிக் கொண்டு வருவோம். துணிக்கடை ஷாப்பிங் பற்றி சொல்லவே வேண்டாம். 1000 ரூபாய்க்கு ஒரே ஒரு உடை வாங்க உள்ளே நுழைந்து விட்டு கடையை விட்டு வெளியே வருகையில் 10,000 க்கும் மேல் பர்ஸை பழுக்க வைத்திருப்போம். இதற்குப் பெயர் தான் ஷாப்பிங் போதை. நமது தேவை என்ன என்பதை உணராமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் இந்த போதை பலரை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கிறது.

வொர்க்கஹாலிக் போதை...

சிலர் வேலையில் இறங்கி விட்டார்கள் என்றால் அவர்களை யாராலும் திசை திருப்ப முடியாது. சரியான கடுவன் பூனைகளாக முகத்தை வைத்துக் கொண்டு அப்படியே முற்று முழுதாக தங்களது வேலையில் மூழ்கிப் போய் விடுவார்கள். சாப்பாடு, தூக்கம், இயற்கைக் கடன் கழிப்பது, நண்பர்களுக்கு ஹாய், பை சொல்வது, புன்னகைப்பது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது. மனைவியிடம் ரொமான்ஸ் செய்வது, பெற்றோர்களுடன் கரிசனையாக நேரம் செலவிடுவது எல்லாவற்றையுமே மறந்து விடுவார்கள். அவர்களுக்கு அப்போதைய ஒரே நட்பு அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மட்டுமே. இம்மாதிரியான மனநிலை அவசர காலகட்டங்களில் அதாவது முக்கியமான வேலைகளை முடித்துக் கொடுக்கும் நேரங்களில் மட்டும் இருந்தால் அது சாதாரணமானது. ஆனால் இதே மனநிலை சதா சர்வ காலமும் நீடிப்பதன் பெயர் வொர்க்கஹாலிக் போதை.

சோஷியல் மீடியா போதை...

நாமெல்லாம் இந்த பாழும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... ஆனால் இந்த சோஷியல் மீடியா போதை பிடித்த மனிதர்கள் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வதும் இந்த பூமியில் தானென்றாலும் அந்த நினைப்பே அவர்களுக்கு இருக்காது எனும் வகையில் 24 மணி நேரமும் ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் சாட் என்று உலவிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு நீங்கள் நட்பு வைத்துக் கொள்ள விரும்பினால் நேரில் சென்று பார்த்துப் பேசி நட்பாக முடியாது. அவர்கள் உலவும் சோஷியல் மீடியாக்கள் ஏதாவதொன்றில் நீங்களும் மெம்பராகி அவர்களைப் பின் தொடர்ந்து நட்பு வட்டத்தில் இணைந்து அவர்கள் பகிரும் மொன்னை ஸ்டேட்டஸ்களுக்கெல்லாம் லைக்குகள் இட்டு வாவ், ஃபெண்டாஸ்டிக், இட்ஸ் டிவைன், க்யூட், நைஸ், லால் (lol) என்றெல்லாம் கமெண்டுக்கள் இட்டீர்களெனில் அவர்கள் உங்களுக்கு எளிதில் நட்பாகி விடுவார்கள். இந்த போதைக்குப் பெயர் தான் சோஷியல் மீடியா போதை.

ஸ்மார்ட் ஃபோன் போதை...

நீங்கள் எங்கே வேண்டுமானாலும் காத்திருக்கலாம், அது மருத்துவமனையோ, சூப்பர் மார்க்கெட்டோ, சினிமா தியேட்டரோ, பஸ் ஸ்டாண்ட்டோ, கேண்ட்டீனோ, எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம் உங்கள் விரல்கள், நேரம் கிடைத்தால் போதும் உடனே ஸ்மார்ட் ஃபோனை எடுத்து நோண்டத் தொடங்கி விடுகிறது எனில் நிச்சயம் உங்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் போதை இருக்கிறதென்று அர்த்தம். சுருங்கச் சொல்வதென்றால் டிராஃபிக் சிக்னலில் காத்திருக்க நேரும் அந்த மீச்சிறு நொடிகளைக் கூட வீணாக்க விரும்பாமல் எவரெல்லாம் ஸ்மார்ட் ஃபோனில் நேரம் செலவிடத் துடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பீடித்திருக்கிறது ஸ்மார்ட் ஃபோன் போதை.

காஃபி போதை...

காலையில் ஒரு காஃபி, மாலையில் ஒரு காஃபி இடையில் ரெஃப்ரெஷ் செய்து கொள்ள ஒரு காஃபி என்று மூன்று காஃபிகள் அருந்துவதொன்றும் பிழையல்ல. ஆனால், சிலருக்கு காஃபி பித்து தலைக்கேறி இருக்கும். நினைக்கும் போதெல்லாம் காஃபி அருந்தியாக வேண்டும். இல்லாவிட்டால் தலைவலி வரும், காஃபி கிடைக்காத கோபத்தை காட்டுக் கத்தலில் தீர்த்துக் கொள்வார்கள் அல்லது தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை வறுத்து எடுத்து விடுவார்கள். எது எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு தங்கு தடையின்றி காஃபி கிடைப்பதில் மட்டும் எவ்விதச் சிக்கலும் வந்து விடக்கூடாது. இப்படியொரு மனநிலை இருந்தால் அவர்களுக்கு காஃபி போதை இருக்கிறதென்று அர்த்தம்.

எளிதில் சலிப்படையும் விதமான போதை (இதைத்தான் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்கிறார்களோ?!)

சிலர் மிகத்தீவிரமாக ஒரு விஷயத்தில் இறங்குவார்கள். அது காதலாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், அல்லது புது நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் ஆர்வமாக இருக்கலாம், புது கல்விமுறையைத் தேர்வு செய்வதாக இருக்கலாம், ஏன் புதிய தொழில் துவங்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆரம்பத்தில் எல்லாம் ஜோராக இறங்குவார்கள். ஆனால் எல்லாம் சில நாட்கள் வரை தான். பிறகு படிப்படியாக தாங்கள் எதைத் தொடங்கினார்களோ அதில் சலிப்புற்று வெறுக்கத் தொடங்கி வெகு எளிதாக அதிலிருந்து வெளியில் வந்து விடுவார்கள். இம்மாதிரியான மனநிலை கொண்டவர்கள் எந்த விஷயத்திலும் உறுதியாக இருக்க மாட்டார்கள். இவர்களை நம்பி எதில் இறங்குவதும் ஆபத்தில் முடியலாம்.

விடியோ கேம் போதை...

இது கிட்டத்தட்ட சூதாட்ட போதை, ஸ்மார்ட் ஃபோன் போதை, இண்டர்நெட் போதை போன்றதே. சதா சர்வ காலமும் விடியோ கேம் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி இருக்கும். எப்படி இண்ட்டர்நெட் கேம் ஷோக்களில் பல கேரக்டர்களை ஒருவரே கையாண்டு விளையாடுகிறாரோ அதே போல இவர்கள் வாழ்க்கையையும் கையாளத் தொடங்குவார்கள். அதனால் இவர்களின் இயல்பான குணநலன்கள் பாதிக்கப்பட்டு பிறகு முற்றாக அழிந்து கேம் ஷோ கதாபாத்திரங்களை இமிடேட் செய்யத் தொடங்கி விடுவார்கள். இந்த தாக்கத்தை தான் விடியோ கேம் போதை என்கிறார்கள்.

சென்ட்டிமெண்ட் போதை...

சிலருக்கு அம்மா வாங்கித் தந்த புடவையோ, மோதிரமோ, அப்பா வாங்கித் தந்த விலையுயர்ந்த இம்போர்டெட் பேனாவோ, இல்லை ப்ரியமான நண்பர்கள் அளித்த கிஃப்டுகளோ, பொம்மையோ, குட செண்ட்டிமெண்ட்டாக இருக்கலாம். அதை எப்போதும் பிரிய விரும்பமாட்டார்கள். மாமா பெண்ணொருத்திக்கு குளிக்கும் நேரம் தவிர பிற எல்லா நேரங்களிலும் வாட்ச் அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. அது பழக்கமாக இருந்த வரை பிரச்னையில்லை. அந்த வாட்ச் ரிப்பேராகி மீண்டும் புது வாட்ச் வாங்கும் காலம் வரை அந்த இடைப்பட்ட ஓரிரு நாட்களில் அவளடித்த கூத்தை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அவளால் அந்த வாட்ச் ரிப்பேர் ஆனதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை, அதற்குப் பதிலாக வேறு வாட்ச் அணியவும் பிடிக்கவில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல எனக்கு அந்த வாட்ச் தான் வேண்டும், ரிப்பேர் ஆனாலும் பரவாயில்லை அதையே சரி செய்து மீண்டும் பழைய மாதிரி எனக்குத் தாருங்கள் என்று அவள் மிக மூர்க்கமாக அடம்பிடிக்கத் தொடங்கி விட்டாள். இதற்குப் பெயர் தான் செண்ட்டிமெண்ட் போதை. இம்மாதிரியான போதைகள் அவற்றின் எல்லைகளைக் கடக்கும் போது மனிதர்களிடையே பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அதிகரித்து விடுகிறது. இது அவர்களது மனநலனுக்கு உகந்ததல்ல.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள போதைகளில் எந்தெந்த விதமான போதைகள் எல்லாம் நமக்கும் இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த போதைகளைச் சரியாக கையாளப் பழகுங்கள். இம்மாதிரியான போதைகள் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் வருவது தான் தீவிர மன உளைச்சலும், மனச்சிதைவும், ஃபோபியாக்களும் எனவே அவற்றை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மனநல மருத்துவரை அணுகித் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற வேண்டியது அவசியமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com