ஜேசிபி வண்டியில் கல்யாண ஊர்வலம் வந்த வித்யாசமான புதுமணத்தம்பதிகள்!

இதென்ன ஜேசிபி யில் கல்யாண ஊர்வலம்?! புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இப்படிச் செய்தீர்களா? என்ற கேள்விக்கு சேத்தன் அளித்த பதில், 
ஜேசிபி வண்டியில் கல்யாண ஊர்வலம் வந்த வித்யாசமான புதுமணத்தம்பதிகள்!

புதுமணமக்களின் கல்யாண ஊர்வலம் என்றாலே ஒன்று குதிரை பூட்டிய சாரட் வண்டியிலே அல்லது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரிலோ தான் செல்வது தான் வழக்கம். இதுவரை நமது கண்கள் பார்த்துப் பழக்கப்பட்டதும் அப்படியான காட்சிகளைத் தான். ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான 28 வயது சேத்தன் கல்லகட்டாவும் 22 வயது மமதாவும் இந்த விஷயத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார்கள். அந்த மாற்று யோசனையில் ஒரு சிறிய வாழ்வியல் தத்துவத்தையும் புகுத்தி அசத்தியது தான் இந்த ஜேசிபி கல்யாண ஊர்வலத்தில் ஹைலைட்டான விஷயம்.

திங்களன்று சேத்தன், மமதாவின் திருமணம் முடிந்ததும் நண்பர்களும், உறவினர்களும் இருவரையும் வாழ்த்தினர். வாழ்த்திய உறவினர்கள் அடுத்தடுத்து அவரவர் சொந்த வேலையில் மூழ்கி விட நண்பர்கள் மட்டும் சேத்தனை விட்டு அகலாமல் அவருடனே இருந்திருக்கின்றனர். மமதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், சரி கணவரின் நெருங்கிய நண்பர்கள் போலும், காரில் நம்மை வீடு வரை விட்ட பின் விடை பெறுவார்கள் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது சரி தான். அந்த நண்பர்கள் அதற்காகத் தான் காத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் புதுமணத்தம்பதிகளை வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் சென்று விட்டது அலங்கரிக்கப்பட்ட காரில் அல்ல. அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி வண்டியில். 

ஜேசிபி வண்டியில் ஊர்வலம் என்றதும் முதலில் மணமகளுக்கு கொஞ்சம் ஜெர்க் ஆகி அவர் பயந்திருக்கிறார். அப்போது மணமகனான சேத்தன், தன் புது மனைவியிடம், ‘பயப்படாதே, நான் ஒரு ஜேசிபி டிரைவர். இது தினமும் நான் இயக்கும் வாகனம் தான். இதில் அமர்ந்து செல்ல எந்தப் பயமும் வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேனே! யோசிக்காமல் வா’,  என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

புதுக்கணவர் இத்தனை சொல்லும் போது மனைவிக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள, இருவரும் ஜேசிபியில் குதூகலமாக ஊர்வலம் வந்து வீட்டை அடைந்தனர்.

இதென்ன ஜேசிபி யில் கல்யாண ஊர்வலம்?! புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இப்படிச் செய்தீர்களா? என்ற கேள்விக்கு சேத்தன் அளித்த பதில், 

‘அப்படி இல்லை, கல்யாணத்திற்கு ஊர்வலம் போவது வழக்கமான விஷயம் தான். அந்த ஊர்வலத்தை நான் தினமும் ஓட்டும் ஜேசிபி வண்டியிலேயே போனால் என்ன? என்று என்  நண்பர்கள் சிலர் என்னை உற்சாகப் படுத்தினார்கள். சொல்லப்போனால் எனக்கு காரிலும், குதிரை வண்டியிலும் ஊர்வலம் போகத்தான் பயமாக இருந்தது. எனவே நண்பர்கள் சொன்னது எனக்கும் சரி என்று தோன்றியது’ அதனால் சென்றோம். அது வித்யாசமானதா? இல்லையா என்றெல்லாம் அப்போது நான் யோசிக்கவில்லை. என்றார். 

சேத்தன், மமதா திருமண ஊர்வலத்தை புகைப்படமெடுத்த அவரது நண்பர்கள் அதை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

புகைப்படங்களில் காணும் போது, தம்பதியினர் ஜேசிபி வண்டியிலும் கூட வண்டிக்கும் அமர்ந்து ஊர்வலம் வரவில்லை. ஜேசிபியின் முன்புறம் மண்ணை அள்ளிக் கொட்ட அகலமான கை போன்ற உறுப்பு ஒன்று இருக்குமே. அதில் உட்கார்ந்து ஊர்வலம் வந்திருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலுமே மணமக்கள் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு போஸ் கொடுத்திருப்பது நன்கு புலப்படுகிறது. இந்த ஊர்வலத்தைப் நேரில் பார்த்தவர்களுக்கும் கூட இந்த வினோதக் காட்சி முகத்தில் சிரிப்பை வரவழைத்திருக்கும்.

எது எப்படியோ, ஆடம்பரமாகத் திருமணம் செய்து, அந்த ஆடம்பரத்தை மேலும் அதிகரிப்பது போல அலங்கரிக்கப்பட்ட காரையோ, குதிரை வண்டியையோ வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கல்யாணச் செலவை மேலும் அதிகரிக்கச் செய்வதைக் காட்டிலும் சேத்தன், மமதா தம்பதிகளைப் போல புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிலிருக்கும் சொந்த வாகனங்களிலேயே திருமண ஊர்வலத்தை திட்டமிடுவது கூட புத்திசாலித்தனமான காரியம் தான். இல்லையா?!

Image courtesy: The news minute.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com