எது சிறந்தது? காதலா காமமா? காதலின் மூன்று படிநிலைகளை முன்வைக்கிறது இந்த ஆராய்ச்சி!

மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றுதான் காமம். பாலியல் வன்முறை, பாலியல் குற்றம் என உலகம் தோன்றிய நாள் முதல்
எது சிறந்தது? காதலா காமமா? காதலின் மூன்று படிநிலைகளை முன்வைக்கிறது இந்த ஆராய்ச்சி!

மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றுதான் காமம். பாலியல் வன்முறை, பாலியல் குற்றம் என உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை அது சார்ந்து பல குற்றச் செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த அடிப்படை உணர்வினை வென்றெடுக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு வழிதான் அதனை உன்னதமாக்குதல். தன்னுள் ஏற்படும் வேட்கையை உன்னதமாக்கிக் கொள்ள மனிதனுக்கு கலை, மற்றும் கலாசாரத்தின் தேவை ஏற்படுகிறது. அவ்வகையில் காமத்திற்கு அழகான ஒரு பெயர் தேவைப்பட காதல் என்று மறுமொழியில் கூறத் தொடங்கினான். காதலற்ற காமமும், காமம் அற்ற காதலும் சுவைக்காமல் போவதும் இதனால்தான். சரி தலைப்புக்கு வரலாம். காதலா காமமா? எது சிறந்தது?

பன்னெடுங்காலமாக காமம் தவறென்றே சித்தரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கற்பிதங்கள் முறையற்ற என்ற வார்த்தையை உடன் சேர்த்திருந்தால் கூடப் பரவாயில்லை. காமத்தைத் தாண்டும் அதனை வென்றெடுக்கும் சக்தி காதலுக்கு மட்டும் உண்டு என்பது காதலிப்பவர்களின் நம்பிக்கை. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது... என்று சொல்ல வைக்கக் கூடிய காவியக் காதல்களை வரலாறு உண்மையிலேயே கடந்து வந்துள்ளது.

கடவுளரின் நாமங்களை விட அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை காதல். ப்ரேமம். ப்யார். உலக மொழிகளில் இந்த வார்த்தைக்கு மட்டும் சற்று மென்மையும் மேன்மையும் அதிகம்தான். காதல் மனிதர்களை அழகாக்குகிறது. அது இயற்கையின் பெரும் எழிலை உள்ளடக்கியது. காதல் ஒரு அதியற்புதமான உணர்வு என்றே நம் கவிதைகள் உணர்த்தி வருகிறது. கண்டதும் காதல் ஏற்படாது. கண்டதும் ஏற்படுவது உண்மையில் காமம்தான். பழகியபின் மனம் ஒருமித்து ஒருவரை மற்றவர் ஆழமாக விரும்பிய பின்னர் தான் காதல் மலர்கிறது. நேசமும் அக்கறையும் காதலை மெருகூட்டுகிறது. உணர்ச்சிகளின் உன்மத்தம் காதல் எனலாம்.

ஒவ்வொரு மனித உயிரும் இன்புற்று இருக்கவே விரும்புகின்றது. காமம் என்பது எப்போதும் இனிமையானது மட்டுமல்ல. இனிப்பும் கசப்பும் துவர்ப்பும் உவர்ப்பும் கொண்டது தான் காமம். உளரீதியாக ஒருவரை பெரும் அலைக்கழிப்புக்குள்ளாக்க வல்லது அது. அது ஆதியுணர்வு. பெரும்பாலும் இது உடல்ரீதியானது. காமம் ஒரு கட்டத்துக்கு மேல் ஆழமான காதலாக மாறலாம். ஆனால் அதற்கு நீண்ட காலமாகும்.

இரண்டு தனி நபர்கள் காமத்திலிருந்து காதலுக்கு திரும்ப, ஒருவர் மற்றவரின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு தெரிந்த கொண்ட பின்னரே காதலிக்கத் தொடங்குவார்கள். காமம் ஒவ்வொருவரின் மனத்தின் மிக அந்தரங்கமான ஓர் இடத்தை மென்மையாக தட்டி எழுப்புவது.  

காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ஹெலன் ஃபிஷர் என்பவர் காதலின் படிநிலைகளாக மூன்று நிலையைக் குறிப்பிடுகிறார். நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

முதல் நிலை - காமம்

காமம் தான் காதலில் விழுவதற்கான முதல் நிலை. ஒருவர் மீது ஏற்படும் இச்சையே காமத்தின் அடிப்படை. பின்னாட்களில் இதுவே காதலாக மாறுகிறது. உடலிலுள்ள ஹார்மோன்கள் எதிர்பாலினரைக் காணும்போது தூண்டப்படும். ஒருவரை பார்த்தவுடன் சிலருக்கு லஸ்ட் என்று கூறப்படும் காம உணர்வு தோன்றலாம். சிலருக்கு இவ்வுணர்வு தோன்றுவதற்கு இரண்டு வருடங்கள் கூட ஆகலாம். நீங்கள் காம வயப்பட்டிருக்கிறீர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? நீங்கள் விரும்பும் நபர் மீது உங்களுக்கு இச்சை தாண்டி வேறெந்த நோக்கமும் இருக்காது, உணர்வுநிலைகளிலும் எவ்வித பிடிப்பும் இருக்காது. காம உணர்வு மெள்ள மாறி அது காதலா அல்லது வெறும் ஆசையா என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பும் நபரிடம் தொடர்ந்து பழகும் போதுதான் விளங்கும்.

இரண்டாம் நிலை - ஈர்ப்பு

இது காதலுக்கும் காமத்திற்கும் இடைப்பட்ட நிலை. உங்கள் மனம் விரும்பியவரைப் பற்றியே மணிக்கணக்கில் நினைத்துக் கொண்டிருக்கத் தோன்றும். தூக்கம் பிடிக்காது. உணவு ருசிக்காது. காதலாகி கண்ணீர் மல்கி கசிந்திருகிக் கொண்டிருப்பீர்கள். டொபமைன், செராடனின் போன்ற காதலுணர்வு ஹார்மோன்களின் அட்டூழியம் வேறு உங்களை தலைக்கிறுக்காக்கிக் கொண்டிருக்கும். இதயம் படபடப்பும். 

மூன்றாம் நிலை - ஆழமான மெய்க் காதல்

இதற்கு மேல் தாங்காது எனும் நிலையில்தான் காதலை எப்பாடுபட்டாவது நீங்கள் நேசிக்கும் ஒருவரிடம் மனம் திறந்து சொல்லி விடுவீர்கள். உங்கள் மனம் கவர்ந்த அவர்தான் உங்களுடைய ஒட்டுமொத்த காதல் வாழ்க்கையின் தலைவி / தலைவன். அவருக்கு மட்டும்தான் உங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களும் தெரிந்திருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், ஆழமாக நேசிக்கவும் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் காதலை ஒரு நிரந்தர பந்தத்துக்கு இட்டுச் செல்லும். ஆனால் அவசரப் பட வேண்டாம். அது இயல்பாக இயற்கையாக மலர்வதே நல்லது. உண்மை, நேர்மை, நேசம், விருப்பு போன்ற உணர்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக உருவாகி ஒருவர் மற்றவரை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியாது எனும் நிலை வந்த பின்னர் தான் அது ஆழமான காதல் எனக் கொள்ளலாம்.

அதன் பின் திருமணம் அல்லது லிவ்விங் டுகெதர் முறையில் வாழும் போது உடல்ரீதியான பரிமாற்றமும் நடைபெறும். தாம்பத்ய உறவினால் காதலிக்கும் இருவரிடையே பற்று உருவாகும். ஒருவரை மற்றவர் பிரிய முடியாத அளவுக்கு நெருக்கம் ஏற்படும். பேரறிஞர் சாக்ரடீஸ் கூறுவது போல, காதல் ஒருவரை பித்து நிலைக்கு இட்டுச் செல்லும்’ என்பது உண்மைதான். காதலுணர்வு உங்களை அடிமைப்படுத்திவிடும், அது நல்லதுதான், ஆதலினால் காதல் செய்வீர் என இது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி தனது ஆய்வு முடிவினை ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார் டாக்டர் ஃபிஷர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com