நூறு ரூபாய் கள்ளன் என்றொரு வீடியோ!

இந்த மனநிலை தான் மேற்கண்ட கள்ளத்தனத்துக்கு மூல காரணமாகிறது. அதைத் தவிர்த்து விட்டால் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான். அப்புறம் நாடு சுபிட்சமாகி விடும். 
நூறு ரூபாய் கள்ளன் என்றொரு வீடியோ!

யூ டியூபில் இப்படி ஒரு வீடியோ காண நேர்ந்தது. இது போன்ற சின்னச் சின்னத் திருட்டுக்களை விவரிக்கும் வீடியோக்கள் பல அதில் உண்டு. ஒவ்வொன்றும் பார்க்க நேர்கையில் ஒரு நொடி துணுக்குறச் செய்வதாகத் தான் இருக்கின்றன இந்த வீடியோக்கள். இப்படியெல்லாமா ஏமாற்றத் தோன்றுகிறது மனிதர்களுக்கு? அந்த 100 ரூபாயை வைத்துக் கொண்டு அவரென்ன அம்பானி மாளிகையா கட்டி விடப்போகிறார்? ஆனாலும் ஏமாற்றத் தோன்றுகிறதே அந்த உணர்வை என்னவென்று சொல்ல? மனசாட்சி என்ற ஒரு வஸ்துவை மொத்தமாக குரல்வளையை நெரித்துக் கொன்று விடுவார்கள் போல.

கூடையில் வைத்து தலைச்சுமையாக மீன் விற்று வரும் நடுத்தர வயதுப் பெண்மணி, தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்கள், மளிகைக் கடைக்காரர்கள் எல்லாம் சிக்கனத்துக்குப் பேர் போனவர்களே தவிர அவரவர் வாடிக்கையாளர்களிடம் கூடுமான வரை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்விருப்பவர்கள் தான்.

வாங்கிச் சென்ற தேங்காயை வீட்டுக்குச் சென்ற பின் உடைத்துப் பார்க்கையில் அழுகி இருந்தால் அப்படியே எடுத்துச் சென்று காண்பித்தால் வேறு தேங்காய் மாற்றிக் கொள்ளலாம். தேங்காய் என்றில்லை, வீட்டருகில் இருக்கும் சிறு, குறு மளிகைக் கடையில் வாங்கிய எந்தப் பொருளையும் உங்களால் இப்படி எக்சேஞ்ச் செய்து கொள்ள முடியும். அதே பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களது ரெகுலர் வாடிக்கையாளராக இருந்த போதிலும் கூட வாங்கிய பொருட்களில் சேதாரம் என்றால் மனம் பிடியாத மங்கம்மாக்களாகத் தான் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வார்கள். கேட்டால் ‘ ஒரு முறை வாங்கிய பொருட்களை ரிட்டர்ன் எடுப்பதில்லை’ என ரூல்ஸ் பேசுவார்கள். அப்படியானவர்களிடம் கடைக்காரர்களை விட வாடிக்கையாளர்களான நாம் தான் பெரும்பாலும் ஏமாற்றப்படுகிறோம். அங்கெல்லாம் நாம் வாயைத் திறப்பதில்லை.

ஆனால், தள்ளுவண்டிக்காரர்கள் எடை இழுக்க இழுக்க ஒன்றிரண்டு தக்காளிகளை கூடுதலாக தட்டில் போட்டாலும் திருப்தி அடையாது பேரம் பேசி மேலுமொரு தக்காளியையோ, வெங்காயத்தையோ, கேரட்டையோ வாரிக் கூடைக்குள் போட்டுக் கொள்ள முடியாவிட்டால் பிறகு அந்த எளிய வியாபாரியைப் புறக்கணித்து விடுவோம். அவரிடம் அல்லது அவளிடம் மறுநாளில் இருந்து வாடிக்கையாளர் உறவை ரத்து செய்து விட்டு நமது எளிய திருட்டைக் கண்டு கொள்ளாத வேறொரு வியாபாரியைத் தேடிக் கண்டு பிடித்து விடுவோம். அத்தனை சாமர்த்தியம் நம்மில் பலருக்கு உண்டு.

வியாபாரம் படிய பேரம் பேசுவது முக்கியம் தான். சில சமயங்களில் ஆரோக்யமானதும் கூட. ஆனால் அந்த பேரம் பேசும் மனநிலை நியாயமான வர்த்தகங்களில் இருக்க வேண்டும். இப்படி சிறு வியாபாரிகளை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது. பேரம் பேசுவதிலேயே இப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருக்கையில் பொருளை வாங்கி விட்டு அதற்கான விலையைத் தராமல் அதிலும் 100 ரூபாயை ஒளித்து வைத்துக் கொண்டு கடைக்காரப் பையனை மறுபடியும் எண்ணிப் பார்க்கச் சொல்லும் இந்த குள்ளநரித்தனமான ஏமாற்று வேலையை அந்தக் கடைக்காரர்கள் கண்டுபிடித்திருந்தால் ஏமாற்றிய அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டு கேவலப்பட்டிருப்பார். ஆனால், தனது ஏமாற்றுத் தனத்தை, திருட்டை யாரும் பார்க்கவில்லை என்ற மனநிலை தான் அவரை மேலும் மேலும் இப்படி நடந்து கொள்ளச் செய்கிறது.

இந்த மனநிலை தான் மேற்கண்ட கள்ளத்தனத்துக்கு மூல காரணமாகிறது. அதைத் தவிர்த்து விட்டால் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான். அப்புறம் நாடு சுபிட்சமாகி விடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com