நண்பர்களே, வேலையை விட நினைக்கிறீர்களா? காரணங்கள் என்னவென்று சரிபார்க்கவும்!

நம்முடைய வாழ்நாளில் பாதி நேரம் அலுவலகத்தில் தான் வாழ்கிறோம். நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் வேலை செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
நண்பர்களே, வேலையை விட நினைக்கிறீர்களா? காரணங்கள் என்னவென்று சரிபார்க்கவும்!

நம்முடைய வாழ்நாளில் பாதி நேரம் அலுவலகத்தில்தான் வாழ்கிறோம். நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் வேலை செய்ய வேண்டியது நமது கடமையாகும். அதே சமயம் வேலையை கடனே என்று செய்யாமல் உற்சாகத்துடன் செய்தால் அதில் மேன்மேலும் நல்ல வாய்ப்புக்களையும் வெற்றிகளையும் அது உங்களுக்கு உருவாக்கித் தரும்.

நல்லா தானே போய்க்கிட்டிருக்கு ஏன் வேலை மாற வேண்டும் என்று சில சமயம் நீங்கள் ஒரே வேலையில் தேங்கிவிடலாம். ஆனால் உங்களை நிறுவனம் அலசி ஆராய்ந்து சரியானவர் என்று தெரிந்த பின்னர்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதே போல நீங்களும் உங்கள் நிறுவனத்தையும் அதில் வேலை செய்யும் உங்களையும் ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்தி சில கணக்குகளைப் போட்டுப் பாருங்கள். உங்கள் மனத்துக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைப் பின் தொடருங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை எப்போது உங்களுக்கு ஒத்துவராமல் போகும் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. 

முன்னேற்றம் இல்லாமல் போனால்...

நம்மில் சிலருக்கு வேலை என்பது பணம் தரும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அது வாழ்வியல் சார்ந்தது. உத்யோகம் புருஷ லட்சணம் என்பது மாறி உத்யோகம் மனுஷ லட்சணம் என்பதாகிவிட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்களுடைய பணத்தேவை உள்ளிட்ட பலவிதமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேலை தேவையாக இருக்கிறது. நீங்கள் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் இடத்தில் நிதி பிரச்னை இருந்தால் உடனடியாக வேறு வேலைக்கான முயற்சிகளில் இறங்குங்கள். இது தவிர அந்த வேலையில் உங்களுக்கான முன்னேற்றமோ, சுய வளர்ச்சிக்கான பாதை எதுவும் இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால் அங்கு சீட்டை தேய்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து நீங்களே வேறு வேலை தேடத் தொடங்கிவிடுவீர்கள். ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்தில் தான் உங்களுடைய வளர்ச்சியும் உள்ளடங்கியிருக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் வயது போவதற்குள் உங்களுக்குப் பிடித்த வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் அப்போதுதான் உங்கள் பர்ஸ் நிறைவதுடன், மனநிறைவும் ஏற்படும்.

திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால்..

உங்கள் திறமைக்கு சரியான வேலை கிடைக்காவிட்டால் நாளடைவில் நீங்கள் திறமையாளர் என்பதையே மறந்து போவீர்கள். மேலும் நீங்கள் உங்கள் வேலை சார்ந்து சாதித்த சில விஷயங்களுக்கு போதிய அங்கீகாரம் பாராட்டுக்கள், ப்ரோமோஷன்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த வேலையில் நீங்கள் தொடர்வதில் அர்த்தம் இல்லை. உங்கள் நிறுவனம் உங்களைக் குறைத்து மதிப்பிட்டால் அது உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்துவிடும். நாளடைவில் அது உங்கள் வேலையில் ஈடுபாட்டை குறைத்து மனச் சோர்வுக்கு உள்ளாவீர்கள். இதையெல்லாம் முன் கூட்டியே உணர்ந்து உடனடியாக விலகி விடுவதே உங்களுக்கு நல்லது.

மிகக் குறைவான சம்பளமாக இருந்தால்...

உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் சரியான வேலையோ, வேலைக்கேற்ற சம்பளமோ இல்லாவிட்டால் அதிகம் யோசிக்காமல் உடனடியாக வேலையை விட்டுவிடுங்கள். ஏன் அதிகம் யோசிக்கக் கூடாது என்றால் யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சும். Comfort zone என்று சொல்லப்படும் சொகுசு வேலைக்கு நீங்கள் உங்கள் சம்பளம் போன்ற விஷயங்களை விட்டுக் கொடுத்தால் அவ்வளவுதான் ஆயுசுக்கும் ஆயிரங்களில் முடங்கிப் போவீர்கள்.எனவே சமரசம் செய்தீர்கள் எனில் இழப்பில் வாடப் போவது நீங்கள் தானே தவிர உங்கள் நிறுவனம் அல்ல. எனவே இந்த விஷயத்தில் விரைவான புத்திசாலித்தனமான முடிவெடுப்பதுதான் உங்களுக்கு நல்லது.

மேலதிகாரியைப் பிடிக்கவில்லை என்றால்...

நிறுவனம் நன்றாக இருந்தும் நமக்கு மேலே இருக்கும் ஒருவர் அடிக்கடி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. அதிகாரிகள் என்பவர்கள் அதிகாரம் செய்யத் தக்கவர்கள்தான். அதற்காகத் தான் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறது நிறுவனம். ஆனால் உங்கள் வேலையை செய்து முடித்தபின்னரும் அல்லது செய்ய விடாமல் தடுத்தும் கொண்டிருந்தால் நீங்கள் விரைவில் மன உளைச்சலுக்குட்படுவீர்கள். சில அடக்குமுறை அதிகாரிகளின் குணக்கோளாறினால் நீங்கள் மன நிம்மதியை இழக்கக் கூடும். அவர்கள் பதிவி அரணாக இருக்க, உங்களை அவர்கள் பாடுபடுத்தலாம். எனவே இதை அனுமதிக்காதீர்கள். நேர்மையாக உங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லியும் அவர்களின் அடாத செயல் தொடருமெனில் நீங்கள் வேலையை மாற்றிக் கொள்வதுதான் இதற்கு நிவாரணம். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று வாழ்வத்ற்கு பதில் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து நல்ல வேலை கிடைத்ததும் வெளியேறிவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

உங்களுக்கு அந்த வேலையில் ஆர்வம் குறைந்துவிட்டால்

தினமும் காலையில் எழுந்தவுடன் அய்யோ இன்னிக்கு ஆபிஸ் போகணுமா என்று நினைக்கத் தொடங்கிவிட்டீர்கல் என்றால் நிச்சயம் உங்களுக்கு வேலையில் ஆர்வம் இல்லை என்றுதான் அர்த்தம். இன்று போயே ஆக வேண்டும், என்னால்தான் அதை செய்து முடிக்க வேண்டும் என்ற உற்சாகம் எல்லாம் வடிந்த நிலையில் எனக்கு அங்க என்ன இருக்கு. தினமும் செய்த வேலையே செய்யணும் என்றெல்லாம் அலுப்பும் சலிப்பும் கொண்டிருப்பீர்கள் எனில் அது வேலையில் பிரதிபலித்து உங்கள் நிலையை மேலும் சிக்கலாக்கும்.

ஜாப் சாடிஸ்ஃபேக்‌ஷன் மிகவும் முக்கியம். வேலை திருப்தி இல்லாமல் மந்தமாகப் போனால் அதில் உங்கள் மனநிலையும் பாதிக்கப்படும். எனவே உங்களுக்கு ஆர்வம் தூண்டும் விஷயம் எதுவுமே நடக்கவில்லை எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால் அந்த வேலையை விட்டுவிட வேண்டும். அதுதான் உங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கு நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com