ஆறு வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்: அந்நாள் குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணியின் பகீர் குற்றச்சாட்டு!

#metoo ஹேஷ்டேக்கில் அம்பலமாக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, பாலியல் குற்றவாளிகளில் முக்கால்வாசிப் பேர் நெருங்கிய உறவினர்களாகவோ, பாதுகாவலர்களாகவோ தான் இருக்கிறார்கள்.
ஆறு வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்: அந்நாள் குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணியின் பகீர் குற்றச்சாட்டு!

குழந்தை நட்சத்திரங்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாதவாறு காக்க வேண்டியது யார் பொறுப்பு?

60 களில் நம்பர் ஒன் குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்த டெய்ஸி ராணியை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஜெமினி, சாவித்ரி நடித்த ‘யார் பையன்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த டெய்ஸி ராணியின் குறும்பை ரசிக்காதவர்கள் யார்? டெய்ஸி ராணி இன்று பாலிவுட்டில் பிரபல நடிகரான ஃபர்கான் அக்தர் மற்றும் பிரபல நடன இயக்குனருமான ஃபாராகானின் பெரியம்மாவாகவும் அறியப்படுகிறார். தான் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டெய்ஸி ராணி இது போன்றதொரு குற்றச்சாட்டை எழுப்பவில்லை. தற்போது இந்திய நடிகைகளிடையே பரவலாகி வரும் #metoo ஹேஷ்டேக் தொடர் மூலமாக பாலிவுட், டோலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என அனைத்து வுட்களைச் சார்ந்த நடிகையரும் தமக்கு திரைப்படத்துறையில் நுழைந்த கணத்தில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் துஷ்பிரயோக அவமதிப்புகளை ஊரறியச் செய்து அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்த தொடக்கத்துக்கு வித்திட்டவர் என கடந்த ஆண்டு தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறைக் கொடுமையை எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்து போராடத் துணிந்த கேரள நடிகையைத் தான் பாராட்ட வேண்டும். திரைப்பட உலகில் பணியாத நடிகைகளைப் பணிய வைக்க பட அதிபர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் முதல் அடுத்தடுத்த கட்டப் பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் வரை நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் பெண்களை எவ்விதமாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அவரது வழக்குக்குப் பிறகே பலர் துணிந்து வெளியில் சொல்ல முன்வந்தனர். தனக்கு எதிராகப் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி நடிகையைக் கடத்தி பாலியல் வன்முறை செய்து அதைக் காணொளியாகப் பதிவு செய்து நடிகையை மிரட்டத் துணிந்த போது இந்த அநியாயத்தை முறியடிக்க சற்றும் அச்சமின்றி அவர் துணிந்து முதலடியை எடுத்து வைத்ததால் அவரைத் தொடர்ந்து திரைத்துறையில் இருக்கும் பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பழைய பாலியல் துயரங்களைக் கூட பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற ரீதியில் சமூக ஊடகங்களில் #meetoo ஹேஷ்டேக் மூலமாகப் பகிரத் தொடங்கினர். வயது வித்யாசங்களின்றி இதுவரை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை அப்படிப் பதிவு செய்த நடிக, நடிகையர் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கலாம். தற்போது பிரபல குழந்தை நட்சத்திரமான டெய்ஸி ராணியும் அவர்களில் ஒருவராகி இருக்கிறார்.

டெய்ஸி ராணிக்கு 6 வயதாக இருக்கும் போது சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள தனது பாதுகாவலருடன் டெய்ஸி சென்னைக்கு வந்துள்ளார். அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு ஹோட்டல் அறையில் வைத்து தனது பாதுகாவலர் 6 வயதுச் சிறுமியென்றும் பாராது தன்னைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும். பயந்து போய் அவரது விருப்பத்துக்கு உடன்பட மறுத்த தன்னை பெல்ட்டால் அடித்துத் துன்புறுத்தி இதை வெளியில் எவரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும்; தனது பதிவில் தெரிவித்துள்ளார். டெய்ஸி குற்றம் சாட்டியுள்ள அந்த பாதுகாவலர் தற்போது உயிருடன் இல்லை. எனினும், இன்றும் கூட திரைப்பட உலகில் ஏராளமான சிறுவர், சிறுமியர் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகின்றனர். அவர்களை குழந்தைகள் தானே? யாரென்ன செய்து விடப் போகிறார்கள் என்ற அலட்சியத் தொனியுடன் பெற்றோர் அவர்களைப் படப்பிடிப்புத் தளங்களில் தனியாக இருக்க அனுமதிக்கக் கூடாது. தங்களது குழந்தைகளை நடிப்பதற்கு அனுப்பும் பெற்றோர் அவர்களது பாதுகாப்பு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கும் நேர வாய்ப்பு உண்டு. எனக்கு நேர்ந்த அந்த கசப்பான அனுபவத்தின் பின்னர் தான் நான் என் தங்கைகள் மேனகா ராணியும், ஹனி ராணியும் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகையில் அவர்களது பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்தேன். அந்த உண்மை இன்றைய பெற்றோர்களும் அறிந்து கொண்டு தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்போது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

டெய்ஸி ராணி சொல்வது வாஸ்தவமான விஷயம் தான். 

கோலிவுட்டின் குழந்தை நட்சத்திரங்களைப் பற்றி நடிகை ரோகிணி சில வருடங்களுக்கு முன்பு ‘சைலண்ட் ஹியூஸ்’ (Silent Hues)  என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால்; குழந்தை நட்சத்திரங்களை மிகக்குறைந்த சம்பளத்தில் வெறும் சாக்லேட், ஐஸ்கிரீம் வகையறாக்களைக் காட்டி நடிக்க வைத்து அவர்களது இனிமையான குழந்தமையை, இயல்பாக பிற குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய சுய விருப்ப உணர்வை திரையுலகம் பறிக்கிறதோ என்ற கவலையைத் தான். குழந்தை நட்சத்திரங்களின் எதிர்கால வாழ்வு பிரபல ஹீரோ, ஹீரோயின் ஆகும் திரைப்படத்துறையுடன் ஒட்டிய கனவுகளுடனும், நடைமுறை வாழ்வுக்கு ஒவ்வாத கற்பனைகளுடனும்... பல சமயங்களில் அவை நிறைவேறாத நிராசையுடனே முடிந்து விடுமோ? என்ற கவலையும் ரோகிணியின் குறும்படத்தில் தொனித்தது. ரோகிணியும் குழந்தை நட்சத்திரமாக இருந்து பிறகு டப்பிங் குரல் கலைஞராகவும் பின்னர் கதாநாயகியாகவும் வளர்ந்து வந்தவர் என்பதால் நிச்சயம் அவரது கூற்றில் உண்மை இருக்கும். தான் ஒரு குழந்தை நட்சத்திரமாகப் பட்டுத் தெரிந்து கொண்ட அவலங்களைத் தான் அவர் குறும்படமாக்கி இருந்தார். 

குழந்தை நட்சத்திரங்களில் பலர் ரெகுலராகப் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு அவர்களது நேரம் படப்பிடிப்புத் தளங்களில் வீணே கழிகிறது. கல்வியின் மீதான முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும். இதற்கு அந்தக் குழந்தைகளின் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தை பெரிய திரையிலோ, சின்னத்திரையிலோ முகம் காட்டி சில ஆயிரங்கள் சம்பாதிப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு கல்வி ஒன்று தான் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ள உதவும் என்ற உணர்வு பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

சில பெற்றோருக்கு திரைப்பட நடிகர், நடிகையராக ஆசையிருந்து அது நிறைவேறாமல் போயிருந்தால் அதைத் தீர்த்துக் கொள்ளும் முகமாகவும் தங்களது குழந்தைகளை குழந்தை நட்சத்திரங்களாக்கி நடிக்க விட்டு விடுகிறார்கள். உண்மையில் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போலத்தான். வெறும் திரைப்பகட்டை நம்பி வாழ்வில் மிக முக்கியமான அடிப்படைக் கல்வி பெறும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இதனால் நடிப்பதற்கான வாய்ப்பு குறையும் போது தங்களது கனவு கலைந்து விழித்தெழத் தொடங்குகையில் கல்விக்கான வயது கடந்து வேறு வழியின்றி சின்னத்திரையிலோ, பெரிய திரையிலோ கிடைக்கும் சிறு, சிறு கதாபாத்திரங்களைச் செய்து கொண்டு எதிர்காலம் குறித்த பயத்துடனே வாழ்ந்து தீர வேண்டியதாகி விடுகிறது. இப்படியான சூழலில் குழந்தைகளின் விருப்பங்கள் குறித்த யோசனையே இன்றி அவர்களைத் தங்களது ஆசைகளை நிறைவேற்றும் இயந்திரங்களாகக் கையாளும் பெற்றோர்களுக்கு சின்னத்திரையோ, பெரிய திரையோ எங்கே என்றாலும் அறிமுகமில்லாத பல நபர்கள் பணியாற்றும் படப்பிடிப்புத் தளங்களில் தங்களது குழந்தைகளின் மன உணர்வுகள் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் பாதுகாப்பதில் என்னவிதமான அக்கறை இருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. தங்களது உழைப்பு காசாக்கப்படுகிறது என்பதையே உணராமல் நேரம், காலமின்றி படப்பிடிப்புத் தளங்களில் நடித்துக் கொண்டிருக்கும் குழந்தை நட்சத்திரங்களில் பலர் அவர்களுக்கே தெரியாமல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட வாய்ப்புகள் நிறைய உண்டு. இதில் மிகக் கவனமாக இருந்து தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியவர்கள் அந்தந்த குழந்தை நட்சத்திரங்களின் பெற்றோரே!

இன்றும் கூட பெரிய திரையில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும் நாம் எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்களைக் காண்கிறோம். திரையில் வயதுக்கு மீறி அவர்கள் செய்யும் சாகஷங்களையும், பேசும் பெரிய மனுஷத்தனமான வசனங்களையும், இயக்குனரின் வழிகாட்டுதலின் படியோ அல்லது நடன இயக்குனரின் வழிகாட்டுதலின் படியோ அவர்கள் வெளிப்படுத்தும் சற்றே அத்துமீறப்பட்ட நடன அசைவுகளையும் காண்கிறோம். சன் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கலக்கப் போவது யாரு? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அந்தக் குழந்தைகள் பாடும் வயதுக்கு மீறிய அர்த்தங்கள் தொனிக்கும் பாடல்களையும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும், இதுவரை நம்மால் என்ன செய்ய முடிந்திருக்கிறது. இப்போதும் அந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. குழந்தைகளை தங்களது குழந்தமையைத் தொலைக்க வைப்பது தான் குழந்தை நட்சத்திரத்துக்கான முதல் தகுதியோ?! என்ற ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

டெய்ஸி ராணி பாலிவுட்டில் இருப்பதால் தயங்காமல் தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைப் பற்றி போட்டு உடைத்து விட்டார். காரணம் தன்னைப்போல இனியொரு குழந்தை நட்சத்திரம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வில் ஒரு எச்சரிக்கையாகத் தான் இதை அவர் பதிவு செய்திருக்கிறார். தமிழிலும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான நடிகர், நடிகையர் பலருண்டு. ஆனால் அவர்களில் கணிசமானோரின் நிலை இப்போது என்னவெனத் தெரியவில்லை. ஒருசிலர் மட்டுமே இன்னும் திரையில் வெள்ளித் தாரகைகளாக மின்னிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் மெச்சும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் ஆனவர்களை கமல், ஸ்ரீதேவி, மீனா என விரல் விட்டு எண்ணி விடலாம்.

#metoo ஹேஷ்டேக்கில் அம்பலமாக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, பாலியல் குற்றவாளிகளில் முக்கால்வாசிப் பேர் நெருங்கிய உறவினர்களாகவோ, பாதுகாவலர்களாகவோ தான் இருக்கிறார்கள். எனவே வேலியே பயிரை மேயும் கதை தொடராமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர் தமது குழந்தைகளின் பாதுகாப்பை மனதளவிலும், உடலளவிலும் எந்தக் கேடும் நேராமல் உறுதி செய்ய வேண்டியது எத்தனை அவசியம் என்று உணர வேண்டிய நேரமிது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உங்கள் குழந்தைகளைப் பிறரை நம்பி ஒப்படைத்து விட்டு செல்லுதல் என்பது முதல் தவறு. சரி வேறு வழியின்றி அப்படி ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டிய சூழல் நேர்ந்து விட்டாலும் கூட, உங்களது குழந்தைகளை ஒன்றும் அறியாத கோழிக்குஞ்சுகளைப் போல வளர்த்து விடாமல்.  பாலியல் துஷ்பிரயோகங்கள் எந்தெந்த விதங்களில் நிகழ்த்தப் படலாம், அதற்கான சமிஞ்சைகள் தெரிந்தால் அம்மாதிரியான சூழல்களில் எப்படி அதை தைரியமாக எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பதையும் குழந்தைகள் அறியுமாறு எளிமையாகப் புரிய வைக்கப் பயிற்சிகள் தர வேண்டும்.

இல்லையேல் குழந்தை நட்சத்திரங்கள் என்ற பெயரில் சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் மின்னிக் கொண்டிருந்தாலும் தாம் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் தாக்கத்தினால் திரைக்குப் பின்னே தன்னைத் தானே வெறுக்கக் கூடிய மனநிலையுடன் கூடிய குழந்தைகளை உருவாக்கி  அவர்களது வாழ்வைச் சீரழித்தவர்கள் என்ற பலி வந்து சேரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com