அதென்னது அது  ‘சாதனா கட்’?  நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா கேர்ள்ஸ்?!

ஹாலிவுட் நடிகை ஆத்ரே ஹெப்பர்ன் புகைப்படமொன்றைத் தருவித்து சாதனாவிடம் காட்டி அவரைப் போல முன் நெற்றியில் கற்றை முடியை கொத்தாக வெட்டி விட சம்மதம் வாங்கினார்கள்...
அதென்னது அது  ‘சாதனா கட்’?  நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா கேர்ள்ஸ்?!

மகளுக்கு ஹேர் கட் செய்வதற்காக நேச்சுரல்ஸ் பார்லருக்குச் சென்றிருந்தேன். எந்த ஸ்டைலில் கட் செய்யட்டும் என்று கேட்டார் அங்கிருந்த இளம்பெண். எனக்குத் தெரிந்தது கொஞ்சம் தான். சின்னவளுக்கு என்றால் பாய் கட், மஷ்ரூம் கட், டயானா கட், சம்மர் கட், பெரியவளுக்கு என்றால் யூ கட், ஸ்ட்ரெயிட் கட், ஸ்டெப் கட்.  அவ்வளவு தான். இதையே மாற்றி, மாற்றி எத்தனை முறை தான் முயற்சிப்பது. விடுமுறை நாட்கள் வேறு... எனவே கொஞ்சம் ஸ்டைலாக வெட்டிக் கொண்டால் பெரியவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தேன். 

எனவே திடீரென்று உதித்த ஞானோதயத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ திரைப்படத்தில் சமந்தா கட் செய்திருப்பாரே அப்படி முன்நெற்றியில் கற்றையாக கொத்து முடி ஸ்டைலாக காற்றடிக்கும் போதெல்லாம் நெற்றியில் வந்து விழுந்து அசையும் விதத்தில் வெட்டச் சொன்னேன். என் மகளுக்கு குஷி தாங்க முடியவில்லை. அவளும் நானும் சேர்ந்தே தான் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தை பார்த்திருந்தோம் என்பதால், குழந்தை அதே போல தன்னைக் கற்பனை செய்து கொண்டு, ‘ஹைய்யா... ஜாலி’  என்று சொல்லிக் கொண்டே பார்லர் நாற்காலியில் சமர்த்தாக அமர்ந்து கொண்டாள். 

எதற்கும் இருக்கட்டுமே என்று... ‘ஏம்மா வேற ஹேர் கட் ஸ்டைல்ஸ் எல்லாம் சூஸ் பண்றதுக்கு ஏத்தமாதிரி உங்க கிட்ட கேட்டலாக் எதுவும் இல்லையா?’ என்றும் கேட்டு வைத்தேன். அந்தப் பெண்.. ‘அப்படியெல்லாம் நாங்கள் எதையும் மெயின்டெயின் செய்வதில்லை மேடம், கஸ்டமர்கள் கேட்கும் விதத்தில் ஹேர் கட் செய்வது தான் வழக்கம்’ என்று சொல்லி விட்டார்.

‘அட... விதம். விதமாக ஹேர் கட் செய்து கொள்ளும் ஆசையிருந்தாலும் எந்த ஸ்டைலில் வெட்டிக் கொள்வது என்பதை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? கேட்டலாக் இருந்தால் அதைப்பார்த்து சரியாகக் கேட்பார்கள், உங்களுக்கும் வெட்டுவதற்கு ஈஸியாக இருக்குமே! ஏன் அப்படியெல்லாம் யோசித்து நீங்கள் ஒரு கேட்டலாக் மெயிண்டெயின் செய்யக்கூடாது’ என்று எனது மேதாவித்தனத்தை அந்தப்பெண்ணிடம் கேள்வியாக்கி விட்டு நான் அங்கு டேபிளில் கிடந்த ஒரு ஃபேஷன் வீக்லியை எடுத்துக் கொண்டு படம் பார்க்கத் தொடங்கினேன். 

அந்தப் புத்தகங்களின் ராசியோ அல்லது பார்லரின் AC யோ... ஏதோ ஒன்று அடுத்த பத்திருபது நொடிகளில் என்னைத் தூங்க வைத்து விட்டது. மகள் ஃப்ரிங்கி கட் செய்யும் போது தலையை உயர்த்தக் கூடாது என்பதால் என் பக்கம் திரும்பவில்லை. எவ்வளவு நேரமானதென்று தெரியாமல் சுகமாக நித்திரையில் ஆழ்ந்திருந்த போது யாரோ கிணற்றுக்குள் இருந்து மேடம்... மேடம் என்று அழைப்பது போலிருந்தது. ச்சே இதென்னடா இது? வேலை கெட்ட வேலையில் நட்ட நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து எழுப்புவது! என்ற கனவில் நான் புரண்டு படுப்பதாகப் பாவித்து சோபாவில் நகர்ந்து அமரும் முயற்சித்ததில் பக்கத்தில் புதிதாக வந்து அமர்ந்திருந்த மற்றொரு அம்மாளின் முகரைக் கட்டையில் இடித்து விட்டேன் போலும்... அவர் ‘ச்சு’ வெனும் ஆட்சேபணையுடன் நகர்ந்து உட்காருவதாக நினைத்துக் கொண்டு வசமாக ஹைஹீல்ஸ் செருப்பால் என்கால் சுண்டு விரலை பதம் பார்த்து விட்டார். அதற்குள் விழித்துக் கொண்ட நான் எரிச்சலுடன் அந்தம்மாளை முறைத்து விட்டு பார்லர் பெண்ணின் அழைப்பிற்கு காது கொடுத்தேன்.

‘மேடம்... இதோ பாருங்க இந்த அளவு போதுமா? இன்னும் கொஞ்சம் லெங்த் குறைக்கனுமா?’ என்றார் அந்தப்பெண்.

ஐயோ... இதென்னது இது? நான் கேட்டது இப்படியில்லைங்க. நீங்க நீ தானே என் பொன் வசந்தம் படம் பார்த்திருக்கீங்களா இல்லையா? என்று கத்தாத குறையாக நான் மேலும் குரலுயர்த்த.

அந்தப் பெண்ணோ, கரகாட்டக்காரன் செந்திலாக, அட... அதான் மேடம் இது என்றார்.

எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஏங்க, அந்தப் படத்துல சமந்தாவுக்கு அந்த ஹேர் கட் எவ்வளவு கியூட்டா இருக்கும் தெரியுமா? நீங்க என்னடான்னா... இப்படி கிளியோபாத்ரா  கட் மாதிரி பழம்பஞ்சாங்கமா கட் பண்ணி வச்சிருக்கீங்களே? நான் கேட்டது இப்படி இல்லை. ச்சே எப்போ பார்த்தாலும் உங்க ஆளுங்க இப்படித்தான் பண்ணி வைக்கறீங்க. நான் சமந்தா கட் தானேங்க கேட்டேன். இது வேண்டாம். மாத்துங்க ப்ளீஸ் என்றேன்.

அந்தப் பெண்... செம கூலாக ‘ஐயோ மேடம் இனி எப்படி மாத்தறது? நான் நடுவுல ரெண்டு தடவை ஹைட் குறைக்கனுமானு கேட்கவும், லெங்த் போதுமானு கேட்கவும் உங்களைக் கூப்பிட்டேனே... நீங்க நல்லா தூங்கிட்டிதால கண்ணையே திறக்கலை’ இப்போ ஒன்னும் பண்ண முடியாது. இனி முடி வளர்ந்து இந்த ஸ்டைல் மாறினப்புறம் தான் வேற ஸ்டைல் கட் பண்ண முடியும்’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இத்தனைக்கும் நடுவில் என் மகள்... படு உக்கிரமாக என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு வேறு இருந்தாள்.

நான் சமாளிக்கும் விதமாக, ‘இல்லடா குட்டி... இந்த ஹேர் கட் கூட நல்லாத்தான் இருக்கு. சமந்தா கட் இல்லைன்னா என்ன? இது சாதனா கட்டுடா. அந்தக் காலத்துல ஃபேமஸான பாலிவுட் ஆக்ட்ரஸ் எல்லாம் இப்படித்தான் ஹேர்கட் பண்ணுக்குவாங்க. என்றேன்.

அவள் என்னைப் பார்த்து உம்மென முகத்தை வைத்துக் கொண்டு. பேசாதீங்கம்மா... நான் உங்களை கேட்டேனா சமந்தா கட் வேணும்னு பேசாம யூ கட் இல்லன ஸ்டெப் கட் பண்ணிட்டுப் போயிருக்கலாம்ல. புதுசா ஸ்டைலா ட்ரை பண்றாங்களாமாம். என் முடியே போச்சு... போங்க. இனிமே உங்ககூட பார்லர் வந்தேனா பாருங்க நான் எம்பேரையே மாத்திக்கிறேன்’ ச்சே...ச்சே சுத்த மோசம். என்றவாறு போதும் ஆன்ட்டி ட்ரையர் போட்டு ஹேர் செட் பண்ணி விடுங்க. என்று விஷயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

நான் மட்டும் விடாக்கண்டியாக;

இருடா... அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா? இரு என்று பார்லர் பெண்ணின் பக்கம் திரும்பி;

சமந்தா கட் தான் தெரியலை அட்லீஸ்ட் சாதனா கட்டாவது தெரியுமா? இதையே கொஞ்சம் அப்படி, இப்படி ட்ரிம் பண்ணி சாதனா கட்டா மாத்திடுங்க... அதையாவது ஒழுங்கா செய்ங்க. இதோ இப்படி நெற்றியில் விழற கொத்து முடியை இப்படியே தேமேனு விடாம ஏதாவது ஒரு பக்கமா ஒதுக்கி அழகா செட் பண்ணுங்க. அதுக்குப் பேர் தான் சாதனா கட் என்று வேறு பில்ட் அப் கொடுத்தேனா? என் மகள் குறுக்கே புகுந்து, ‘அம்மா... நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம். அவங்க ஏற்கனவே ஒதுக்கி செட் பண்ணதே போதும்... நீங்க வாங்க இன்னொரு விஷப்பரீட்சைக்கு நான் தயாரில்லை, கமான்... லெட்ஸ்கோ’ என்று என்னை பில்லிங் பக்கமாக நகர்த்திக் கொண்டு போய் விட்டாள்.

அங்கே போய் எனக்கு செமத்தியான அர்ச்சனை.

ஸ்கூல் திறக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள என்னோட இந்த ஹேர்ஸ்டைல் மாறினா தேவலாம். இல்லனா... கிளியோபாத்ரா வர்றா பாருன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாப்ல ஆயிடும். முடி மட்டும் வளராம போகட்டும், அப்புறம் இருக்கு உங்களுக்கு!’ என்றவாறு என்னை சிலபல நல்ல வார்த்தைகளால் அபாரமாக அவள் அர்சித்துக் கொண்டே வர ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அப்போது தான் அவள் மிக மிக முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டாள்... அதென்னதும்மா அது சாதனா கட்? சும்மா வாய்ல வந்ததை உளறி வச்சீங்களா? அப்படி ஒரு கட் இருக்கறதைப் பத்தி நீங்க இதுவரை என்கிட்ட சொன்னதே இல்லையே! என்றாள்.

எனக்கே நேத்திக்கு தானே தெரியும்... நெட்ல எங்கயோ நடிகை சாவித்ரி பத்தி வாசிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன். அவங்க அந்தக்காலத்துல சாதனா கட் பண்ணிக்கிட்டாங்கன்னு ஏதோ ஒரு நியூஸ் கண்ல பட்டுச்சுடா’ அதைத் தான் சொன்னேன்.

சாவித்ரி ஸ்டைல் சாதனா கட்...

ஆமாம்... சும்மா பேர் தெரிஞ்சா போதுமா? அந்த கட் எப்படி இருக்கும்? அதை யார் பண்ணிக்கிட்டாங்களோ அவங்க ஃபோட்டோ இப்டி எதுனா கையோட ரெஃபரன்ஸ் காட்டினா தானே அவங்க அதைப் பார்த்து கட் பண்ண முடியும். சும்மா வாயாலயே முழம் போட்டா இதோ இப்படித்தான் ஆகும்! என்று தன் ஹேர்ஸ்டைலைச் சுட்டி விட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டருகில் இருந்த சூப்பர் மார்கெட்டில் ஒரு பெரிய டெய்ரி மில்க் ஒரியோ வாங்கித் தரச்சொல்லி பழிவாங்கிய பிறகு தான் அவள் சமாதானமானாள்.

அவள் முகம் சுணங்கும் அளவுக்கு அவளது ஹேர் ஸ்டைல் அப்படியொன்றும் மோசமாக இல்லை. நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் நமக்குத்தான் எதையாவது ஒன்றைப் பார்த்து அதே போல அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டோமானால் எளிதில் மனம் சமாதானமடைய மறுக்கிறது. என்று தோன்றவே மொபைலில் சாதனா கட் எப்படி இருக்கும் என்று கூகுளில் தேடினேன்.

60, 70 களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை சாதனா, தனது ஹேர் ஸ்டைலுக்காக அந்தக்காலத்திய ஃபேஷன் ஐகானாக மதிக்கப்பட்டவர்.

அவரது ஹேர்ஸ்டைல் புதுமையாகவும், அழகாகவும் இருந்ததால் அவரது பெயராலேயே சாதனா கட் எனக் குறிப்பிடப்பட்டு அப்போது பலரால் விரும்பப்பட்டது.

அப்படி விரும்பி சாதனா கட் செய்து கொண்டவர்களில் ஒருவர் நமது நடிகையர் திலகம் சாவித்ரி.

இந்தச் செய்தியை ஜெமினி கணேசனின் மகள்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான நாராயணி, பதிவு செய்திருக்கிறார்.

‘சாவித்ரி அப்போது  ‘கங்கா கினாரெ’என்றொரு இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை சென்ற போது அவரது மகள் விஜியுடன் நானும் அவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் தனது கூந்தலை சாதனா கட் செய்திருந்தார். பார்க்க அழகாக இருந்தது, எனக்கும் அதைப்போலவே ஹேட் கட் செய்ய ஆசை வந்ததால் அவரிடம் அதே விதமாக எனக்கும் ஹேர் கட் செய்து விடச் சொன்னேன். முதலில் மறுத்தாலும் பிறகு என் பிடிவாதத்தைப் பார்த்து மும்பையிலிருந்து ஒரு சைனீஸ் பார்லருக்கு அழைத்துச் சென்று அதே விதமாக எனக்கும் ஹேர் கட் செய்து விடச் சொன்னார் சாவித்ரி. எனக்கு சாவித்ரி ஆன்ட்டியை ரொம்பப் பிடிக்கும். அப்பாவுடன் நெருங்கியிருக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாக நான் அதைக் கருதினேன். அப்பாவுக்குப் பிடித்த சாவித்ரி எனக்கும் பிடித்தவராகிப் போனது இப்படித்தான்’ என்கிறார் நாராயணி.

இது ஒரிஜினல் சாதானாவே தான். 60 களில் பாலிவுட் ஃபேஷன் ஐகானாகத் திகழ்ந்த சாதனாவுக்கு இப்படி ஒரு ஹேர் ஸ்டைலுக்கு மாறியதற்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு.

சாதனாவை இந்திப் படங்களில் அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனர் ஆர்.கே.நய்யார். அவரது ‘லவ் இன் சிம்லா’ திரைப்படத்தில் நடிக்க சாதனாவை அவர் தேர்வு செய்தபோது சாதனாவுக்கு இருந்த ஏறு நெற்றி முகவெட்டில் அவருக்கு திருப்தியில்லை. எனவே சாதனாவின் ஹேர் ஸ்டைலை மாற்ற விரும்பினார். பலவிதமாக யோசித்துப் பார்த்து விட்டு முடிவில் ஹாலிவுட் நடிகை ஆத்ரே ஹெப்பர்ன் புகைப்படமொன்றைத் தருவித்து சாதனாவிடம் காட்டி அவரைப் போல முன் நெற்றியில் கற்றை முடியை கொத்தாக வெட்டி விட சம்மதம் வாங்கினார். அதன் படி அவர்களது ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆத்ரே ஹெப்பர்னின் ஃப்ரிங்கி ஹேர் ஸ்டைலை சாதனாவுக்கு வெட்டி விட, அந்த தோற்றத்துடன் லவ் இன் சிம்லாவில் நடித்து முடித்தார் சாதனா. படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றி கண்டது.

அந்த திரைப்படத்தில் ஆரம்பக் காட்சிகளில் சாதனா மிகச் சாதாரண தோற்றத்துடன் நாயகன் வெறுக்கத்தக்க பெண்ணாக வருவார். எப்படியாவது ஹீரோவால் விரும்பத்தக்க பெண்ணாக மாற எண்ண செய்வது? என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது படத்தில் சாதனாவின் பாட்டியாக வரும் ஒரு பெண், சாதனா ஹேர்ஸ்டைலுக்கு மாறச் சொல்லி அவரது தோற்றத்தை மாற்றுவார். ஒரு இந்திப் படம் நாயகியின் ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பெஷல் லுக்குக்காகவும் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்ததென்றால் அது லை இன் சிம்லாவாகத் தான் இருக்கக் கூடும். படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த ஹேர்ஸ்டைலுக்கு சாதனா கட் என்ற பெயரே நிலைத்து விட்டது. அது மட்டுமல்ல, இப்படி ஒரு ஹேர்ஸ்டைலை சாதனாவுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு பாலிவுட்டில் ஏறுமுகத்தை உருவாக்கித் தந்த இயக்குனர் ஆர்.கே. நய்யார் பிறகு அவரையே தனக்கு மனைவியாகவும் தேர்ந்தெடுத்தது தனிக்கதை.

பல படங்களில் சாதனாவுக்கு பெரும்புகழையும், கணக்கற்ற ரசிகர்களையும் பெற்றுத் தந்த இந்த சாதனா கட், ஒரு சமயத்தில் அவருக்கு கிடைத்திருந்த அருமையான பட வாய்ப்பொன்றை தட்டிப் பறித்து கீழே தள்ளவும் காரணமாக அமையவிருந்தது. ஆனால், அதை தனது சாமர்த்தியத்தால் முறியடித்தார் சாதனா என்பார்கள். அதாவது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல இயக்குனரான பிம்லா ராய் தனது பராக் திரைப்படத்துக்காக சாதனாவை ஒப்பந்தம் செய்திருந்தார். சாதனாவுக்கு செம குஷி. பிம்லா ராய் பட நாயகி என்றால் சும்மாவா என்ன? ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கின் போது ஒப்பனையுடனும், தனது சாதனா கட் ஹேர்ஸ்டலுடனும் தன் முன்னால் வந்து நடிக்க நின்ற சாதனாவைப் பார்த்து பிம்லா ராய்க்கு வேப்பங்காயை வெறு வாயில் மென்றது போல படு கசப்பாகி விட்டது. ஒன்றும் பேசாமல் பேக் அப் சொல்லி விட்டு படுகோபமாக நாற்காலியில் சரிந்தவரைக் கண்டு சாதனாவுக்கு குழப்பமாகி விட்டது. என்னவாயிருக்கும் என்று கேட்டதில், என் படமோ மிக எளிமையான... இயல்பான கிராமத்துப் பெண்ணின் கதையை பின்னணியாகக் கொண்டது, நீ என்னடாவென்றால் இப்படி ஒரு படு ஸ்டைலான ஹேர் ஸ்டைலில் வந்து முன்னால் நிற்கிறாய். இந்த தோற்றத்தில் இந்தப் படத்தில் நீ நடித்தால் படம் ஓடாது. உனக்கு இந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இல்லை எனது படத்தின் நாயகி என்ற வாய்ப்பு வேண்டுமா? நீயே முடிவு செய். என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

சாதனாவுக்கோ தனக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த ஹேர் ஸ்டைலை இழக்க மனமில்லை. மெளனமாக தனது ஒப்பனை அறைக்குள் நுழைந்தவர், முன் நெற்றியில் காற்றிலாடிக் கொண்டிருந்த ஃப்ரிங்கி கூந்தலை நெற்றி வகிட்டின் இருபுறமும் ஒதுக்கி ஹேர்பின் இட்டு கலையாமல் வழித்து நிறுத்தினார். இப்போது பார்க்க படு குடும்பஸ்த்ரியாகத் தெரிந்தார். அப்படி வந்து நின்றதும் பிம்ல ரயும் சந்தோஷமாகி விட்டார். சாதனாவுக்கு அப்பாடி என்றிருந்தது. காரணம் ஒருவழியாக அவர் தனது சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற தனது சாதனா கட்டை இழக்காது... இயக்குனரின் கோபத்திலிருந்தும் தப்பி விட்டார் இல்லையா? அதனால் தான்.

அந்த ஹேர் ஸ்டைலைத் தான் நம்மூர் நடிகையர் திலகம் பாலிவுட்டில் நடிக்கப் போய் தானும் முயன்று பார்த்தார். அதையே தனது இருமொழிப் படமொன்றில் டபிள் ஆக்ட் வேடத்தில் இரு வேறு வேடங்களை வித்யாசப் படுத்திக் காட்டவும் பயன்படுத்திக் கொண்டார். படித்த, ஸ்டைலான, பிடிவாதம் நிறைந்த பெண் வேடத்துக்கு சாதனா ஹேர் கட் ஸ்டைல், அப்பாவி இல்லத்தரசி வேடத்துக்கு சாதரண நீளப்பின்னல் கூந்தல் ஸ்டைல். இது எப்படி இருக்கு!

அட... ஒரு சாதரண சாதனா ஹேர் கட்டுக்குப் பின்னால் இத்தனை விஷயம் இருக்குமென்று யார் கண்டார்கள்?!

இதை முதலிலேயே கூகுளில் தேடிக் கண்டடைந்திருந்தால் நேச்சுரல்ஸில் குழப்பத்திற்கு இடமில்லாதிருந்திருக்கும்.

ஆனால் பாருங்கள்... மேலே குறிப்பிட்ட சமந்தா கட்டுக்கும், சாதனா கட்டுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com