‘குளிக்கும் போது அருவியில் தவறி விழுந்து இளைஞர் மரணம்’ போன்ற பேரிழப்புகளைத் தவிர்க்க சில டிப்ஸ்...

விடுமுறைகளில் அருவி, மலை, கடற்புறங்கள் என சுற்றுலா செல்வது எதற்காக?  ஆனந்தமாக இயற்கையழகையும், சுத்தமான காற்றையும் சுதந்திர உணர்வையும் அனுபவிக்கத் தானே தவிர த்ரில் விளையாட்டுகளில் ஈடுபட்டு உயிரை இழக்க
‘குளிக்கும் போது அருவியில் தவறி விழுந்து இளைஞர் மரணம்’ போன்ற பேரிழப்புகளைத் தவிர்க்க சில டிப்ஸ்...

கோடை விடுமுறையைக் கழிக்க நண்பர்களுடன் பெங்களூரு அருவி ஒன்றுக்கு குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் 50 அடி உயரப் பாறையிலிருந்து வழுக்கித் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த காட்சி மனதைப் பதறச் செய்கிறது. இந்தச் சம்பவம் பெங்களூரு ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹக்கில்புரா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெயர் சீனிவாச ரெட்டி எனத் தெரிய வந்துள்ளது. நண்பர்களுடன் விடுமுறையக் கொண்டாட அருவிக்கு வந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோடை விடுமுறை என்றாலே மக்கள் குடும்பம், குடும்பமாக கடற்கரை, அருவிக் குளியல், பீச் ரிஸார்ட்டுகள், மலைவாசஸ்தலங்கள் என்று கிளம்புவது வழக்கமான செயல். ஆனால் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் இப்படி துயரமானதாக முடிந்தால் அது வாழ்நாள் முழுமைக்குமாக ஜீரணிக்க முடியாத இழப்பாக மாறிவிடக்கூடும். எனவே பொதுமக்கள் விடுமுறையைக் கழிக்க அருவிக் குளியல் செய்வதெல்லாம் சரி என்றாலும் கூடுமானவரை போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளுடனே தங்களது பயணத் திட்டங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இப்படியான திடுக்கிடும் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க வேண்டியதாகி விடும்.

அருவி, நீச்சல்குளம் மற்றும் கடலில் குளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்...

  • நீங்கள் சென்றிருக்கும் இடத்தைப் பற்றிய துல்லியமான விவரங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • அருவியில் அரசு அல்லது தனியார் சுற்றுலாத்துறையினர் குறிப்பிட்டிருக்கும் எல்லைகளில் நின்று மட்டுமே குளிக்க முயல வேண்டும். தடுப்புக் கட்டைகளை மீறி த்ரில் விளையாட்டுகளில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் நீர்ச்சுழி இருக்கும் இடங்களில் சென்று குளிக்க முயல்வதோ அல்லது விளிம்புகளில் நின்று குளிக்க முயல்வதோ தவறு.
  • அருவியில் குளிக்கச் செல்கையில் தலையிலும், உடலிலும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு செல்வது தவறு. இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல தனிமனிதர்களுக்கும் ஆபத்தானது. எண்ணெய் தண்ணீரோடு கலக்கும் போது நீங்கள் மட்டுமல்ல உங்களுக்கு அருகிலிருப்பவர்களும் கூட வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.
  • மிக உயரமான இடங்களில் நின்று கொண்டு குளிக்கிறீர்கள் எனில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சேர்த்து அதற்கு போதுமான அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட சுற்றுலாத்துறை நிர்வாகம் பெற்றுள்ளதா? என்பதை முழுமையாகச் சோதித்து விட்டு பிறகு அந்த முயற்சியில் இறங்கவும்.
  • ஆழம் அதிகமுள்ள ஏரிகள் அல்லது கடற்பகுதிகளில் போட்டிங் செல்ல ஆசை என்றால் லைஃப் ஜாக்கெட் அணிந்து கொள்ள வேண்டும். நம்மூரில் போட்டிங் செல்ல ஆசைப்பட்டால் லைஃப் ஜாக்கெட் என்ற பெயரில் துர்நாற்றம் மிக்க கிழிந்த ரெக்ஸின் கோட்டுகளைத் தருகிறார்கள். பணத்தைக் கொட்டிக் கொடுத்து டூர் பிளான் செய்பவர்கள் பேசாமல் தங்களுக்கே தங்களுக்கென்று தரமான லைஃப் ஜாக்கெட்டுகளை வாங்கி சொந்தமாக அணிந்து கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் லைஃப் ஜாக்கெட்டுகள் அணியாமல் ஆழம் அதிகமுள்ள பகுதிகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
  • நீச்சல் குளங்களில் குளிக்க ஆசைப்படுபவர்கள் குளத்தில் இறங்கும் முன் தங்களது ரத்த அழுத்தம் சராசரி அளவில் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளலாம். சமீபத்தில் சென்னை மெரீனா நீச்சல் குளத்தில் குழந்தைகளை நீச்சல்பயிற்சியில் விட்டு விட்டு தானும் நீந்திக் குளிக்கலாம் என குளத்தில் குதித்த இளைஞர் ஒருவர் குதித்த மாயத்தில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தார் என்றொரு செய்தி வெளியானது. எனவே நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் தங்களது ரத்த அழுத்தம், இதய ஆரோக்யம் எல்லாவற்றையும் சோதித்து நார்மலாக இருந்தால் மட்டுமே நீச்சலில் இறங்கவும். 
  • நார்மல் ஹெல்த் இருப்பவர்களில் நீந்தத் தெரியாதவர்கள் இருப்பின், ஆழம் அதிகமான நீச்சல் குளங்கள் எனில் ரப்பர் டியூபுகள் அல்லது பேடுகளைப் பயன்படுத்தி நீந்தலாம்.
  • குழந்தைகளை கடலில் குளிக்க அழைத்துச் செல்ல ஆசைப்படுபவர்கள் அந்தப் பகுதிகளில் லைஃப் கார்டுகள் என்று சொல்லப்படக்கூடிய பாதுக்காப்பாளர்கள் பணியிலிருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு கடலில் கால் வைக்கவும். குளிக்க விரும்பாத குழந்தைகளை போதுமான பாதுகாவலர்களை ஏற்பாடு செய்தோ அல்லது உங்களில் ஒருவர் கண்காணிப்பிலோ பத்திரப்படுத்தி விட்டு கடல் மற்றும் நீச்சல் குளங்களில் இறங்கலாம்.

விடுமுறைகளில் அருவி, மலை, கடற்புறங்கள் என சுற்றுலா செல்வது எதற்காக?  ஆனந்தமாக இயற்கையழகையும், சுத்தமான காற்றையும் சுதந்திர உணர்வையும் அனுபவிக்கத் தானே தவிர த்ரில் விளையாட்டுகளில் ஈடுபட்டு உயிரை இழக்க அல்ல. எனவே மேற்சொல்லப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றி இன்பச் சுற்றுலா மனநிலைக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்வீர்களாகுக! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com