சொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் கனவு யாருக்கில்லை? இதோ அதை நனவாக்க ஒரு வாய்ப்பு!

மாடித்தோட்டம் போட ஆவலிருப்பவர்கள் 044 - 28173412 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.
சொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் கனவு யாருக்கில்லை? இதோ அதை நனவாக்க ஒரு வாய்ப்பு!

உங்களுக்கு மாடித்தோட்டமோ அல்லது வீட்டைச் சுற்றிலும் இடமிருந்தால் வீட்டுத்தோட்டமோ போட்டுக் கொள்ளும் ஆவல் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்யவேண்டியது தமிழக அரசின் பெண்கள் நல மேம்பாட்டுத்துறையை அணுக வேண்டியது மாத்திரமே!

அங்கே மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தின் நலிவடைந்த பெண்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பாக மாடித்தோட்டம் போடக் கற்றுத்தருகிறார்கள். கற்றுக் கொண்ட பெண்களுக்கு போதுமான பயிற்சி அளித்து நகரங்களில் மாடித்தோட்டம் போடும் ஆசையிருப்பவர்களுக்கு அருகிருந்து உதவுமாறு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்களாம். கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த பயிற்சியில் இதுவரை 220 பெண்கள் பயிற்சி பெற்று தேர்ந்துள்ளனர். பயிற்சி பெற்ற பெண்கள் முன்னதாக விவசாயம் மற்றும் தோட்டம் போடுதலில் அனுபவமுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு நகர்ப்புறத்தில் காய்கறிகள் மட்டும் மூலிகைச் செடிகளுடன் கூடிய மாடித்தோட்டம் போடுவது எப்படி? என்பது குறித்துப் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிக்காக இதுவரையில் நலிவடைந்த நிலையிலுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறதாம். வறுமையில் வாடும் பெண்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறும் பெண்கள் நல மேம்பாட்டுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சியில் மேலும் பல பெண்கள் இணைவதை மகிழ்ச்சிக்குரிய வளர்ச்சிக்குரிய விஷயங்களில் ஒன்றாக தமிழக அரசு கருதுவதாகத் தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற பெண்களின் விருப்பத்துக்கேற்ப அவர்கள் நகர்ப்புறத்தில் மாடித்தோட்டம் போட ஆவலாக இருப்பவர்களுக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கப்படுகிறார்கள். குறைந்த பட்ச முதலீட்டில் அருமையான மாடித்தோட்டம் போடக் கற்றுத்தருவதுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தத் தோட்டங்களைக் கண்காணித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் மாறுதல்களைச் செய்யவும் அவர்கள் உதவுகிறார்கள்.

அப்படி அரசு உதவியால் மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சி பெற்று தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்திருக்கும் பெண்களில் ஒருவரான மாலா, இங்கே தான் பொறுப்பில் எடுத்துக் கொண்ட மாடித்தோட்ட வீடுகளுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் சென்றூ தோட்டங்களை மேற்பார்வையிட்டு அவற்றில் களை நீக்கப்பட்டுள்ளதா? போதுமான அளவு சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்கக் கூடிய இடங்களில் செடிகள் வளர்கின்றனவா? என்பதையெல்லாம் சோதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

எத்தனைக்கெத்தனை சொந்தமாகத் தோட்டம் போட்டு காய்கறிச் செடிகளை வளர்க்கும் ஆசையுடன் இருக்கிறீர்களோ அத்தனைக்கத்தனை நீங்கள் நோயிலிருந்து விலகி நிற்கிறீர்கள் என்று அர்த்தம். வீட்டுத் தோட்டத்தில் வளரும் செடிகளில் பெரும் பண்ணைச் செடிகளைப் போலவோ அல்லது சந்தைகளில் நீங்கள் விலைக்கு வாங்கும் காய்கறிகளைப் போலவோ பூச்சி மருந்துகளின் தாக்கம் இருப்பதில்லை.’ என்கிறார் மாலா.

அதுமட்டுமல்ல, பல வகைக் கீரைகள், கற்றாழை, கால்ஃபிளவர், மற்றும் விதைப் பயிர்களையும் கூட நாம் மாடித்தோட்டத்தின் வாயிலாக வளர்க்க முடியும் என்று கூறும் மாலா, ஊதா நிற கத்தரிக்காய்களுக்கு தொண்டைபுண்களை தீர்க்கும் திறனுண்டு என்கிறார்.

மாடித்தோட்டம் போடப் பயன்படுத்தும் மூங்கில் கூடை முதற்கொண்டு அத்தனை பொருட்களையும் அரசு சல்லிசான விலையில் தந்து உதவுகிறது. அவற்றைப் பராமரிப்பதும் கூட எளிதானது தான். இதில் பயன்படுத்தப்படும் மண்ணில் உலர்ந்து காய்ந்த தாவர இலைகள் மற்றும் பசுஞ்சாணம் கலக்கப் படுவதால் அவற்றுக்கு பூச்சிகளை விரட்டும் தன்மையோடு நோய்களை விரட்டும் தன்மையும் உண்டு என்றும் கூறுகிறார் மாலா.

மாலாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இருப்பின் மாடித்தோட்டம் போட ஆவலிருப்பவர்கள் 044 - 28173412 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com