துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் 6 வயதுச் சிறுமி! வைரல் வீடியோ!

இந்த உலகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உலகம் மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நீங்கள் மாற வேண்டும். இந்த உலகம் மீண்டும் இயல்பாகச் சுழலுமாறு நீங்கள் தான் செய்யவேண்டும்.
துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் 6 வயதுச் சிறுமி! வைரல் வீடியோ!

அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைக் கொலைகளுக்கு எதிராக 6 வயதுச் சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று சமீபத்தில் காண்போர் மனதை உருக்கி நெகிழச் செய்யும் வண்ணம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. வன்முறையாளர்களுக்கு எதிராகக் கொந்தளிப்பாகப் பேசும் அச்சிறுமி, 

'சிறுதும் நேர்மையற்ற இந்த வன்முறைகளில் அதிக அளவில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது பெற்றோர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என எல்லோரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுவதற்காக கடவுள் இந்த உலகத்தையும் மக்களையும் படைக்கவில்லை. இங்கே அதிக அளவில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். எங்களுக்கு அந்த வன்முறையும் சுத்தமாக விருப்பமே இல்லை. எங்களுடன் வாழும் சக மனிதர்கள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இத்தனை விரைவில் சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று கூட நாங்கள் விரும்பவில்லையே. 

நாங்களும் கடவுளை விரும்புகிறோம்... அவர் எப்போது எங்களை எதிர்கொள்ள விரும்புகிறாரோ அப்போது நாங்கள் அவரைச் சென்றடைவோம். ஆனால், இப்போது நாங்கள் சாகத் தயாராக இல்லை. கடவுள் எங்களிடம் உடனே மரணித்து என்னிடம் வாருங்கள் என்று எங்களை அழைக்கவில்லை. எங்கள் வாழ்க்கை இப்போதிருக்கும் நிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் நாங்கள். மற்ற சக மனிதர்களும், என்னையொத்த குழந்தைகளும் இங்கு வாழ வேண்டும். வன்முறையாளர்களான உங்களுக்குத் தெரியாது, நான் என்னுடம் இருக்கும் சகமனிதர்களுக்காக எத்தனை தூரம் வருந்துகிறேன் என, எனக்கு அவர்கள் அறிமுகமற்றவர்களாகவே இருந்தாலும் கூட நீங்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது. அவர்களை வாழ விட்டிருக்க வேண்டும்.

கெல்ஸி எனும் இந்த 6 வயதுச் சிறுமி வசிப்பது அமெரிக்காவின் பால்ட்டிமோரில். அமெரிக்காவில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 2017 ஆண்டில் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகம். அதை அறிந்த அதிர்ச்சியில் தான் சிறுமி இப்படியோர் காணொளியைத் தன் தாயாரின் உதவியுடன் பதிவு செய்து ட்விட்டரில் வெளியிடச் செய்துள்ளார். 

காணொளியில் தன் சக மனிதர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான கொடூரத்தை தாங்க முடியாமல் கதறும் இந்தச் சிறுமி,
இங்கு நடக்கும் அதிகப்படியான கொலைகளை என்னால் நம்பவே முடியவில்லை. இதோ என் கண்களில் கசியும் இந்தக் கண்ணீர் எதற்காக என்று உணர்வீர்களா நீங்கள்? நீங்கள் தொடர்ந்து நிகழ்த்தி வரும் வன்முறைகளைத் தாங்க இயலாமல் தான் நான் இங்கு கதறி அழுகின்றேன். இந்த உலகில் அதிகக் கொலைகள் நிகழ்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் உணரவேண்டும், கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என. நீங்கள் சக மனிதர்களை நடத்தும் முறையில் அவருக்குச் சிறிதும் உவப்பில்லை, விருப்பமில்லை.

என்னை மன்னியுங்கள், மன்னியுங்கள், என்னை மன்னியுங்கள்... இந்த உலகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உலகம் மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நீங்கள் மாற வேண்டும். இந்த உலகம் மீண்டும் இயல்பாகச் சுழலுமாறு நீங்கள் தான் செய்யவேண்டும். எங்கள் உலகம் மோசமானதாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் உலகம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் இந்தக் கொலைகளைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போது  இதைச் சொல்கிறோம் என்றால், நாங்கள் அதைத்தான் விரும்புகிறோம் என்று தான் அர்த்தம். அது தான் அர்த்தம்! எங்களுக்கு எங்களது வாழ்க்கை வேண்டும்.’

- என்று 6 வயதுச் சிறுமி ஒருத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருப்பது இணையத்தில் பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வைரலாகி இருப்பது காண்போர் கண்களைக் கசியச் செய்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com