ஐ லவ் யூ டீச்சர்! 

கடைத் தெருவில் பல்பொருள் அங்காடியின் முன் நின்று கொண்டிருந்த மீனாளின் இடுப்பை ஒரு கை வளைத்து பிடித்து அணைக்க முயன்றது.
ஐ லவ் யூ டீச்சர்! 

கடைத் தெருவில் பல்பொருள் அங்காடியின் முன் நின்று கொண்டிருந்த மீனாளின் இடுப்பை ஒரு கை வளைத்து பிடித்து அணைக்க முயன்றது. அதிர்ச்சியில் கோபமாக பதட்டத்துடன் திரும்பியபோது அவளின் பக்கத்தில் குழந்தையுடன் ஒரு பெண் புன்னகைத்து கொண்டு இருந்தாள். 

இயல்பு நிலைக்கு வந்த மீனாள் இந்த பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் நினைவுக்கு வர மறுக்கின்றதே என்று சிந்தனை செய்து கொண்டிருந்தாள். 

அவள் குழப்பத்தை உணர்ந்த அந்த பெண், "மிஸ் என்னைத் தெரியவில்லையா? கண்டுபிடிங்க பார்க்கலாம்'' 

மீனாள் தெரிந்ததும் தெரியாதுமாக தலையை ஆட்டினாள். ஆசிரியையான அவளிடம் எத்தனையோ மாணவர்கள் படித்து விட்டு கடந்து செல்கிறார்கள். சிலரை நினைவு இருக்கும். பலரை மறந்து விட்டிருக்கும். வளர்ந்த பின் பலரது தோற்றங்களே மாறி போய் விடுகிறது. 

"இப்ப கண்டு பிடிச்சிடுவீங்க பார்...பாப்பா.... அம்மாவிற்கு ஒரு முத்தா கொடு....'' என்றாள் அந்த பெண். 

அவள் கையில் இருந்த குழந்தை தாவி மீனாள் கன்னத்தில் "இச் இச்' வைத்தது.
ஓ...

தாயைப் போல பிள்ளை...

"நட்சத்திரா தானே நீ? ஆளே அடையாளம் தெரியாமல் வளர்த்து விட்டியே....?''
பதினாறு... பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் காலம் சுழன்று முன் பயணித்தது.

"புடவை அழகா இருக்கு மிஸ்....''

மூன்றாம் வகுப்பில் மாணவர்களின் வீட்டு பாடங்களைத் திருத்தி மதிப்பெண்களை போட்டு கொண்டிருந்த மீனாளின் காதில் யாரோ கிசுகிசுத்ததால் திடுக்கிட்டாள்.

பக்கத்தில் நட்சத்திரா அவளின் புடவை முந்தானையை பிடித்து கொண்டிருந்தாள்.

குட்டி குட்டி மயில்கள், பெரிய தோகை விரித்த மயிலும் போட்ட புடவை அது. புதுப் புடவை அணிந்து வந்தால் இப்படிதான் மாணவிகள் செய்வார்கள். மழலையர் வகுப்பில் சுற்றி வந்து அருகில் பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, இரு பாலருமே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது புடவையை மெதுவாக சிமிட்டி விட்டு....

"மிஸ்.... புடவை அழகாக இருக்கு மிஸ்....'' என்று மெல்ல ஒருத்தர் ஆரம்பிப்பார்.

"தாங்க்ஸ் பாப்பா'' பாடத்தை நிறுத்திவிட்டு அக்குழந்தை கன்னத்தில் மீனாள் மெல்லிய முத்தம் தருவார். 

அடுத்த விநாடி எல்லா குழந்தைகளும் 

"மிஸ்.... மிஸ்.... புடவை சூப்பரா இருக்கு மிஸ்....''

"இந்த கலர் பளபளன்னு இருக்கு மிஸ். எனக்கு பிடிச்சுருக்கு மிஸ்''- இன்னொரு வாண்டு...

"எங்க அம்மா கூட இந்த புடவை வச்சு இருக்காங்க மிஸ்'' என்று சேர்ந்திசை ராகம் பாட தொடங்கி விடுவர்.

இந்த ராகமும், பாராட்டும் மழலையர் வகுப்புகளில் அதிகமாக இயல்பாக கவித்துமாக இருக்கும். அங்கு பெண், ஆண் என்ற வேறுபாடு இருக்காது. புத்தாடைகள், புதிய வண்ணங்கள், புதிய வடிவங்களைக் கண்டதும் குழந்தைகள் இயல்பாக வெளிப்படுத்தும் குணமாகும். குழுவாகச் சேர்ந்து மீனாளை சூழ்ந்து அவர்கள் கொஞ்சுவது சில நேரம் எல்லையை மீறி விடும். செல்லமாக அதட்டி அவர்களை மீனாள் கலைந்து போக வைப்பாள். 

இப்படிதான் மழலையர் வகுப்பில் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தவற்றைப் படம் வரைய சொன்னாள். 

பூனை, நாய், காகம், மரம், வீடு, கதிரவன், அக்கா, அம்மா என்று அவரவர் விருப்பதற்கு வரைந்து மீனாளிடம் காட்டினர். ஒரு குட்டி பையன் ஆசையாக ஓடி வந்து காட்டினான். 

அவன் ஆர்டினுடன் அம்பும் வரைந்து "ஐ லவ் யு மிஸ்' என்று எழுதி வைத்து இருந்தான். மீனாள் சிரித்து கொண்டே , "ஐ டூ லவ் யு பேபி....'' என்று கன்னத்தை செல்லமாக கிள்ளி அனுப்பி வைத்தாள். அந்த குட்டி பையனும் மகிழ்ச்சியில் வெட்கப்பட்டு கொண்டு சென்றான், குழந்தைகளின் அன்புக்கு, குறும்புக்கும் அளவே இல்லை, நாம் எதை தருகிறோமோ அதையே திருப்பி தருவார்கள். 

ஆனால், உயர் வகுப்புகள் போகப் போக இந்த குறும்புகள், இந்த குழு ஒற்றுமை இருக்காது. சிறிது சிறிதாக சுருங்கி கொண்டு வரும். + 2 வகுப்புகளில் யாராவது ஓரிரு மாணவிகள்தான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இடையில்தான் புடவைகள், அணிந்துள்ள மணிகளை பற்றி சொல்வார்கள். மீனாள் மணிகளை கழட்டி மாணவிகளிடம் சில சமயம் கொடுத்து விடுவாள், அவர்கள் கையில் வைத்து இருந்து திருப்பி தந்து விட்டுவார். சின்ன சின்ன ஆசைகள்தானே! 

இவை எல்லா ஆசிரியைகளிடமும் கிடையாது.... நடக்காது! 

காதைத் திருகும், தலையில் கொட்டு வைக்கும், பிரம்பால் பேசும் ஆசிரியர்கள் உண்டு. கைகளால், கண்களால், உடல் மொழிகளால் மிரட்டி வகுப்பில் அமைதியை வன்முறையாக நிலைநாட்ட அயராது உழைக்கும் ஆசிரியைகளுக்கு நிச்சயம் இந்த அன்புகள் கிடைக்காது.... கதைகள் சொல்லும், ராகம் போட்டு சேர்ந்திசை பாடும், ஆடல் மொழிகளால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியோடு கற்பிக்கும் மீனாள் போன்ற சில ஆசிரியைகளுக்குதான் அந்த களங்கமற்ற எதிர்பார்ப்பற்ற அன்பும், பாசமும் கிடைக்கும்.

ஒரு நாள் மூன்றாம் வகுப்பில் சில பசங்க வந்து, "மிஸ்... மிஸ்... நட்சத்திரா செந்திலுக்கு முத்தம் கொடுத்துட்டா'' என்று கோள் முட்ட வந்தார்கள். 

உடனே மீனாள்... "போங்கடா... இத போய் பெரிய விசயமாக என்னான்ட சொல்ல வந்தீட்டீங்க.... ஓடுங்க.... ஓடுங்கடா...'' என்று அதட்டி அந்த மாணவர்களை விரட்டி அமர செய்து விட்டாள். அதைப் பெரியதாக எடுத்து கொள்ளாமல் கடந்து போய் விட்டாள்.

மறு நாள் குறும்புகார பையனான செந்திலிடம் ஒருமாற்றம் தெரிந்தது. இரண்டு நாள்களாக செந்தில் சரியாக வீட்டுப் பாடம் செய்யவில்லை. வகுப்பில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான். அவன் யாரிடமும் சரியாகப் பேசுவது இல்லை. அவனிடம் ஒரு வித்தியாசம் தெரிந்தது. இதை கவனித்து கொண்டு இருந்த மீனாள், "என்ன செந்தில் உடம்பு சரியில்லையா... ஒருமாதிரியாக இருக்க... இங்கே வா....'' என்று அழைத்து, "உங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா, வேற ஏதாவது பிரச்னையா?'' என்று எவ்வளவோ கேட்டும் அதற்கு அவன் அப்படி ஏதுவுமில்லை என்று கூறி மழுப்பு விட்டான். "சரி போய் உட்கார்'' என்று மீனாள் அவனை அனுப்பி விட்டார். 

ஒரு வாரம் கழித்து இருக்கும். மீனாள் அன்று பள்ளிக்கும் ஒரு மணிநேரம் முன்னதாக வந்து இருந்தாள். பள்ளிகளில் முறை வைத்து வாரத்திற்கு ஒருநாள் இப்படி முன் கூட்டியே பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பே வருவது பள்ளி நிர்வாக நடைமுறை. முன்னதாக பள்ளிக்கு வரும் மாணவர்களை ஒழுங்குபடுத்த இது தேவையாக இருந்தது. 

அப்பொழுது செந்தில் அம்மா கோபமாக மீனாளிடம் வந்தார்.

"மிஸ்.... செந்திலுக்கு நட்சத்திரா முத்தம் கொடுத்திட்டான்னு... ஒரு வாரமா எம் புள்ள சரியாக சாப்பிடவில்லை... தூங்கவில்லை... எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரியாக உம்முனு முகத்தை வைச்சுகிட்டு கிடக்கிறான். நா அவனை துருவி துருவி கேட்ட பின்பு இத சொல்றான். இத கேட்ட அவன் அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது "வா பள்ளிக்கு போய் தலைமை ஆசிரியரிடம் கம்பிளயின்ட் பண்ணலாம்'' என்று கூச்சல் போடுகிறார். 

நான் தான் சின்ன குழந்தைகள் விஷயம்... நான் போய் ஆசிரியரிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு உங்களை பார்க்க வந்திருக்கிறேன்'' என்றார்.

"என்னிடம் குழந்தைகள் கூறினார்கள்... நான் அதை பெரியதாக எடுத்துகொள்ளவில்லை. குழந்தைகள் தானே என விட்டு விட்டேன். இந்த அளவிற்கு பாதிக்குமென நான் நினைக்கவில்லை. சரி... என்னிடம் கூறி விட்டீர்கள் அல்லவா... நா பார்த்துக்கிறேன்... நீங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம்... குழந்தைகளுக்கு புத்திமதிகளை கூறி சரி செய்வது என் பொறுப்பு. இதை தலைமையாசிரியரிடம் கூற வேண்டாம். ஏன் என்றால் இது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிந்தால் சில ஆசிரியர்கள் நட்சத்திராவை திட்டுவார்கள். அடிக்கக் கூட செய்வார்கள். அதனால் அந்த பெண் குழந்தையின் மனநிலை பாதிக்கும்... அது உங்க மகனையும் கூட பாதிக்கலாம்... இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். நா செந்திலுக்கு புத்திமதி கூறி சரி செய்கிறேன்... நீங்க கவலை படாம போங்கள்'' என்றாள் மீனாள்.

அவரும் "சரி'' என்று சென்று விட்டார்.

"என்ன பிரச்னை செந்தில்...?'' என்றாள்.

"நா நட்சத்திராவுக்கு என்ன பதில் சொல்றது... மிஸ்?''

முகத்தை சீரியசாக வைத்து கொண்டு இப்படி சொன்னான். மீனாளுக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த தமிழ் சினிமாக்கள் படுத்தும் பாட்டை நினைத்து...

"அம்மா, அக்கா, தங்கை, பாட்டி, அப்பா அண்ணன்... என வீட்டில் நிறைய பேர் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பாங்க... அது போல தான் நட்சத்திரா உனக்கு முத்தம் கொடுத்து இருக்காள்... . அவளை உன் தங்கை, அக்கா, தோழியாகப் பார்க்க வேண்டும்... அத போய் சினிமாவில் வரும் காதலி போல நீ நினைக்கக் கூடாது... இது ஒரு சாதாரண விஷயம் ... பள்ளி வேனில், பஸ்சில் போகும் பொழுது சில நேரங்களில் ஒருத்தர் ஒருத்தருடைய உடல் மீது படுகிறது... அதை எல்லாம் பெரிதாக நினைத்து கொள்ள முடியுமா?... இதை எல்லாம் பெரிசாக கற்பனை பண்ணிக்க கூடாது... தங்கை ... தாயாக நினைக்க வேண்டும்... ஃபிரண்டா நினைக்கனும்... சினிமா மாதிரி நினைத்து கற்பனை செய்யக்கூடாது... இதோடு இந்த எண்ணத்தை மனசில் இருந்து அழிச்சிடணும் சரியா?'' என்றாள் மீனாள்.

செந்தில் தலை ஆட்டவும் நட்சத்திரா வகுப்பில் நுழையவும் சரியாக இருந்தது. அவளையும் மீனாள் அருகில் அழைத்தாள். துருதுருவென்று இருக்கும் அந்த சிறுமி அருகில் ஓடி வந்தது. 

நடந்ததை விளக்கி கூறினாள் மீனாள். 

"நீ இனிமேல் இப்படி எல்லாம் விளையாடக் கூடாது... செந்தில் குழம்புகிறான் பார்... செந்தில் மட்டுமல்ல, யாரிடமும் வகுப்பில் இப்படி விளையாடாதே''
அவள் தலையை தலையை ஆட்டினாள். அது அந்த குட்டிப் பெண்ணுக்கு புரிந்து விட்டு இருக்குமா என்று நினைத்த மீனாள்...

"செந்தில் , நட்சத்திரா இருவரும் கை குலுக்கி கொள்ளுங்கள்... அக்கா, தம்பியா இருக்கணும்... நட்பா இருக்கணும்... இதை எந்த பசங்க கிட்டயும் சொல்ல கூடாது...ஓ.கே வா?''

இருவரும் தலையை தலையை ஆட்டினர். மீனாள் இருவர் கைகளையும் எடுத்து தன் இரு உள்ளங்கைக்குள் சிறிது வினாடிகள் வைத்து இருந்தாள்.
"மகிழ்ச்சியாக இருங்க... சந்தோசமா பாடம் படிங்க... நட்பா இருங்க... அவ்வளவுதான்... ஒகே... புரிந்ததா?'' என்று அனுப்பி வைத்தாள். 

புரிந்து கொண்டிருப்பார்கள். மீனாளுக்கு அந்த மாணவர்களுக்குமான உறவு அப்படியானது. 

அன்று முழுவதும் மீனாள் செந்திலை அடிக்கடி கவனித்து கொண்டு இருந்தாள். அவன் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து விட்டான். எல்லாம் இயல்பாகி விட்டது. 

மூன்று மாதங்கள் சென்று இருக்கும். இரண்டு மூன்று மாணவர்கள் "குசு குசு' என்று பேசிக்கொண்டு இருந்தனர். மீனாள் என்னவென்று கேட்டாள்.

அவர்கள் மீண்டும் செந்திலுக்கு நட்சத்திரா முத்தம் கொடுத்ததை பேசுகிறார்கள் என்பதை அறிந்தாள். 

ஒவ்வொருவருக்கு நாலு அடிகள் போட்டாள். மீனாளின் இப்படியான கோபத்தைப் பார்க்காத அவர்கள் மிரண்டு போனார்கள். 

"அவ்வளவுதான் . இனி இத பத்தி மூச்சு விட்டீங்க ...பின்னி எடுத்துடுவேன் ஜாக்கிரதை...'' என்று மிரட்டி அனுப்பினாள்.

அத்துடன் அந்த முத்தம் முடிந்த போனது. அதற்கு பிறகு செந்திலும், நட்சத்திராவும் சக வகுப்பு தோழர்களாக சில ஆண்டுகள் படித்து பின் மேல் வகுப்புக்குப் போய் விட்டார்கள்... 

இருபது ஆண்டுகளுக்கு பின் இன்று நட்சத்திராவின் குழந்தையின் முத்தம் மீனாளுக்கு அனைத்தையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது. 

"அடையாளம் தெரியாமலே வளர்ந்திட்டீயம்மா... எங்கே இங்கே...?'' என்றாள் மீனாள். 

"அதோ பைக்கில் என் கணவரும் பெரிய பையனும் இருக்கிறார்கள்'' என்று காண்பித்தாள். சிறிது நேரம் உரையாடி விட்டு பிரிந்தனர். 
நட்சத்திராவின் குழந்தை அவளிடம் போகும் பொழுது மீனாளுக்கு மீண்டும்...

"இச்...இச்' என்று முத்தங்களை அள்ளி வாரி கொடுத்து விட்டு சென்றது. 

"இன்னொரு குட்டி நட்சத்திரா!' அந்த குழந்தையின் கண்கள் வானில் நட்சத்திரங்களாக பளபளவென மின்னின. 

இந்த பழைய முத்தம் நிகழ்வை பற்றியே சிந்தித்து கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டியில் மீனாள் சென்றாள். 

இரண்டு மூன்று தெருக்களைக் கடந்திருப்பாள். 

பைக்கில் வந்த ஓர் இளைஞன் வண்டியை நிறுத்தி, "குட் மார்னிங் மிஸ்...'' என்று சொல்லி விட்டு சென்றான். அவன் பின்னால் அவன் இடையை சேர்த்து அணைத்துக் கொண்டிருந்த புத்தம் புது தாலி அணிந்த பெண் மீனாளை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.

"குட் மார்னிங்... குட் மார்னிங்...'' என்று தலையாட்டி சொல்லி கொண்டே வண்டியில் விரைந்த மீனாள். 

யாராக இருக்கும் அவன். எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே என்று நினைவுகளை பின்னால் இழுத்து கொண்டு சென்றாள்.

"ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...'' 

செந்தில்தான் அவன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com