என்னய்யா செல்பீ? சும்மா சும்மா செல்ஃபீ?!

இளமைக்காலம் முதல் இன்று வரை தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிவக்குமார் தன்னிலை மறந்து இப்படி ரசிகர் ஒருவரின் செல்ஃபோனைத் தட்டி விடலாமா?
என்னய்யா செல்பீ? சும்மா சும்மா செல்ஃபீ?!

நடிகர் சிவகுமார் மதுரையில் கருத்தரிப்பு மையத் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த போது இளைஞர் ஒருவர் அவருடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முயன்றார். அப்போது திடீரென உஷ்ணமான சிவக்குமார்... இளைஞரின் செல்ஃபோனை படாரெனத் தட்டி விட்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக நிற்பது போன்ற காணொளியொன்று நேற்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் சிவக்குமாரின் செயலை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். சரி தானென்று சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இளமைக்காலம் முதல் இன்று வரை தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிவக்குமார் தன்னிலை மறந்து இப்படி ரசிகர் ஒருவரின் செல்ஃபோனைத் தட்டி விடலாமா? பொதுவெளியில் இச்செயல் அவர் மீதான மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாக ஆகாதா? என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் சிவக்குமார்;

'எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் போது காரிலிருந்து இறங்கியது முதல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்லும் வரை நிம்மதியாக நடக்கக் கூட விடாமல் பாதுகாவலர்களை எல்லாம் பின்னால் தள்ளி விட்டு செல்ஃபீ எடுக்கிறேன் என்கிற பெயரில் பத்து, இருபது பேர் வி ஐ பிக்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டால் என்ன அர்த்தம்? சார் உங்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாமா? என்று அனுமதி கூட கேட்பதில்லை. விஐபிக்கள் என்றால் செல்ஃபீ எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் சொல்கிற படியெல்லாம் நிற்க வேண்டும், செல்ஃபீ எடுத்துக் கொள்ள வேண்டும்... என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?! நான் என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வில் ஹீரோக்கள் தான். விமானநிலையத்திலும் வேறு பல பொது இடங்களிலும் நானும் ஆயிரக்கணக்கானவர்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டவன் தான், ஆனாலும். ஒரு மனிதனை எந்த அளவுக்குத் துன்புறுத்தலாம் என்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும்’

- என்று பதில் அளித்திருந்தார்.

நடிகர் சிவக்குமார்  நடந்து கொண்ட முறை சரியா? தவறா? என்பது மாதிரியான விமர்சனங்களைத் தூண்டும் விதத்தில் அனைத்து ஊடகங்களிலும் தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யோசித்துப் பாருங்கள்...

விஐபிக்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதென்பது அத்தனை அவசியமான விஷயம் தானா?

இம்மாதிரியான ஆர்வத்தை உங்களுக்குள் தூண்டுவது எது?

செல்ஃபீ எடுத்துக் கொண்டு அதை ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டரில் ஸ்டேட்டஸாகப் போட்டுக் கொள்ளும் உந்துதல் தானே?!

அப்படியான மோகம் நமக்குள் எப்போது இருந்து மூண்டது?

எல்லாம் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் பரவலாகப் புழக்கத்துக்கு வந்த பின்பு தானே? ஸ்மார்ட்ஃபோன்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆப்களை தரவிறக்கி வைத்துக் கொண்டு இப்போது நமக்கு நாமே வெகு ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்கிறோம் பலவிதமான விபரீத ஆப்புகளை.

சில மாதங்களுக்கு முன் தன் ஐந்து வயது மகனுடன் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில் பாலத்தில் நின்று செல்ஃபீ எடுக்க முயன்ற பெற்றோருக்கு நேர்ந்த இழப்பு ஊடகங்களில் செய்தியானதே மறந்து விட்டீர்களா? பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கையில் அதனுடன் செல்ஃபீ எடுக்க முயன்று தங்கள் ஐந்து வயது மகனை வெள்ளத்துக்கு காவு  கொடுத்து திரும்பினார்கள் அந்தப் பெற்றோர். அந்தச் சிறுவனுக்கு பிறந்த நாளே, இறந்த நாளுமானது! இது எத்தனை பெரிய சோகம்... காரணம் செல்ஃபீ மோகம்!

இந்த செல்ஃபீ மோகத்தால் கணிசமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு சடலமாகத் திரும்பும் செய்திகளும் ஆண்டுக்கு சில வந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடந்த மாதம் முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமான என் டி ஆரின் மகனும் நடிகருமான நந்தமூரி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கார் விபத்தில் உயிரிழந்து விட்டார். அவருக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. லைம்லைட்டில் இருக்கும் நடிகரான ஜூனியர் என் டி ஆரின் தந்தை என்ற முறையிலோ அல்லது ஆந்திராவின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் தலையாயதெனக் கருதப்படும் என் டி ஆர் குடும்ப வாரிசு என்பதாலோ என்ன காரணத்தாலோ சற்றும் சிந்திக்காது ஸ்ரீகிருஷ்ணாவின் சடலத்துடன் அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த  மருத்துவமனை ஊழியர்கள் செல்ஃபீ எடுத்துக் கொண்டதோடு அதை தங்களது குழுமத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள். இது மறுநாள் இணைய வாயிலாக ஊடகங்களில் வைரல் செய்தியாகி கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இப்படி ஒரு பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் பணியிலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்கள்.

இறந்த உடலுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முனைவது சைக்கோத்தனம் அல்லாது வேறென்ன?

இவையெல்லாம் தாண்டி ‘செலிபிரிட்டி கிட்ஸ்’ என்று மீடியாக்களால் அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிற வி ஐ பி குழந்தைகள் பொதுவெளியில் எங்கு தென்பட்டாலும் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு மிரள வைக்கிற அளவுக்கு இந்த செல்ஃபீ மோகமும் பாப்பரஸிகளின் தொல்லையும் வரலாறு காணாத அளவுக்கு அதன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் பல நட்சத்திரங்கள், தாங்கள் நடித்த திரைப்படங்களைப் பார்க்கக் கூட தங்களது குழந்தைகளை அனுமதிப்பதில்லை என்பது தான். கார்ட்டூன்களும், அந்நிய மொழித் திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டு வளர்க்கப் படும் வி ஐ பி குழந்தைகளை அவர்கள் எங்கே சென்ற போதும் துரத்தித் துரத்தி மீடியாக்கள் புகைப்படம் எடுக்கிறோம், செல்ஃபீ எடுக்கிறோம், வீடியோ எடுக்கிறோம் என்று படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

சிலருக்கு இந்த துரத்தல் மூச்சு முட்டச் செய்திருக்கலாம்.

இதற்கு எதிர்வினையாற்றினால் என்ன என்று தோன்றச் செய்திருக்கலாம்.

அதன் வெளிப்பாடும் தான் நடிகர் சிவக்குமார் நேற்று தன்னுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞரின் செல்ஃபோனை பட்டென்று தட்டி விட்ட நிகழ்வு! அதைத் தவறு என்று விமர்சிப்பதை விட அவர்களின் வேதனையை புரிந்து கொள்வது தான் முக்கியம். ஒருவேளை இளைஞரின் செல்ஃபோன் உடைந்திருந்தால் அதற்கு சிவக்குமாரை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதைத் தவிர இதில் அவரது செயலை விமர்சிப்பதற்கான எந்த ஒரு நியாயமும் இல்லை.

சிலரது வேதனையை பலர் பொழுது போக்காகக் கருதும் மனநிலையை வளர்க்கும் இந்த செல்ஃபீ மோகத்திற்கு ஒரு வரைமுறையும், கட்டுப்பாடும் வகுக்கப்பட வேண்டும்.

அது மட்டுமே இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com