இசைதான் எனக்கு எல்லாம் என்று முடிவு செய்து விட்டேன்! இசைக்கலைஞர் பின்னி கிருஷ்ணகுமார் பேட்டி!

நான் தொட்டதெல்லாம் பொன். இசைக் கலைஞராகத் தான் ஆக வேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ கனவு
இசைதான் எனக்கு எல்லாம் என்று முடிவு செய்து விட்டேன்! இசைக்கலைஞர் பின்னி கிருஷ்ணகுமார் பேட்டி!

நான் தொட்டதெல்லாம் பொன். இசைக் கலைஞராகத் தான் ஆக வேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ கனவு. என் குடும்பத்தில் முந்தைய தலைமுறையில் யாரும் இசை கலைஞர்களாக இருந்ததில்லை. என் பெற்றோர் இசை ரசிகர்கள் அவ்வளவே. ஆனால், நானும் என் மூன்று சகோதரிகள் ஒரு சகோதரர் என்று ஐந்து பேரும் இசையைத் தான் எங்களின் விருப்பத் துறையாக தேர்வு செய்துள்ளோம். எங்கள் ஐவருக்கும் இசையில் எப்படி இத்தனை ஈடுபாடு வந்தது என்று நினைத்தால், எனக்கு வியப்பாகவே இருக்கும். சகோதரிகள் மூவரும் மியூசிக் டீச்சர்களாக உள்ளனர். என் சகோதரர், திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியில் வயலின் பேராசிரியராக பணி செய்கிறார்.

இசை, நடனப் போட்டிகள் கேரளாவில் நடைபெறுவதைப் போல உலகத்தில் வேறு எங்கும் நடக்காது. அதனாலேயே மற்ற மாநிலங்களை விடவும் கேரளாவில் இருந்து அதிகமாக பாடகர்கள், நடனக் கலைஞர்கள் உருவாகிறார்கள். மாநில அளவில் இசை, நடன விழாக்கள் நடந்தால், ஏழு நாட்கள் வரை கேரள அரசே விடுமுறை அறிவித்து விடும். கலைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவார்கள்.

நான் 10-ஆம் வகுப்பு படித்த போது, மாநில அளவிலான போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வாங்கி இருக்கிறேன். கிளாசிக்கல் மியூசிக், லைட் மியூசிக் என்று எந்த போட்டி நடந்தாலும் முதல் பரிசை நான் தான் வாங்குவேன். கேரளாவில் மிகப் பெரிய கௌரவமாக கொண்டாடப்படும், மாநில அரசின் விருதான 'கலா திலகம்' என்ற பட்டம் எனக்கு கிடைத்தது. இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. இசையில் நான் தொட்டதெல்லாம் பொன்னாக, இசை தான் எனக்கு எல்லாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இசை ஏன் எனக்குப் பிடித்தது என்று கேட்டால், சொல்லத் தெரியவில்லை. இசைக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பதாக நம்புகிறேன். குழந்தையாக இருந்தபோது, நான் எப்படி பாடினேன் என்று தெரியாது. ஆனால், போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியபோது, எல்லாரும், பாப்பா நல்லா பாடினே என்று பாராட்டுவார்கள். ஐந்து வயதில் தொடங்கி, நான் பிறந்த தொடுபுழா மாவட்டத்தில் எங்கு இசைப் போட்டி நடந்தாலும் கலந்து கொள்வேன். முதல் பரிசு வாங்குவேன். பொதுவாகவே வகுப்பில் முதல் ரேங்க் ஒருமுறை வாங்கிய மாணவன் அவ்வளவு எளிதாக அதை விட்டுக் கொடுக்க மாட்டான். அது தான் என் விஷயத்திலும் நடந்தது. இசையோடு பரதம், மோகினி ஆட்டம், குச்சுப்புடி என்று மூன்று வகை நடனங்களையும் கற்றேன்.

'கதாபுரசங்கம்' என்ற பெயரில் பாடியபடியே நடிக்கும் (ஹரிகதா போல) இசை-நடன நிகழ்ச்சி கேரளாவில் நடக்கும். இந்த போட்டியில் ஏழு முதல் 40 வயது வரை கலைஞர்கள் பங்கெடுக்கலாம். இதிலும் முதல் பரிசு வாங்கினேன். பெண்கள் பத்திரிகையான 'மங்களம்' நடத்திய போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றேன். இப்படி தொடர்ந்து முதல் பரிசு வாங்கியதில் நான் இசை கலைஞர்தான் என்று முடிவு செய்து விட்டேன்.

நான் முடிவு செய்தால் போதுமா? பெற்றோர் ஆதரிக்க வேண்டும், கடவுள் கிருபை வேண்டும். என் அதிர்ஷ்டம் அதுவும் இயல்பாக எனக்கு வாய்த்தது. என் வீட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஆறு மணி நேர பேருந்து பயணம். அங்கே போட்டி நடந்தாலும் பெண் குழந்தை, இவ்வளவு தூரம் பயணம் செய்து போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னதேயில்லை. எங்கு போட்டி நடந்தாலும் என் பெற்றோர் என்னை அழைத்துச் செல்வார்கள். உடன் இருந்து உற்சாகப்படுத்துவார்கள். குறிப்பிட்ட துறையில் குழந்தைக்கு ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்ததும் எல்லா விதத்திலும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.

அதனால் தான் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு மிகப் பெரிய கெளரவமாகக் கருதப்படும் கலாதிலகம் விருதை என்னால் வாங்க முடிந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விருதிற்கான போட்டி நடக்கிறது. எனக்கு முன்னும் பின்னும் என் மாவட்டத்தில் இருந்து என்னை தவிர வேறு யாரும் இந்த விருதை வாங்கியதில்லை.

இசை தொடர்பான எதற்கும் என் பெற்றோர் 'நோ' சொல்லாமல் இருந்ததால், நானும் மிகுந்த ஈடுபாடு, அர்ப்பணிப்போடு இசையைக் கற்றேன். கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து, 18 வயதில் என் பெயர் பிரபலமடைய தொடங்கியது. இசையையே விருப்பப் பாடமாக படி என்று திருவனந்தபுரம் இசைக் கல்லூரியில் சேர்த்தனர் என் பெற்றோர். கல்லூரியில் நடந்த போட்டிகளிலும் தொடர்ந்து முதல் பரிசு வாங்கியதால் என்னை ஒரு பெண் என்று வேறுபடுத்தி யாரும் பார்த்ததில்லை. போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண் பாடகர்களும் ஒரு சக பாடகி என்ற ரீதியில் தான் என்னை பார்த்தார்கள். அந்த சமயத்தில் இளம் ஆண் பாடகர்களில் பிரபலமாக இருந்தவர் என் கணவர் கிருஷ்ணகுமார்.

ஒரு போட்டியில் பெண் பாடகிகளில் முதல் பரிசு எனக்கு கிடைத்தால், ஆண் பாடகர்களில் முதல் பரிசு அவருக்கு கிடைக்கும். முதுநிலை இசை படிப்பின் போது, அவருடைய குருவிடம் நான் பயிற்சி பெற்றேன். என் சகோதரர் அவரின் இசைக் கச்சேரிகளில் வயலின் வாசிப்பார். நட்பாக ஆரம்பித்தது காதலாக, திருமணம் செய்து கொண்டோம். என் மகள் ஷிவாங்கி என்னோடு நிறைய தனி ஆல்பங்களில் பாடுகிறார். மகன் விநாயக் சுந்தருக்கும் இசையில் நல்ல ஆர்வம் உள்ளது.

முழு நேர இசைப் பள்ளியை ஆரம்பித்து, பயிற்சி தருகிறேன். பின்னணிப் பாடகி சுஜாதா மோகனின் மகள் சுவேதா மோகன் என் மாணவிதான். அவரும் நிறைய தமிழ், மலையாள திரைப்பட பாடல்களை பாடுகிறார்' என்கிறார்.
 

சந்திப்பு : கீதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com