சீனாவில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோ வழங்கினால் மாதம் 65 லட்ச ரூபாய் சம்பாதிக்கலாமாம்!

கூடிய விரைவில் சீனாத் திரைப்படங்களுக்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் மதிப்பை விட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மதிப்பு உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது.
சீனாவில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோ வழங்கினால் மாதம் 65 லட்ச ரூபாய் சம்பாதிக்கலாமாம்!

சைனாவில் ‘யூ லீ’ எனும் இளைஞர் ஒருவர் தன்னைத்தானே லைவ் வீடியோ எடுத்து அதை நிகழ்ச்சிகளாக்கி YY எனும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மாதம் 1 மில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறார். இந்தியப் பணத்துக்கு அந்தத் தொகையின் இன்றைய மதிப்பு 6442750.00 ரூபாய்கள். இதற்காக யூ லி கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருக்கிறது. எப்படித் தெரியுமா? கேமராவுக்கு முன்பு வருவதற்கு முன்பு தன்னுடைய தோற்றம் பார்வையாளர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா? தலைமுடி ஒழுங்காக படிய வாரப்பட்டு கச்சிதமாக அமைந்திருக்கிறதா? முகத்தில் பவுடர் கோட்டிங் போதுமா? என்று சரி பார்த்து விட வேண்டும்.அப்புறம் எந்த நேரமானாலும் யூ லீ கேமராவுக்கு முன்னால் வர ரெடி தான். இப்படிச் செய்தால் 64,42.750 ரூபாய் கிடடைக்குமென்றால் அதைச் செய்ய யாருக்குத் தான் கசக்கும்?!

அது மட்டுமல்ல, சைனாவின், சென்யாங் மாகாணத்தில் பிரதர் யூ லீ நடத்தி வரும் வுடி மீடியா ஏஜன்ஸியில் வெற்றிகரமாக எப்படி ஆன்லைன் ஸ்டார்களாவது? எனும் பயிற்சி வகுப்புகளையும் அவர் நடத்தி வருகிறாராம். அது சரி தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் தான் அது மோசமான செய்கை எனப் பிறரால் விமர்சிக்கப் படக்கூடும். ஆனால் லி தனது இந்தத் திறமையை பயிற்சி வகுப்புகள் மூலம் விருப்பமுள்ள அனைவருக்குமே கற்றுத் தரத் தயாராக இருக்கிறார் எனும் போது அவரை வரவேற்பவர்கள் அதிகமாகி விட்டனர். தனது ஆன்லைன் ஷோவில் லீ அடிக்கும் ஜோக்குகள், பஞ்ச் டயலாக்குகள் அனைத்துக்குமே அவரது பார்வையாளர்களிடமிருந்து விர்ச்சுவல் அன்பளிப்புகள் வேறு உடனுக்குடன் வந்து சேருகின்றனவாம். அதாவது உடனடியாகப் பணமாக மாற்றிக் கொள்ளத்தக்க விர்ச்சுவல் அன்பளிப்புகள் அனுப்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.

லீயின் ஷோவில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் இசை, கொஞ்சம் உரையாடல் என எல்லாம் கலந்து இருக்கும், பொதுவாக வடகிழக்கு சீனாவில் டாங்பேய் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் லியின் ஷோக்கள் வடிவமைக்கப் படுகின்றன. லீயின் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஆசையும், கனவும் தான் அவர்களை பணம் சம்பாதிக்கச் செய்யத் தூண்டுகிறது. தொலைக்காட்சித் திரையின் முன்புறமாக நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் அந்நேரத்தில் பல் துலக்கிக் கொண்டு இருக்கலாம், அல்லது வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கான கடைசி நிமிடங்களில் யூ லியின் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே தங்களது குரலாலோ, அல்லது தோற்றத்தாலோ ஏதாவது ஒரு வகையில் மக்கள் ரசிக்கும் செலிபிரிட்டியாகி விடும் ஆசை மனதின் ஒரு மூலையில் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு யூ லீ மிகச்சிறந்த இன்ஸ்பிரேஷன், அவர்களை தனது நிகழ்ச்சிகளின் மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும் லீ, அதற்கான பலனை பணமாக அறுவடை செய்து விடுகிறார். இப்படியாக யூ லீ யின் நிகழ்ச்சிகளை மக்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆயிரக்கணக்கில் பார்க்கப், பார்க்க லீயின் வாழ்க்கை பெரிய புராணக் கதாபாத்திரம் போன்று அங்கே மாறிவருகிறது. சொல்லப்போனால் சீனப் பிரதமரின் பிரசித்தி பெற்ற முழக்கமான ‘சீனக் கனவு’ எனும் பதத்துக்கான அடையாளமாகவே யூ லீ மாறிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னாலும் அதில் தவறில்லை.

இணைய நிகழ்வுகளில் லைவ் ஸ்ட்ரீமிங் என்பது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பிரபலமானது தான். ஆனால் சீனாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அங்கிருக்கும் 700 மில்லியன் இணையப் பயன்பாட்டாளர்களில் பாதிக்குப் பாதி யூ லீயின் இந்த ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோவை ரசித்துப் பார்த்து வருகிறார்களாம். அப்படிப்பார்த்தால் இந்த புள்ளி விவரக் கணக்கீடு என்பது அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம் தான்.

2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கீட்டின் படி சீனாவில் ஆன்லைன் ஸ்ட்ரீம் மார்க்கெட்டின் சந்தை மதிப்பு $3 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் ஆய்வாளர்களின் கணிப்பின்படி விரைவிலேயே இந்த நிலை மாறும், கூடிய விரைவில் சீனாத் திரைப்படங்களுக்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் மதிப்பை விட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மதிப்பு உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் சமூக வலைத்தளங்கள் விளம்பரங்கள் மற்றும் தகவல் ஒளிபரப்புதல் மூலமாகப் வருவாய் ஈட்டி வருகின்றன. அதே டெக்னிக்கைப் பின்பற்றித்தான் சீனாவின் ஆன்லைன் ஸ்டார்களும் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இங்கே என்ன வித்யாசம் என்றால் சீனாவின் ஆன்லைன் ஸ்டார்களுக்கு வருவாய், விர்ச்சுவல் கிஃப்டுகள் எனும் பெயரிலும் மிதமிஞ்சிக் குவியத் தொடங்கி விட்டது. இதன் மூலமாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வருவாய் விகிதம் ஆண்டு தோறும் 180 விழுக்காடு அதிகரிக்குமென நம்பப்படுகிறது.

அதோடு இன்று வரை சீனாவில் அமெரிக்க பின்புலம் கொண்ட ஃபேஸ்புக் மற்றும் கூகுளுக்கு இன்று வரை அனுமதியில்லை. இதனால் உள்ளூர் சமூக  வலைத்தள நிறுவனங்களான டென்சென்ட் உள்ளிட்ட லோக்கல் நிறுவனங்கள் நன்கு செழித்து வளர்கின்றன. யூ லீ யின் YY.com  ஆரம்பத்தில் ஒரு கேமிங் போர்ட்டலாகத் தான் தொடங்கப் பட்டது ஆனால் அது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே கிடைத்த அதீத வரவேற்பைக் கண்டபின் இன்று சீனாவின் சமூக தகவல் தொடர்பு வலைத்தள மேடையில் லீடர் என்று சொல்லத் தக்க அளவில் பல புதுமையான உத்திகளை தனது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி சீனாவின் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் சந்தையில் முதலிடத்தில் நிற்கிறது.

ஒருபக்கம் அந்நிய தகவல் தொடர்பு நிறுவனங்களையும் சமூக வலைத்தள நிறுவனங்களையும் அனுமதிக்காத சீனா உள்நாட்டில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோக்களால் உலக அளவில் பிரபலமாகிக் கொண்டிருப்பதோடு அதன் மூலமாக பெருவாரியாக தனிநபர் வருமானம் ஈட்ட முடியும் என்றும் கற்றுத் தரும் நிலையில் இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

அதைவிட ஆச்சர்யம் இந்த ஷோக்கள் மூலம் கிட்டும் வருவாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிட் திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கப் போகிறது எனும் நிஜம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com