பேக்கிங் சோடா அலைஸ் சோடியம் பை கார்பனேட்டை சமையலறை தாண்டி வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?!

பேக்கிங் சோடா நாம் பயன்படுத்தும் மெத்தைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் போக்கவல்லது.
பேக்கிங் சோடா அலைஸ் சோடியம் பை கார்பனேட்டை சமையலறை தாண்டி வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?!

பேக்கிங் சோடாவை நாம் முக்கியமாக வீடுகளில் எதற்குப் பயன்படுத்துகிறோமோ அதே காரணத்துக்காகத் தான் பேக்கரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். பேக்கிங் சோடா எனப்படும் சோடியம் பை கார்பனேட் பிரெட், கேக், பிஸ்கட், ரஸ்க் போன்ற பொருட்களை உப்பச் செய்து அவற்றை மென்மையானதாகவும் மொறு மொறுப்பானதாகவும் மாற்றப் பயன்படுகிறது. அதனால் தான் பேக்கரிகள் தவிர வீட்டிலேயே கூட  வடை அல்லது பகோடாக்கள் செய்யும் போது மிகக் குறைந்த அளவில் நாம் பயன்படுத்தும் சமையல் உப்புடன் இந்த பேக்கிங் சோடாவும் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேக்கிங் சோடாவுக்கு இந்தப் பயன்கள் மட்டும் தான் உண்டு என்பதில்லை. இது தவிரவும் அவற்றால் வேறு சில நல்ல உபயோகங்களும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  • பற்களை வெண்மையாக்க உதவும்
  • முகச்சருமத்தைப் பாழாக்கும் சிவப்பு மற்றும் கருப்புத் தேமல்களை இல்லாமலாக்கும்
  • நகைகளை சுத்தப்படுத்தி பளிச் என மாற்ற உதவும்.

இவை தவிர;

  • பேக்கிங் சோடா முகத்துக்கான மிகச்சிறந்த ஸ்கிரப்பராகவும் பயன்படுகிறது. சில ஸ்பூன்கள் பேக்கிங் சோடாவை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரால் முகத்திலடித்து முகத்தைக் கழுவி துடைக்காமல் அப்படியே உலர வைத்து விட்டால் தண்ணீரில் கரைந்திருக்கும் பேக்கிங் சோடா முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தைப் பொலிவானதாக மாற்றி விடத்தக்கதாம்.
  • அப்போது தான் பிழிந்தெடுத்த எலுமிச்சைச் சாறு அல்லது தண்ணீரில் பேக்கிங் சோடாவைக் கலந்து பேஸ்ட் போன்ற பதம் வந்ததும். அதை அப்படியே டூத்பிரஷ் உதவியுடன் பற்களில் தடவி 1 சில நிமிடங்களில் தேய்த்துக் கழுவி வாய் கொப்பளித்தால் பற்கள் முன்னை விடப் பொலிவானதாகவும் கூடுதல் வெண்மையானதாகவும் காட்சியளிக்கும்.
  • பேக்கிங் சோடா நாம் பயன்படுத்தும் மெத்தைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் போக்கவல்லது. பேஸ்ட் போன்ற பதத்தில் தயார் செய்யப்பட்ட பேக்கிங் சோடாவை அப்படியே மெத்தையில் முழுதாகத் தடவும் போது அது மிகச்சிறந்த நாற்ற நீக்கியாகப் பயன்படுகிறது. கூடுதலாக இதனுடன் சில துளிகள் லாவண்டர் அல்லது ஜாஸ்மின் பெர்ஃப்யூம் சேர்த்துக் கொண்டால் மெத்தையிலிருந்து புத்துணர்ச்சியான வாசமும் கிடைக்கும்.
  • பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து அதில் தங்க நகைகளை சற்று நேரம் ஊற வைத்து தேய்த்துக் கழுவினால் போதும் நகைகள் புதியது போலப் பள பளக்கும்
  • வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் ஓவன்களைக் கூட பேக்கிங் சோடா கொண்டு அருமையாகச் சுத்தப்படுத்தலாம். பேக்கிங் சோடா கலந்த நீரை ஓவன்களில் விடாப்பிடிக் கறைகள் ஒட்டிக் கொண்டிருக்கும் பகுதிகளில் தெளித்து ஊற வைத்து சற்று நேரம் கழித்து தேய்த்துக் கழுவும் போது ஓவனில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் முடை நாற்றமும், விடாப்பிடி கறைகளும் கூட மறைந்து விடும்.
  • டியோடரண்ட் இல்லாத சமயங்களில் எட்டில் ஒரு பங்கு பேக்கிங் சோடாவை எடுத்து அதில் நீரைத்தொட்டு அது கரையும் முன் கையிடுக்குகளில் தடவிக் கொண்டால் வியர்வை நாற்றத்தைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை. டியோடரண்டுகளின் வேலையை பேக்கிங் சோடா செய்யும்.
  • பூச்சிக்கடி அல்லது தோல் அரிப்புக்கும் பேக்கிங் சோடா சிறந்த நிவாரணம் தரும். பேஸ்ட் போன்ற பதத்தில் கரைக்கப்பட்ட பேக்கிங் சோடாவை பாதிக்கப்பட்ட சருமப் பகுதிகளில் தேய்த்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • கூந்தலுக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்கையில் ஷாம்பூவைத் தலையில் தேய்ப்பதற்கு முன்பு சிறிதளவு பேக்கிங் சோடாவை கையில் தெளித்துக் கொண்டு அதன் மேல் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பூவையும் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைமுடி சிக்கு விழும் அவஸ்தையிலிருந்து மீளும். மேலும் வறண்ட கூந்தலை பட்டுப்போன்ற மென்மையான கூந்தலாக மாற்றும் சக்தியும் பேக்கிங் சோடாவுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com