துடைப்பக் காதை! துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது! ஏன்?!

துடைப்பத்தை வாசலை அடைத்துக் கீழே படர விட்டு வைத்தால் வீட்டுக்குள் வரும் மகாலட்சுமி தன்னை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வேறிடம் சென்று விடுவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.
துடைப்பக் காதை! துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது! ஏன்?!

அதென்ன துடைப்பக் காதை... அவ்வளவு பெரிய கதை சொல்ல துடைப்பத்தில் என்ன இருக்கிறது? என்று சிலருக்குத் தோன்றலாம். எங்கே ஒருநாள்... ஒரே ஒரு நாள் செளகர்யமற்ற துடைப்பத்துடன் வேலை செய்து பாருங்கள் அப்போது தெரியும் உங்களுக்கு இந்த துடைப்பக் கதையின் முக்கியத்துவம். இந்தியப் பெண்களிடையே துடைப்பத்திற்கான மவுசு என்றும் ஒரே சீராக நீடித்து வருகிறது. அதனால் தான் இந்தியச் சம்பிரதாய வரிசையில் ‘துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்’ எனும் நம்பிக்கை என்றும் நீடிக்கிறது. இந்த சொல்வழக்கை தர்க்கரீதியாக ஆய்வு செய்து பாருங்கள். மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்வாள்? அவள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் பிறப்பிடம், துடைப்பமும் அந்த வேலையைத்தான் தனது ஆயுள் முழுக்கச் செய்து வருகிறது. எனவே துடைப்பத்தில் போயா மகாலட்சுமி இருக்கிறாள் என்று எதிர்கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

எல்லோருடைய வீடுகளிலும், ஏன் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடங்களிலும் தான் துடைப்பங்கள் காணக் கிடைக்கின்றன. துடைப்பங்களில் இருவகை உண்டு. ஒன்று உள்ளே பெருக்க உதவும், மற்றொன்று வெளியே பெருக்க உதவும். இரண்டுமே ஒரே மெட்டீரியலால் ஆனதல்ல. வீட்டுக்கு வெளியே பெருக்கிச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பம் பெரும்பாலும் தென்னங்கீற்றால் உருவாக்கப் பட்டிருக்கும், அல்லது ஈக்கிமார் என்று சொல்லப்படக் கூடிய எளிதில் உடையாத, தேய்ந்து போகாத புல்லாலும், பனங்கீற்றுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு துடைப்பங்களையும் வீட்டுக்கு வெளியே முற்றத்தைப் பெருக்கவும், மாட்டுத்தொழுவங்களைப் பெருக்கவும், போர்டிகோவைப் பெருக்கவும் பயன்படுத்துவார்கள்.

அதே வீட்டுக்குள் பெருக்க பூந்துடைப்பம் என்று சொல்லப்படக் கூடிய மென்மையான துடைப்பங்களைப் பயனபடுத்துவார்கள். இவை தென்னங்கீற்றுகளால் செய்யப்படுவதில்லை. மிக மென்மையான புல்லில் இருந்து தயாராகின்றன. வீட்டுக்குள் துடைக்க தற்போது தூசு விரவாத பிளாஸ்டிக் துடைப்பங்கள் கூட வந்து விட்டன. ஆயினும் கோரைப் புல் மற்றும் தர்ப்பைப் புல்லில் இருந்து உருவாக்கப்படும் துடைப்பங்களே வளவளப்பான தரையிலும் கூட மிக மென்மையாகப் படிந்திருக்கும் தூசு, துரும்புகளை அகற்றத் தோதானவை என்று இல்லத்தரசிகளால் கருதப்படுகின்றன.

கிராமங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான துடைப்பங்களை தாங்களே தயாரித்துக் கொள்வது வழக்கம். நகரங்களில் அப்படியல்ல,  மக்கள் வீட்டின் உள்ளே பெருக்கிச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பங்களை 200 ரூபாய் கொடுத்துக் கூட விதம் விதமாக வாங்கத் தயங்கவே மாட்டார்கள். 200 ரூபாய்க்கு வாங்கிய துடைப்பத்தில் கைப்பிடி பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அது உள்ளிருக்கும் புற்கட்டுடன் இறுக்கமாகக் கவ்வி பொருத்தப்படாவிட்டால் கைப்பிடி உருவிக் கொண்டு புற்கட்டு தனித்தனியே சிதறிக் கொட்டும். அதனால் மாதாமாதம் துடைப்பத்துக்கென 200 ரூபாய் ஒதுக்கும் நிலையும் சில வீடுகளில் உண்டு. பெரிதாகத் தொந்திரவு தராத ‘அருமையான துடைப்பம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றெல்லாம் புலம்ப வைக்கும் திறன் கொண்ட துடைப்பங்களும் சில வீடுகளில் இருக்கக் கூடும். நகரங்களில் பெரும்பாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லக் கூடியவர்களாக இருக்கும் வீடுகளில் பணிப்பெண்களே வீட்டை உள்ளும், புறமுமாகப் பெருக்கிச் சுத்தம் செய்வார்கள். அவர்களது கைவரிசையைக் காட்டாமல் இருக்கும் வரை துடைப்பங்கள் தீர்க்காயுசுடன் இருக்கலாம். அந்தோ பரிதாபம் எஜமானிகளின் மேலிருக்கும் கோபத்தை அவர்கள் இந்தப் பாழும் துடைப்பங்களின் மீதெல்லாம் காட்டினார்கள் என்று வையுங்கள் பிறகு அவற்றுக்கு அற்பாயுள் தான். மீண்டும் ஒரு 200 ரூபாய் தண்டம் கட்டியே தீர வேண்டும். 

துடைப்பத்தை இப்படி வீட்டில் வைத்தால் செல்வம் தங்காது என்று சொல்லி ஆரம்பித்து விட்டு எதற்கிந்த அனர்த்தக் கதைகள் எல்லாம் என்று சிலர் அனத்தலாம். இருங்கள் முதலில் துடைப்பங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சொல்லி முடித்து விட்டுத்தானே அடுத்த சப்ஜெக்டுக்குத் தாவ முடியும். துடைப்பம் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் மேற்கண்ட கதை நடக்கவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். எல்லோருடைய வீடுகளிலுமே சொல்வதற்கென்று பிரத்யேகமாக ஒரு துடைப்பக் கதை இருக்கத்தான் செய்கிறது. நம்பவில்லை என்றால் தயவுசெய்து மனைவியிடமோ, அம்மாவிடமோ, பாட்டியிடமோ கேட்டுப் பாருங்கள். அத்தனை பேரிடமும் ஆயிரமாயிரம் துடைப்பக் காதைகள் இருக்கலாம் சொல்வதற்கு. அதனால் முடிந்த வரை ஹோம்மேட் துடைப்பங்கள் தயாரிக்க முடியுமா என்று யோசித்து அப்படியொன்றைச் தயாரித்து வைத்துக் கொண்டோமெனில் செலவுக்கு செலவும் மிச்சம், துடைப்பமும் பலநாட்களுக்கு நீடித்து உழைக்கும்.

ஹோம்மேட் தென்னந்துடைப்பம் தயாரிப்பது எப்படி?!

உங்கள் வீட்டிலோ அல்லது தோப்பிலோ தென்னைமரம் இருக்கிறதா? இருந்தால் காற்றுக்கு கீழே விழும் தென்னங்கீற்றுகளைப் பத்திரப் படுத்தி அதிலிருக்கும் கீற்றுகளை ஒடித்து ஒவ்வொரு கீற்றிலும் இருக்கும் காய்ந்த இலைப்பகுதிகளை கூர்மையான பிளேடு அல்லது கத்தியால் கிழித்தெடுங்கள். இப்போது ஈக்கி போன்ற நீளமான குச்சி கிடைக்கும். அதே வழிமுறையைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான அளவு ஈக்கிகளைச் சேகரித்த பின் அதை ஒரு கனமான சரடு கொண்டு கட்டுங்கள். இப்போது தென்னந்துடைப்பம் தயார். துடைப்பத்தின் நுனிப்பகுதியில் தேவைக்கு அதிகமாக இருக்கும் நீளத்தை கச்சிதமாக நறுக்கிக் கடாசி விட்டு செளகர்யமாகப் பிடித்துக் கொண்டு பெருக்கத் தோதான துடைப்பமாக அதை மாற்றிக் கொள்வது அவரவர் கைத்திறன். இந்த வகைத்துடைப்பங்கள் விலைகுறைவு தான் சென்னையில் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் 16 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. 

வீட்டின் உள்ளே பயன்படுத்தக் கூடிய பூந்துடைப்பங்களையும் கூட வீட்டிலேயே தயாரிக்கலாம் தான். ஆனால், அவற்றுக்கான புல்லுக்கு எங்கே போவது? அதனால், தரமான பூந்துடைப்பங்களை தரமான விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது...

சில வீடுகளில் மாமியார்கள், மருமகள்கள் வீட்டைப் பெருக்கிய பின் துடைப்பங்களை நீளவாக்கில் தரையில் படுக்க வைத்தாற் போல விசிறி விட்டுச் சென்றால் கோபத்தில் பத்ரகாளிகளாகி விடுவார்கள். ‘ஏன் டீ நிறைஞ்ச வீட்ல இப்படியா துடைப்பத்தை படுக்கப் போடுவ? இப்படிப் பண்ணா மகாலட்சுமி வீடு தங்குவாளா? துடைப்பத்தை மூலையில சாச்சி வையேண்டீ’ என்று கறாராகச் சொல்வார்கள். அவர்களைப் பொருத்தவரை அவர்களது நம்பிக்கை அப்படிப்பட்டது என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு ஏதுமில்லை.

துடைப்பங்களைப் பராமரிப்பதில் இப்படி ஒரு ஐதீகம் தொன்று தொட்டு தென்னிந்தியாவில் நிலவுகிறது. இதற்கான காரண, காரியங்களைப்பற்றி பலரிடம் ஆலோசித்தும் உண்மையான காரணம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த நம்பிக்கைகளைப் பட்டியலிடுகிறார்கள்.

துடைப்பம் குறித்து நிலவும் நம்பிக்கைகள்...

துடைப்பத்தை வாசலை அடைத்துக் கீழே படர விட்டு வைத்தால் வீட்டுக்குள் வரும் மகாலட்சுமி தன்னை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வேறிடம் சென்று விடுவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

சிலர் துடைப்பத்தை கன்னி மூலையில் சாற்றி வைக்கக் கூடாது என்பார்கள். அப்படி வைத்தால் வீட்டுக்கு ஆகாது என்றொரு நம்பிக்கை உண்டு மக்களிடையே!

சேட்டுகளிடையே ஒரு வழக்கமுண்டு என்கிறார் வட இந்தியாவில் நெடுங்காலமாக வசிக்கும் உறவினர் ஒருவர். சேட்டுகளில் குடும்பத் தலைவராகப் பட்டவர் ஒரு அறை முழுக்க பணத்தைக் கொட்டி வைத்துக் கொண்டு அதை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்பார். அப்படியொரு வழக்கம் தொன்று தொட்டு அவர்களிடையே நிலவுகிறது. காரணம் அவர்கள் துடைப்பத்தை மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதுவதால் என்றார்.

சிலர் ஈச்சந்துடைப்பங்களில் இருக்கும் ஈக்கிகளை உருவி அதைக் கொண்டு உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு மந்திரிக்கவும் செய்கிறார்கள். அப்படிச் செய்வதால் குழந்தையை சுற்றிப் படிந்திருக்கும் திருஷ்டி துடைப்பத்தால் தன்னை அவமதித்து விட்டார்களே என்று ஓடி விடுமாம். அப்படியொரு மூடநம்பிக்கை.

இந்தியர்கள் மட்டுமல்ல சீனர்களும் கூட துடைப்பங்களுக்கு பேயோட்டும் சக்தி உண்டு என்று நம்புகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com