வெயிலுக்கு இதமா கும்பக்கரை அருவிக் குளியல் போடலாமா?!

கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு செல்லத் திட்டமிடுபவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துக் கொண்டு செல்வது நல்லது.
வெயிலுக்கு இதமா கும்பக்கரை அருவிக் குளியல் போடலாமா?!

கும்பக்கரை அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் குதூகலங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட அருவிக் குளியலை விடவும் பரமானந்தம் கொள்ள வைப்பது, அந்த அருவிக்குச் செல்லும் பாதையின் இருமருங்கும் நாம் காணக்கூடிய காட்சிகள். பெரியகுளத்திலிருந்து கும்பக்கரை செல்லும் சாலையில் உள்ள இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியைத் தாண்டி விட்டால் போதும், அங்கிருந்தே ஆரம்பித்து விடுகின்றது மாந்தோப்புகளின் நிரை. மாந்தளிர் வாசம் இதமாக நாசியை நிரப்ப... அதை  வாசம் பிடித்துக் கொள்ளத் தொடங்கும் போதே மெல்லிய பதமான குளிர் ஒரு சல்லாத்துணியைப் போல நம் மேனியில் கவியத் தொடங்கும்... சாலை உள்ளே செல்லச் செல்ல மாந்தோப்புகள், கொய்யாத்தோப்புகள், நெல்லித்தோப்புகள் என வகை வகையாக இதமான வாசனை நுரையீரலை நிரப்பத் தொடங்கும். எல்லா விதமான பழ மரங்களும் இருந்தாலும் மிகுந்திருப்பவை மாமரங்களே! நீங்கள் அருவியில் குளிப்பீர்களோ, இல்லையோ ஆனால் நிச்சயம் இந்தச் சாலைகள் தரும் அனுபவத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவிக்கவில்லை எனில் பூலோக சொர்க்கத்தை இழந்தவர்கள் என்பேன். சரி இனி கும்பக்கரை அருவியைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்... 

அமைவிடம்...

தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே பாய்ந்து கீழே நீர்வீழ்ச்சியாக விழுகிறது. மிதமான அருவிக் குளியலை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் சுற்றுலாத் தலமாக இது விளங்குகிறது. மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருப்பதால் இங்கு நீரின் வேகம் அதிகமாகும் போது அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது. சமீபத்தில் அப்படி விதிக்கப்பட்டிருந்த தடை அருவியின் நீர்வரத்தைப் பொறுத்து இன்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல். கும்பக்கரை செல்ல விரும்புவோர் தாராளமாக இந்த வார இறுதிக்குத் திட்டமிடலாம்.

நீர்வீழ்ச்சியின் பிற பகுதிகள்...

கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து வசதிகள்...

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது. தேனி மற்றும் பெரியகுளம் பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களும் வாடகைக்குக் கிடைக்கின்றன. தேனியில் இருந்து கும்பக்கரை சென்று வர நாள் ஒன்றுக்கு 600 முதல் 800 ரூபாய் வரையில் கார்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. சொந்தக்கார், வாடகைக்கார் என எந்தக் காரில் சென்றாலும் கும்பக்கரை மட்டுமல்ல அதையொட்டி அருகிலிருக்கும் சோத்துப்பாறை அணைப்பகுதிக்கும் சென்று திரும்பலாம்.

உணவு வசதி...

கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு செல்லத் திட்டமிடுபவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துக் கொண்டு செல்வது நல்லது. குடியிருப்புப் பகுதிகளாக இல்லாமல் தோட்டங்களும், தோப்புகளும் நிறைந்த பகுதி என்பதால் அங்கே சாப்பிடத் தோதாக எதுவும் கிடைக்காது. எனவே ஆசை தீர அருவியில் குளித்து விட்டு வந்த பின் கப, கபவென பசிக்கும் வயிற்றைப் பட்டினி போடாமல் ருசித்துச் சாப்பிட வீட்டிலிருந்தே மணக்க, மணக்க சித்ரான்னம், புளியோதரை, காரமான சாரமான தக்காளி இஞ்சித் தொக்குடன் தயிர் சாதம், உருளை வறுவல் என்று சிம்பிளாக ஏதாவது சமைத்து வீட்டிலிருந்தே கொண்டு சென்று அங்கே குளித்து விட்டுச் சாப்பிட்டால் ஏகாந்தமாக இருக்கும். வீட்டிலிருந்து சமைத்து எடுத்துவர இயலாத வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் எனில் அவர்களுக்குச் சிறந்த உணவகங்கள் பெரிய குளத்திலும், தேனியிலும் கிடைக்கும்.

கழிப்பிட வசதிகள்...

கும்பக்கரை அருவிக்குச் செல்பவர்களுக்கு அருவியில் குளித்த பின் உடைமாற்ற வசதியாக அங்கே கழிப்பிட வசதியுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் நம் திருவாளர். பொதுஜனம் குறித்துத் தான் நமக்குத் தெரியுமே! கடந்தாண்டு நாங்கள் அங்கே சென்ற போது அந்த அறைகளுக்குள் கால் வைக்க முடியாத அளவுக்கு ஒரே துர்நாற்றம். சரியாகப் பராமரிக்கப் படாமல் நிறைய குப்பைக் கூளங்களுடன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன கழிப்பறைகள். இதை சம்மந்த்தப் பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுத்திரா விட்டால் இதுவரையிலும் நிலைமை அப்படியே தானிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com