திராவிடப் பாரம்பரியம் அறிந்து கொள்ள ஒருமுறை தக்‌ஷின சித்ராவுக்குப் போய் வாருங்கள்!

தக்‌ஷின சித்ராவில் 40 ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு ஒருவர் கிளி ஜோஷியம் பார்த்து பலன் சொல்லுகிறார். ஓரளவுக்கு அங்கு எவருக்குமே கெடு பலன்களைச் சொல்வதில்லை என யூகிக்கிறேன். இங்கே விட்டால் நீங்கள் பின்னர்
திராவிடப் பாரம்பரியம் அறிந்து கொள்ள ஒருமுறை தக்‌ஷின சித்ராவுக்குப் போய் வாருங்கள்!
  • இடம்: தக்‌ஷின சித்ரா
  • அமைவிடம்: எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்ட் அருகில், கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை.
  • நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு 100 சிறுவர்களுக்கு 50 ரூபாய்
  • தொடர்புக்கு: 044 27472603
  • நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ( செவ்வாய் விடுமுறை, அனைத்து அரசு பண்டிகை விடுமுறை தினங்களிலும் திறந்திருக்கும், தீபாவளியன்று மட்டும் விடுமுறை)
  • உணவு: வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, சகாயமான விலையில் தரமான உணவு வகைகளுடன் மியூசியத்தின் உள்ளே உணவகம் உண்டு)
  • பேருந்து வசதி: எம்.ஜி.எம் டிஸ்ஸிவேர்ல்ட் வழியாகச் செல்லும் பேருந்துகளில் செல்லலாம், எந்த நேரமும் கால் டாக்ஸி வசதியும் உண்டு.

தக்‌ஷின சித்ரா சைட் மேப்:

உள்ளே நுழைந்ததும் இந்த மேப்பை ஒருமுறை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். உள்ளே எந்த இடத்தையும் தவற விடாமல் பார்த்து ரசிக்க இந்த மேப் உதவும்.

திராவிடக் கட்டிடக்கலை, பழந்தமிழர் நாகரிகம், தென்னிந்திய கலாச்சாரம், தற்போது அரிதாகி அழிந்து வரும் தமிழக நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், பிலாக் பிரின்டிங், தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்கள் வரலாறு இவற்றையெல்லாம் சென்னையில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள விரும்பினீர்கள் எனில் நீங்கள் தாரளமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘தக்‌ஷின சித்ரா ஹெரிடேஜ் மியூசியத்துக்கு’ ஒருமுறை சென்று திரும்புவது நல்லது. சென்னையில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று சேதி அறிந்த நாள் முதலாய் எனக்கு அங்கே ஒருமுறை சென்று வரும் ஆசை இருந்தது. ஆனால் பலநாட்களாக நிறைவேறாமல் நீண்டு கொண்டே இருந்த அந்த ஆசை கடந்த ஞாயிறு அன்று நிறைவேறியது. இப்படிப்பட்ட இடங்களுக்கு டூர் செல்லத் திட்டமிடுபவர்கள் பொதுவாக அளவு கடந்த கலை ஈடுபாட்டினால் அவ்விடங்களுக்குச் செல்வார்கள். ஆனால் நாங்கள் சென்றது அங்கிருந்த வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்த வீடுகளின் கட்டுமானங்களைக் காணும் ஆவலுடன் தான். முன்பு எப்போதோ சினேகிதி ஒருவர் சொல்லக் கேள்விப் பட்டிருந்தேன் தக்‌ஷின சித்ராவில் தென்னக மாநிலங்கள் அனைத்திலிருந்தும் குறிப்பிட்ட இன மக்களின் வீடு கட்டும் முறைகள் பற்றி விளக்க கட்டிடங்களுடன் மாதிரிகள் உள்ளன என்று அதைக் காணும் ஆசையில் தான் நாங்கள் அங்கே சென்றோம். எங்களது ஆசையும், எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விடவில்லை. தக்‌ஷின சித்ராவின் வீடுகள் அனைத்துமே நம் அனைவருக்குமான ஆதர்ஷ வீடுகளில் ஒன்றாக இருக்கத் தகுதி வாய்ந்தவை. ஆனால் இந்த சென்னை மாநகரில் அப்படிப்பட்ட வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டுமெனில் இன்றைய கணக்குக்கு நாம் ஒன்று அரசியல்வாதியாக இருக்க வேண்டும் அல்லது நாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிறந்திருக்க வேண்டும். அந்தளவுக்கு விஸ்தாரமான தனி வீடுகள் அவை. ஞாயிறன்று வெயில் காட்டு,காட்டென்று காட்டினாலும் கூட அங்கே கணிசமான அளவில் மக்கள் புழக்கம் இருந்தது. எல்லோருமே ஏதாவது ஒருவகையில் பழமையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றெண்ண வேண்டியது தான். ஏனெனில் வெகு அருகில் எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்ட் இருக்கும் போது குழந்தைகள் அதைத் தவிர்த்து விட்டு இங்கே வரவேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் அத்துமீறல் இருக்கிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம். எது எப்படியோ தக்‌ஷின சித்ரா சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல சென்னைக்கு டூர் வருகிறவர்களும் கண்டிப்பாக காண வேண்டிய ஓர் இடம் தான் என்பதில் ஐயமில்லை!

கோகனெட் ஜெல்லி பானம்:

டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததுமே பாதை ஓரத்தில் ஒருவர் கோகனெட் ஜெல்லி பானம் விற்றுக் கொண்டிருந்தார். இளநீரை ஃப்ரிஜ்ஜில் வைத்தால் இப்படி ஆகுமா? என்றவாறு அதை வாங்கி அருந்தினோம். வெகு அருமையான சுவை. இளநீரை கண்டன்சேஷன் முறையில் இப்படி ஜெல்லி ஆக்குகிறார்களாம். இளநீரைச் செதுக்கி அதையே குவளையாக்கி இளநீர் வழுக்கையுடன் கூடிய அந்தக் இயற்கை குவளையில் ஜெல்லி பானத்தை ஊற்றிப் பரிமாறுகிறார்கள். விலை தான் சற்று அதிகம். ஒரு இளநீர் ஜெல்லி பானம் 100 ரூபாய். சுவையோடு ஒப்பிடும் போது சரி தான் என்றிருந்தது.

இது குதிரா? முதுமக்கள் தாழியா?

மியூசியத்தின் உள்ளே நுழைந்ததும் அஜந்தா ஆர்ட் கேலரிக்குள் நுழையும் முன் முகப்பில் குதிர் போலவும், முதுமக்கள் தாழி போலவும் ஒருங்கே தோற்றமளிக்கும் பெரிய பானை ஒன்றிருந்தது. பார்க்க அழகாக இருந்ததால் முகப்பில் எந்த வித விளக்கங்களும் இன்றி அலங்காரத்திற்கு வைத்திருப்பார்கள் போலும்! இதே போல தோட்டம் போன்ற ஒரு பகுதியில் செராமிக் குதிரைச் சிற்பங்கள் சில இருந்தன. அவையும் அழகோ அழகு!

கிராஃப்ட் பஜார்:

ஆக்ஸிடைஸ்ட் நகைகள், பர்ஸுகள், தேங்காய் மூடியில் செய்த கைவினைப்பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட கீசெயின் வளையங்கள், ஓவியங்கள், தாயக்கட்டைகள், மரச்சீப்புகள், பணியாரம் சுட்டெடுக்க உதவும் மரக்குச்சிகள் என விதவிதமான கைவினைப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. விலை மட்டும் அங்கு வருகை தரும் வெளிநாட்டுக்காரர்களுக்கானது மட்டுமே அப்பொருட்கள், நமக்கானதல்ல அவை என்று உணரச் செய்யும் வகையில் இருக்கிறது. ஆனாலும் குழந்தைகளுடன் செல்பவர்கள் எதையானும் வாங்காமல் மீள முடியாது எனும்படியாக அத்தனை பொருட்களிலுமே கலநயம் மிளிர்கிறது.

திராவிடப் பாரம்பரிய வீடுகள்:

கர்நாடகா சிக்மகளூர்  வீடு...

தக்‌ஷின சித்ராவில் திராவிடம் என்று சொல்லப்படக்கூடிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களின் பாரம்பரிய வீட்டு கட்டுமான மாதிரி வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் அந்தந்த மாநிலங்களின் குறிப்பிட்ட இன மக்களின் பாரம்பரிய வீட்டு அமைப்புகளின் துல்லியமான மாதிரி வடிவங்கள். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் நம்மை 80 களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த திராவிட நாட்டுப் பாரம்பரியத்துக்கு அழைத்துச் செல்கின்றன.

தமிழ்நாடு நாட்டுக்கோட்டைச் செட்டிமார் வீடு...

தமிழர் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட அக்ரஹாரத்து வீடு, நாட்டுக்கோட்டை செட்டிமார் வீடு, குயவர் வீடுகள், நெசவாளர் வீடுகள் என அனைத்துமே அவரவர் தொழில் சார்ந்த அடையாளங்களுடன் காட்சிப் படுத்தப் பட்டிருந்த விதம் அருமையான காட்சி இன்பமாக இருந்தது. அக்ரஹாரத்து வீட்டில் சமையலறை மிகச் சிறியது. சமைக்குமிடம் மட்டுமே அங்கு... தானியங்களைத் திரிக்க, அரைக்க, காய வைக்க வீட்டின் கொல்லையில் இடமிருந்தது. அதுமட்டுமல்ல எல்லா மாநிலத்து வீடுகளிலுமே நடுவில் திறந்த வெளி முற்றம் இருந்தது. வீட்டின் முன்புறமும், பக்கவாட்டிலும் தோட்டம் இருந்தது.  தோட்டத்தின் நடுவிலோ அல்லது வீட்டின் முன்புறமோ ஏதோ ஓரிடத்தில் துளசி மாடம் இருந்தது. வீட்டின் முன்புறம் பெரிய அகன்ற திண்ணைகள் இருந்தன. மாடி, இரண்டு அடுக்கு மாடி என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு எல்லா வீடுகளிலும் இருந்த ஒற்றுமைத் தன்மை இது.

கேரளா சிரியன் கிறிஸ்தவ வீடு...

ஆக திராவிடம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தது மட்டுமல்ல அது தென்னிந்தியாவின் 4 மாநிலங்களையும் சேர்த்தது தான் என்பது இதிலிருந்து புலனாக வேண்டும். திராவிடம் என்பதை சிலர் திருவிடம் என்றும் அர்த்தப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.  இந்த வீடுகளைக் கண்டமாத்திரத்தில் அது எத்தனை நிஜம் என்று புரிந்தது. எல்லா வீடுகளுமே செல்வச் செழிப்புடனிருந்த வீடுகளின் மாதிரிகளாகவே காட்சி தந்தன. அங்கிருந்த வீடுகளின் மாதிரிகளில் கர்நாடக சிக்மகளூர் வீடும், கேரளப் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் சிரியன் கிறிஸ்தவ வீடும் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்படி இருந்தன. அப்படி ஒரு வீடு நமக்கிருந்தால் வாழ்நாள் முழுமைக்கும் போதுமென்றிருந்தது. சொந்த வீட்டுக் கனவுடன் அதிலும் அபார்ட்மெண்ட்டுகளில் ஆர்வமில்லாது தனி வீட்டுக் கனவுகளுடன் இருப்பவர்கள் வீடு கட்டும் முன்பு தக்‌ஷின சித்ராவுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.... அதன் பின் உங்களது சொந்த வீட்டுக் கனவுகளில் பெரிதும் மாற்றம் வரலாம்.

பொம்மலாட்டம்:

3 மணிக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி இருந்தோம். ஒரு டிக்கெட் விலை பத்து ரூபாய்...சுமார் 15 நிமிடங்களுக்கு செல்வராஜ் என்ற நிழல் பொம்மலாட்டக் கலைஞர் ஒருவர் வந்து ‘ஹரிச்சந்திர கதையின்’ ஒரு சிறு பகுதியை பொம்மலாட்டத்தில் நமக்கு வழங்குகிறார். தசாவதாரம் திரைப்படத்தின் ‘முகுந்தா, முகுந்தா’ பாடலில் வரும் பொம்மலாட்ட ஷோவில் இவருடைய பங்கும் உண்டாம். அரிதாகி அழிந்து வரக்கூடிய தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான பொம்மலாட்டத்திற்கான மவுசு குறைந்து கொண்டே வருவதாகவும், அதைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையென்றும் கூறிய அவர், அங்கே வருகை புரிந்தவர்கள் எவருக்கேனும் தங்களது வீட்டுத் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட வைபவங்களில் இந்த பொம்மலாட்டக் கலையை நிகழ்த்த ஆர்வமிருப்பின் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

கரகாட்டம்& சிலம்பாட்டம்:

தக்‌ஷின சித்ராவில் வார இறுதியில் மட்டும் சனி, ஞாயிறுகளில் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயில் நடனம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வண்ணம் அதன் ஆர்வலர்களால் இலவச ஷோக்கள் நடத்தப்படுகின்றன. மென்பொருள் துறையில் பணிபுரியும் நாட்டுப்புறக் கலை ஆர்வலர்கள் கூட தாமாக முன்வந்து இப்படிப்பட்ட ஷோக்களில் தங்களது பங்களிப்பை அளித்து விட்டுச் செல்கிறார்கள். இங்கே பணம் பிரதானமில்லை. கலையும், கலையின் மீதான பற்றுமே முதலிடம் பெறுவதால் காக்னிசண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் நித்யா என்பவர் அன்று கரகாட்ட நிகழ்ச்சியை வழங்கினார். 

பழந்தமிழர் நாகரிகத்தில் அறிவியலின் துணை கலைகளிலும் பிரதிபலித்தது என்பத்ற்கிணங்க சிறுவன் ஒருவனும், ஷோ வைத் தொகுத்து வழங்கிய இளைஞர் ஒருவரும் ‘வட்டஇயக்க கோட்பாட்டின்’ படி கயிற்றில் கட்டப்பட்ட இருமுனை தட்டுகள் கொண்ட தராசு போன்ற அமைப்பில் 3 கப்களில் நீர் நிரப்பி அதை அதி வேகமாக வட்டமாகத் தலைக்கு மேல் சுழற்றி ஒரு துளி நீர் தரையில் சிந்தாமல் வித்தை செய்து காட்டினர். இது வித்தை இல்லை அறிவியல் தான். ஆனால் வட்ட இயக்க கோட்பாடு தெரியாதவர்களுக்கு இது வித்தையாகத் தான் தெரிந்திருக்கும். 

கிளி ஜோஷியம், கை ரேகை, மெகந்தி இன்னபிற...

தக்‌ஷின சித்ராவில் 40 ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு ஒருவர் கிளி ஜோஷியம் பார்த்து பலன் சொல்லுகிறார். ஓரளவுக்கு அங்கு எவருக்குமே கெடு பலன்களைச் சொல்வதில்லை என யூகிக்கிறேன். இங்கே விட்டால் நீங்கள் பின்னர் மகாபலிபுரத்தில் தான் கிளி ஜோஷியக்காரர்களைக் காணமுடியும் என்பதால் கிளி ஜோஷியத்தில் ஆர்வமும், நம்பிக்கையும் இருப்பவர்கள் இங்கே சென்று காணலாம். மகாபலிபுரத்துக் கிளி ஜோஷியக்காரர்கள் பணப்பித்துப் பிடித்தவர்கள்... ஆனால் தக்‌ஷின சித்ராவில் அப்படி இல்லை. இந்தப்பக்கம் ஆண் ஒருவர் கிளி ஜோஷியம் பார்த்துக் கொண்டிருந்தால், அந்தப்பக்கம் பெண் ஒருவர் கைரேகை பார்த்துச் சொல்கிறார். இவர்களுக்கு அப்பால் ஒரு ஓவியக் கலைஞர் படம் வரையக் கற்றுத்தருகிறார். முன்னமே சொன்னேனில்லையா? அங்கே சிரியன் கிறிஸ்தவர் மாதிரி வீடொன்று இருக்கிறதென... அந்த வீட்டின் பொறுப்பாளரான ஒரு பெண்மணி மெகந்தி டோக்கன் வாங்கியவர்களுக்கு மெகந்தி போட்டு விடுகிறார். அது கூட நன்றாகத்தான் இருக்கிறது. சிறுமிகள் மிக ரசிப்பார்கள்.

மட்பாண்டம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

நமக்கே நமக்கென்று சொந்தமாக ஒரு மண்பானையோ, குடமோ செய்து கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் தக்‌ஷின சித்ராவிலிருக்கும் குயவரிடம் வரலாம். மனிதர் அழகாக பானை பிடிக்கக் கற்றுத் தருகிறார். சிறுவர்கள் தங்கள் கைப்பட செய்து காய வைத்த மட்பாண்டங்கள் அங்கே சில இருந்தன.

அய்யனார் கோவில்... 

அங்கிருந்த அருமையான இயற்கைச் சூழலில் இப்படி ஒரு கோயில் அமைப்பு இல்லையென்றால் தான் அது அதிசயம். பெரிய சுதைமண் சிற்பக் குதிரையில் சிலா ரூபமாய் தெய்வங்கள் வீற்றிருக்க நட்ட நடுவே அய்யனார் கொலுவிருக்கிறார். அருமையான ஷுட்டிங் ஸ்பாட் உணர்வைத் தருகிறது அந்த அய்யனார் கோயில் சுற்றுப்புறக் கட்டமைப்பு. கோயிலைச் சுற்றிலும் அழகழகான ஓலைப்புல் குடிசை மாதிரிகள் நிறைய இருந்தன. அவை ஆந்திர மாநில கடற்கரையோர மக்களின் வாழ்விட மாதிரிகளாம். 

பல்லாங்குழியும், பாண்டியாட்டமும்...

பழந்தமிழர் விளையாட்டுக்களான பாண்டியாட்டம், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம், உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடிப்பார்த்து குதூகலிக்கவும் தக்‌ஷின சித்ராவில் வசதியுண்டு. வாரம் முழுக்க சென்னையின் புழுக்கத்தை சகித்துக் கொண்டு வார இறுதியில் இப்படிஒரு இடத்திற்குச் சென்று கொஞ்சம் விளையாடி விட்டு வந்தால் இவ்விஷயங்களில் விருப்பமுள்ளவர்களுக்கு அதுவும் ஒரு வித சுவாரஸ்யம் தான்.

விரஜா ஆர்ட் கேலரி...

சிறந்த ஓவியர்களின் தேர்ந்தெடுத்த ஓவியங்களைக் காட்சிப் படுத்துவதற்கென விரஜா ஆர்ட் கேலரி என ஒன்றும் இங்கே உண்டு. ஆனால் ஓவியங்கள் ஒவ்வொன்றுமே 8000 ரூபாய்க்கு மேல் தான் விலை. இதற்குப் பேசாமல் தோழா படத்து கார்த்தி போல நாமே ஒரு ட்ராயிங் போர்டு வாங்கி பிரயத்தனப்பட்டு வரைந்து அழகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஆயாசமாகி விட்டது. விலை அதிகமென்றாலும் ஓவியங்களைப் பார்க்கையில் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் எனும்படியான துல்லியமான அழகில் இருந்தன. வெளிநாட்டினரில் சிலர் அந்த ஓவியங்களை வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. இவ்விஷயத்தில் நம்மவர்களுக்கு சம்பாதனை போதுமானதாக இருக்கிறதோ இல்லையோ... நிச்சயம் 10,000 ரூபாய் செலவளித்து ஓவியங்களை வாங்கும் கலாரசனை விஷயத்தில் அயல்நாட்டினரைக் காட்டிலும் நமது ஆர்வங்கள் எப்போதும் ஒரு மாற்றுக் குறைவு தான்.

நூலகம், பார்ட்டி ஹால், திருமண மண்டபம்...

தக்‌ஷின சித்ராவில் நூலகம் இருக்கிறது... ஆனால் நாங்கள் அங்கே செல்வதற்குள் அதற்கான நேரம் முடிவடைந்திருந்தது... 5.30 மணி வரை மட்டுமே நூலகம் திறந்திருக்கும். எனவே உள்ளே என்னென்ன வகையான நூல்கள் எல்லாம் சேமிப்பில் உள்ளன எனக் காணும் வாய்ப்பை நாங்கள் இழந்தவர்களானோம். அதைத்தவிர, அங்கே பிறந்தநாள், ஃப்ரெண்ட்ஸ் கெட் டுகெதர், ஓவியக் கண்காட்சி, நாட்டிய வொர்க்‌ஷாப்புகள் உள்ளிட்டவற்றை நிகழ்த்த வாடகைக்கு கான்ஃபரன்ஸ் ஹாலும் உள்ளதாம். வீடு, திருமண மண்டபம் இரண்டும் அலுத்துப் போய் கடற்கரையோரமாக தக்‌ஷின சித்ராவின் அருமையான அட்மாஸ்பியரில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோரின் ரசனைக்காக இங்கே திராவிடப் பாரம்பரிய முறையில் அனைத்து ஜாதியினருக்கும் உரித்தான முறையில் திருமணம் செய்து கொள்ள வசதியான திருமண மண்டப அமைப்பும் உண்டாம். வாடகை விபரங்களை தக்‌ஷின சித்ரா தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து அறிந்து கொள்ளலாம்.

உணவகம்...

தக்‌ஷின சித்ராவுக்குள் நாம் வீட்டிலிருந்து சமைத்து எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. சிறுவர்களுக்காக ஸ்னாக்ஸ்களும், தண்ணீர் பாட்டில்களும் வேண்டுமானால் உள்ளே கொண்டு செல்லலாம். மற்ற்படி உள்ளேயே இயங்கும் உணவகத்தில் சுவைக்கேடின்றி அருமையான மதிய உணவு கிடைக்கிறது. மீல்ஸ் ஒரு நபருக்கு 150 ரூபாய்கள். இரண்டு வகை காய்கறிப் பொரியல், சப்பாத்தி, கிரேவி, காரக்குழம்பு, சாம்பார், ரசம், தயிர், பாயஸம், அப்பளம், ஊறுகாய் என ஒரு கட்டு கட்டலாம். சின்ன ரெஸ்டாரெண்ட் தான் என்றாலும் நன்றாகவே பராமரிக்கிறார்கள். மதிய உணவாக மீல்ஸ் மட்டுமில்லை சப்பாத்தி, பரோட்டா கூட கிடைக்கிறது. மாலைச் சிற்றுண்டியாக பஜ்ஜி, வடை, போண்டாக்கள் கூட உண்டு. நல்ல காஃபீ, டீ, பழரசங்களும் உள்ளேயே கிடைக்கின்றன. விலை மற்றும் சுவையுடன் சேர்த்து நகரத்தின் பிற உணவகங்களோடு ஒப்பிடும் போது ஓரளவுக்கு கட்டுப்படியாகக் கூடிய ரகத்தில் தானிருக்கிறது. உள்ளேயே ஐஸ் கிரீம் பார்லர் மற்றும் பழரசங்களுக்கு எனத் தனி அங்காடியும் உண்டு. எல்லா இடங்களிலும் ரசித்து அமர்ந்து உண்ண விஸ்தாரமான இட வசதியும் இருக்கிறது. 

கழிப்பிட வசதிகள்...

தக்‌ஷின சித்ராவின் கழிப்பிட வசதியும் போதுமான அளவுக்கு நல்ல தண்ணீர் வசதியுடன் நிறைவாகவே செய்யப்பட்டுள்ளது. அங்கே குறை என்று சொல்வதற்கு சென்னையின் வெயில் நேரப் புழுக்கத்தைத் தாண்டி வேறு விஷயங்களென எதுவுமில்லை. ஆங்காங்கே மின்விசிறிகள் சுழன்றாலும் ஏ.சிக்கு பழக்கப் பட்டுப் போன சென்னை வாசிகளுக்கு அது ஒன்று மட்டுமே வெயில் காலங்களில் அங்குள்ள குறையெனத் தோன்றலாம். அது கூட இளவேனிற்காலங்களில் அங்கு இல்லாதொழிந்து விடும். மற்றபடி தக்‌ஷின சித்ரா திராவிடப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து நம் குழந்தைகள் அறிந்து கொள்ளக் கிடைத்த மிகச் சிறந்த  கலாச்சார மையம் என்றே சொல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com