இதுவரை போகாத ஒரு ஊருக்கு போனாத்தான் அது டூர் இல்லனா அது சுத்த போர்!

ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒரு புது இடத்துக்கு டூர் போனா சூப்பரா இருக்கும் தானே?! எப்போ பாருங்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, டாப் ஸ்லிப்னு சொந்த ஏரியாலயே சுத்திகிட்டிருந்தா எப்படி?
இதுவரை போகாத ஒரு ஊருக்கு போனாத்தான் அது டூர் இல்லனா அது சுத்த போர்!

ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒரு புது இடத்துக்கு டூர் போனா சூப்பரா இருக்கும் தானே?! எப்போ பாருங்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, டாப் ஸ்லிப்னு சொந்த ஏரியாலயே சுத்திகிட்டிருந்தா எப்படி? அதுக்குப் பேர் குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டறதும்பாங்களே அதான். சரி புதுசா வேறெந்த இடத்துக்குப் போலாம்னு ஏதாவது திட்டம் இருக்கா உங்க கிட்ட? இருந்தா ஓகே...
இல்லனா நாங்க எதுக்கு இருக்கும்? அதையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லிட்டா போச்சு. நாளை முதல் அக்னி நட்சத்திரம் வேறு தொடக்கம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனல் பட்டையைக் கிளப்ப வீட்டு ஏ.சி க்கு டெப்ரஸன்ல தீப்பிடிச்சுக்காம இருந்தா சரி. ஏனெனில் அத்தனை வேலைப்பளுவை அதற்கு இந்த இரண்டு மாதங்களில் நாம் தருகிறோம். 24 மணி நேரமும் வீடு, அலுவலகம், மால்கள், தியேட்டர்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது தேச பக்தி அல்ல ஏ.சி தான். இந்த ஏ.சி போதையில் இருந்து விடுபட்டு கொஞ்சம் இயற்கையே குளு, குளுவென ஆக்கி வைத்திருக்கும் புத்தம் புது இடங்களுக்குப் போனால் என்ன? 

விடுமுறைகளுக்கு திட்டம் வகுத்துக் கொடுக்கவென்றே பல இணையதளங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று யாத்ரா. யாத்ரா மூலமாக இந்த முறை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே 45 சதவிகிதம் பேர் இதுவரையிலும் விடுமுறை டூர் பிளான் செய்திருக்கிறார்களாம். சரி இந்திய மற்றும் இண்டர்நேஷனல் டூர்களில் கியூட்டான இடங்களைப் பரிந்துரைப்பதில் கெட்டிக்காரர்களான யாத்ரா தளம் இந்த முறை பரிந்துரைக்கும் இடங்கள் எதுவென இப்போது தெரிந்து கொள்வோம்.

தவாங்: 

அருணாச்சலப் பிரதேசத்தின் மிகச்சிறிய மாவட்டம் இது. உலகின் மிகப்பிரசித்தி பெற்ற பெளத்த மடாலயங்களில் ஒன்று இங்குள்ளது. இந்தப் பிரதேசம் எப்போதுமே அதன் மதம் மற்றும் விவசாயத்துடன் இணைந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்காகச் சிறப்புற்று விளங்குவது. அதுமட்டுமல்ல சமீபத்தில் திபெத்திய மடாதிபதியான தலாய் லாமா வாயிலாக இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக செய்திகளிலும் அடிக்கடி இடம் பெற்ற பிரதேசம் தான் இது. இங்கிருக்கும் தவாங் பெளத்த மடாலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. அதைக் காண்பதற்கு மட்டுமல்ல இந்தியாவின் மத்தியப் பகுதிகளிலும், தென் பகுதிகளிலும் அனலடித்துக் கிடக்கும் கோடையைச் சமாளிக்க ஆண்டின் எல்லா மாதங்களிலும் தூறலுடன் கூடிய மழையோடு இப்படி ஈரம் குறையாமலிருக்கும் பிரதேசத்துக்குப் போய் சில நாட்களைக் கழிப்பது என்பதெல்லாம் தேவலோகத்துக்குப் போய் இந்திர சபையில் கண்ணயறுவதற்குச் சமானம் என்பது அதை அனுபவிப்பவர்களுக்கே புரியக் கூடும். ஆர்வமிருப்பவர்கள் உங்கள் டூர் பிளானை இதை நோக்கி திட்டமிடலாம்.

கலிம்பாங்: 

இந்து மேற்கு வங்கத்தில் இருக்கும் அருமையான டூரிஸ்ட் ஸ்பாட். இங்கு ஆண்டின் பெரும்பான்மை மாதங்களிலும் இதமான தட்ப வெப்ப நிலையே நீடிக்கும். இந்தியாவின் பல்வேறு விதமான வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களால் பிணைக்கப்பட்டு நெகிழ்ந்த மனங்களுடன் வாழும் மக்களைக் கொண்ட இந்தியப் பகுதி இது. இங்கிருந்து பார்த்தால் இமயமலைச் சிகரங்கள் அனைத்தையுமே கண்களால் மட்டுமல்ல கேமராக்களிலும் விழி விரிய அப்படியே அள்ளிக் கொள்ளலாம். இமயத்தின் அடிவாரத்தில் இயற்கையின் கொடையாக பரந்து விரிந்து கிடக்கும் பச்சைக் கம்பள விரிப்பு போன்ற சமவெளிப் பகுதிகளையும், வெள்ளிப் பனியாய் உருகி வழிந்து கொண்டிருக்கும் எண்ணிலடங்கா மலை முகடுகளையும் இங்கிருந்து கண்டால் மட்டுமே ஜென்ம சாபல்யம் அடைய முடியும். அத்தனை அழகான சின்னஞ்சிறு உலகம் இது.

ஜிரோ:

அருணாச்சலப் பிரதேசத்தின் இன்னுமொரு சொர்க்கம் இது. டூரிஸ்டுகள் அதிகம் விரும்பிச் செல்ல தேர்ந்தெடுக்கும் இடங்களில் இதற்கு எப்போதும் முதலிடம் உண்டு. இங்கு மக்களின் முக்கியமான தொழில் நெல் விளைவிப்பது. இரண்டு விதமான நெல் வகைகள் இங்கே உற்பத்தியாகின்றன. அது மட்டுமல்ல இங்கிருக்கும் டரின் மீன் பண்ணை டூரிஸ்டுகள் தவற விடக்கூடாத இடங்களில் ஒன்று. அது மட்டுமல்ல ஜிரோவின் அழகான பைன் மரக்காடுகளால் ஆன சமவெளிப்பகுதிகள் டூரிஸ்டுகள் வந்து தங்கி இயற்கையை அனுபவித்து ரசிக்கத் தோதான இடங்களில் ஒன்று. என்பதால் இதையும் தவற விடாமல் ஒரு முறை சென்று பார்த்து வரலாம்.

பிர் பிலிங்& கஜ்ஜியர்: 

இந்தியாவில் பாராகிளைடிங் சாகஷ விளையாட்டுகளில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் தவற விடக்கூடாத இடங்களில் இது ஒன்று. இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இந்த டூரிஸ்ட் ஸ்பாட்டின் பாராகிளைடிங் பைலட்டுகள் மிகத் திறன் வாய்ந்தவர்கள் என்வதால் இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் இருந்து விடுமுறைகளில் இங்கு வந்து பாரகிளைடிங் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். பாராகிளைடிங் மட்டுமல்ல இங்கு ஹேங் கிளைடிங், ட்ரெக்கிங் மற்றும் கேம்பிங் வசதிகளும் உள்ளதால் டூரிஸ்டுகளுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு சாகஷ அம்சங்களைத் தரும் இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தீர்த்தன்வேலி:

இந்த இடமும் இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தான் இருக்கிறது. சுற்றிலும் நதிகள் பாய, பச்சைப் பட்டு விரித்தாற் போல சமவெளிகளில் இயற்கை அழகு கொஞ்ச ஆங்காங்கே மிகத் திறன் வாய்ந்த ஓவியரின் கை வண்ணத்தில் உறைந்த சொர்க்கம் போல காட்சியளிக்கும் குளிர் நீர் ஏரிகள் சூழ அமைந்துள்ள கிரேட் ஹிமாலயன் நேஷனல் பூங்கா அமைந்த்துள்ள இடம் இது தான். இங்கே டூர் வரும் மக்கள் இதன் அழகான ஏரிகளில் மீன் பிடித்து மகிழலாம், மலை ஏறிப் பழகலாம், இன்னும் சற்று அதிகப்படியாக இங்கிருக்கும் கிராமங்களில் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களது வீடுகளில் பேயிங் கெஸ்டுகளாகத் தங்கிக் கொண்டு சில நாட்களுக்கு மட்டுமேனும் அருமையான ஒரு வடகிழக்குப் பிராந்திய கிராமத்து வாழ்வை ஆசை தீர வாழ்ந்து பார்க்கலாம்.

நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம் இப்போது நீங்கள் ரெடியா? டூர் பிளான் செய்பவர்கள் இந்த இடங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இது வெறுமே ஒரு பரிந்துரையே உலகில் நாம் காண வேண்டிய, காணாமல் விடுபட்டிருக்கக் கூடிய எழில் மிகு பிரதேசங்கள் இன்னும்... இன்னும்... இன்னும் நிறையவே உண்டு.

முதலில் நமது இந்தியாவை நாம் முற்றறிய வேண்டுமெனில் பயணம் ஒன்றே சிறந்த வழி. பயணத்துக்கு உகந்தவை விடுமுறைக் காலங்கள். நிச்சயம் விடுமுறைகள் தோறும் எங்காவது குடும்பத்துடன் பயணிக்க மட்டும் மறக்கவே மறக்காதீர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com