எம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர்...

இன்று நாம் தெரிந்து கொள்ளவிருப்பது அதிதீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் மூவரைப் பற்றியும் எம்ஜிஆரது புகழை வளர்ப்பதில் இன்றளவும் அவர்கள் ஆற்றி வரும் தொண்டினைப் பற்றியும் தான்
எம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர்...

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் அவரது சினிமா, அரசியல் பங்களிப்புகள் பற்றித் தொடர்ந்து ஒவ்வொரு வாரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அவரது தீவிரமான ரசிகர்களைப் பற்றியும் கூட நாம் நினைவுகூர்ந்தால் நல்லது தானே?! இதைவிடவும் அதற்கு உகந்ததொரு தருணம் வாய்த்து விடக்கூடுமா என்ன? அதனால் இன்று நாம் தெரிந்து கொள்ளவிருப்பது அதிதீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் மூவரைப் பற்றியும் எம்ஜிஆரது புகழை வளர்ப்பதில் இன்றளவும் அவர்கள் ஆற்றி வரும் தொண்டினைப் பற்றியும் தான். தினமணி வாசகர்கள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், இவர்களைப் போலவே நீங்கள் அறிய நேர்ந்த தீவிர எம்ஜிஆர் ரசிகர்களைப் பற்றியும், எம்ஜிஆர் நினைவாக அவர்கள் தற்போது செய்து வரும் நற்செயல்கள் பற்றியும் கூட எங்களுக்கு விரிவாக மின்னஞ்சல் செய்யலாம். ஆர்வமிருப்பவர்கள் அதிதீவிர எம்ஜிஆர் ரசிகர்களைப் பற்றி webdinamani@gmail.com என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

1. இதயக்கனி விஜயன்:

இதயக்கனி எஸ்.விஜயன் என்பவர் இதயக்கனி மாத இதழின் ஆசிரியர் ஆவார். கடந்த 13 வருடங்களாக இதயக்கனி மாத இதழை நடத்தி வருகிறார். துணுக்கு எழுத்தாளராக பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். கடந்த 32 ஆண்டுகளாக பத்திரிகைகளில் சுயேட்சை திரைப்பட நிருபராக, அரசியல் மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த பகுதிகளையும் எழுதி வருகிறார். இவர் தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்கள், வார, மாத இதழ்களிலும் எழுதி வருகிறார். பத்திரிக்கையுலகில் திரையுலக தகவல் ஆராய்ச்சியாளராகவும் கருதப்படுகிறார். கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் முதல் 'இதயக்கனி' என்ற மாத இதழையும், 2004-ம் ஆண்டு மே முதல் "இதயக்கனி சினிமா ஸ்பெஷல்" என்ற மாத இதழையும் ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, புரூஸ்லீ, கிருபானந்தவாரியார், எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன் மற்றும் திரையுலகம் சார்ந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை ஆராய்ச்சித் தொடர்களை எழுதியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் எம்.ஜி.ஆர் பற்றி நிறைய எழுதியுள்ளார். இவர் தயாரிப்பில், எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் வரலாற்றுப் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்திருக்கிறார்.

எம் ஜி ஆர் தனது ரசிகர்களது இதயத்தில் மட்டுமல்ல, கொள்கையளவில் தன்னை எதிர்ப்பவர்களது இதயங்களையும் கூட ஒரு  நடிகராக வென்று வெற்றிக்கனி ஈட்டிய மாபெரும் மனிதர். இவ்வுலக வாழ்வை நீத்த பின்பும் மக்கள் மனதில் என்றும் அவர் ஒரு சாகாவரம் பெற்ற  இதயக்கனியாகவே நீடிக்கிறார். உலகிலேயே அமரராகிவிட்ட ஒரு மாமனிதருக்காக, அவரது மனிதநேயத்தை, புகழ் சாதனைகளை வெளிப்படுத்தும் இதழாக இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் மாத இதழ் என இதயக்கனியைக் கூறலாம்.

இதயக்கனி நவம்பர் மாதம் 2000-ம் ஆண்டு தொடங்கி 17 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் http://www.ithayakkani.com இணையதளத்தை அணுகலாம். இப்படி இதயக்கனி, இன்று உலகம் முழுக்க இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணையதளமாகவும் பயன்பட்டு எம்ஜிஆரின் புகழ் வளர்க்கிறது. 

2. எம் ஜி ஆரின் தீவிர ரசிகர் ராஜப்பா வெங்கடாச்சாரி:

எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான ராஜப்பா வெங்கடாச்சாரி ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவர் எம்.ஜி.ஆர் நடித்துள்ள 134 திரைப்படங்கள், அதில் நடித்த கதாநாயகிகள், படம் வெளிவந்த ஆண்டு, பாடல் எழுதியவர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரது பெயர் மற்றும் எம்.ஜி.ஆர் தொடர்பான அனைத்து தகவல்களையும் எப்போது கேட்டாலும் சொல்லும் திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடத்தில், நவராத்திரி சமயங்களில் இவரது வீட்டில் அமைக்கப்பட்ட கொலு மாபெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ராஜப்பா வெங்கடாச்சாரி என்பவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தமிழ் திரையுலகின் சிறந்த நடிகருமான எம்.ஜி.ஆரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான ராஜப்பா வெங்கடாச்சாரி தனது வீட்டிலுள்ள சாமி படங்களின் வரிசையில் எம்.ஜி.ஆர் படத்தையும் வைத்து வழிபட்டு வருகிறார்.

எம்,ஜி,ஆர் படங்களைப் பார்ப்பதற்கும், அவர் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்குமே இந்த பூவுலகில் தாம் பிறந்திருப்பதாக இவர் கருதுகிறார். அந்த அளவு எம்ஜிஆரின் திரைப்படங்கள் அத்தனையையும் எந்தப்படம்? எந்த எண்ணிக்கையில்? எந்த தேதியில் ரிலீஸ் ஆனது? என்பது வரை... அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்!

நெல்லையில், அரசு அலுவலர் கழகத்தின் மாவட்டப் பொருளாளராக இருந்தபோது எம்ஜிஆரால் நடத்தப் பட்ட பெரியார் நூற்றாண்டு விழாவில் அவருடன் நெடு நேரம் உரையாடியதைத் தன் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறார்!

22-2-1971 இல் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராயிருந்தபோது அப்போதைய திமுகவுக்காகத் தேர்தலில் உழைத்ததையும், அந்தக் காலகட்டத்தில் சிவாஜி ரசிகர்களால் தான் தாக்கப்பட்டதையும் அதற்கு எம்ஜிஆர் நேரில் வந்து தனக்கு ஆறுதல் சொன்னதையும் குறிப்பிட்டு பூரித்துப் போகிறார் இவர்.

11-5-73 இல் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடங்கல்களின் பின் ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து திரையிடப்பட்டபோது முதல் இரண்டு காட்சிகளிலும் டிக்கட் கிடைக்காமல் 40 பைசா டிக்கட்டை 10 ரூபாய்க்கு பிளாக்கில் வாங்கிப் பார்த்திருக்கிறார். அன்றைய நாலு ரூபா டிக்கட் பிளாக்கில் நூறு ரூபாயாம்!

அதே வருடம் 9-7-73 இல் சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் 60 வது முறையாக அந்தப் படத்தைப் பார்த்தாராம், இரண்டு மாத இடைவெளியில் 60 தடவை எம்ஜிஆர் படத்தைப் பார்த்து ரசிக்கிறார் எனில் எம்ஜிஆர் மீது இவருக்கிருந்த ரசிகவெறியை என்னவென்று சொல்வது?! இத்தகைய உண்மை ரசிகர்களால் அல்லவா எம்ஜிஆரின் புகழ் இன்றளவும் ஒரு குன்றிமணியளவும் குறையாது நீடித்து நிலைக்கிறது. 

அதுமட்டுமல்ல இவர் இன்றளவும், அதாவது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்து 44 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் கூட தான் முதன் முதலாக பார்த்த உலகம் சுற்றும் வாலிபன் டிக்கட்டை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்றால் எம்ஜிஆர் மீது இவருக்கிருந்த பக்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

1997 செப்டம்பரில் காசி - கயா வில் எம்,ஜி,ஆருக்கு திதி கொடுத்த முதல் தொண்டரும், ரசிகரும் கூட  இவரே மட்டுமே ஆவார்.

அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கத்தின் தென் மண்டலப் பொருப்பாளராயிருக்கும் இவர், எந்த ஊரில் எம்ஜிஆர் விழா நடைபெற்றாலும் அங்கெல்லாம் செல்வது இவருடைய இப்போதைய பணி.

15-8-1946 இல் மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மஹோதரன் இசையில் பி.என். ராவ் இயக்கத்தில் உருவான ‘சுலோச்சனா’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார் என்பது இவர் வாதம்!

3. எம்.ஜி.ஆர் ரசிகர் தேனி நாகராஜன்

S.P. நாகராஜன் @ தேனி ராஜதாசன்

பி. நாகராசன்  என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது தேனியிலுள்ள உணவகம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். 

இவர் எம்ஜிஆர் நடிப்பில் தீவிரமான பற்றுதலுடையவர். பத்திரிகைகளில் வெளியான எம்ஜிஆர். படங்கள், செய்திகள் போன்றவற்றைச் சேகரித்துத் தனியாகப் புத்தகக் கட்டுகளாக்கித் தொகுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் படத்துடன் வெளியான பல பொருட்களையும் கூட இவர் சேகரித்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகளைச் சேகரிப்பதற்காகத் தனியாக “எம்ஜிஆர் நினைவுக் களஞ்சியம்” எனும் ஒரு அமைப்பையும் இவர் நிறுவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் இவர் தொகுத்துள்ள, சேகரித்துள்ள எம்ஜிஆர் நினைவுகளைக் கண்காட்சி அமைத்துக் காட்சிப்படுத்தியும் வருகிறார்.

இவர், தேனி, மதுரை, மணப்பாறை, புதுக்கோட்டை, சென்னை, சிவகாசி, கோயமுத்தூர் ஆகிய இடங்களில் எம்ஜிஆர் வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சிகள் நடத்தியவர்.

தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டக் கலை - பண்பாட்டுத் துறையின் மூலம் இவருக்கு, 2010 ஆம் ஆண்டு சிறந்த மேடை நாடக நடிகருக்கான “கலைச்சுடர் மணி விருது” வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com