அதிமுக எனும் கட்சி உருவான கதை...

புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன்
 அதிமுக எனும் கட்சி உருவான கதை...

இதுவரை எம்ஜிஆரின் ஆரம்ப காலப் பள்ளி, நாடக மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பார்த்தோமில்லையா? இப்போது அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்குமான தொடர்பைப் பற்றிப் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தான் இல்லை. அதிமுக என்ற பெயரை எம்ஜிஆர் தனது தொண்டர் ஒருவரிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டார். அல்லது தனது தொண்டர் துவக்கிய கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும். அது தான் உண்மையும் கூட... அதைப் பற்றிய சுவாரஸ்யமான சில செய்திகளை இந்த வாரம் தெரிந்து கொள்ளலாம்...

எம்ஜிஆர், தனது திரைப்படங்களின் மூலம் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் அவர் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. மக்கள் ஆதரவு கொண்ட நடிகராக எம்ஜிஆர் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் தான் இணக்கமாக இருந்து வந்தார். ஆனால் பின்னாட்களில் சி.என்.அண்ணாதுரை மீது கொண்ட பற்றினால் அவரை ஆதரித்து திராவிடக் கழகத்தின் முக்கியமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக தம்மை முன்னிறுத்திக் கொண்டார். அப்போது தனது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலும் கூட எம்ஜிஆர் திராவிடக் கழகப் பிரச்சாரத்தை பாடல்கள் வாயிலாகப் பரப்பி கட்சியின் பரவலான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.

காலஞ்சென்ற சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். இந்நிலையில் கட்சியில் எம்ஜிஆரது வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் உட்கட்சி விவகாரங்களை பகிரங்கமாகப் பேசி விளக்கம் கேட்டார் என்ற காரணத்தை முன் வைத்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி எம்ஜிஆரை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் அதே ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாள் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆர் நீக்கத்தை கண்டித்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய கோரி 2 பேருந்துக்களுக்கு சென்னையில் தீ வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தீ வைக்கப்பட்ட இடம் வழியாக சென்ற நடிகை சௌக்கார் ஜானகியின் கார் மீது கல் வீசப்பட்டது. இச்செய்திகளை கேட்ட அரசு உடனே கைதானவர்களை எல்லாம் விடுவித்தது. 20.10.1972ம் ஆண்டு அண்ணா திமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்று விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. மத்திய மந்திரி வருகை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இது மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் நடந்துள்ளது என்றும், அண்ணா திமுக என்பது ஒட்டு காங்கிரஸ் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆரோ, அண்ணா திமுக ஒட்டு காங்கிரஸ் இல்லை என்றும், அண்ணா திமுக என்பது தனித்து செயல்படும் கட்சி என்று விளக்கம் அளித்தார்.

புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (M.L.C.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  இப்படித்தான் அக்டோபர் 17, 1972-இல் அதிமுகவுக்குத் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 

21.10.1972ம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ துரைராஜ். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் தொகுதி மக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியதற்கு பின்பு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தயாரானார். இந்த சூழலில் திமுகவினர் கட்சி தாவுவதை எதிர்த்து திமுகவினரே பேருந்துக்களை கொளுத்தி, தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கோரிக்கை வைக்க, புலன் விசாரனை நடப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசிடம் கேட்ட கேள்விக்கு ஐஜி அருள் பதில் அளித்தார். 

அதன் பிறகு சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுகவின் தொடக்கம் பற்றியும், அதிமுகவின் வருங்காலம் பற்றியும் எம்.ஜி.ஆர் பேசினார். ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி, காளிமுத்து, முனுஆதி, துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

இது எல்லாம் நடந்துக்கொண்டிருக்க, மெல்ல மெல்ல அதிமுக வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தது. 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதன் பிறகு அத்தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாக காத்திருந்தது. திமுகவுக்கு எதிராகக் களம் இறங்கியதால்  ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிட திமுக அரசு தடையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிமுக காணும் முதல் தேர்தல் அது தான். அதிமுக சார்பில், தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் அவர்கள் நிறுத்தப்பட்டார். மே 11ம் தேதி, உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட எம்.ஜி.ஆர் முடிவு செய்து போஸ்டர்களை ஒட்ட உத்தரவிட்டார். 

ஆனால் அப்போது அப்படத்திற்கு மட்டும் போஸ்டர்கள் மீதான வரியை சென்னை மாநகராட்சி மூலம் திமுக அரசு உயர்த்த, சென்னையை தவிர்த்து இதர நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் தேர்தலோ மே 20, படம் வெளியீடு மே 11. இரண்டுக்கும் 9 நாட்கள் தான் வித்தியாசம். 5.2 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியும், தயாரித்தும் வெளியிட்டார். மே 11ம் தேதி திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் அதிக அளவில் கூட்டம். எம்.ஜி.ஆரோ, தேவி தியேட்டரில் தன் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைக் கண்டுகளித்தார். 
இது எல்லாம் ஒரு பக்கம் நடக்க ஜேப்பியார் அவர்கள், திண்டுக்கல் தொகுதி தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரிடம் 20 கோடி ரூபாயை அளித்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற அமைச்சர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com