சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த இசை மழை - Dinamani - Tamil Daily News

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த இசை மழை

First Published : 10 June 2013 12:05 AM IST

வழக்கம்போல் சுகமான ஞாயிறு. இன்றைய முதல் கச்சேரி சுஷ்மாவினுடையது. மதியம் 12.30லிருந்து 2.00 மணி வரை. ஏற்கெனவே மழை வருமா வராதா என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்தது வானம். சுஷ்மாவின் கான மழை கேட்கும் ஆவலில் எவ்வளவுதான் வேகமாகப் போனாலும், ஏனோ தெரியவில்லை, போக்குவரத்தை மீறி ஹாலுக்குப் போகும்போது, கச்சேரி தொடங்கியிருந்தது. காம்போதி ராக ஆலாபனையை காதில் கேட்டபடியே இருக்கையில் அமர்ந்தேன்.

சுஷ்மாவைப் பற்றி சொல்ல வேண்டுமே! இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் நமது கலாசரத்தை விடாமல் அனுசரிக்கும் பட்டயக் கணக்கர் (அதான் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட்) சோமசேகரனின் மகள். 1980ம் வருடத்திலிருந்து நான் சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் தவறாமல் என்னை கவனித்துக் கொள்ளும் குடும்ப நண்பர்.

சரி சரி.. சொந்தக் கதையில் இருந்து விட்ட இடத்துக்கு வருகிறேன்... சுஷ்மா முறையாக சங்கீதம் பயிலும் மாணவி. சங்கீதத்தின் மீதுள்ள ஆர்வத்தால், இப்போது முழுமையான பயிற்சிக்காக சென்னையில் வாசம்.

அப்படியே காம்போதி ராகத்தை சுஷ்மா கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ராக ஸ்வரூபம் கெடாமல் பாடிய விதம் அபாரமாக இருந்தது. பெரிய வித்வான்கள் எல்லாம் எடுத்து ஆளும் ராகத்தை மெருகு குலையாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த விதம் ரம்யமாக இருந்தது. பட்டயக் கணக்கரின் மகளாயிற்றே! ஸ்வரக் கணக்கு கொஞ்சமும் பிசகவில்லை!ஸ்வரபிரஸ்தாரங்களும் ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளிச் சென்றது. தனி ஆவர்த்தனம் வாசித்த ரிஷிகேஷுக்கு சிறுவயதுதான்! இப்போதே தன் தனியை சிறப்பாக அளிக்கிறார்.

பின்னர் சாருமதி ராகத்தில் மனசாரமதி என்ற தஞ்சாவூர் சங்கர ஐயர் கீர்த்தனையை அளித்து தில்லானாவுடன் கச்சேரியை நிறைவு செய்தார்.

அடடா சொல்ல மறந்து விட்டேனே! வயலின் வாசித்த பொடியன் ஸ்ரீராம் ஸ்ரீதர் அபார வாசிப்பு. அவனுக்கு 15 வயதுதானாம். சுஷ்மாவின் பாட்டுக்கு ஈடு கொடுத்து பிடிகளையும், ஸ்வரங்களையும் அப்படியே திருப்பிக் கொடுத்த விதத்தைப் பார்த்தால், பிற்காலத்தில் வயலினில் வில்லாதி வில்லனாக வர வாய்ப்பு உண்டு என்றே தெரிகிறது. முடிவில் அவனிடம் விசாரித்தபோது வெட்கத்துடன் சொன்னான் - லால்குடி யுனிவெர்சிடியில் வயலின் பயில்கிறானாம். பிறகு கேட்பானேன்! எப்படி இருக்கும் வாசிப்பு என்று!

கச்சேரியைக் கேட்டு அடுத்த கச்சேரிக்கு தயார் செய்துகொள்ளும் போது மனதில் ஒரு நிம்மதி... கர்நாடக சங்கீதம் இன்றைய இளைய சமுதாயத்தின் கையில் பத்திரமாக இருக்கிறது என்ற உணர்வுதான் அது!

(வாசகரின் இசை விமர்சனம்)

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.