காசிக்கு இணையான சிவாலயம்

கடலூர் மாவட்டத்தின் மேற்கில் உள்ளது விருத்தாசலம் வட்டம். இங்குள்ள பழமையான சிவாலயம் பழமலைநாதர் கோயில் பிரம்மன்
காசிக்கு இணையான சிவாலயம்

கடலூர் மாவட்டத்தின் மேற்கில் உள்ளது விருத்தாசலம் வட்டம். இங்குள்ள பழமையான சிவாலயம் பழமலைநாதர் கோயில் பிரம்மன் படைப்புக்குமுன் சிவபெருமான் தாமே மலைவடிவாகி நிற்கப் பிரம்மன் அதனையறியாது, பல மலைகளையும் படைத்து, அவற்றை நிலைநிறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளி தானே பழமலையாதலைத் தெளிவித்தார். ஆதலின் முதுகுன்றம் எனவும், பழமலை எனவும் வழங்குவதாயிற்று.

இறைவன் - விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர்.
இறைவி - விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி

சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும். இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குக் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது. இத்தலத்தில் இறப்பவருக்கு, இறைவன் அவ்வுயிரைத் தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி முந்தானையால் இளைப்பாற்றுகின்றாள் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்

வடக்குக்கோபுரத்திற்கு நேர்வடக்கேயுள்ள மணிமுத்தாற்றுப் பகுதிக்குப் புண்ணியமடு என்று பெயர். இங்கேதான் இறந்தவர்களின் எலும்புகளை இட்டு முழுகுவது வழக்கம்

கோயில் அமைப்பு
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் விண்முட்டி காணப்படுகின்றன. கிழக்கே உள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.

இங்கே ஆழத்துப் பிள்ளையார் என்பது தலவிநாயகர் ஆழத்து பிள்ளையார் முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து பிள்ளையார் எனப்படும் பாதாள விநாயகர் சந்நதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு தனி மூன்று நிலை கோபுரம் மற்றும் கொடிமரம் உள்ளது.

முதல் பிராகாரத்திற்குக் கைலாசப் பிராகாரம் என்று பெயர். இந்தப் பிராகாரத்தில் வடமேற்குமூலையில் ஆகமக் கோயில் உள்ளது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

இறைவன் இடது புறத்தில் அம்பிகை திருக்கோயில் உள்ளது கிழக்கு நோக்கியது. அம்மையின் பெயர் வட மொழியில் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி என அழைக்கப்படுகிறார். இவர் தனி கொடி மரம் கொண்டுள்ளார். இவரது கருவறை சுற்றி ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. இதில் கருவறை கோட்டத்தில் காலசம்ஹாரர், கஜசம்ஹாரர், பிரிதியங்கரா, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரும் தனி சண்டேஸ்வரி சன்னதியும் உள்ளன.

இந்த அம்பிகையின் திருக்கோயில் வாயிலில் நாத சர்மாவுக்கு தனி சிற்றாலயம் உள்ளது. அம்பிகையின் எதிரில் அனவர்தினி எனும் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. கற்பக மரமே வன்னிமரமாக வந்து பழமலை நாதர் திருக்கோயில் திருப்பணியைச் செய்ததாக வரலாறு.

கண்டராதித்தன் கோபுரத்தின் வழி உள்ளே நுழைந்தால் இடது புறத்தில் உள்ளது இந்த 3000 ஆண்டு பழமையான வன்னி மரம் (இதனின்று திசுகன்று எடுக்க விருத்தாசலம் KVK முயன்று வருகிறது)

இம்மரத்தடியில் உரோம ரிஷி, விகாய விபசித்து, விதர்ஷன செட்டியார் சிலைகள் உள்ளன. அருகில் பிரம்மா தீர்த்த கிணறு உள்ளது.
 

இந்த திருசுற்றின் மேற்கு பகுதியில் பஞ்ச லிங்கம், வல்லப கணபதி, மீனாட்சி அம்மன், சொக்கர், விஸ்வநாதர் , விஸ்வநாதர் விசாலாட்சி, மூன்று விஸ்வ லிங்கங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன், அடுத்து சகஸ்ர லிங்கமும், காமாட்சியும், ஜம்புகேஸ்வரரும் உள்ளனர். அண்ணாமலையார் வடமேற்கு மூலையில் தனி திருசுற்று கொண்டு கிழக்கு நோக்குவதையும் காணலாம்.

இங்கு உற்சவ மூர்த்தியின் பெயர் பெரியநாயகர். இவர் ஆண்டிற்கு ஒருமுறை மாசிமக விழாவில் ஆறாந் திருநாள் மட்டுமே எழுந்தருளிக் காட்சி வழங்குவார். பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com