உங்களுக்கு யோகம் எப்படி இருக்கு?

சுகபோக வாழ்வு என்பது, அவர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைகின்றது.
உங்களுக்கு யோகம் எப்படி இருக்கு?

சுகபோக வாழ்வு என்பது, அவர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைகின்றது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஏழை, பணக்காரர் என்பதைவிட, எப்போதும் சுகபோக வாழ்வு அனுபவிப்பதை ஜாதக அமைப்புகள் நிர்ணயிக்கும்.

எந்த லக்னத்தில் பிறந்தவராக இருந்தாலும், லக்னத்தின் அதிபதி, இரண்டாம் வீட்டிற்குரிய அதிபதி, ஒன்பதாம் வீட்டிற்குரியவர், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களில் எந்தக் கிரகமாவது ஆட்சி, உச்சம் பெற்று மூன்றாம் இடத்துக்குரிய கிரகத்துடன் சேர்ந்து சுப ராசியில் அமர்ந்தால், அந்த ஜாதகர் மிகவும் ஒழுக்கம் உள்ளவர். மற்றவர்களுக்கு உதவுகின்றவர். தர்மம் செய்கின்றவர். வாழ்நாள் முழுவதும் சுகபோகத்துடன் வாழ்வார்.

எந்த லக்னமாக இருந்தாலும், லக்னத்தின் அதிபதி லக்னத்துக்கு 1, 7, 10 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் நிற்க வேண்டும். நான்காம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்துக்கு 5, 9 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றில் அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, எப்போதும் சீறும் சிறப்புமாக வாழ்வார்.

எந்த லக்னமாக இருந்தாலும், லக்னத்தின் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று இரண்டாவது அதிபதியும் ஆட்சிபெற்று அமர்ந்து, குரு பகவான் லக்னத்துக்கு கேந்திர ஸ்தானங்களில் வலிமைபெற்று அமர்ந்தால், அந்த ஜாதகர் கல்வியில் திறமை உள்ளவராக விளங்குவார். பல நூல்களைக் கற்றறிவார். இலக்கியத்தில் ஈடுபாடு உடையவராகத் திகழ்வார். புலவராக வாழ்வார். பட்டிமன்ற பேச்சாளராக, நடுவராகப் பணிபுரிவர்.

ஒருவர் பிறந்தது எந்த லக்னமாக இருந்தாலும், இரண்டாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திட, குரு பகவானுக்கு கேந்திர ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றில் இரண்டுக்குரியவர் அமரவும் லக்னாதிபதி ஆட்சி பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் கல்வி, ஞானம் உள்ளவராகத் திகழ்வார். பல கலைகளைக் கற்றறிந்தவர். அறிவாற்றல் மிக்கவர். இலக்கிய, இதிகாச புராணங்களில் ஈடுபாடுடையவர். ஒழுக்கத்தோடு வாழ்பவர். எப்போதும் உண்மையைப் பேசுபவர். எப்போதும் புகழ், செல்வாக்கோடு வாழ்வார்.

எந்த லக்னத்தில் பிறந்தவராக இருந்தாலும், லக்ன அதிபதியும் மூன்றாம் அதிபதியும் ஒன்றாகக் கூடி 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து லக்னத்துக்கு இரண்டாம் அதிபதி, ஜனன ஜாதகத்தில் புதன் எங்கு நிற்கின்றாரோ அதற்கு இரண்டாம் வீட்டில் நிற்க, அந்த ஜாதக அமைப்பைப் பெற்றவர் கணிதத்தில் மேதையாவார். ஜோதிட கணிதத்திலும் மேதையாவார்.

தனசு லக்னமாக அமைந்து லக்னத்துக்கு 10-ல் சனி பகவான் அமர்ந்திட, சனி பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் 10-ம் இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் ஜோதிடக் கணிதத்தில் மேதையாவார். லக்னத்திற்கு 7-ல் புதன், சூரியன் கூடியிருக்கப் பிறந்தவர் பிரபல யோகத்தை அடைவார்.

எந்த லக்னமாக இருப்பவராக இருப்பினும், பரிகாரம் செய்வதன் மூலம் எப்போதும் யோகம் பெற்று சிறப்போடு வாழலாம்.

கல்வியில் உயர்ந்திட ஹயக்கிரீவரை வணங்க வேண்டும். பொருளாதாரம் எப்போதும் நிலைத்திட பெருமாளை வேண்ட வேண்டும். வருடம் ஒரு முறை திருப்பதி சென்று வருவோருக்கு வாழ்வில் மங்காத செல்வம் உண்டு. அனைத்துச் செல்வங்களோடு வாழ்ந்திட மாதம் ஒரு முறை அன்னதானம் செய்வது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com