சூரிய கிரகணத்தால் தோஷம் ஏற்படும் நட்சத்திரங்கள்?

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்தால் தோஷம் ஏற்படும் நட்சத்திரங்கள்?

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல்,  ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ராகு மறைக்கும் போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும் போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம் தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

குறிப்பாகக் கிரகண நாளில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது எனக் கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் கதிர்வீச்சுகளால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவேதான் கர்ப்பிணிகளை வெளியே வரவிடமாட்டார்கள். கிரகண கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

கிரகண தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைப் பேறின்மை, கருச்சிதைவு ஏற்படுதல் அல்லது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறப்பது, வீட்டில் தொடர்ந்து காரண, காரியமில்லாமல் நிலவும் பிரச்னைகள், பணியிடத்தில் மற்றும் வியாபாரம் செய்யுமிடத்தில் தொடர்ந்து ஏமாற்றம், எவ்வளவு தான் சிறந்த முயற்சி எடுத்தாலும், கொஞ்சம் கூட அதற்குரிய பலன் கிடைக்காமல் இருத்தல், உடலாலும், மனதாலும் நோய் மற்றும் பல பிரச்சனைகள் சூழ்ந்தபடியே இருத்தல் என்று கெடுபலன்கள் நிகழக்கூடும்.

கிரகண பாதிப்பில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?
கிரகணத்தால் நமக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சாஸ்திரங்கள் சில தற்காலிக ஆலோசனைகளை வழங்குகின்றன. அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தானங்கள் வழங்கலாம். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம். மேலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் கிரகணம் முடியும் வரை, ஜபங்கள், பாராயணங்கள் செய்யலாம். கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து விடுபட, நாம் அணிந்த உடைகளை, நீரில் நனைத்து, துவைத்து விட்டு பின்பு, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம்.

கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?
சூரிய கிரகணத்தை நேரடியாகக் காணக்கூடாது. சமையல் செய்யக் கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது.

சூரிய கிரகணத்தால் தோஷம் ஏற்படும் நட்சத்திரம்
சூரிய கிரகணம் மகம் நட்சத்திரத்தில் ஏற்படுவதால், மகம், அசுவினி, மூலம், ரேவதி, பூரம் நட்சத்திரங்களில் உள்ளவர்கள் சூரிய பகவானுக்கு சாந்திப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com