கிரகங்களின் பார்வை நமக்கு கேடு விளைவிக்குமா? 

கிரகங்களுக்கெல்லாம் பார்வைகள் உண்டு. அந்தப் பார்வைகள், பலன்களை அடியோடு மாற்றிவிடுகின்றன.
கிரகங்களின் பார்வை நமக்கு கேடு விளைவிக்குமா? 

கிரகங்களுக்கெல்லாம் பார்வைகள் உண்டு. அந்தப் பார்வைகள், பலன்களை அடியோடு மாற்றிவிடுகின்றன.

நமது பாரம்பரிய ஜோதிடத்தில், கிரகங்களை நல்லவை, கெட்டவை நாம் பிரித்துள்ளோம். நல்ல கிரகங்களின் பார்வைகள் நல்லது பயப்பன என்றும், கெடுதல் செய்யும் கிரகங்களின் பார்வைகள் கேடுவிளைவிப்பவை என்றும் நாம் பிரித்துள்ளோம்.

கிரகங்களில் குரு, வளர்பிறைச் சந்திரன், பாபர் சம்மந்தப்படாத புதன், சுக்கிரன், ஆகியோர் இயற்கையிலேயே சுபர் என்றும், சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் பாபர் என்றும் நமது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அத்துடன், சுபகிரகங்களின் பார்வைகள் நல்லது செய்யும் என்றும், தீய கிரகங்களின் பார்வை தீமை செய்யும் என்றும் கூறுகின்றது.

எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தைப் பார்க்கின்றன. இந்தப் பார்வையைத் தவிர, சில கிரகங்களுக்கு விசேஷப் பார்வையும் உண்டு.

குரு, 7-ம் இடத்தைத் தவிர ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும் பார்ப்பார். உதாரணமாக, குரு சிம்மத்தில் இருக்கிறார் என எடுத்துக் கொள்ளுங்கள். அவர், தான் இருக்கும் இடத்திலிருந்து, அதாவது, சிம்மத்திலிருந்து ஐந்தாம் இடத்தையும், அதாவது தனுசு ராசியையும், ஏழாம் பார்வையாக கும்பத்தையும், ஒன்பதாம் பார்வையாக மேஷத்தையும் பார்ப்பார். நாம் அந்தக் கிரகம் இருக்கும் வீட்டிலிருந்து எண்ண வேண்டும்.

அதேபோல், சனிக்கு 7-ம் பார்வையைத் தவிர மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் உண்டு. சனி, விருச்சிகத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். மூன்றாம் பார்வையாக மகரத்தையும் (விருச்சிகத்தையும் சேர்த்து எண்ணுங்கள்), 7-ம் பார்வையாக ரிஷபத்தையும், 10-ம் பார்வையாக சிம்மத்தையும் பார்ப்பார்.

செவ்வாய்க்கு, 7-ம் பார்வையைத் தவிர நான்காம் பார்வையும், எட்டாம் பார்வையும் உண்டு. செவ்வாய், ரிஷபத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். நான்காம் பார்வையாக சிம்மத்தையும், 7-ம் பார்வையாக விருச்சிகத்தையும், 8-ம் பார்வையாக தனுசையும் பார்ப்பார்.

மற்ற கிரகங்களுக்கெல்லாம் (ராகு, கேதுவையும் சேர்த்து) 7-ம் பார்வை ஒன்றுதான். விசேஷப் பார்வை என்று எதுவும் கிடையாது.

இந்தப் பார்வைகளெல்லாம், ஒரு ராசியிலிருந்து மற்ற ராசியைத்தான் பார்க்கிறது எனக் கொள்ள வேண்டும். உதாரணமாக, செவ்வாய் ரிஷபத்தில் முதல் பாகையில் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். செவ்வாய், ரிஷத்திலிருந்து பார்ப்பதாகக் கொண்டு, அங்கிருந்து நான்காம் ராசியான சிம்மம் முழுவதையும் பார்ப்பதாகக் கொள்ள வேண்டும். இதேபோல், ஏழு மற்றும் எட்டாம் ராசியையும் முழுவதுமாகப் பார்ப்பதாகக் கொள்ள வேண்டும்.

சரி! செவ்வாய் முதல் பாகையில் இல்லாமல், இருபத்தி எட்டாவது பாகையில் இருப்பதாகக் கொள்வோம். அப்போதும் செவ்வாய், ரிஷபத்திலிருந்து பார்ப்பதாகக் கொண்டு சிம்ம ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி ஆகியவற்றைப் பார்ப்பதாகக் கொள்ள வேண்டும்.

செவ்வாய் எந்தப் பாகையில் இருக்கிறது எனப் பார்க்க வேண்டாம். நமது இந்திய ஜோதிடத்தில் இதுதான் விதி. ஆனால், மேல் நாட்டு ஜோதிடத்தில் அப்படி இல்லை. பார்வைகள் எல்லாம் பாகை, கலைகளின் அடிப்படையில்தான். 

கிரகங்களின் பார்வை நல்ல பார்வையா அல்லது கெட்ட பார்வையா என்பதை கிரகங்கள் நன்மை செய்யக்கூடியவையா இல்லை தீமை செய்யக்கூடியவையா என்று கணித்து முடிவு செய்ய வேண்டும்.

இயற்கையிலேயே, சுப கிரகங்களின் பார்வை நல்லது செய்யக்கூடியது என்றும், அசுப கிரகங்களின் பார்வை தீமை பயக்கக்கூடியது என்றும் கணிப்பார்கள். அதேபோல், கிரகங்களின் ஆதிபத்தியத்தை வைத்தும் நல்ல பார்வை, கெட்ட பார்வை என்றும் கணிப்பார்கள்.

உதாரணமாக, சிம்ம லக்கினம், கடக லக்கினம் இவற்றில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் யோககாரகன் ஆகிறான். ஏனெனில், செவ்வாய், கேந்திர ஸ்தானத்துக்கும், திரிகோண ஸ்தானத்துக்கும் அதிபதி. அவன் யோககாரகனாக ஆனபடியால், அவன் பார்வையும் நன்மை செய்யும் என்றே கருதப்படுகிறது.

அதேபோன்று, ஒரு சுப கிரகமும் ஆதிபத்தியரீதியாகக் கெட்டவன். ஆனால், அவன் பார்வையும் கெடுதல் செய்யும் என்றே கருதப்படுகிறது. உதாரணமாக, குரு இயற்கையிலேயே ஒரு சுப கிரகம். அவர் பார்க்கும் இடமெல்லாம் நல்லதே செய்யும் என்று கூறுவார்கள். அதனால்தான், ‘குரு பார்க்கக் கோடி புண்ணியம்’ என்று கூறுவார்கள். கன்னி லக்கினத்துக்கு குரு, பாதகாதிபதி. தவிரவும், கேந்திராதிபத்திய தோஷம் பெற்றவன். ஆக, அவன் ஒரு பாவியாகின்றான். அவன் பார்வை நல்லது செய்யாது என்றே கருதப்படுகிறது. இவையெல்லாம் ஒரு பொதுவான கருத்துகள்தான்.

– ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com