அண்ணாமலையே, அண்ணாமலையார்!

மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவ பெருமானின்  அடி, முடி தேடிய காலத்தில், இருவர் மத்தியில்,
அண்ணாமலையே, அண்ணாமலையார்!

மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவ பெருமானின்  அடி, முடி தேடிய காலத்தில், இருவர் மத்தியில், அக்னி ஸ்தம்பமாக சிவன் ஆவிர்ப்பவித்தார். பின்னர், அவர்கள் இருவருடைய வேண்டுகோளை ஏற்று  லிங்க வடிவை அடைந்தார். “கைலாசம், மேரு, மந்தரம் ஆகிய மலைகள் அருணாத்ரிக்குச் சமானமாகாது. அவை சிவன் வசிக்கும் மலைகளே, ஆனால் அருணாத்ரி சுயம் சிவனேயாகும். இந்த லிங்கம் அக்கினி பர்வதமாக உதித்ததால் அருணாசலம் (அருண - அசலம்:  செம்மலை) என்றே புகழப்பெறுகின்றது”, என்று சிவபெருமான், பிரம்மாவிடம்  கூறினார். 

இத்தகவல் ஸ்ரீரமண பகவான் தொகுத்துள்ள “அருணாசல மாஹாத்மியம்”  என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இது ஸ்காந்த மகா புராணம், சிவ ரகஸ்யம், சிவ மகா புராணம், ஸ்காந்தோப புராணம் முதலிய நூ£ல்களின் தொகுப்பாகும்).

பார்வதி தேவி சிவபெருமான் தேகத்தில்  பாதியைப்  பெற்று அர்த்தநாரியாக விளங்க, சிவனின் அருள் வேண்டி “இடப மேற் கச்சி வந்த உமையாள், தன் இருளை நீக்கத் தவஞ் செய்ய” காஞ்சிபுரம் வந்தார்.  அங்கு மணலால் ஒரு லிங்கத்தை அமைத்துத் தவம் செய்து, பின்னர் தவத்தைத் தொடர திருவண்ணாமலை வந்தடைந்தார். அப்பொழுது தேவியை கௌதம  மகரிஷி சந்தித்து  “உலகத்தில்  வேறெங்கும் மலை வடிவானதோர் லிங்கம் காணப்படவில்லை. சூர்ய, சந்திர, அக்னிகள் மூன்று கூடி வடிவமானது இம்மலை” என்று பார்வதி தேவியிடம் கூறி  தவத்தைத் தொடருமாறு சொல்ல, தேவியும் தவத்தைத் தொடர்ந்து, சிவபெருமான் உடலின்  பாதியில் ஐக்கியமாகி, அர்த்தநாரீஸ்வர வடிவம் பெற்றார். வருடத்திற்கு  ஒருமுறை திருக்கார்த்திகை தினத்தன்று  மாலையில்  ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனி புறப்பாடாகி,  கோயிலில் மகா தீபத்தை ஏற்றுவார். அதன் பின்பு மலையில் மகா தீபம் ஏற்றப்படும். மறுதினம் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர, வைகானஸ தீபம் ஏற்றி வைணவர்கள் வழிபடுகின்றனர்.

திருவண்ணாமலை  நடுநாட்டுத் தலம். பஞ்ச பூதங்களில் அக்னித்  தலம். நினைத்தாலே முக்தி  அளிக்கக்கூடியது. இத்தகவலை  “பவக்கடல் கடந்து முத்தி அம் கரையில் படர்பவர் திகைப்பு அற நோக்கித் தவக்கலம் நடந்த, உயர்ந்து எழும் சோணசைலனே!  கைலை நாயகனே!”   என்று துறைமங்கலம் சிவப்பிரகாசர்  பாடிய சோணசைல மாலையில்  காணலாம்.

பயிலும் ஆலயம் ஓர் சைலம்; ஓர் சைலம் பகைப்புலம் முருக்கு கார்முகம்; ஓர் சைலம்  மாதுலன் ஆம் எனக்கொள்ளும் சோணசைலனே!  கைலை நாயகனே! (“உனக்கு கோயிலும் மலை, திரிபுரம் எரிக்க அம்பாய் உதவியதும் மலை, மாமனாரும் மலையே, இத்தனையும் மலையாம் அழகுதான் என்னே!” என்றும் சோணசைல மாலையில், திருவண்ணாமலையின் பெருமையை  பாடியுள்ளார். 

கோயிலில்   உள்ள முக்கிய சந்நிதிகள்: ஸ்ரீகணபதி: திறைகொண்ட கணபதி: அடியார்க்கும், மற்றவர்க்கும் தீங்கிழைத்து வந்த முகிலன் என்ற மன்னனை அச்சுறுத்த வேண்டி, குகை நமசிவாய தேசிகர் இறைவனை வேண்ட, அவர் கணபதிக்கு ஆணையிட, அவர் யானை உருவில் சென்று  மன்னனை அச்சுறுத்தினார். மன்னன் தன் குற்றத்தை உணர்ந்து சில யானைகளைத் திறையாக அளித்ததால் விநாயகருக்கு “திறைகொண்ட கணபதி” என்று பெயர் உண்டாயிற்று.

இறைவன்: ஸ்ரீஅண்ணாமலை;  இறைவி: ஸ்ரீஉண்ணாமுலை தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் (உண்ணாமலை உமையாளடும் உடனாகிய வொருவன் - திருஞான சம்பந்தர்).


ஸ்ரீமுருகப் பெருமான்: கிழக்கு ராஜகோபுரம் வழியே சென்று  கம்பத்து இளையனார் சந்நிதியை அடையலாம். அருணகிரிநாதர் வேண்டுகோளுக்கிணங்க, பிரபுடதேவராஜன் முன்னிலையில் கம்பத்திலிருந்து வெளிப்பட்ட முருகப் பெருமானை இங்கு தரிசிக்கலாம்.

கிளி கோபுரம் - வல்லாள மகாராஜன் கோபுரம்: இந்த கோபுரத்தின் மேலிருந்து உயிரை விடவிருந்த அருணகிரிநாதரை முருகன் காப்பாற்றினார். இங்கு கோபுரத்திளையனார் சந்நிதி உள்ளது.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், மற்றும்  அண்ணாமலையார் சதகம்,  அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம், உண்ணாமலையம்மன் பதிகம், சதகம் போன்ற இத்தலத்தைப் பற்றிப் பல நூல்கள், ஆன்றோர்களால் இயற்றப்பட்டுள்ளன.

கார்த்திகை மாதமே விசேஷ புண்ணியம் அளிக்கும் மாதம். கார்த்திகை மாதப் பௌர்ணமி, கிருத்திகை நட்சத்திரம் தொடர்ந்து மூன்று நாட்கள் கார்த்திகை தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் முழுவதும்  மாலையில் விளக்கேற்ற வேண்டும்.  காசியில்  கங்கைக் கரையில் மாலையில்  தீப ஆரத்தி இப்பொழுதும் நடந்து வருகிறது. “தொல் கார்த்திகை நாள்.... தையலார் கொண்டாடும் விளக்கீடு” என்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

ஐம்முகச்  சிவனுக்கும், அறுமுகச் சிவனாகிய முருகனுக்கும் உகந்தது திருக்கார்த்திகைப்  பெருவிழா. அக்கினி பகவானும், கங்கை ஆறும்   தாங்கிய ஆறு ஜோதி உருவம் ஆறுமுகன்!

கார்த்திகை தீபத்தைத் தரிசித்த புழுக்கள், பறவைகள்,  மிருகங்களை தவிர தரையிலும்,  நீரிலும் வசிக்கும் ஜந்துக்கள், மனிதர்கள் முதல் அனைவருக்கும் மறுபிறப்பு கிடையாது  என்று கீழ்க்கண்ட   மந்திரம் கூறுகிறது:

கீடா: பதங்கா: மசகாச்ச: வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாவா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ராஹா:!!

“கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவர் அகத்து இருள் அனைத்தும் சாய்த்து நின்று எழுந்து விளங்குறும் சோணசைலனே!  கைலை நாயகனே!” , நின் மணிமுடியில் தாங்கி நிற்கும் கார்த்திகைத்  தீபத்தைக் காண்போர் மனத்து இருள்  முழுமையாக அழிந்து போகும்  என்று, கார்த்திகை தீபத்தின் பெருமையை சோணசைல மாலை தெரிவிக்கிறது.

கார்த்திகேயனுடைய திருவடிகளில் அன்புபெருகி, அவருடைய சரித்திரத்தைக் கேட்பவர்களுக்கு நீண்ட  ஆயுள், நன்மக்கள் பேறு  முதலியன பெற்று இறுதியில் கந்தப்பெருமானின் திருவடி அடைவார்கள் என வால்மீகி முனிவர்  தனது  ராமாயணத்தில் கூறியுள்ளார்.

குகை நமசிவாயர், குரு நமசிவாயர், அருணகிரிநாதர், ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், ஈசான்ய தேசிகர், விருபாக்ஷ தேவர், யோகி ராம்சுரத் குமார் மற்றும் பல மகான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற புனிதத் தலம். 

இவ்வாண்டு கார்த்திகைத் தீபப் பெருவிழா, திருவண்ணாமலையில்  நவ.23. கொடியேற்றத்துடன் துவங்கியது. நவம்பர் 29 திருத்தேர்,  2 -12 - 2017 சனிக்கிழமை காலையில் பரணி தீபம், மாலை 6.00 மணிக்கு மகா தீபம், மலையில் தீபம் ஏற்றும் வைபவம். டிசம்பர் 3,4,5 தெப்பல் உத்ஸவம்  நடைபெற உள்ளது. 

இலட்சக் கணக்கில் பக்தர்கள் தரிசித்தும், கிரி வலம் வந்தும் அருள் பெற உள்ளனர். நாமும் நினைத்தாலே முக்தி  தரும் அண்ணாமலையாரை, அக்கோயிலிலாவது  அல்லது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்டு அருள் பெறுவோம்.

- மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com