பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 2. திருவண்ணாமலை

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் தூணை செய்கிறது.
பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 2. திருவண்ணாமலை

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் தூணை செய்கிறது.

"நமசிவாய" என்பது பஞ்சாட்சர மந்திரமானது வலது நாசித் துவாரத்தை சிவனாகவும், இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் உரைக்கிறது.

புலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் உருவாக்கிக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானங்களையும் வழிபாடுகளையும் செய்து தொடர்கிறோம்.

நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்கள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாக நமக்கு அருட்காட்சி அளிக்கின்றன.

உருவமாகவும் அருவருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு "சிவோகம்" (நானே சிவம் ) என்ற பேத மற்ற ஞானம் நமக்கு உணர்த்துகின்றன.

பஞ்சாட்சரத்தில் 'நம' என்பதைச் சீராக உள்ளிழுத்து 'ஒம்' என்று சிறிது நேரம் நிறுத்தி, 'சிவ' என்று சொல்லி வெளியிடும்போது 'ய' என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர மந்திர வடிவம்.

சிவலிங்க ஸ்வரூபங்கள் "சிவ-சக்தி" ஐக்கிய ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப்பவர்களுக்கு சக்தியும் எளிதில் வந்து சேர்கிறது. சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான்.

பஞ்சபூதத்தலங்களாவன...

1. அப்பு- திருவானைக்கா

2. தேயு- திருவண்ணாமலை

3. வாயு- காளஹஸ்தி

4. ப்ருத்வி- காஞ்சிபுரம்

5. ஆகாயம்- சிதம்பரம் என்பன.

இத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை மனமுருக தொழுது இறைவனின் அருளை பக்தர்கள் பெறுகின்றார்கள்.

"சிவாயநம" மந்திரம் ஜெபிக்க, அபயத்தைத் தருவான் பிரபஞ்சத்தான். பஞ்சபூதத் தலங்களிள் தேயுதலம் இரண்டாவது.

திருவண்ணாமலை

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமானது திருவண்ணாமலை.

பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார்.

அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார்.

பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார்.

இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணம்.

திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும்.

இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் நடப்பவை கார்த்திகை தீப திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.

அந்நாளில் இச்சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை எண்ணில்லா பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகாதீபம் என்று அழைக்கப் பெறுகின்றது.

சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை அமைந்திருக்கிறது. கார்த்திகை தீப திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் அண்ணாமலையை கிரிவலம் வருவது, ஒவ்வொரு பெளர்ணமியிலும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர்.

பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதை இரண்டு உள்ளது. மலையைச் சுற்றி அடுத்தடுத்து கிரிவலப்பாதை இரண்டு இருக்கிறது. இருப்பினும், வெளிப்புறமாக கிரிவலம் செய்வதையே இன்றளவும் அதிகமானோர் கடைப்பிடிக்கின்றனர்.

உலகெங்கிலும் எண்ணற்ற திருக்கோயில்கள் அமையப் பெற்றிருந்தாலும், வேறெங்கும் தரிசிக்க இயலாத தனிச்சிறப்பு திருவண்ணாமலைக்கு மட்டுமே இருக்கிறது.

இத்திருவருணை திருநகரில் அரியே கிரியாவார், மலையே மகேசனாவார். கிருதா யுகத்தில் இம்மலை அக்னி மலையாக இருந்தன. திரேதா யுகத்தில் இரத்தின மலையாக விளங்கின. துவாபர யுகத்தில் தாமிர மலையாக உருமாறிப் போயின. பின்பு, கலியுகத்தில் இம்மலை, கல்மலையாக காணக்கிடைத்தது.

"அண்ணாமலை" என்பது, ஆன்மிக அருளாளர்களின் கருத்து. தீப்பிளம்பாக இம்மலை பிறந்தமையால், "அருணாசலம்" என்றும் தீபமலையை அழைத்து வருகிறோம்.

ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும், மகான்களும் தவமிருந்து தரிசித்தனர் இந்த அருள்வடிவான அண்ணாமலையை. நமக்குத் தரிசிக்க இலகுவாக அமைந்த இத்தலத்தை தீபதிருநாள் விசேஷ தினங்களில் தரிசித்து, முக்தித்தலத்தை வணங்கியப் பேறு பெற்றுக் கொள்வோமாக!

இறைவனே ஆண்டுக்கு இரண்டு முறை உற்சவமூர்த்தியாக எழுந்தருளி கிரிவலம் வருகிறார். இத்தலத்தில் தைத் திங்கள் ஐந்தாம் நாளன்று "திருவூடல்" திருவிழா நடக்கும்போது ஒருமுறை கிரிவலம் வருகிறார்.

அடுத்து, கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக மலையுச்சியில் மகாதீபம் ஏற்றிய மறுதினம் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். எனவே இந்நாளில் நாமும் கிரிவலம் செய்வது மேன்மையிலும் கூடுதல் பேறு பெறுதல் அருளாகும்.

"அருணகிரியும், கிளி கோபுரமும்" திருவண்ணாமலை திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கோபுரத்திற்கு மற்றும் ஒரு பெருமை உண்டு. ஆனால், மூன்றாம் பிரகாரத்தையும், நான்காம் பிரகாரத்தையும் இணைக்கும் கிளி கோபுரத்தின் சிறப்பு உயர்வுக்குரியது.

திருப்புகழ் அருளிய நாதரின் புகழ் அகிலமெங்கும் பரவியிருந்தன. கூடயிருந்த சிலருக்கு, இவரின் புகழைக் கண்டு பல சதிகளைச் செய்தனர். இந்தச் சமயத்தில், பிரபுதேவராய மன்னனுக்கு கண் பார்வை பறிபோனது.

வைத்தியர்களும், சொர்க்கத்திலிருக்கும் பாரிஜாத மலரில் இருக்கும் தேனைக் கொண்டு வந்தால் மட்டுமே கண் பார்வை கொடுக்க முடியும் என கூறிவிட்டனர்.

அருணகிரிக்கு வேண்டாதவனான சம்பந்தாண்டான், இதுதான் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என்று, மன்னனிடம் சென்று, அருணகிரியால் மட்டுமே அந்த பாரிஜாத மலரைக் கொண்டு வர முடியும் என மொழிந்து விட்டனர்.

மன்னனும் அருணகிரியை அழைத்து வரச் செய்து, நீ மேலோகத்துக்குச் சென்று பாரிஜாத மலரைக் கொண்டு வா என பணித்தான். மனித உடலால் அருணகிரி சொர்க்கத்துக்கு செல்ல முடியாமல் திண்டாடட்டும் என சம்பந்தாண்டானின் சூழ்ச்சி இது.

மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்ட அருணகிரி பாரிஜாத மலரைக் கொண்டு வருகிறேன் எனக் கூறி புறப்பட்டு போனார். அருணகிரியார் கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்றிருந்தது யாவரும் அறியார்.

அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அருணகிரியார், ஆறுமுகனை உள்ளத்துள் நிறித்தி வேண்டினார். கிளி கோபுரத்து உச்சியில் ஏறி, தன்னுடலை அங்கே கிடத்திவிட்டு, கிளி உருவெடுத்து மேலோகம் பறந்தார்.

பின் சென்று வேவுபார்த்த சம்பந்தாண்டான், அங்கிருந்த அருணகிரியின் உடலை பார்த்துவிட்டு, மன்னனின் சபைக்கு வந்து, சொர்க்கலோகம் சென்று வர வழி தெரியாது அருணகிரி, நஞ்சருந்தி செத்து விட்டான் என உயிரற்ற அருணகிரியின் உடலையும் காட்டிக் கொடுத்து கூறிவிட்டான் சம்பந்தாண்டான். அவசரகதியில் அருணகிரியாரியாரின் உடலும் எரியூட்டப்பட்டன.

பாரிஜாத மலருடன் பூமிக்கு வந்த அருணகிரியார் தன் உடலைக் காணாது திகைத்தார். சம்பந்தாண்டானின் சதியையும் உணரப் பெற்றார். அதன்பின் கிளி உருவத்துடனே இருந்தார். கிளி உருவிலேயே கந்தர் அநுபூதி பாடி முருகனடி சேர்ந்தார்.

முருகன் 'முத்து' என அடியெடுத்துக் கொடுத்து பாடச் சொல்ல, "முத்தைத்தரு" என பாமாலை பொழிந்தார் அருணகிரிநாதர். முன்னொரு சமயம், அருணகிரியார் தமக்கையிடம் கோபம் கொண்டு, மகாராஜா கோபுரத்திலிருந்து உயிர் துறக்க முனைந்தார்.

அப்போது அருணகிரிநாதரை முருகன் தடுத்தாட் கொண்டார். முருகன் பாடக் கேட்க, அதில் விளைந்ததுதான் "முத்தைத் தரு பத்தித்திருநகை" என்றும் மேற்கண்ட பாடல்.

இப்படி அருணகிரியார் பாடிய இடத்தில்தான், திருவண்ணாமலை ஆலயத்துள் "கோபுரத்து இளையனார் சந்நிதி அமைந்திருக்கிறது”. மற்றொரு சமயம், ஐந்தாம் பிரகார வளைகாப்பு மண்டபத்தின் ஒரு தூணிலிருந்து முருகன் தோன்றி அருணகிரிக்குக் காட்சி தந்தார். அவர் காட்சியளித்த இடத்தில்தான் கம்பத்திளையனார் எனும் சந்நிதி கொண்டு முருகன் மயிலில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார்.

ரமணர்

வேங்கடராமன் என்னும் பூர்வாசிரம பெயர் கொண்டவர்தான் ரமணர் ஆனார். உலகம் பூராவும் தன்னை உற்று நோக்கச் செய்தவர். திருச்சுழியில் அவதரித்து, அருணையில் முக்தி பெற்றவர். இவரது இளம்பிறாய வரலாறை வாசித்தால் கண்ணீர் நில்லாமல் ஒழுகும். இவர் அண்ணாமலையார் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகாக உள்ள பாதாளத்தில் உள்ள பாதாளலிங்கம் இருக்குமிடத்தில் தவமிருந்தவர்.

அண்ணாமலையிலும் திருக்கோவிலிலும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து, வரும் பக்தர்களுக்கு பார்வைகளை மட்டுமே தரிசனமாகத் தந்து வந்தார். இவருக்கு நட்புறவாக இருந்து வந்த கணபதி முனிவர், வேங்கடராமனின் ஆற்றலைக் கண்டு வியந்து "ரமண மகரிஷி" என பெயரை ஏற்படுத்தினார்.

மலையுச்சியிலுள்ள விருபாட்சி குகையிலும் தவம் இருந்து வந்தார். இக்குகையில் இருக்கும்போதுதான், அட்சரமணமாலை உதயமானது. ரமண பகவான், அருணாசல பகவான் மீது இயற்றிய பாடல்களே

“அருணாசல அக்ஷரமணமாலை" இப்பாமாலையின் ஒப்பில்லாத சிறப்பு என்னவென்றால், தெய்வமே (ரமணர்) தெய்வத்தின் மேல் இயற்றிய பாடல்கள் என்பதால் தான் அக்ஷரமணமாலை பாடல்கள் பூரண தெய்வத்தன்மையும், அழிவில்லா சிரஞ்சீவித் தன்மையும் உடையவனாயின.

இப்பாடல்களின் பொருளறியக் கேட்டபோது..... ரமணர்,

நீர்தான் அவற்றின் பொருளைச் சொல்லுமே! ஏதாவதாக நினைத்து எழுதியிருந்தால் அதற்கான பொருளைக் கூறலாம், எப்படியோ எழுந்தவை அவை, என கூறிவிட்டார்.

திரும்ப ஒரு முறை......

'இதற்கு அர்த்தம் அதைப் பாராயணம் செய்வதுதான்' என்று அருளுபதேசம் செய்தார். இதனால் அக்ஷரமணமாலையை வேதமாப் போற்றி, ஓதி வருவாயினார்கள் எல்லோரும்.

இவர், தனக்கென யாரையும் குருவாக ஏற்காது, கடைசி வரையிலும் தனக்குத் தானே குருவாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தவர். இவர் 1956-ல் ஜீவ சமாதி ஆனார்.

"அக்ஷரமணமாலை" உருகி உருகி பாடுவோர் இக, பர சுகங்கள் அடைவர் என்பது உண்மை.

மோகம் ஒழிக்கும் முனிவன் திருவாய் மொழிவாழி

சோகம் அகற்றும் சுத்தஅத் துவிதச் சுடர்வாழி

ஏக சொரூப ரமணன் கருணை இயல்வாழி

காகம் உறவு கலந்தாற் போலுங் கணம்வாழி.

தரிசிக்க மறந்திறாதீங்க!

தீபத் திருவிழாவின் போது வலம் வரும் உற்சவ திருமேனி மிகி மிக எழிலாக காட்சி தருவார். அதோடு வாசனை மலர்களின் அலங்காரங்கள் மேலும் அவரின் அழகை அதிகப்படுத்திக் கூட்டிக் காட்டும். அப்போது, எல்லோரின் இமையும் இமைக்க மறந்து அவரின் அழகினால் வீழ்த்தப் பட்டிருப்போம்.

அதனால்தான், ஒவ்வொரு முறையும் உற்சவருக்கு அலங்காரம் செய்து முடித்ததும், அவருக்குத் திருஷ்டி பொட்டு வைப்பது இன்றளவும் வழக்கத்தில் இருந்து வருகிறது. நீங்கள் அன்றைய தினம் அங்கிருந்தால் இத்திருஷ்டி பொட்டு வைக்கும் தரிசனத்தைப் காணப் பெறுங்கள்.

தக்காண பீடபூமி

திருவண்ணாமலை மலை ஒரு சி(இ)றந்த எரிமலை என்பர். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ வஸ்திரக் குழம்பு, நீரில் தோய்ந்து உருவானதுதான் "தக்காணம்" என்று பழைய மூத்தோர் சிலர் கூறுவர்.

திருமுறைத் தலம்

திருவண்ணாமலையின் பெருமைக்கு ஏக சான்றுகள் உள்ளன. திருமுறைப் பாடல்களை, இருநூற்றி எழுபத்தைந்து திருத்தலங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும் நம் மாநிலத்தின் (தமிழ்நாட்டில்) நடுநாட்டில் மட்டும் இருபத்திரண்டு தலங்களைப் பெற்றிருக்கிறோம். இவற்றில் மிக மிகப்பெரிய தனிசிறப்புக்குண்டானது "திருவண்ணாமலை".

பஞ்சபூத தலம்

உலக இயக்கத்துக்கு நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்கள் ஆகியவை அவசியம் ஆகும். ஆதலால்தான், நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களுக்கும் ஸ்தலங்கள் புணர்நிர்மானம் அமைத்து வழிபடலாயினர். இதில், அக்னியே அனைத்துக்கும் மூலம். இறைவனே மலைவடிவாக காட்சி தரும் திருவண்ணாமலை சிறப்புக்குரியது.

ஆதார ஸ்தலம்

ஆறு ஆதார ஸ்தலங்களில் மணிப்பூரக தலமாகவும் அண்ணாமலை விளங்குபவை. சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் ஆகிய தெய்வங்கள் வழிபட்ட சிறப்புக்குரியன. ஆகையினால்தான் ஞானிகளின் சரணாலயமாக திருவண்ணாமலை திருத்தலம் விளங்குகிறது.

மணிபூரகத்தலம்

ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை "மணிபூரகத்தலம்" என விளங்குகிறது. மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிப்பவையாகும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆக இது மணிபூரகத்தலம்.

சிறப்புக்குரியன

இத்தலம் இருபத்துநான்கு ஏக்கர் பரப்பளவைக் கொண்டவை. ஒன்பது பிரகாரங்கள் இருக்கிறது. இத்திருக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது இன்னும் சிறப்பு. இவ்வாலயத்தில் நூற்றி நாற்பத்து இரண்டு சன்னதிகள். இத்திருக்கோயிலில் இருபத்து இரண்டு பிள்ளையார் இருக்கிறார். முன்னூற்று ஆறு மண்டபங்களில், ஆயிரம் தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபமும் உண்டு. அதன் அருகே பாதாள அறையுடன் பாதள லிங்கமும் உண்டு.

அண்ணாமலையார் பாத மண்டபம் என்ற ஒரு மண்டபமும் உண்டு. திருவண்ணாமலை எல்லா யுகங்களிலும் அழியாது இருக்கும் மலை. ஆதலால்தான் முனிவர்கள், சித்தர்கள், அடியார்கள், இம்மலையை இறைவனாக ஆராதிக்கின்றனர்.

கோபுரங்கள்

அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. இவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்களும் இருக்கின்றன.

மண்டபங்கள்

இச்சிவாலயத்தில் முன்னூற்று ஆறு மண்டபங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், பதினாறுகால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உண்டு.

கரும்புத் தொட்டில்

குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களுக்கு குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். இப்பிரார்த்தணையில் பிறக்கும் குழந்தையை, கரும்பில் தொட்டிலினை உருவாக்கி, (தூளி) அதில் குழந்தையை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் இது ஒன்று.

நினைத்தாலே முக்தி தலமென சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

திருநாவுக்கரசர் தேவாரம் – பாடியவர் பாலச்சந்திரன்

திருப்புகழ் – பாடியவர் பாலச்சந்திரன் 

-கோவை கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com