பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 3. காளஹஸ்தி

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.
பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 3. காளஹஸ்தி

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.

நமசிவாய என்பது பஞ்சாட்சர மந்திரமானது வலது நாசித் துவாரத்தை சிவனாகவும், இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் உரைக்கிறது.

புலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் உருவாக்கிக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானங்களையும் வழிபாடுகளையும் செய்து தொடர்கிறோம்.

நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்கள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாக நமக்கு அருட்காட்சி அளிக்கின்றன.

உருவமாகவும் அருவருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு 'சிவோகம்' (நானே சிவம்) என்ற பேத மற்ற ஞானம் நமக்கு உணர்த்துகின்றன.

பஞ்சாட்சரத்தில் 'நம' என்பதைச் சீராக உள்ளிழுத்து 'ஒம்' என்று சிறிது நேரம் நிறுத்தி, 'சிவ' என்று சொல்லி வெளியிடும்போது 'ய' என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர மந்திர வடிவம்.

சிவலிங்க ஸ்வரூபங்கள் 'சிவ-சக்தி' ஐக்கிய ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப்பவர்களுக்கு சக்தியும் எளிதில் வந்து சேர்கிறது.

சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான்.

பஞ்சபூதத்தலங்களாவன...

1. அப்பு- திருவானைக்கா.

2. தேயு- திருவண்ணாமலை.

3. வாயு- காளஹஸ்தி.

4. ப்ருத்வி- காஞ்சிபுரம்.

5. ஆகாயம்- சிதம்பரம் என்பன.

இத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை மனமுருக தொழுது இறைவனின் அருளை பக்தர்கள் பெறுகின்றார்கள்.

"சிவாயநம" மந்திரம் ஜெபிக்க, அபயத்தைத் தருவான் பிரபஞ்சத்தான்.

பஞ்சபூதத் தலங்களிள் வாயு தலம் மூன்றாவது "காளஹஸ்தி"

••••

திருகாளஹஸ்தி காளத்தீஸ்வரன்

தென்கயிலாயம் என்று சிறப்பிக்கப்படும் திருக்காளத்தி பஞ்சபூத தலங்களில் காற்றுக்கு உரிய தலமாகும்.

ஓர் எளிய வேடன், தன்னுடைய மூட அன்பால், முரட்டு பக்தியால் 'கண்ணப்ப'' என உலகம் போற்றும் உயர்ந்த நிலையை எய்தியது இந்த சீகாளத்தில்தான்.

மேலும், பூதேஸ்வரன் உறையும் இப்புண்ணியத்தலம் சீகாளத்தி எனப்பெயர் பெற்றதற்குக் காரணமே பக்தியால் முக்தி அடைந்த சிலந்தி, பாம்பு, யானை ஆகிய அந்த மூன்று உயிரினங்களினால்தான்.

சிலந்தி

கிருதயுதத்தில் தேவ சிற்பியான விசுவகர்மாவுக்கு ஊர்ணநாபன் என்றொரு மகன் இருந்தான். இவன் சிற்பக்கலையில் வல்லாளன். சிலையை உயிரோட்டத்துடன் இழைப்பவன்.

மனிதன் தனது அழிவைத் தேடிக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு ஆணவம் ஒன்று மட்டும் இருந்தால் போதும், அவ்வளவுதான் அனைத்தும் கெட்டு கேடு வந்து சேர்ந்துவிடும். சிற்பக்கலையில் ஏதோ கொஞ்சம் சிறப்பாகச் செயல்பட்ட ஊர்ணநாபனுக்கு அதே ஆணவம் வந்து சேர்ந்தது. இதன் காரணமாக, அவன் பிரம்மாவுக்கு போட்டியாகத் தானும் உலகைப் படைக்கத் தொடங்கினான்.

இது தெரிந்தும் பிரம்மன் கடும் சீற்றம் கொண்டு ஊர்ணநாபனை, சிலந்தியாகப் பிறக்குமாறு சபித்துவிட்டான். சாபத்தை நினைத்து பயந்து மன்னிக்குமாறு பிரம்மாவிடம் மன்றாடினான். சினம் தணிந்த பிரம்மன், நீ தென் கயிலாயத்து வில்வவனம் ஒன்றில் பிறந்து, அங்கிருக்கும் நாவல் மர இலையில் வாழ்ந்து, வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டு வந்தால் உன் சாபவிமோசனம் ஏற்படும் என்று கூறினான்.

ஊர்ணநாபனும் வில்வவனமாகிய தென்கயிலாயத்தில் சிலந்தியாகப் பிறந்து நாவல் மரத்தில் வாழ்ந்து வந்தான். கற்ற வித்தை ஏழு பிறவிக்கும் கைகொடுக்கும் அல்லவா? ஆக, சிற்பக்கலை அறிவு பெற்றிருந்த, ஊர்ணநாபனான சிலந்திக்கு இயல்பான வலைபின்னும் திறனும் ஒன்று சேர்ந்தன. இறைவன் திருமேனிமேல் வெயில் படாதவாறு வியக்கத்தக்க விதத்தில் வலை பின்னி வழிப்பட்டது சிலந்தி.

ஒரு சமயம், விளக்குத்திரியில் எரியும் நெருப்பு, வலையை நெருங்கியதால் அதைத் தடுக்க வேண்டும் என்ற தவிப்போடு, தன் உயிரையும் நினையாது, எரியும் திரியை நோக்கி விழ பாய்ந்தது சிலந்தி. அப்போது ஈசன் தோன்றி அச்சிலந்தியைத் தடுத்து காத்தருருளி, நீ வேண்டிய வரத்தை கேள்! வழங்குகிறேன் என்றார் ஈசன்.

உமது திருக்காட்சியே ஒப்பற்ற உயர்வு என்று சொன்ன சிலந்தி, முக்கண் முதல்வனிடம் எனக்கு முக்தியை அளிக்க வேண்டும் என கேட்டது. வேண்டுகோளை விரைந்து நிறைவேற்றிய சிவபெருமான், சிலந்தியின் பெயரும் இத்தலத்திற்கு இடம் பெறும் என்று கூறினார்.

பாம்பு

அரவத்தை ஆபரணமாக அணிபவன் சிவபெருமான். ஒருமுறை அந்தப் பாம்பு, பெருமான் தன்னை அணிந்து கொள்ளும் நேரத்தில், தன் கடமை மறந்து துணையைத் தேடிச் சென்றது. அதனால் பாம்பை மண்ணுலகில் போய் பிறக்க சிவன் சாபமிட்டார். சர்ப்பமும் சாப விமோசனம் கேட்க, அது உனக்குத் தென்கயிலாயத்தில் கிட்டும் என்று கூறினார்.

யானை

கயிலாயத்தில் சிவ-பார்வதி தனித்திருந்தபோது, தடையை மீறி உள்ளே நுழைந்தது 'அத்தி' என்ற சிவசங்கரன், அன்னையின் சாபத்திற்கு ஆளானான். சாப விமோசனம் வில்வவனத்திலுள்ள பொன்முகலி ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் ஈசனால் கிடைக்கும் என்றும் கூறினாள் அன்னை. அவன் அத்தி என்ற யானையாகப் பிறந்தான்.

பாம்பு லிங்கத்திற்கு முன் பூசைப் பொருட்களைப் பரப்பி படைத்து அழகு செய்து பார்த்தன. இதற்குப் பிறகு யானை அவற்றையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு நீரால் தூய்மைப்படுத்தி விட்டுச் சென்றன. இது அன்றாட வழக்கமாயிற்று. இதனால் ஒன்றை மற்றொன்று அறியாமலே பகை உணர்ச்சி கொண்டு இருந்தன.

ஒருநாள் மறைந்து இருந்த பாம்பு, தான் வைத்திருந்த பூஜைப் பொருட்களை யானை புறத்தே தள்ளுவதைப் பார்த்து விட்டது. உடனே அதன் தும்பிக்கை வழியே உள்ளுக்குள் சென்று தொல்லை கொடுத்தது. தலைவலி தாங்காத யானை, அருகில் இருந்த பாறையில் தலையை மோதி இறந்தது. தலையின் உள்ளே இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இவர்களின் மூடத்தனமான பக்தியை மெச்சிய ஈசன், இருவருக்கும் முக்தி அளித்து, இருவரின் பெயரும் இத்தலத்தின் பெயரில் இடம் பெறும் என்று இயம்பினார். அன்றிலிருந்து ஆறரிவு அற்ற உயிர்களான சிலந்து, பாம்பு, யானை ஆகிய மூன்றும் முக்தியடைந்த இந்தத் தலம் "சீகாளத்தி" என்று அழைக்கப்படலாயிற்று.

பஞ்சபூதத் தலங்களில் திருக்காளத்தி தலத்தில் வாயுலிங்கமாக எழுத்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் காளத்திநாதன். அம்பிகையின் பெயர் ஞானப்பூங்கோதை.

பொதுவாகக் கடவுள் உறையும் கருவறையில் காற்று உலவும் வாய்ப்புடன் கருவறையை கட்டுவதில்லை. ஆலய ஆகம முறை இது. கருவறைகளில் ஏற்றி வைக்கப்படும் எண்ணெய் விளக்குகள் எந்தச் சலனமும் இன்றி நின்று, நிதானமாக எரியச் செய்வதற்காக இது இவ்விதம் அமைக்கப்படுகிறது. திருக்காளத்தியிலும் இறைவன் கருவறையை எல்லா ஆலயம் போலதான் அமைத்திருக்கிறார்கள்.

ஆனால் வாயு, விளக்குகளை காற்றில் மெல்ல மெல்ல அசைந்து ஆடச் செய்கிறது. வாயுத்தலம் என்பதை நமக்குக் கண்கூடாகக் காட்டுகிறார் காளத்தீஸ்வர சுயம்பு மூர்த்தி.

கண்ணப்பரின் மூர்க்க பக்தி

அறுபத்து மூன்று நாயன்மார்களில், கண்ணப்பர் மூடத்துடனான செயல் பக்தியும், மூர்த்தனமான சிவனின் மீது அன்பும் கொண்டவர் இவர். திண்ணன் என்னும் பெயர் கொண்ட இவன், முந்தைய பிறவியில் அர்ச்சுனாக இருந்தவன். திண்ணன் ஒருமுறை வேட்டையாடும்போது, காட்டில் மரங்களுக்கு நடுவில் ஒளிவீசும் சிவலிங்கம் ஒன்றை பார்த்தான். அன்பு மீதூற வேட்டையாடி வந்த மாமிசத்தை, அந்த சிவலிங்கம் முன் உண்ண வைத்தான். அன்று முதல் ஆண்டவனுக்கு மாமிசத்தைப் படைப்பதை தினமும் வழக்கமாக்கிக் கொண்டான்.

ஒருநாள் அங்கு வந்த அர்ச்சகர் சிவலிங்கத்தின் முன் படைக்கப்பட்டிருந்த மாமிசத்தைப் பார்த்து மனம் வருந்தி இறைவனிடம் பவ்யபயத்துடன் முறையிட்டார். அப்போது ஈசன், நாளை நீ மறைந்திருந்து பார் உனக்கு விளங்கும்! மாமிசம் படைத்த திண்ணனின் உண்மையான பக்தியை நீ காண்பாய்!' என்று ஆண்டவன் அசரீரியாக அவருக்கு உரைத்தான். அதுபோலும் மறைந்திருந்து திண்ணனை கவனிக்க ஆரம்பித்தார். அன்று திண்ணன், தீயில் சுட்டிவாட்டிய இறைச்சியைக் கொண்டு வந்து லிங்கத்தின் முன் வைத்தான்.

ஈசன் சோதனைக் துவங்கி விட்டார்.........

அப்போது லிங்கத்தின் கண்ணிலிருந்து நீர் ஒழுகுவதை திண்ணன் கண்டான். திகைத்து அந்த நீரைத் துடைத்தான். அவ்வளவுதான் நீர் வடிந்த கண்ணிலிருந்து குருதியாக மாறி வழியத் தொடங்கியது. குருதியைக் கண்ட திண்ணன், பயந்து ஓடிச் சென்று பச்சிலைகளைப் பறித்து வந்து கசக்கிச் சாற்றினை லிங்கக் கண்ணில் வைத்துப் பிழிந்தான்.

அப்போதும் குருதி ஒழுகுவது நிற்கவில்லை. உடனே திண்ணன், இக்கண்ணுக்கு மருந்து உபயோகமில்லை, ''கண்ணுக்கு கண்ணே'' மருந்து என்று தன் கண்ணைத் தோண்டி அப்பிவிட வேண்டும் என்று, தன் விழியொன்றினைத் தோண்டி எடுத்து இறைவனின் கண்ணில் அப்பினான். குருதி நின்றதைக் கண்டு சந்தோஷம் அடைந்தான். ஆனால் அந்த சந்தோஷம் சில வினாடிகளுக்குத்தான் இருந்தது. மற்றொரு கண்ணிலிருந்து குருதி வழிந்தது. இந்தக் கண்ணுக்கும் நம் மற்றொரு கண்ணைத் தோண்டி அப்பிவிட வேண்டியதுதான் என நினைத்தான்.

தன் ஒரு கண்ணையும் தோண்டிவிட்டால் லிங்கத்தின் மீது கண்ணை அப்ப நமக்குப் பார்வை தெரியாதே என்று, தன் இடது கால் பெருவிரலை லிங்க கண் மீது மிதித்து அடையாளமாய் வைத்துக் கொண்டான். இடுப்பிலிருந்த அம்பையெடுத்து, தனது இன்னொரு கண்ணைப் பெயர்த்தெடுக்க முனைந்தான்.

அப்போது "கண்ணப்பா நில்!" என குரல் ஒலித்தது.......

உமையவளோடு ஈசன் சேர்ந்து காட்சி தந்து அவனை தடுத்தார். அவனது அன்பின் வலிமையைப் பாராட்டினார். கண்னை நீ அப்பியதால் நீ இன்று முதல் 'கண்ணப்பன்' என்று அழைக்கப்படுவாய் எனக்கூறிய இறைவன், அவனுக்குப் பிறவியில்லாப் பேறான முக்தியை அளித்தார்.

இந்தியாவில் வாயு கடவுளுக்கு அமையப்பட்ட கோயில் இது. இந்தக்கோயிலை இராஜேந்திர சோழன் கட்டினான்.

அகத்தியரும், விநாயகரும்

இக்கோயிலுக்கு வருகை புரிந்த அகத்திய முனிவர் விநாயகரை வழிபடாது போகவே, பொன்முகலி ஆறு நீர் பூராவும் வற்றியது. அகத்தியர் தம் தவறை உணர்ந்து பாதாள ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு விநாயகரின் அருளைப் பெற்றார். திருக்காளத்தி கோயிலில் விநாயகரை, தரைமட்டத்திலிருந்து குறுகலான படிகளுடன் செல்லும் பாதாளத்திற்கு சென்று இந்த விநாயகரை தரிசிக்க வேண்டும்.

பொன்முகலி ஆறு

திருமஞ்சனக் கோபுரம் எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இங்கிருந்துதான் கண்ணப்பர் பொன்முகலி நீரை வாயில் கொணர்ந்து கொண்டு போய் மலையில் சுவாமி இருக்கும் இடம் வந்து லிங்கத்தின் மீதுதான் உழிழ்ந்து அபிஷேகம் செய்தார்.

அன்புக்குச் சான்றான கண்ணப்பர் வழிபட்டினால், இறைவனுக்கு வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் பேறு சிறப்பு பெற்ற தலம். அவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற தலம். அட்டமாசித்திகள் அணைத்தும் காளத்தி எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.

நக்கீரரின் கயிலை பாதி காளத்தி பாதி

அறியாமலேனும் அறிந்தேனும் செய்த

செய்கின்ற தீவினைகள் எல்லாம், நெறிநின்று

நன்முகில்சேர் காளத்திநாதன் அடிபணிந்து

பொன்முகலி யாடுதலே.......

என்று நக்கீரர் பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.

சொக்கப்பனை கொழுத்தி, எரிந்த அக்கரியை அரைத்து சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது இங்கு சிறப்பு. இங்கிருக்கும் இரண்டு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது. மற்றொன்று ஒரே கல்லால் ஆன, இது அறுபது அடி உயரமுள்ள கல்கொடி மரமாகும்.

இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்க முடியும்.

இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வருகிறது. இங்கு வந்து பாடிப் பரவிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.

ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுத போது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார்.

திருவல்லம் தொழுது இங்கு வந்து சேர்ந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.

மூலவர், சுயம்புவானவர். தீண்டாத் திருமேனி சிவலிங்கத் திருமேனியாவார் இவர். திருமேனியிலிருக்கும் ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற இருப்பதைக் காணமுடிகிறது. கருவறை அகழி அமைப்புடன் உள்ளது.

அசைந்தாடும் விளக்கொளி

மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப் பெற்றது போல் எப்போதும் அசைந்து கொண்டு, நான் வாயுத்தலம் என்பதை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் இத்தலம் செல்லும்போது, காளத்திநாதனை மட்டுமல்ல, வாயுவினால் அசைந்தாடும் விளக்கசைவையும் கண்டு ரசிக்கவும், தரிசிக்கவும் மறக்காதீர்கள்.

கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரப்படுவதில்லை. பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு கொடுக்கின்றனர். மூலவருக்கு கங்கைநீரை தவிர வேறெதுவும் மேனியில் படவிடுவதில்லை என்பது விசேஷம். பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கு மட்டுமே செய்யப்படுகிறது.

இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கம் கிடையாது. காலை முதல் இரவு வரை ஆலயம் திறந்தே இருக்கின்றது. நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடக்கின்றன. அர்த்தசாமப் பூஜை இல்லையாதலின், சாயரட்சை பூஜையுடன் முடித்து, இரவு எட்டு மணிக்கு சுவாமியையும், அம்பாளையும் பள்ளியறைக்கு, அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகின்றனர்.

இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. சனிபகவான் மட்டும் உள்ளார். அம்பாள் ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம். திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்த மேரு இருக்கிறது.

அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் கேது உருவம் உள்ளது. கைலாசமலை கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம் இது. (திண்ணன் பூசனை புரிந்த லிங்கம் பக்கத்து மலையில் உள்ளது.)

இம்மலைக்காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பர் திருவுருவங்களும் அமைந்துள்ளன.

சுந்தரர் தேவாரம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார் 

- கோவை கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com