காஞ்சியில் 18 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த அனுமான் சிலை பிரதிஷ்டை: டிச.,6-ல் மஹா கும்பாபிஷேகம் 

காஞ்சி மாவட்டத்தில் திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 17 கி.மீ தூரத்தில் உள்ளது....
காஞ்சியில் 18 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த அனுமான் சிலை பிரதிஷ்டை: டிச.,6-ல் மஹா கும்பாபிஷேகம் 

காஞ்சி மாவட்டத்தில் திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 17 கி.மீ தூரத்தில் உள்ளது திருவடிசூலம் என்ற திரு இடைச்சுரம் (தாம்பரத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாகச் சென்றால் 40 கி.மீ) ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. 

இங்குள்ள ஞானபுரீஸ்வார் திருக்கோயிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் ஸ்ரீ கோயில்புரம் என்று அழைக்கப்படும் இடத்தில் மலைகள் சூழ்ந்த ஆரண்ய பகுதிகளின் மத்தியில் அன்னை தேவி கருமாரியம்மனுக்கு சுமார் 52 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கல்திருமேனியும், மகாசூலமும், சற்று தள்ளி பின்புறம் சுமார் 11 அடி உயரத்தில் ஸ்ரீவாரு வேங்கடப்பெருமாள் சந்நிதியும் அமையப்பெற்று, மதுரைமுத்து சுவாமிகள் என்ற தேவி உபாசகரின் வழிகாட்டுதலின்படி ஆலய வழிபாட்டு முறைகள் செவ்வனே நடைபெறுகின்றது.

இந்த புனித வளாகத்தில் தற்போது உலகிலேயே வேறு எங்கும் காண முடியாது என்ற சிறப்புப்பெருமையுடன் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தலங்களை நினைவு கூறும் வகையில் அத்தல பெருமாள் சந்நிதிகள் அதே சாந்நித்யத்துடன் திகழும்படி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்த மகத்தான திருப்பணி நிறைவுறும் தருவாயில் எதிர்வரும் 2018 ஏப்ரல் மாதம், மகா சம்ப்ரோக்ஷண வைபவம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு முன்னோடியாக, இங்கு சுமார் 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ பக்த அனுமான் (அஞ்சலி கோலம்) பிரதிஷ்டையாகியுள்ளது. இங்கு அமைய உள்ள திவ்ய தேச சந்நிதிகளில் ஸ்ரீ அயோத்தி ராமரை நோக்கியவாறு இந்த அனுமன் விக்ரகம் பிரதிஷ்டையாகியுள்ளது சிறப்பு. நூதன ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலின் மகாசம்ப்ரோக்ஷண வைபவம் டிசம்பர் 6-ம் தேதி புதனன்று ராம பிரானின் திரு நட்சத்திரமான புனர்பூசத்தில் காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் டிசம்பர் 5-ம் தேதி துவங்குகின்றன.

தொடர்புக்கு: 73387 76971 / 89390 74441.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com