ஜோதிட ரீதியாக  யாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்?

நம் வாழ்வில் முக்கியமான ஒன்றான சிரிப்புக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு இருக்குமா?
ஜோதிட ரீதியாக  யாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்?


நம் வாழ்வில் முக்கியமான ஒன்றான சிரிப்புக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு இருக்குமா? அப்படி இருக்குமேயானால், எந்த கிரகம் சிரிப்புக்குக் காரணமாக இருக்கும் என ஆராய்ந்தால், ஜோதிடத்துக்கும் சிரிப்புக்கும் மிக முக்கியத் தொடர்பு இருப்பது தெரிந்தது. ஜோதிடத்தின் காரகரும் சிரிப்பின் காரகருமாக திகழும் புத பகவான் தான். 

சிரிப்பை அடுத்தவருக்குத் தெரிவிப்பவை நமது வாயும் முகமும்தான். ஒருவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், தாமாகவே முகத்தில் ஒரு மலர்ச்சியும் புன்முறுவலும் தோன்றுவது இயல்பு. முகமலர்ச்சி மற்றும் சிரிப்பை தெரிவிக்கும் பாவம் காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான மற்றும் சுக்கிரனின் வீடான ரிஷபம் ஆகும்.

ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு தோன்றுவது என்பது மூளையில் ஏற்படும் ஒரு மாற்றமாகும். மூளை மற்றும் சிந்திக்கும் திறனின் காரகர் புத பகவானும் அவருடைய வீடான மிதுன ராசியும் ஆகும். மேலும், மிதுனம் காற்று ராசி என்பதால், ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு ஏற்பட்டால் அது மற்றவர்களையும் உடனே சென்று தொற்றிக்கொள்கிறது.

ஒருவருக்கு ஹாஸ்ய உணர்வு தோன்றவும் அதை அனுபவிக்கவும், மனது நல்ல நிலையில் இருக்க வேண்டும். மனது சரியில்லாத நிலையில் எத்தனைதான் நகைச்சுவை உணர்வோடு பேசினாலும் எடுபடாது. சந்திரனை மனோகாரகன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்கிறது வேதத்தின் அங்கமான புருஷ சூக்தம்.

புதன், சுக்கிரன், சந்திரன் இவர்களுடைய சுப தொடர்புகள், ஒருவரை எப்போதும் மகிழ்ச்சியாகவும் நகைச்சுவை உணர்வோடும் வைத்திருக்கும்.

நகைச்சுவை உணர்வு யாருக்கு அதிகம்?

  • ஒருவருடைய ஜாதகத்தில் ஜனரஞ்ஜக ராசியான சுக்கிரனின் வீடுகளான ரிஷபமும் துலாமும் லக்னமாக அமைந்து லக்னத்தில் சுக்கிரன், சந்திரன், புதன் இணைந்தோ அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது.
  • கால புருஷ மூன்றாம் இடமான மிதுன ராசி லக்னமாகி, லக்னத்தில் புதன் ஆட்சி பெற்று திரிகோணஸ்தானமான துலாம் ராசியில் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து நிற்பது.
  • காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் லக்னமாகி, இவற்றோடு சந்திரன், புதன், சுக்கிரன் தொடர்பு கொள்வது.
  • புதன் கன்னி ராசி லக்னமாகி, லக்னத்தில் புதன் உச்சம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் நின்று மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்பது.
  • பொதுவாகவே, எந்த ராசி லக்னமானாலும் சந்திரன், புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று தொடர்பில் நிற்பது.
  • ஜாதகத்தில் புத்திகாரகன் புதனுக்கான பத்ர யோகம் பெற்று நிற்பது, மற்றும் சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்று நிற்பது.
  • மிதுனம் மற்றும் துலாம் ராசிகளில் ராகு நின்று தனது திரிகோண பார்வையால் இரண்டு காற்று ராசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்துவது.

மேற்கண்ட தொடர்புகள் இருந்து அவற்றோடு 6/8/12 தொடர்புகள் இருந்தாலோ அல்லது பாதகாதிபதிகள், திதி சூன்ய ராசி அதிபதிகள் தொடர்பு பெற்றுவிட்டால், அவர்கள் “சிலர் அழுவார், சிலர் சிரிப்பார், நான் அழுதுக்கொண்டே சிரிக்கின்றேன்” என உள்ளுக்குள் அழுது அடுத்தவரை சிரிக்கவைத்துக் கொண்டிருப்பார்.

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com