பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 4. காஞ்சிபுரம் 

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.
பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 4. காஞ்சிபுரம் 

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.

நமசிவாய என்பது பஞ்சாட்சர மந்திரமானது வலது நாசித் துவாரத்தை சிவனாகவும், இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் உரைக்கிறது. புலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் உருவாக்கிக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானங்களையும் வழிபாடுகளையும் செய்து தொடர்கிறோம்.

நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்கள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாக நமக்கு அருட்காட்சி அளிக்கின்றன. உருவமாகவும் அருவருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு 'சிவோகம்' (நானே சிவம்) என்ற பேத மற்ற ஞானம் நமக்கு உணர்த்துகின்றன. பஞ்சாட்சரத்தில் 'நம' என்பதைச் சீராக உள்ளிழுத்து 'ஒம்' என்று சிறிது நேரம் நிறுத்தி, 'சிவ' என்று சொல்லி வெளியிடும்போது 'ய' என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர மந்திர வடிவம்.

சிவலிங்க ஸ்வரூபங்கள் 'சிவ-சக்தி' ஐக்கிய ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப்பவர்களுக்கு சக்தியும் எளிதில் வந்து சேர்கிறது. சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான்.

பஞ்சபூதத்தலங்களாவன...

5. ஆகாயம்- சிதம்பரம் என்பன.

இத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை மனமுருக தொழுது இறைவனின் அருளை பக்தர்கள் பெறுகின்றார்கள்.

4. காஞ்சிபுரம்

காஞ்சி மாநகரம், தென்னிந்தியாவில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். பஞ்சபூதத்தலங்களுள் முதன்மையானதும் இறைவன் விரும்பி உறைவதும் காஞ்சி மாநகரம் ஆகும். 'நகரேஷூ காஞ்சி'  என்று சொல்வார்கள் இத்தலத்தை. அப்படியென்றால் 'நகரங்களுள் சிறந்தது காஞ்சி' எனப் பொருள்.

பண்டை காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நகரம் இது. பலரும் போற்றிப் பாடிய தலமும் கூட. காஞ்சி திருத்தலத்தை சைவசமய அருளாளர்களான, அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், வைணவப் பெரியோர்களான ஆழ்வார்கள் எனப் பலரும் பக்திரசம் ததும்பும் பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடி இருக்கிறார்கள். இவர்களைத் தவிர கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோராலும் புகழ்ந்து பாடப்பட்ட தலமாக காஞ்சிபுரம் திகழ்கின்றது.

பாபநாசம் சிவன் என்பவரும் இந்தத் திருத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். இப்படி பலராலும் போற்றிப் பாடப்பட்ட பெருமைக்குரிய இந்தத்தலத்தில் அருளாட்சி செலுத்துபவர் ஏகாம்பரேஸ்வர் ஆவார்.

தழுவக்குழைந்த பெருமான்!

ஒருநாள் திருக்கயிலையில் இறைவனும் இறைவியும் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது அம்மை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். சூரிய, சந்திரர், ஒளிநீங்கி, உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. படைப்பு, இறைவழிபாடு முதலிய அறங்கள் எதுவும் செய்யப்படாது நீங்கின. இதைக் கண்டு திடுக்கிட்ட அம்மையார் கண்களிலிருந்து கைகளை விடுவித்துக்கொள்ள, சிவபெருமான் கண்களைத் திறந்தார். உலகம் முன்போல் ஒளிபெற்று விளங்கியது. 

தன் செயலுக்கு வருந்திய அம்பிகையிடம் ஈசன், ''என் கண்களை மூடித் திறந்த சிறுநொடிபொழுதில் உலகத்துக்கு பல ஊழிக்காலம் கழிந்து, உயிர்கள் வருந்தின. தர்மங்கள் தடைப்பட்டன. இதனால் உனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க, நீ மண்ணுலகில் தோன்றி, நகரங்களில் சிறந்த காஞ்சியில் எம்மைக் குறித்து தவமியற்றி வழிபடுவாயாக'' என்று கூறினார்.

அம்மையும் காஞ்சியை அடைந்து, அங்குள்ள ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து அன்றாடம் முறையாக வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் அம்மையின் உறுதிப்பாட்டை சோதிக்க எண்ணிய இறைவன், எல்லா நன்னீர் நதிகளையும் உருண்டுவரச் செய்தார். அவையெல்லாம் ஒன்று திரண்டு கம்பையாற்று நீருடன் சேர்ந்து ஊழிக்கால வெள்ளமென பாய்ந்தோடச் செய்தார்.

அதைக் கண்ட அம்மையார், 'இப்பெருவெள்ளம் என் இறைவனை அழித்துச் செல்லுமே, இனி என்ன செய்வேன்' என்று உடல் அதிர்ந்து தன் இருவளைக்கரத்தால் இறைவனை இறுகத் தழுவி வெள்ளம் லிங்கத்தை அழிக்காது காத்து அணைத்தார். தன் திருமேனியுடன் இறைவன் குழைந்து தனத்தழுவி வளைத்தழும்பு ஏற்பட, உலகம் யாவும் இன்பக்கடலில் ஆழ்ந்து திளைத்தன.

முதலில் தோன்றிய கோயிலில் சிவபெருமான், வழிபாட்டுக்குரிய மயானலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமானிடம் வரம்பெற்று, உடல்கள் தோறும் கலந்து இருந்த பண்டாசுரனை வேள்வியில் எரித்தழித்தபின், உலகைப் படைக்கக் கருதினார். பிரிந்து வந்து நின்ற நான்கு மறைகளை நோக்கி, ஒரு மாமரமாய் தளிர், பூ, காய், கனிகளுடன் விளங்கச் செய்தார். இம்மரத்தடியில், சோதிவடிவமாய் எழுந்தருளி, தமது இடப்பாகத்தினை தேவியை அதில் இருத்தி வைத்தார். 

வேதமே மாமரமாகவும், இறைவனே தலைவனாகவும் இருத்தலால் இறைவனை 'ஏகாம்பரநாதன்' என்பதாகவும், ஆதிமந்திரமாகிய ஐந்தெழுத்தாகவும் உள்ளார். கோயிலின் உள்ளே சபாநாதர் மண்டபத்துக்கு எதிரில் உள்ள தூணில் சனகாதி முனிவர் கீழே வீற்றிருக்க, அம்மை ஈசனுக்கு பொட்டு இடுவது போல அமைந்துள்ள காட்சியைக் கண்டு வழிபட்டால், கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரித்து, வாழ்வாங்கு வாழ்வார்களாம்.

மேலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழாமல், பிரிந்து போயிருந்த கணவன் மனைவி இருவரும் நம்பிக்கையுடன் வந்து வழிபட்டால், இறைவன் அருளால் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம். 

முக்தி தலங்களான..

1.அயோத்தி, 2.மதுரா, 3.காசி, 4.மாயா, 5.காஞ்சிபுரம், 6.அவந்திகா, 7.துவாரகா ஆகிய ஏழுள் இத்தலமும் ஒன்று.

சிவபெருமான் இங்கிருக்கும் மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்யும்படி ஈசன் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் உரைக்கின்றன.

இத்தலத்தின் தலவிருட்சமான மாமரம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமும் கூட. நான்கு வேதமே இங்கு மாமரமாக அமையப்பெற்றிருக்கின்றன. வேதத்தின் நான்கு மந்திரங்கள் இம்மரத்தின் நான்கு கிளைகளாக உருவெடுத்து இருக்கின்றன. தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம்மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.

நாமும் இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருவதை வணங்கிக் கொள்ளவேண்டும். மேலும் இங்கு "மாவடி வைகும் செவ்வேள்" சந்நிதி உள்ளது. குமரகோட்டம் என்னும் பெயரில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் தனிக்கோயில் அமைந்துள்ளது.

கந்தபுராணத்தில் வரும் "மூவிரு முகங்கள் போற்றி" எனும் பாடலில் வரும் "காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி" என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார். இச்சந்நிதியில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய உற்சவத் திருமேனி முன்னால் இருக்க, பின்புறம் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.

ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற தலம் இதுவாகும். நூற்று எட்டு வைணவ திவ்யதேசங்களில் காஞ்சிபுரத்தில் மட்டும் பதினைந்து திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலுள்ளே உள்ளது.

"கச்சி மயானம்" என்கிற ஒரு தேவார வைப்புத் தலமும் இக்கோவிலின் உள்ளே சுவாமி சந்நிதி கொடி மரத்தின் முன்பு அமைந்துள்ளது. மேலும் பல சந்நிதிகளும்,
சிற்பங்களும், மண்டபங்களும் உள்ள இந்த ஆலயத்தை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை. நான் இவ்வாலயத்தை ஒரு முறை நேரில் சென்று, ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு தொழுது தரிசித்ததை நான் உங்களுக்கு கூறுவதைவிட, நீங்கள் ஒருமுறையேனும் இவ்வாலயம் சென்று தரிசிக்க வேண்டும் என்பது என் அவா.

சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்துத்தான் திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி சுந்தரர் புறப்பட்டதால், தனது இரு கண் பார்வையும் இழக்க நேரிட்டது.

அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை, சுந்தரர் காஞ்சிபுரம் தலத்தில் வைத்து, "ஆலம்தான் உகந்து அமுது செய்தானை" என்ற பதிகத்தை பாடி பெற்றார். (மற்றொரு கண்ணின் பார்வையை திருவாரூரில் பெற்றார்.) பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண்அடி யேன்பெற்ற வாறே" என்று உள்ளம் உருகிப் பாடியிருக்கிறார். நல்ல தமிழ்ப் பாடலாகிய இப்பதிகத்திலுள்ள பத்து பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்று சுந்தரர் கூறுவது உண்மை.

தல பெருமை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோர்களின் அவதாரத்தலம் இது. மேலும், சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலமும் இது. ஆம்ரம் என்பது வடசொல், அதை தமிழில் கூறும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று 'ஆம்பரம்' என்று ஆயிற்று.

மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆக, ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து 'ஏகாம்பரம்' என்று (வடமொழி விதிப்படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. இது முத்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மை பெற்ற தலம். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த லிங்கங்களும் இருக்கின்றன. அவைகள் முறையே 'வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம்' என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

இவ்வூரில்  கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்று.

பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம்மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாடும் உள்ளது. சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.

ஸ்படிக லிங்கம்

ஸ்படிகம் சிவனுக்கு மிகவும் பிடித்தது. இப்படித்தான் துணைக் சிவபெருமானை எப்போதும் குளிர்ச்சியடையச் செய்து கொண்டிருக்கும். நாமும் இப்படிக லிங்கத்திடம் வேண்டுவன எதுவும் நிறைவேறும். பொலிவான மனம் கொண்டவர்கள் இப்படிகத்தை வேண்டின், தீயகுணங்களை ஒழியப் பெறுவர் என்பது உண்மை. தை மாத ரதசப்தமி நாளில், சூரியன் தன் ஒளிர்க்கதிர்களை, இல்லிங்கத்தின் மீது பிரவாகப்படுத்துகிறான்.

அஷ்டோத்ர லிங்கம் (நூற்றி எட்டு லிங்கம்)

ராமர், தனக்குப் ஏற்பட்டிருந்த  பிரம்மதோஷத்தைப் போக்கிக் கொள்ள, அவர் வழிபட்ட சகஸ்ரலிங்கம், மற்றும் அஷ்டோத்ர (நூற்றி எட்டு லிங்கம்) ஸ்படிக லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த ஸ்படிக லிங்கத்துடன் கூடவே நந்தியும் சேர்ந்து இருக்கிறது. இந்த அஷ்டோத்ர லிங்கங்களுக்கு நூற்றி எட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

வேதங்களான மாமரம்

இங்கிருக்கும் ஒற்றை மாமரமான தலமரம் இம்மரம் சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தையது என்கிறார்கள். இம்மாமரத்திற்கு நான்கே கிளைகள்தான் இருக்கிறது. நான்கு வேதங்களை கிளைகளாகக் கொண்டு இத்தெய்வீக மாமரம் வளர்ந்தன. இம்மாமரத்தில் ஒரு கிளையில் இனிப்பான பழமும், மற்றொரு கிளையில் புளிப்புச் சுவையுடனும், அடுத்து ஒரு கிளையில் துவர்ப்பான சுவையுடனும், மேலும் ஒரு கிளையில் கார்ப்பு சுவையுடனுமாக, நால்வகைச் சுவைகளைக் கொண்டு கனிகளைத் தரும் வல்லமை இம்மரத்திற்கு இருக்கிறது.

ருத்ராட்ச பந்தல்

உற்சவரான ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் பக்தர்களுக்கு காட்சியருளிக் கொண்டிருக்கிறார். இப்பந்தலில் ஐயாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு வேயப்பட்ட பந்தல் இது. ருத்திராட்சத்துடன் கூடிய பந்தலில், ரசக்கண்ணாடிகள் அமைக்கப் பெற்று, அதில் சிவனது எல்லையற்ற உருவங்களைக் கண்டு தரிசிக்கலாம். இத்தரிசனம் காண்பவர்கள், பிறப்பில்லா நிலையை அருளக்கூடியவை என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

கச்சியப்ப முனிவர்

கச்சியப்ப சிவாச்சாரியார் இந்த பஞ்சபூத தலத்தில் தான், "கந்த புராணத்தை" இயற்றினார். இங்கு இயற்றப்பட்ட கந்தபுராணத்தை, அருகிலிருக்கும் குமரக் கோட்டம் முருகன் திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்வித்தார். இப்புணித பஞ்சபூத தல திருக்கோயிலில் இருக்கும் விநாயகரின் திருநாமம் 'விகட சக்ர விநாயகர்' ஆகும். அழகன் முருகனின் திருநாமம், "மாவடி கந்தர்" ஆகும்.

சுந்தரர் தேவாரம் - பாடியவர்கள் பாலச்சந்திரன், முருக. சுந்தர்

- கோவை கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com