பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 5. சிதம்பரம்

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.
பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 5. சிதம்பரம்

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.

நமசிவாய என்பது பஞ்சாட்சர மந்திரமானது வலது நாசித் துவாரத்தை சிவனாகவும், இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் உரைக்கிறது. புலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் உருவாக்கிக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானங்களையும் வழிபாடுகளையும் செய்து தொடர்கிறோம்.

நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்கள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாக நமக்கு அருட்காட்சி அளிக்கின்றன. உருவமாகவும் அருவருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு 'சிவோகம்' (நானே சிவம்) என்ற பேத மற்ற ஞானம் நமக்கு உணர்த்துகின்றன. பஞ்சாட்சரத்தில் 'நம' என்பதைச் சீராக உள்ளிழுத்து 'ஒம்' என்று சிறிது நேரம் நிறுத்தி, 'சிவ' என்று சொல்லி வெளியிடும்போது 'ய' என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர மந்திர வடிவம்.

சிவலிங்க ஸ்வரூபங்கள் 'சிவ-சக்தி' ஐக்கிய ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப்பவர்களுக்கு சக்தியும் எளிதில் வந்து சேர்கிறது. சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான்.

பஞ்சபூதத்தலங்களாவன...

இத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை மனமுருக தொழுது இறைவனின் அருளை பக்தர்கள் பெறுகின்றார்கள்.

5. சிதம்பரம்

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் சிதம்பரம். பிரபஞ்சம் முழுமைக்கும் இறைவன் ஒருவனே பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் கிடையாது, முடிவும் கிடையாது. முதலும் முடிவும் காணப்பெறாது காட்சி தருபவர் ஈசன் ஒருவனே!

இறைவனுக்கு அடியும் உண்டு. முடியும் உண்டு. ஆனால் யாவராலும் காணமுடியாதவை. எனவே, பஞ்சபூதத் தலங்களில் சிதம்பரம் "ஆகாயம்". இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் கொண்ட திருத்தலம். உருவம், அருவம், அருவுருவம் என மூவகைத் திருமேனிகளாக இறைவன் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஒரே திருத்தலம். தரிசிக்க முக்தி தரும் தலம்.சிவபெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் இது. ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் சிதம்பரம். அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாகக் காட்சி தரும் தலம் சிதம்பரம். நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து ஒடுங்குமிடம் சிதம்பர திருமூலட்டானத் திருமேனியில். 

பொதுவாக சைவர்களுக்கு கோயில் எது என்று யாரும் கேட்டால் அது சிதம்பரம்தான் என கூறப்படுவர். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களைக் கண்டெடுத்த பெருமைக்குரிய திருத்தலம் சிதம்பரம். அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்று அறியப்படுகிற சிவனடியார்களின் வரலாறு வெளிப்பட்ட தலம் இந்த சிதம்பரத்தில்தான். மாணிக்கவாசகர், நந்தனார், திருநீலகண்ட நாயனார் என எண்ணற்ற மகான்கள் முக்தி பெற்ற பேரின்பத் திருத்தலம் சிதம்பரம்.

சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிக்க அமைந்த அற்புதத் தலம் இது. உலகின் பூமத்தியரேகையின் மிகச் சரியான நடுமையத்தில் அமைந்துள்ள அதிசயத் திருத்தலம். இன்னும் எண்ணற்ற அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும், பஞ்சபூதத் தலமான சிதம்பரத்தின் திருமூலட்டானேஸ்வரரும், நடராஜபெருமானும் ஆவார்கள்.

திருவாதிரைக்கு ஒரு வாய் களி அளி!
திருவாதிரை அன்று நடராஜருக்கு நிவேதனமாக களி படைக்கப்படுவது மிக விசேஷம். இறைவனுக்கு களி படைப்பது சேந்தனரால் உண்டானது. அடியார்களுக்கு திருவமுது செய்து அனைத்துப் பொருளும் தீர, இல்லாத பொருளுக்காக, ஏதோ ஒரு பொருளைக் கொண்டு சேர்மானம் செய்ய, அதுவே "களி" ஆனது. இந்த உணவை சேர்மானம் செய்தவர் சேந்தனார் ஆவார். நடராஜப் பெருமானுக்கு சேந்தனார் அளித்த களியமுது, இறைவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. திருவாதிரைக் களி என்றாலே நமக்கு பஞ்சபூதத் தலமான சிதம்பரமும், அங்கிருக்கும் நடராஜரையும்தான்  நினைவுக்கு வருவர்.

தில்லை நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது. எப்படி?
தில்லையில் சேந்தனார் என்னும் சிவ பக்தர்  தினமும் ஒருவருக்காவது உணவளித்த பிறகு தான், தான் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார். சேந்தானருடைய தொழில், பட்டுப் போன மரங்களை பார்த்து வெட்டி அந்த விறகு சுள்ளியை விற்று வந்தார். விறகு விற்கும் பணத்தைக் கொண்டு, சிவனடியார்களுக்கு தினமும் திருவமுது படைத்து வந்தார். திருவாதிரைக்கு முந்தைய தினம் இரவில் மழை நில்லாமல் பிடித்துப் பெய்தது. இதனால், சேந்தனாரால் விறகு சுள்ளிகளை எடுத்து வர மழை தடை செய்தன. விற்க விறகும் இல்லை. கையில் பணமும் இல்லை. அடியார்களை வரவேற்று உபசரிக்க என்ன வழி என்று சேந்தனாரும் அவர் மனைவியும் ஆலோசித்தனர்.

சேந்தனாரின் மனைவி, சேந்தனாரிடத்தில்...........
பானைகளில் ஒட்டியிருக்கும் மாவினைக் கொண்டு, ஏதோ ஒரு உணவை செய்து தருகிறேன் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று சொன்னாள். அப்போது, சேந்தனாரின் விருந்தோம்பல் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன், திருவுள்ளம் கொண்டார். 

தண்டை ஒலி
சோழமன்னர் கண்டாராதித்தர் அனுதினமும் இரவில், சிவ பூஜை செய்து முடித்ததும் சிவபெருமானின் ஆடலில் எழும் கால்தண்டை ஒலியினைக் கேட்கும் வரத்தைப் பெற்றிருந்தான். இன்று, கண்டராதித்த சோழர் சிவபூஜையை நிறைவு செய்ததபோது, வழக்கமாகக் கேட்டு இன்புறும் கால்தண்டையின் ஒலி, இன்று கேட்காததைக் குறித்து மிகவும் வருத்தம் கொண்டு ஏன்? என்று நினைந்து நினைந்து உறங்கிப் போனான்.

பொழுது விடிந்ததும் நடராஜப்பெருமானின் சந்நிதியைத் திறந்த அந்தணர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஈசனின் உடைகளிலும் அம்பலப்பகுதி முழுவதும் களியமுதுகள் துகள் துகள்ககளாக சிந்திச் சிதறிக் கிடப்பதைக் கண்டனர். அதிர்ந்த அந்தணர்கள் மன்னனிடம் ஒடோடிச் சென்று தகவலைச் சொன்னார்கள். முந்தைய நாள் ஈசனின் கால்தண்டை ஒலியைக் கேளாது வருந்திய மன்னனுக்கு, இப்போது அந்தணர்கள் சொன்ன செய்தியையும் கேட்டு மேலும் குழம்பிப் போனான்.

இருந்தாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளை தடையின்றி நடத்திட அந்தணன்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். தில்லை நகரமே திருவிழாக்கோலம் பூண்டது. எல்லோருக்கும் பொழுது விடிந்திருந்து சந்தோஷமாக இருந்தனர். ஆனால், மன்னனுக்கு மட்டும் பொழுது விடிந்திருந்தாலும் மனவருத்தத்திலிருந்து அவன் விடுபடவில்லை. பொழுது விடிந்ததும் சேந்தனாரும் சந்தோஷமாகி, தம் மனைவியுடன் நடராஜப் பெருமானைத் தரிசிக்க ஆலயம் சென்றார். 

அங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது தரையில் அழுந்தி நின்றுபோயிருந்தது. அரசன் பெரும் படையையும் முடுக்கி முயற்சித்துப் பார்த்தான். இம்மியளவு கூட நகரவில்லை. ''என்னவோர் ஒரு பெருங்குற்றம்'' நடந்துவிட்டது அதனால்தான் இந்த இடர்பாடெல்லாம் என்று, எல்லோரும் திகைத்து நிற்க,........ ''சேந்தன் பல்லாண்டு பாட தேர் நகரும்" என அனைவரின் செவிகளில் இறைவாக்காக வானில் அசரீரியாக ஒலித்தது.

''யார் அந்தப் புண்ணியவான்'' என்று கூடியவரெல்லாம் திரும்பி திரும்பி பார்த்து திகைத்தனர். சேந்தனார், தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டு.....''மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" என்று பல்லாண்டு பாடினார். புதைந்தழுந்தியிருந்த திருத்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருண்டு வரத் தொடங்கின. மக்கள் மனவெள்ளம் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என ஆரவாரித்தது. சேந்தனார் மீதும், அவர் தம் மனைவியார் மீதும் வானிலிருந்து பூமழை பெய்தன.

முதல் நாள் இரவில் சேந்தனின் குடிசையில் தாம் களி உண்ணச் சென்றதால், உமது பூஜையின்போது கால்தண்டை ஒலி உமக்கு கேட்கவில்லை என்று மன்னனிடம்  இறைவன் உணர்த்தி கூறினார். மன்னனும், சேந்தனாரின் களியை உண்டு களிநடனம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை எண்ணியெண்ணி வியந்து வணங்கிக் கொண்டான். பின், சேந்தனார் அவரது மனைவியார் பாதகமலங்களில் வீழ்ந்து பணிந்தான் மன்னன். இந்நிகழ்வுக்குப் பிறகே மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது.

உடலமைப்போடு ஆலயம்
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமானதை நம் உடம்போடு உவமையானவை. கால்- மண். வயிறு- நீர். இதயம்- நெருப்பு. கழுத்து- காற்று. தலை- ஆகாயம். சிதம்பரத்தில் நடராஜரின் உருவை மனித உடம்பில் தலைப் பகுதியில் வைக்காமல் இருதய ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள். எல்லா ஆலயங்களிலும் கருவறையை, ஆலயத்தின் மத்தியில் நேராக இருக்கும்படி அமைத்திருப்பார்கள்.

ஆனால், சிதம்பரத்தில் இடது பாகமான நம்முடைய இருதய ஸ்தானம் இருக்கும் அமைப்போடு இருப்பதைக் காணலாம். இவருடைய ஆட்டம் நின்றுவிட்டால் உலகச் செயல் யாவும் நின்று போகுமே. அதனால் இவர் ஆடிக்கொண்டே இருக்கிறார். இருதயம் ஆடாமல் நின்றுபோனால் எல்லா ஆட்டமும் நின்றுதானே போகும். சிதம்பர விளக்கத்தின் ஒரு பகுதி இதுவாகும்.

நால்வரும், நான்கு கோபுரங்களும்
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடன், விண்ணுக்குள் ஊடுருவியதுபோல, நான்கு இராஜ கோபுரங்களுடன் சிதம்பர திருக்கோபுரம் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்களாகப் பரவிக் காணப்படுகின்றனர். கிழக்கு மேற்கு கோபுரங்களில் நூற்றிஎட்டு நடன பாவனங்களையும் விளக்கும் சிற்பங்களாகப் படைத்திருப்பதைக் காண்பவர் மெய்சிலிர்க்காது இருந்ததில்லை. (தில்லை) சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது.

சமயக்குரவர் நால்வரில் ஒவ்வொருவரும், ஒருவர் சென்ற வாயில் வழியாக ஒருவர் செல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாயில் வழியாகவே சென்றனர். எதனால்? சமயக்குரவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கோபுரவாயில் வழியாக உள்புகுந்து வழிபட்டனர் என்பது எதிலும் குறிப்பில்லா வியப்பு நமக்கு. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் சென்று தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டிருக்கின்றனர். 

நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1.திருவாலங்காடு  இரத்தினசபை, 2.மதுரை - வெள்ளிசபை, 3.திருநெல்வேலி - தாமிரசபை, 4.திருக்குற்றாலம் - சித்திரசபை. இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை, 1.சிற்சபை (சிற்றம்பலம்), 2.கனகசபை, 3.இராசசபை, 4.தேவசபை, 5.நிருத்தசபை ஆகியவையாகும்.

சிற்சபை: (சிற்றம்பலம்) இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

கனகசபை: (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம் இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான "காளிங்கராயன்" என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.

இராசசபை: இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.

தேவசபை: இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.

நிருத்தசபை: நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின் திருமேனியும் இங்கு இருக்கிறது.

சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது. தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக் காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை, இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு உணர்த்துவதேயாகும்.

ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர். சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும். சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பிப் பார்த்தால் கோவிந்தராஜப் பெருமாள் சயண நிலையுடனான சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பு.

தில்லை எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை என்றாக்கும், தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை, சிதம்பரத்திற்கு ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை சிதம்பரம் பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நாவுக்கரசர் தேவாரம் - பாடியவர் கரூர் சுவாமிநாதன்

திருப்புகழ் - பாடியவர்  பாலச்சந்திரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com