2017-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறப்பு!

தமிழ் மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் என வருடத்திற்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன.
2017-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறப்பு!

தமிழ் மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் என வருடத்திற்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி மாதத்தில் நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதமாகும். 

இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பர். மேலும், மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, வீடுகளில் கோலமிட்டு, கோயில்களில் வழிபாடு நடத்துவார்கள். இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில் தான் இறைவனை அடையும் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் பிறந்த கதை
ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். 

இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவானிடம் சரணடைந்தனர் தேவர்கள். அவரது வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள், தங்களைப் போல் பலரும் இந்தப் பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.

எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களைத் தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவங்களை யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு
29-ம் தேதியன்று வரும் வைகுண்ட ஏகாதசியானது இந்த ஆண்டின் இரண்டாவதாக வரும் பெரிய ஏகாதசியாகும். அன்றைய தினம் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஆண்டிற்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு, சில ஆண்டுகள் இரண்டு முறையும் நடந்த வரலாறு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் (2017) கடந்த ஜனவரி 8-ந் தேதி சொர்க்கவாசல் 

திறக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வருகிற 29-ந் தேதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இரண்டு முறை சொர்க்கவாசல் திறக்கப்படுவதால், அடுத்த ஆண்டு (2018) இந்த விழா நடக்காது.

ஒரே ஆண்டில், இரண்டு முறை வைகுண்ட ஏகாதசி வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இதேபோல், கடந்த 2015-ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 1-ம் தேதியும், டிசம்பர் 21-ம் தேதியும் என இரண்டு முறை வந்தது நினைவுகூறத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com