சகல தோஷங்களையும் போக்கி செல்வச் செழிப்பை தரும் பரிவர்த்தனா யோக பரமபத ஏகாதசி

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும்...
சகல தோஷங்களையும் போக்கி செல்வச் செழிப்பை தரும் பரிவர்த்தனா யோக பரமபத ஏகாதசி

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்குவர். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ பெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் “பகல்பத்து, இராப்பத்து’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். பகல்பத்து நாட்கள் முடிந்ததும், இராப்பத்து ஆரம்ப நாளான சுக்லபட்ச ஏகாதசி அன்று விடியற்காலை வேளையில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளுவார்! 

கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாகச் சொல்கிறது புராணம்! இதனை அறிந்த நம்மாழ்வார், “எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்க வேண்டும்’’ என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக - சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! 

பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். 

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைப்பிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்? அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு
ஏகாதசியும் வரும்.

ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார்கள். பெருமாள் அவர்களைத் தடுத்து, ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர்களின் சுபாவம்தானே! அலட்சியமாக, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்'' என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ''அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்றார். அசுரர்கள் திகைத்தார்கள். ''ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள்
பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள். ''ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாகப் (விக்கிரக வடிவமாக) பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும்  பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!'' என்று வேண்டினார்கள்.

''அப்படியே ஆகட்டும்!'' என அருள் புரிந்தார் அச்சுதன். 'வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார். எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.

பரமபத விளையாட்டு
வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வர நேரிடும். ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம். வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு இது. 

நவகோள்களின் ஆசியை நல்கும் வைகுண்ட ஏகாதசி பொதுவாக, வைகுண்ட ஏகாதசி வருடத்திற்கு ஒருமுறை வரும் நிகழ்வு ஆகும்.  ஆனால் இந்த வருட வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்படி என்ன சிறப்பு?
 
மார்கழி மாததில் சூரியன் தனுர் ராசியில் சஞ்சரிக்கும்போது வைகுண்ட ஏகாதசி நிகழ்கிறது. சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் முக்கூட்டு கிரகங்களானதால் மூன்றும் ஒரு குறிபிட்ட இடைவெளியில் தொடர்ந்து பயணம் செய்யும். அந்த விதத்தில் சூரியனோடு சுக்கிரனும் இணைந்து தனுர் ராசியில் நிற்கிறது. தனுர் ராசி என்பது குருவின் ஆட்சி வீடு ஆகும்.
 

அதே தருணத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட குரு பெயர்ச்சியில் குரு பகவான் சுக்கிரனின் வீடான துலா ராசியில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். எனவே இந்த வைகுண்ட ஏகாதசியில் சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பது சிறப்பாகும். பொதுவாகவே, பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தீமைகளைக் குறைத்து நன்மை தருவதோடு சிறப்பான யோக பலனைத் தரும் என்கின்றன பழமையான ஜோதிட நூல்கள்.

அதுமட்டுமல்லாது, கால புருஷனுக்கு தர்ம கர்மாதிகளில் ஒருவரான சனைச்சர பகவான் கால புருஷனின் தர்ம ஸ்தானமான தனுர் ராசியில் தற்போது பிரவேசித்துள்ள நிலையில், குருவும் சுக்கிரனும் பரிவர்தனை பெற்றதால் சூக்‌ஷ்ம தர்ம கர்மாதி யோகத்தை தரும் அமைப்பை பெறுகிறது. மேலும், தனகாரகனான குருவும் களத்திரகாரகனான சுக்கிரனும் பரிவர்தனை பெறுவது சிறந்த செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
 
மேலும், குருவோடு செவ்வாய் இணைந்து நிற்பதால் குரு மங்கள யோகமும், குருவும் சந்திரனும் சம சப்தம பார்வை பெற்று நிற்பதால் குருசந்திர யோகமும், செவ்வாயும் சந்திரனும் சமசப்தம பார்வை பெற்று நிற்பதால் சந்திரமங்கள யோகமும் ஏற்படுகிறது. 

புதனின் அதிதேவதையான மஹா விஷ்ணுவின் மோகினி அவதார தரிசனம் திருமணத் தடையை நீக்குவதோடு, ஆண்களுக்கு ஏற்படும் நபும்சுக தன்மை மற்றும் மலட்டுத்தன்மையைப் போக்கும். மேலும், பரமபத விளையாட்டினால் ஸர்ப்ப தோஷங்கள் நீங்குவதோடு வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய சூழ்நிலையில், குழந்தைகள் ராகு-கேதுக்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பல நவீன தீமை தரும் விளையாட்டுகளில் ஈடுபட்டுவரும் நேரத்தில், பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபட செய்வது மூளை மற்றும் அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும்.
 
இப்படி நவகிரஹங்களும் யோகங்களை தரும் இந்த மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில், சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம்  இருக்கும் என்பது ஐதீகம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

Email: astrosundararajan@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com