சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான......
சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். அப்படிப்பட்ட சனி பகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. சன்னதிகளின் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும்.

நவக்கிரங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு பலன்கள் உண்டு. அது ஸ்தான பலம், சம்யோக பலம் மற்றும் திருஷ்டி பலம் போன்றவை ஆகும்.

பொதுவாக அசுப கிரகமான சனி கிரகத்தின் பார்வை 3, 7, 10-ம் இடங்களில் அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களில் சனீஸ்வரன் சன்னதியில் நேருக்கு நேர் நின்று அல்லது அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சனிபகவானைப் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்?

• அக்காலத்தில் இலங்கை வேந்தன் இராவணன் நவக்கிரகங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொடுமைப்படுத்தி வந்தான். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் முதலான ஒன்பது கிரகங்களையும் இராவணனின் சிம்மாசனத்தின் கீழே உள்ள படிக்கட்டுகளில் படுக்க வைத்து, அவர் அரியணையில் ஏறும்போதும், இறங்கும் போதும் நவக்கிரகங்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து மிதித்துக்கொண்டே ஏறுவார். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும்.

• ஆனால் நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் தன் பார்வை பட்டால் இராவணனுக்கு தீங்கு ஏற்படும் என்பதால் தரையை நோக்கி குப்புறப்படுத்திருந்தது. இதைக் கண்ட நாரதர் இராவணனின் அகந்தையை அடக்க முடிவு செய்து இராவணனிடம், இராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து மேல்நோக்கி படிகளில் படுத்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதித்து கீழ்நோக்கி படுத்திருக்கிறது என்று கூறினார். இராவணனும் மேல்நோக்கி படுக்கச் சொன்னான். தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும், இராவணன் பிடிவாதமாக இருக்கவே சனி பகவானும் மேல் நோக்கியவாறு திரும்பி படுத்தார்.

• இராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் பார்வை இராவணனின் மீது விழுந்தது. அதுமுதல் இராவணனுக்கு ஏழரை ஆரம்பித்தது. அதன்பின், சில காலங்களிலேயே இராமனின் கையில் வீழ்த்தப்பட்டு மடிந்தார் இராவணன்.

சனிக்கிழமை தோறும் நவக்கிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பின், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வை நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.

மேலும், ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அர்த்த அஷ்டமத்து சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனி பகவானுக்கு 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனேஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துக்கள் விலகும் என்பது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com