மாதங்கள் பனிரெண்டில் அம்மனுக்கு உகந்த ஆடி!

தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது.
மாதங்கள் பனிரெண்டில் அம்மனுக்கு உகந்த ஆடி!

தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது.

அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் வாராஹி நவராத்திரி இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.

ஆடி மாதத்தில் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆடிப்பூரம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவியை ஆண்டாளாக அவதாரம் செய்த தினம் ஆடிப்பூர நன்னாள். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்த சமயத்தில், நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். கண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள்.

ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி: இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள்.

ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com