ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கலாமா?

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைப்பிடிக்க ஏற்ற நாளாகும்.
ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கலாமா?

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைப்பிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. இதில், மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்று கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்குக் காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்துத் திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால் பாவங்கள் விலகி, புண்ணியத்தைச் சேர்க்கும்.

ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு  விரதம் முடித்தால், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

விரதம் இருப்பது எப்படி?

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு, முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ ஆத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும்.

முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவார்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com