ராகு-கேது தோஷம் நீங்க எந்தக் கோயிலுக்கு செல்லலாம்?

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள் எனும் சிறப்போடு வழங்கப்பெறும் ராகு -கேது, மனிதர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தோஷங்களையும்...
ராகு-கேது தோஷம் நீங்க எந்தக் கோயிலுக்கு செல்லலாம்?

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள் எனும் சிறப்போடு வழங்கப்பெறும் ராகு -கேது, மனிதர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தோஷங்களையும் பலன்களையும் தந்து பாவச்சுமைகளை அகற்றும் புண்ணிய மூர்த்திகள் ஆவார்கள். எனினும் முன்வினை பாவங்களை உணர்ந்து தங்கள் செயல்பாடுகளைத் திருத்தி, நன்மையே நாடும் அடியவர்கள்,  இந்த ராகு -கேதுக்களை உரிய முறையில் வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் வளம் பெறலாம்.

ஒருவர்  ஜாதகத்தில் அல்லது அம்சத்தில் ராகு- கேது நல்ல இடங்களில் இருந்தால் ராகு அளப்பரிய செல்வத்தை அளிப்பார். அதேபோல் கேது  நல்ல  அறிவினையும் நல்ல செயலில் ஈடுபடும்படியும் வழிகாட்டுவார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இருந்தாலும் கேதுவிற்குரிய தெய்வமாக விநாயகரைச் சொல்வார்கள்.  விநாயகப் பெருமான், எல்லா கிரகதோஷங்களையும் நீக்கும் சக்தி படைத்தவர். தினந்தோறும் விநாயகர் அகவல் முதலிய நூல்களைப் பாராயணம் செய்து வழிபட்டால் கேது தோஷங்கள் நீங்கும். மேலும் ராகுவுக்குரிய அதிதேவதையாக சொல்லப்படுவது காளி தேவி.

எப்படியெல்லாம் வழிபடலாம்:

காளிதேவியை ராகு காலத்தில் வழிபட ராகுதோஷம் நீங்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாடு மிகவும் விசேஷம். கேதுவின் பிடியிலிருந்து விடுபட, பிரம்ம தேவனை வழிபடலாம். பிரம்மாவுக்கு என்று தனி சந்நிதி உள்ள கோயில்கள் சில இருக்கின்றன. திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோயில், காஞ்சி, பாண்டிக் கொடுமுடி, குடந்தை, திருப்பட்டூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள பிரம்மனை வழிபட்டால் கேது தோஷங்கள் நீங்கும். சிவன் கோயில்களில் கர்ப்ப கிரகத்தின் வெளிப்புற மாடத்தில் இருக்கும் பிரம்மனையும் வழிபடலாம்.

குடந்தை நாகேஸ்வரம் கோயிலில் நாகராஜாவாக அருள்புரியும் ராகுவிற்கு ராகுகாலத்தில் பால் அபிஷேகம் செய்யும்போது அந்த பாலானது நீலநிறமாக மாறிவிடும். ராகுதோஷ நிவர்த்திக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஊரகம் உலகளந்த பெருமாளைத் தரிசனம் செய்து பலன் பெறலாம். கபிஸ்தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசிப்பதும் நல்லது.

ராகுவும் கேதுவும் அருள்புரியும் திருத்தலங்கல் சில உள்ளன. அவற்றில் காளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாகும். தட்சிண கைலாசம் என்ற பெருமைக்குரியது. இங்கு அருள்பாலிக்கும் காளத்திநாதரை வழிபட்டு, அங்கு வழக்கத்திலிருக்கும் பரிகாரங்களைச் செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்!  

காரைக்காலிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் திருப்பாம்பரம் என்னும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடுபவர்கள் சகல தோஷங்களும் நீங்கி சுகம் பெறுவர். இக்கோயிலிலுள்ள நாகராஜரை அர்ச்சித்து வழிபட்டால் ராகு- கேது தோஷம் நீங்கும். நன்னிலத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீ வாஞ்சியம், திருவகீந்திபுரம் திருத்தலத்தில் உள்ள ஆதிசேஷனை வழிபட, ராகு- கேது தோஷங்கள் விலகும். ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனின் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை வழிபட, ராகு- கேது தோஷம் அகலும்.

ராகு- கேது பெயர்ச்சி: 27.7.2017

- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com