சரியான திசையில் பயணிக்கிறதா ஜோதிட விஞ்ஞானம்…?

இன்றைய மனிதனின் எதிர்பார்ப்புகளை, இரவு வானில் மின்னும் நட்சத்திரங்களோடு ஒப்பிடலாம். எண்ணி மாளாது, சொல்லி மாளாது.
சரியான திசையில் பயணிக்கிறதா ஜோதிட விஞ்ஞானம்…?


இன்றைய மனிதனின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும், இரவு வானில் மின்னும் நட்சத்திரங்களோடு ஒப்பிடலாம். எண்ணி முடியாது; சொல்லி மாளாது. ஆனாலும், அந்த எதிர்பார்ப்பு மீதான நம்பிக்கையில்தான் அவனுடைய எதிர்காலம் இருக்கிறது.

சரி, எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றிக்கொள்ளலாம். எதிர்பார்ப்பு நியாயமானதாக இருந்தால், குறைந்தபட்ச முயற்சியிலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால், எதிர்பார்ப்பின் ‘கனம்’ கூடக்கூட, முயற்சி, காலநேரம், காசு பணம் என எல்லாமே அதற்கு ஏற்றார்போல் உயரக்கூடும்.

நான் எதுவுமே செய்யமாட்டேன். ஆனால், நான் நினைப்பது / எதிர்பார்ப்பது நடந்துவிட வேண்டும்; அதுவும் வெகு சீக்கிரத்திலேயே கைகூட வேண்டும் என்பதுதான் இன்றைய மனிதனின் எண்ணமாக இருக்கிறது.

மனிதன் தன்னுடைய இந்த ‘அவசரத்துக்கு’ ஒரு வடிகாலாகவும், அவசரத் தேவையாகவும், கடைசி முயற்சியாகவும் நினைப்பது ஒன்றே ஒன்றுதான். அது, ஜோதிடம்.

ஜோதிடத்தின் மீதான மனிதனின் இந்த நம்பிக்கையை, இன்றைய ஜோதிடமும், உன் நம்பிக்கையை நான் நிறைவேற்றுகிறேன் என்று ஜோதிடத்தைக் கையில் எடுத்து அதை ஒரு தொழிலாகச் செய்துவரும் ‘ஜோதிடர்களும்’ எந்த அளவுக்கு நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன(ர்) என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில், ஜோதிடம் என்பது ஒன்பது கோள்களையும், 12 கட்டங்களையும் மட்டும் கொண்டது அல்ல. அது ஒரு விஞ்ஞானம் - ஜோதிட விஞ்ஞானம்; மிகப்பெரிய பாடம்; அனுபவம். அத்தகைய ஜோதிட விஞ்ஞானம் இன்றைய காலகட்டத்தில் தனது சரியான பாதையை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது.

இந்தப் பூமியில், ஒரு காலத்தில் வளர்ச்சிபெற்ற நாகரிகம் இருந்து வந்தது. அப்போது, ஜோதிடம் என்னும் விஞ்ஞானம் எல்லையற்ற வளர்ச்சி பெற்றிருந்தது. யோகிகளும், பண்டிதர்களும் வேத ஜோதிட சாஸ்திரத்தை ஏற்றுப் படித்து, உணர்ந்து, தேர்ச்சி பெற்று, நாட்டு மக்கள் நலமுடன் வாழ்வதற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், காலமாற்றத்தில் அத்தகைய சமுதாயம் அழிந்துவிட்டது. ஜோதிடமும் தன் அதிஅற்புத சுவடுகளை இழந்து துண்டு துணுக்குகளாகப் பார்க்கக்கூடிய நிலையை அடைந்துள்ளது.

ஜோதிடத்தில் இன்னும் நிறைய ஆய்வுகள் செய்து அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்று உலகம் முழுதும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஜோதிடம் என்பது முற்றிலும் வளர்ந்து முழுமை அடைந்த கலை என்பதை, அதை உணர்ந்தவன் என்ற முறையில் தெளிவுபடுத்த / நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன்.

மனிதனையும் அவனது வாழ்வையும் நெறிப்படுத்த / செழுமைப்படுத்த உருவானவைதான் சமயங்கள். உலகில் உள்ள சமயங்களில் மிகவும் தொன்மையானது இந்து சமயம். இதன் புனித நூல் வேதம். அந்த வேத புருஷனின் கண்ணாக இருக்கும் ஜோதிட சாஸ்திரம், வேதத்தின் ஓர் அங்கமாக அமைகிறது.

மனித வாழ்வின் ரகசியங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பெட்டகமாக வேதத்தை முன் நிறுத்தினால், அந்தப் பெட்டகத்தைத் திறக்கும் திறவுகோலாக ஜோதிட சாஸ்திரத்தைச் சொல்லலாம். ஆக, ஒரு மனிதனின் வாழ்க்கை ரகசியத்தை வெளிக்கொணரும் ஆற்றல் ஜோதிட சாஸ்திரத்துக்கு மட்டுமே இருக்கிறது.

ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞான ரீதியில் மெய்ஞானத்தை அணுகும் அமைப்பாகும். விஞ்ஞானத்தை விளங்கவைத்து, மெய்ஞானமான இறைவனை புரிந்துகொள்வதை இந்த ஜோதிட சாஸ்திரம் எளிதாக்குகிறது.

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மனிதனுக்காக இறைவன் படைத்ததுதான் வேதம். ஆனால், அந்த வேதத்தின் உள்பொருள் விளங்காத நிலையில், அதனை எளிய முறையில் விளங்கிக்கொள்ள உருவானவைதான் இதிகாசங்களும் புராணங்களும்.

இதிகாச காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் முக்கியத்துவம் வெகு சிறப்பாக உணரப்பட்டது என்பதற்கு மகாபாரதத்தில் ஒரு காட்சியே சாட்சி.

பாண்டவர்களுடனான போரில் வெற்றிபெற, பாண்டவர்களில் ஒருவனாக சகாதேவனிடம் நாள் குறிக்கிறான் துரியோதனன். ஏனெனில், சகாதேவனைப்போல் தலைசிறந்த ஜோதிடன் பூவுலகில் இல்லை. அப்படிப்பட்ட சகாதேவன் நாள் குறித்தால், துரியோதனன் வெற்றி தவற வாய்ப்பு இல்லை. இது கிருஷ்ணனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், யுக தர்மத்தின் விபரீதம் கண்டு அஞ்சி, காலத்தை மறைத்து முடிவை மாற்றினான் கிருஷ்ணன்.

அதேபோல், தன் தவ வலிமையால் கிரகங்களையெல்லாம் படிக்கட்டுபோல் அமைத்து வாழ்வாங்கு வாழ்ந்தான் ராவணன். ஆனால், அவனது தீய குணங்களால் அவன் பெற்ற வரங்கள் அனைத்தும் சாபமாகிப் போனது.

ஆக, இதிகாசங்கள் காட்டும் இந்த இருவேறு நிகழ்வுகள், கிரகங்களின் விஞ்ஞானம் தாண்டிய விஷயங்களையே நமக்குப் புரியவைக்க முயல்கின்றன.

இங்கு நாம் புரிந்துவைத்திருப்பதும், மனித வாழ்வை கிரகங்கள் பாதிப்படையச் செய்கின்றன என்பதுதான். அதுவும் உண்மையே. கிரகங்களின் நகர்வு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவர் பிறந்த நேரத்தின்போது கிரக நிலைகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதே ஜாதகக் கட்டம். இதன்மூலம், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான சம்பவங்கள், அதன் நன்மை தீமைகள், அவை நடைபெற உள்ள காலங்களை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அவற்றை மாற்ற முடியாது என்றோ, அதுவே விதியென்றோ நினைக்க வேண்டியதில்லை. அப்படியிருந்தால், கல்வி கற்பதே வீண் என்றாகிவிடும். தீர்க்கதரிசகளும், மெய்ஞானிகளும், ஆன்மிகக் குருமார்களும் அவர்களின் போதனைகளும் தேவையற்ற ஒன்று என்றாகிவிடும்.

இதை உணர்ந்ததாலேயே, வழிபாடுகள், ஹோமங்கள், பரிகாரங்கள் என பல்வேறு வழிகளில் நாம் முயற்சிக்கிறோம். ஆனால், இந்த முயற்சிகளில் ராவணனோ, துரியோதனனோ வெற்றிபெற முடியவில்லை. இறைவனின் விருப்பத்துக்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

தான் படைத்த மனிதன் தீமையை உணர்ந்து தவிர்த்து, நல்வழி செல்ல வேண்டும் என்றும், அந்த அடிப்படையில்தான் அவனுடைய செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.

ஆனால், தெய்வ நியாயங்களை புறந்தள்ளிவிட்டு, கிரக அமைப்புகளே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்ற அசாத்திய நம்பிக்கையில், விஞ்ஞானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்பட்டதாலேயே ராவணன் பெற்ற வரம் சாபமானது; துரியோதனன் எண்ணம் பொய்த்துப்போனது.

ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள கிரகங்களை காட்டும் விஞ்ஞானம் மட்டும் பயனளிக்காது. தெய்வ நியாயம் பற்றிய தெளிவும் வேண்டும் என்ற உண்மையைத்தான் மேற்கண்ட இதிகாச நிகழ்வுகள் மூலம் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தெய்வ நியாயங்களுக்கு உள்பட்டு நாம் செய்யும் செயல்களில் இறைவன் மகிழ்ந்து நமக்கான நன்மைகளை வழங்குகிறார். நமது செயல்களில் பிறழ்வு நேரும்போது, தண்டனைகள், கஷ்டங்கள், சோதனைகள் என பல வழிகளில் உணர வைக்கிறார்.

தெய்வ நியாயங்கள் என்பது கிரகங்கள் காட்டும் விஞ்ஞானத்தையும் தாண்டிய செயலாகும். ஓரிரு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் ஜாதகக் கட்டங்கள் ஒத்த பலன்களையே தர வேண்டும். ஆனால், முற்றிலும் வேறுபாடான வாழ்க்கை முறையில்தான் அந்த இரட்டையர்களின் வாழ்வு அமைந்துவிடுவதை நாம் பார்க்கிறோம்.

பிறந்த நேரம் ஒன்றுதான். ஆனால், முன்ஜென்மங்களில் செய்த செயல்களும், அதன் விளைவுகளும் ஒருவரின் கருமையத்தில் பதிவாகியிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு இப் பிறவியில் நன்மைகளும் தீமைகளும் உண்டாகின்றன.

இந்த வினைப் பதிவுகளே, ஒவ்வொருவரையும் தனித்தன்மை உடையவராக ஆக்குகிறது. வினைப் பதிவுகளுக்கு ஏற்பவே ஒருவரின் பலம், பலவீனம் அமைகிறது. அதன் அடிப்படையில்தான் கிரகங்களின் செயல்பாடுகள் அமைகின்றன. இதனால்தான், இரட்டைக் குழந்தைகளின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபடுகிறது.

ஜாதகக் கட்டத்தின் மூலம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை ஒருவர் எவ்விதம் கையாள்கிறார் என்பதைப் பொறுத்து, பலன்களில் மட்டுமல்ல, நிகழ்வுகளிலேயே மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

வினைப் பதிவுகளை உணராதவரைதான், ஜாதகக் கட்டத்தில் ஏற்படும் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. வினைப் பதிவுகளுக்கான காரணங்களை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படும்போது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளிலும் முடிவுகளிலும் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.

இதன் அடிப்படையில், பிறந்ததில் இருந்து தற்காலம் வரை ஒருவர் செயல்படும் விதமும், கரு மையத்தில் பதிவாகியுள்ள கடந்த கால வினைப் பதிவுகளும் ஜாதகத்துக்கு அப்பாற்பட்டதாகிறது.

எனவே, ஜாதகத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் பலன்கள், பிறந்த நேரத்தின் அடிப்படையிலேயே அமைவதால், ஒரு எல்லை வரையே ஜாதகத்தைப் பயன்படுத்த முடிகிறது.

ஜாதகத்தையே ஜோதிட சாஸ்திரமென பெரும்பாலோர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். ஜோதிட சாஸ்திரம் என்பது ஜாதகத்தையும் தாண்டி, ப்ரச்னம், முகூர்த்தம், நிமித்தம், கணிதம் மற்றும், கோளம் என்ற மற்ற பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த அமைப்பாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பையும் ப்ரச்னத்தை மையமாக வைத்து ஆராயும்போது, இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் சுக துக்கங்களுக்குக் காரணமான நிகழ்வுகளை பின்னோக்கிச் சென்று அறிந்துவிட முடியும். இங்கு, மனத்தின் வலிமையை பெருக்கிக்கொள்வதில் தடைகளாக உள்ள மூல காரணங்களும்கூட கண்டறியப்படுகின்றன.

இதனால், இப்பிறவியில் நாம் செய்த தவறுகளால் உண்டான பாதிப்புகளுக்கான மூல காரணங்கள், கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளில் இருக்கிறது என்பது புரிந்துவிடுகிறது. அதை அனுசரித்து நாம் செய்யும் பரிகாரங்கள் என்பது, செய்த தவறை உணர்ந்து அதனை வெளிப்படுத்துவதற்கான செயல்பாடுகளே தவிர, விஞ்ஞானத்தை மையமாகக் கொண்டு செய்யும் சடங்குகளாக ஆகாது.

எனவே, நாம் செய்த தவறுகளால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூலம் ஏற்படும் சாபங்கள், மன வருத்தங்கள் குறிப்பிட்ட நபர்களின் வழியே, இப்பிறவியில் நமக்கு கஷ்டங்கள் வந்து சேர்கின்றன என்றால், அதனைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்டு, உணர்தலுடன் நாம் செய்யும் செயல்களால், பரிகாரங்களால் தற்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களில் மாறுதல் ஏற்பட்டு அனுகூலமான பலன்களைப் பெற்றுவிட முடிகிறது.

புரிதலுடன் பரிகாரங்களை உணர்ந்து செய்வதால், சில பாதகமான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், நிகழ்வுகளின் உச்சங்களை உணர முடிந்த அளவு, எதிர்காலத்தில் அவை ஏற்படுத்தும் அதிர்வுகளின் அளவும் குறைந்துவிடுவதால், நிரந்தரத் தீர்வும் நமக்குச் சாத்தியமாகிறது.

ஆனால், ஜோதிட சாஸ்திரத்தை ஜாதகமாகவே பார்த்துக்கொண்டிருக்கும்வரை, வாழ்வில் திருமணம் நடைபெறுமா, வேலை கிடைக்குமா, தேர்தலில் வெற்றி பெறுவேனா என்று வாழ்வில் நடக்கும் சம்பவங்களைத் தெரிந்துகொள்வது என்ற அளவிலேயேதான் நம் ஆவல்கள் இருந்துவிடும். இவற்றைத் தெரிந்துகொள்வது என்பது, ஜோதிடத்தில் மிகவும் மேலோட்டமான ஒன்று.

வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், வினைப் பதிவுகளுக்கு ஏற்ப ஒருவர் செய்யும் செயல்களைப் பொறுத்தே அமைகிறது எனும்போது, எதிர்காலத்தில் நிகழ இருக்கும் சம்பவங்களிலேயே மாற்றங்களைக் கொண்டுவந்து நினைத்தபடி வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். இதன் அடிப்படையிலேயே நாம் ஜோதிட சாஸ்திரத்தை அணுக வேண்டும் என்பது முக்கியமானதாகிறது.

ஆனால், நாம் இன்று பல படிகள் கீழே சென்று, ஜாகத்தில் பிறந்த ராசியை மட்டும் வைத்துக்கொண்டு பலன்களைப் பார்த்துக்கொண்டு இருப்பது மிகவும் பொதுவான விஷயம். இது, ஜாதகக் கணிதத்தின் துல்லியத்தில் நூறில் ஒரு பங்கே. இதன் அடிப்படையில் ராசி பலன்கள், தினப் பலன்கள், கோச்சாரப் பலன்கள், கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் என பல்வேறு வழிகளில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நம் முயற்சிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மேலும், எண் கணிதம், நவரத்தினக் கற்கள் பற்றிய விஞ்ஞானம் என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமானது.

இதன் அடிப்படையில் தீர்வுகளுக்காக முயற்சிக்கும்போது, தெய்வ நியாயங்கள் பற்றிய புரிதல்கள் இல்லாமல், பலன்கள் ஒன்றையே கருத்தில்கொண்டு எதிர்கால சந்ததிக்குச் சொத்து சேர்க்கிறேன் என்ற பெயரில் தீய வழிகளில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஆலய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வது என்பது எந்த அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்ற புரிதல் நமக்குள் வர வேண்டும்.

இறைவனை வழிபடுவதற்கு பக்தி அவசியம். முன் செய்த தவறுகளுக்குப் பரிகாரங்கள் செய்யும்போது, செய்த தவறை உணர்தல் என்பது அவசியம். இதை உணர்ந்து நாம் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, தெய்வ நியாயம் பற்றிய புரிதல் அதிகமாவதால், இயல்பாகவே உடல், மனரீதியில் ஒருவரின் பலன் கூடுகிறது. இதனால், கிரகங்களால் ஏற்படும் தாக்கம் குறைக்கப்பட்டு நற்பலன்களைப் பெறுவது என்பது எளிதாகிறது.

ஆனால் இன்று, இறைவனை நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவியாகத்தான் பார்க்கிறோம். தெய்வ நியாயங்களை உணரத் தவறிவிட்டோம். சடங்குகளே முன் நிறுத்தப்படுகின்றன. ஆலயங்களுக்கான அடிப்படை நோக்கம் பற்றிய புரிதல் இன்று இல்லை. ஆலயங்கள் இன்று பரிகாரத் தலங்களாகவே மாறிவிட்டன.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றனாரின் வாக்கும், கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வசனமும் - நாம் எதிர்பார்க்கும் பலன்களும், நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளும், நாம் மேற்கொள்ளும் செயல்களை உணர்ந்து செயல்படுவதிலேயே உள்ளது என்பதையே உணர்த்துகிறது.

இங்கு, ஜோதிட சாஸ்திரம் ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் இதை உணரவைத்து, ஒருவர் மேற்கொள்ளும் செயல்களில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்துவிடுகிறது. இதனால், ஒருவர் உடல் மற்றும் மனத்தளவில் பலம் பெற்றுவிடுவதால், தவறுகள் போன்றவை தள்ளிப்போடவோ, அல்லது அவை நடைபெறாமல் இருக்கவோ செய்துவிட முடிகிறது. நல்ல வாய்ப்புகளுக்கான காலத்தை முன்கூட்டியே கொண்டுவந்து அதன் பலன்களையும் அனுபவிக்க முடிகிறது.

உடலும் மனமும் இந்தப் பிறவிக்குத் தொடர்புடையது. ஜென்ம ஜென்மமாகக் கடந்து வருவது, கரு மையத்தில் பதிவாகியுள்ள வினைப் பதிவுகள்.

அத்தகைய வினைப் பதிவுகள் பற்றிய அறிதல் இல்லாமல், உடல் மற்றும் மன ரீதியிலேயே அணுகிக்கொண்டிருக்கும் வரை, எந்த விஞ்ஞானமும் பலன்களைத் தருவதுபோல் இருந்தாலும், முடிவுகள் துரியோதனன், ராவணன்போல் விபரீதமாகவும் மாறிவிட வாய்ப்பு ஏற்படலாம்.

இன்று நாம் கஷ்டத்துக்கான காரணங்களை உணராமல், தெய்வ நியாயங்களை மறந்துவிட்டு பிரச்னைகளில் இருந்து விடுபட முயற்சிக்கும்போதே, பல நேரங்களில் நல்ல பலன்கள் கிடைப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாமல், எதிர்மறை விளைவுகளும் வந்து சேர்ந்துவிடுகின்றன. இங்கு நாம் பிரச்னைகளில் இருந்து விடுபட மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மறுசீராய்வு கட்டாயம் தேவை. இதை நாம் கட்டாயம் உணர வேண்டும்.

ஜோதிடத்தின் வேர்கள் மிக ஆழமானது. ரகசியமானது. தன்னை உணர ஆசைப்படும்போதுதான், ஜோதிடத்தின் அடிப்படை புரியும். நாம் பார்த்துக்கொண்டு இருப்பது மேல் பகுதியில் உள்ள இலை, கிளைகளையே. அடிப்படையை உணராதவரை, அதன் மேலோட்டமான பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்வரை, நம்மை யாராவது கரை சேர்ப்பார்களா என்ற எண்ணம்தான் நம்மிடம் மேலோங்கி நிற்கும். இது எந்தவிதத்திலும் நமக்குப் பயனளிக்கப்போவதில்லை.

தன்னை உணர்வதில்தான் ஜோதிட சாஸ்திரத்தின் பயன்களை முழுமையாகப் பெற முடியும். தனி மனித வாழ்வின் வெற்றி ரகசியங்களை ஜோதிட சாஸ்திரம் விளக்குகிறது. இதற்கு இணையாக வேறு எந்த சாஸ்திரத்தையும் ஒப்பிட முடியாது.

வேதத்தின் கண்ணாகவே ஜோதிடத்தை இந்து சமயம் எடுத்துரைக்கிறது. இதை நாம் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் சாராம்சம். இந்த உண்மையை உணராத வரை, ஜோதிட சாஸ்திரம் சரியான திசையில் பயணிக்கவில்லை என்ற கூற்று நிதர்சனமே.

ஜோதிடத்தின் அடிப்படை உண்மைகளுக்கும், இன்றைய நம்முடைய அணுகுமுறைகளுக்கும் உள்ள இடைவெளியைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சாரமே இந்தக் கட்டுரை.

*

குறிப்பு – இந்தச் சாரத்தின் முப்பரிமாண முழு விளக்கங்களை, ஆத்ம ஜெயம் (வாழ்வியலுக்கான வழிகாட்டி) என்ற தலைப்பில், ஜோதிடர் ராஜேஷ் கன்னா அவர்களைப் பற்றிய முழுமையான அறிமுகத்துடன் நமது தினமணி ஜோதிடத்தில் விரைவில் ஒரு தொடர் ஆரம்பாக உள்ளது.

காத்திருங்கள், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை உண்மையைத் தெரிந்து தெளிய…

*

திரு. ராஜேஷ் கன்னா அவர்களைத் தொடர்புகொள்ள – rajeshkanna.astro@gmail.com, மொபைல் - 9443436695

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com