ஆடி மாதம் உருவானதற்கு இவர் தான் காரணமாம்...!

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது.
ஆடி மாதம் உருவானதற்கு இவர் தான் காரணமாம்...!

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கைப் பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.

பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்த சிவபெருமான், கோபம் கொண்டு தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க முயன்றார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

ஆடி ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்ற ஆசையிலேயே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான் என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உண் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாகத் திகழ்ந்தாள் அந்த மங்கை. எனவே தான் ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகின்றது.

ஆடியில், செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீட்டிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com